அடிப்படையில் இங்கு பிரச்சினைக்குக் காரணம் என்னவென்றால், ஜாதிய அமைப்பு. இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமே ஜாதியில் சிக்குண்டு கிடக்கிறது. அந்தச் ஜாதிதான் ஜனநாயகம், அரசியல், ஆட்சி இயந்திரம் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ஜாதிய அமைப்பு, நிலப்பிரபுத்துவ முறையில் இருந்து கார்ப்பரேட் முறைக்கு மாறி இருக்கிறது.
இங்கு ஊழலை எல்லோரும் நோயாகத்தான் பார்க்கிறார்கள். அது ஒரு நோயின் அறிகுறிதான். உண்மையில் நோய் எது என்றால், சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு. இந்தியாவில் இன்றைக்குப் பணமோ, அதிகாரமோ இல்லாத சாமானியன் நீதியைக் கோரி ஒரு துறையைக்கூட அணுக முடியாது. இந்த மாதிரி ஒரு கட்டமைப்பை வைத்துக்கொண்டு, எவ்வளவு சட்டங்கள், எத்தனை போலீஸாரைக் கொண்டுவந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது. இதைப் புரிந்து கொள்ளாமல்தான் அண்ணா ஹசாரே இயக்கம் கோஷம் போடுகிறது.
– சமூக செயல்பாட்டாளர் அருந்ததிராய்
இயற்கை நீதியின்படி, குற்ற இடத்தில் நுழையும் எந்த மனிதனும் தன்னையறியாமல் ஏதாவது விட்டுச் செல்கிறான். இவ்வாறு குற்றவாளி எதை விட்டுச் செல்கிறான் என்பதைக் கண்டுபிடித்து அதன் மூலம் குற்றவாளியை பிடிப்பதில்தான் காவல் துறையினர் திறமை இருக்கிறது. அறிவியல் சார்ந்த புலன் விசாரணையில் உங்களுடைய திறமையை காட்டுங்கள். துப்பாக்கித் திறமையை தயவு செய்து பணியில் காட்ட வேண்டாம் .
– காவல் பணித்திறனாய்வு போட்டி நிகழ்வில் தமிழக காவல்துறைத் தலைவர் ராமானுஜம்
மறுமணம் செய்தார் என்ற காரணத்திற்காக, விபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கும், மனைவியை இழந்த கணவனுக்கும் இழப்பீடு வழங்க மறுக்கக்கூடாது. இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசாக, அவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். கணவனை இழந்த பெண், கடினமான சூழலில் வாழ வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறது. சமூக மாற்றம் முக்கிய மானது. அந்த மாற்றம் சட்டத்தின் மூலமாகவோ, நீதித்துறையின் தலையீடு காரணமாகவோ நடைபெறலாம். மனுதாரர் கணவர் இறக்காமல் இருந்திருந்தால் மறுமணம் செய்திருக்க மாட்டார். விதவைகள் மனரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். அதனை கருத்தில் கொள்ள வேண் டும். விதவைகள் மறுமணம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் விதவை என்ற அவச் சொல்லை நீக்க முடியும். பெண்களுக்கு சமூக பாதுகாப்பும் கிடைக்கும்.
– வழக்கு ஒன்றின் தீர்ப்புரையில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.விமலா
சினிமா என்பது கலை. சமூகத்தைப் பிரதி பலிப்பதுதான் கலையின் பணி. சினிமா சரியில்லை என்றால் சமூகம் சரியில்லை என்று தான் அர்த்தம். சமூகமே பணத்தை நோக்கிப் பயணிக்கையில் சினிமாத் துறை மட்டும் சுயநலங் களைக் கடந்து இயங்க வேண்டுமென எதிர்பார்ப் பதில் நியாயமில்லை. மிகமிக அவசர உலகத்தில் வாழ்கிறோம். ஆர்டர் கொடுத்தால் அய்ந்தாவது நிமிடத்தில் பீட்சா வீட்டிற்கு வரவேண்டும்.புகழும் அப்படித்தான். சுலபமாகப் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் எல்லோரின் குறிக்கோளும். இந்த மனோபாவம் பரிகசிப்பிற்கு உள்ளாகி நிராகரிக்கப்படும்போது மட்டுமே நிலைமைகள் மாறும்.
– திரைப்பட இயக்குநர் மகேந்திரன்
Leave a Reply