ஜூலை 27 அன்று இலண்டனில் 30 ஆவது ஒலிம்பியாட் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. 204 நாடுகளிலிருந்து 10,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஜூலை 29 அன்று கர்நாடக மாநிலம் மங்களூரில் விடுதி ஒன்றில் பிறந்தநாள் விருந்தில் பங்கேற்ற 13 மாணவிகள் மற்றும் மாணவர்கள் மீது இந்துத்துவ அமைப்பான, இந்து ஜன ஜாக்ரான் வேதிகா அமைப்பினர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதையொட்டி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜுலை 30அன்று காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பிடித்ததில் எஸ் 11 கோச்சில் வந்த 32 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 31 அன்று ஆக்ராவில் உள்ள வடக்கு மின் தொகுப்பு நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு 22 மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 67 கோடி மக்கள் பாதிக்கப் பட்டனர். மின்சார ரயில்கள் இயங்கவில்லை.
ஆகஸ்ட் 1 அன்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானதைத் தொடர்ந்து அவர் வகித்த நிதி அமைச்சர் பொறுப்பை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், உள்துறை அமைச்சர் பொறுப்பை சுஷில் குமார் ஷிண்டேவும், மின்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பை வீரப்ப மொய்லியும் ஏற்றனர்.
ஆகஸ்ட் 2 அன்று காத்மாண்டுவிலிருந்து டெல்லி வந்த நித்யானந்தாவின் சீடர் நிதின் கவுசிக் என்பவரிடமிருந்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா உள்பட 32 பேரின் பாஸ்போர்ட்டுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஆகஸ்ட் 3 அன்று மாணவர்கள் பெயர்களில் போலிப் பட்டியல் தயாரித்து அரசு உதவித்தொகை ரூ 87 இலட்சம் மோசடி செய்த நாமக்கல் மாவட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 77 பேரை அரசுக் கல்வித்துறை நீக்கியது.
ஆகஸ்ட் 5 அன்று அமெரிக்காவின் விஸ்கான்சின் அருகே ஓக் கிரீக் நகரில் உள்ள சீக்கிய குருத்வாராவில் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் 6 சீக்கியர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி 490 வாக்குகள் பெற்று வென்றார்.இவரை எதிர்த்து நின்ற பா.ஜ.க.வின் ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகள் பெற்றார்.