“தாத்தா, நான் மாநில அளவில் நடைபெற இருக்கும் கபடி போட்டியில் கலந்துகொள்ள அடுத்த மாதம் சென்னை போகிறேன்.”
கட்டிலில் படுத்திருந்த செல்வம் மெதுவாகத் தலையைத் திருப்பி குரல் வந்த திசையைப் பார்த்தார்.
கதவருகே அவரின் பெயர்த்தி இதழ்யா புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள்.
“என்னம்மா சொன்னே, சரியா கேட்கல. திரும்பவும் சொல்லு” என்றார்.
“மாநில அளவில் கபடி போட்டி சென்னையில் அடுத்த மாதம் நடக்க இருக்கு. நான் அதில் கலந்துகொள்ளப் போகிறேன்” என்று சொல்ல வந்த செய்தியை மீண்டும் சொன்னாள் இதழ்யா.
“ரொம்பவும் மகிழ்ச்சி இதழ்யா. நீ வட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றி பெற்ற போது நான் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தேன். அதுவும் கபடிபோட்டியில் கலந்துகொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சி. இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கும் கிரிக்கெட் போன்ற சோம்பேறிகளின் விளையாட்டைத் தேர்வு செய்யாமல் கபடி விளையாட்டில் உன்னை நீ ஈடுபடுத்திக் கொண்டது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கு. உனக்கு எனது முழுமையான வாழ்த்துகள் இதழ்யா”, என்று வாழ்த்தினார் தாத்தா செல்வம்.
“அதில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் இருக்கு தாத்தா”, என்று இடைநிறுத்தம் வைத்துப் பேசினாள் இதழ்யா.
தாத்தாவின் ஆர்வத்தை அதிகமாக்க வேண்டும் என்பது அவளது நோக்கம்.
அவளது நோக்கத்தைப் புரிந்துகொண்ட தாத்தா அவளை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே,
“என்ன இதழ்யா? சீக்கிரம் சொல்”, என்று ஆர்வமுடன் கேட்டார்.
“என்னோட குழுவிற்கு நான்தான் லீடர். என்னோட தலைமையில்தான் செல்கிறோம்,” என்று பெருமை பொங்கச் சொன்னாள் இதழ்யா.
செல்வம் மிக்க மகிழ்ச்சியடைந்தார். படிப்புடன் விளையாட்டிலும் பெயர்த்தி சிறந்து விளங்குவதை எண்ணி அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
அவர் தனது மகிழ்ச்சியைப் பெருமிதத்துடன் கூடிய புன்னகைமூலம் இதழ்யாவுக்கு உணர்த்தினார்.
“தாத்தா, நீங்க ஆசிரியர்களுக்கெல்லாம் தலைமை ஏற்று தலைமை ஆசிரியராக வேலை செய்ஞ்சீங்க. இப்போது நான் எனது குழுவுக்குத் தலைமை ஏற்றுள்ளேன். எனக்கு உங்களோட வாழ்த்துகள் மட்டும் போதாது. அறிவுரைகளும் வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தாள் இதழ்யா.
“அறிவுரையா? உலகத்தில் ரொம்ப எளிமையான வேலை அறிவுரை சொல்றதுதான். நான் யாருக்குமே அறிவுரை சொல்வதே கிடையாது. எல்லோருமே அனுபவத்தில்தான் தெரிந்துகொள்ள வேண்டும். வேண்டுமானால் சில அனுபவங்களைச் சொல்கிறேன்.”
“படிச்சி முடிஞ்சதும் எனக்கு உடனே அரசாங்க வேலை கிடைக்கல. ஒரு நர்சரிப் பள்ளியில் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தேன்.
மூன்று ஆண்டுகள் அங்கு வேலை செய்த பின் எனக்கு அரசுப் பள்ளியில் உதவி ஆசிரியராக வேலை கிடைத்தது. என் அப்பா பணி ஆணையை எடுத்து வந்து மகிழ்ச்சியுடன் என்னிடம் கொடுத்தார். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேலையில் சேர்ந்து அம்மாவையும் அப்பாவையும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் பணி ஆணை எனக்கு அஞ்சல் மூலம் கல்வி அலுவலரிடமிருந்து வந்த மறுநாளேஅதை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன். அதை மேலும் கீழும் பார்த்த அவர் பிறகு என்னைப் பார்த்து தனக்கு அதுபோன்ற கடிதம் ஏதும் வரவில்லை, அதனால் உன்னை பணியில் சேர்க்க முடியாது என்று என் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார்”
“வேலையில் சேரப் போனபோது எனக்கு வயது 26 இருக்கும். கிராமத்திலிருந்து ஆசை ஆசையாய் வேலையில் சேரப்போன எனக்கு அந்தத் தலைமை ஆசிரியரின் செயல்பாடு அதிர்ச்சியாய் இருந்தது. வேலையில் சேர முடியாது போலிருக்கே என்ற எண்ணத்துடன் பரிதாபமாக நின்று கொண்டிருந்தேன். அருகில் இருந்த மற்ற ஆசிரியர்கள், அலுவலர்கள் சிலர் என்னைப் பரிதாபத்துடனும், பரிகாசத்துடனும் பார்ப்பதை உணர்ந்தேன்.
“அப்படி அவர் பார்த்துக்கொண்டிருந்தபோது, எனது பணி ஆணை அவருக்கும் அஞ்சல் மூலம் கல்வி அலுவலரிடமிருந்து வந்து சேர்ந்தது. அதை பிரித்துப் பார்த்த அவர் என்னை ஒருவித வெறுப்புடன் பார்த்தவாறே பணியில் சேர்வதற்காக ஒரு விண்ணப்பம் எழுதித் தரச்சொன்னார். பிறகுதான் பணியில் சேர்ந்தேன்.”
“என்னை வேலையில் சேர்க்க நான் எடுத்துச் சென்ற பணி ஆணையே போதும். அதை வைத்தே அவர் என்னைப் பணியில் சேர்த்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இளைஞனான எனது ஆர்வத்திற்கு அணைபோட்டுவிட்டார். பணி செய்யச்சென்ற முதல் நாளே எனக்குப் பயத்தையும், அதிர்ச்சியையும், மனவருத்தத்தையும் கொடுத்துவிட்டார். என்றாலும் நான் மனம் தளராது பொறுமையுடன் அவரிடம் நடந்துகொண்டேன். எதிர்பாராத ஏமாற்றங்கள் தடைகள், புறக்கணிப்புகள், வெறுப்புகள் நம்மை நோக்கி வந்தாலும் நாம் பொறுமையுடன் உணர்ச்சி வசப்படாது நம் இலக்கை அடைவதில் உறுதியுடன் இருக்க வேண்டும்” என்றார். அவர் என் பணியாணையைத் திரும்பத் திரும்ப வெறுப்புடன் பார்த்தது என் ஜாதியை அறியவே! அவரைப் போன்று உயர் ஜாதிக்காரன் நான் இல்லையே என நினைத்திருக்கிறார். பணியில், போட்டியில், ஜாதி, மதம் பார்ப்பது குற்றம், அந்தச் செயலை ஒழித்துக்கட்ட வேண்டும்.”
“அவரது ஆரம்பச் செயல் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. யாரையும் மனம் நோகும்படிச் செய்யக்கூடாது, இல்லாத பொல்லாத சாக்கு போக்குகள் சொல்லி யாருடைய ஆர்வத்தையும், ஆசையையும் சீர்குலைக்கக் கூடாது, சாதனையைப் பார்க்க வேண்டுமேயொழிய ஜாதி, மதத்தைப் பார்க்கக்கூடாது என்பதைப் பாடமாக எடுத்துக் கொண்டு என் பணிக்காலம் முழுவதும் அந்தக் கொள்கைகளைக் கடைபிடித்தேன். இளைஞர்களை உற்சாகப்படுத்தினேன். அவர்களது உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பளித்தேன். என் பெயர்த்தியும் அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன்.”
“தாத்தா, நீங்க சொன்னதையெல்லாம் நான் கவனமாகக் கேட்டு மனதில் பதிய வைத்துக்கொண்டேன். இப்போ நான் எங்க குழுவிற்குத் தலைமை ஏற்றுள்ளேன். குழுவில் உள்ள நாங்கள் எல்லோரும் ஒரே வயதில் உள்ளவர்கள்தான். ஒரு தலைவர் எப்படி இருக்கணும் தாத்தா?” குழுத் தலைவி என்ற முறையில் கேட்டாள் இதழ்யா.
“நீ தலைமை ஏற்று நடத்திச் செல்வதற்கு மீண்டும் எனது வாழ்த்துகள். ஒரு தலைவர் என்பவர் தனக்குக் கீழுள்ள உறுப்பினர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். அந்த வழியில் தலைவரும் செல்ல வேண்டும். நல்ல வழியை தலைவர் தெரிந்திருக்கவும் வேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது யார் யாருக்கு என்ன என்ன பணிகளைக் கொடுக்கலாம் என நன்கு அறிந்து அந்தப் பணியினைக் கொடுக்க வேண்டும். கொடுத்தபின் ஏன் கொடுத்தோம் என்று எண்ணக்கூடாது. உன் குழுவில் உள்ள பிள்ளைகளின் பலம், பலவீனம் ஆகியவற்றை நன்கு உணர்ந்து அவர்களுக்கு உகந்த பணியினை வழங்கவேண்டும்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்னும் திருக்குறளை நீ மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, ஒரு செயலைச் செய்யும்போது துணிந்து செய்ய வேண்டும். துணிந்து செய்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும். இதையும் திருவள்ளுவர் அழகாகக் கூறுகிறார்-
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”
– என்று. இந்தக் குறளையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட இதழ்யா,
“திருக்குறளைப் படித்தாலே நிறைய செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும் போலிருக்கே தாத்தா”, என்றாள்,
“உண்மைதான். இன்னும் சொல்கிறேன் இதழ்யா. நீ தலைமையேற்று அழைத்துச்செல்லும் மாணவிகள் யாரையும் மனதளவில் சோர்வடையச் செய்யக்கூடாது. சிறுசிறு தவறுகள் செய்தாலும் சரிசெய்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். பயமுறுத்தக்கூடாது. உற்சாகமூட்ட வேண்டும், ஊக்கம் அளிக்க வேண்டும். முக்கியமான ஒன்றையும் உனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் இதழ்யா.”
“என்ன தாத்தா அது?”
”போட்டிகளில் வெற்றி பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதைவிட எந்தவிதமான பாதிப்புகளும்
இல்லாமல் நலமுடன் திரும்ப வேண்டும். என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு செல்வம் இதழ்யாவுக்கு அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருக்கும் போது, ஆசிரியை அய்ஸ்வர்யா செல்வத்தைப் பார்க்க வந்தார். அவர் செல்வத்தின் முன்னாள் மாணவி.
“வணக்கம் அய்யா. அடுத்த மாதம் எனக்குத் தலைமை ஆசிரியையாகப் பதவி உயர்வு கிடைக்க உள்ளது அய்யா“, என்று மகிழ்வுடன் தெரிவித்தார் அய்ஸ்வர்யா.
“மிக்க மகிழ்ச்சி. என்னுடைய வாழ்த்துகள். சிறப்பாகச் செய்” என்று வாழ்த்தினார் செல்வம்.
“நன்றி அய்யா. தலைமைப் பொறுப்பேற்க உள்ள எனக்கு உங்களோட அறிவுரை தேவை அய்யா”, என்று பணிவுடன் கேட்ட அய்ஸ்வர்யாவை
உட்காரச் சென்னார் செல்வம்.
உடனே அந்த ஆசிரியை தரையில் உட்கார முனைந்தார். ஆனால், செல்வம் அவரைத் தடுத்து நாற்காலியில் உட்காரச் செய்தார்.
தன்னுடைய ஆசிரியர் முன் உட்கார அவருக்குச் சற்று தயக்கமாகவே இருந்தது. அதனால் சற்று தயங்கியபடியே உட்கார்ந்தார்.
“இதையே எனது முதல் அறிவுரையாக நீ எடுத்துக்கொள்ள வேண்டும்”, என்ற செல்வம் தொடர்ந்து பேசினார்.
“உன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களை உட்கார வைத்துதான் பேசவேண்டும். அவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்கவும் வேண்டும். பள்ளி என்பது ஒரு கூட்டுக் குடும்பம். அனைவரும் பணி செய்வது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.”
அவர் சொல்வதைக் கவனமுடன் கேட்டு தலையசைத்து ஆமோதித்தார் அய்ஸ்வர்யா.
“தலைமைப் பண்புக்கு இன்னும் விளக்கம் கொடுங்க தாத்தா”, என்று மீண்டும் உரையாடலைத் தொடர்ந்தாள் இதழ்யா.
“நிறைய சொல்லலாம். தலைவர் வாயிலிருந்து கடுஞ்சொல் வரக்கூடாது; யாராவது பார்க்க வந்தால் அவர்களைப் பார்க்காமல் தவிர்க்கவும் கூடாது. இதைத்தான் திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்.
”காட்சிக் கெளியன் கடுஞ்சொல் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்”
இந்தக் குறளை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் பணிவு, துணிவு, அஞ்சாமை, நீதி, நேர்மை, சூழ்நிலைக்குத் தக்கவாறு முடிவெடுக்கும் திறமை, பேச்சுத் திறமை போன்ற அனைத்துத் திறமைகளும் வேண்டும்”, என்று விளக்கம் கொடுத்தார் செல்வம்.
“தலைமைப் பண்பு பெற திருக்குறளைப் படித்து, அதன் நாவலர் உரையையும் படித்தாலே நிறைய செய்திகளை அறியலாம். திருக்குறள் மட்டுமல்ல, பாரதிதாசன் கவிதைகள், வாழ்வியல் சிந்தனைகள் உட்பட பல நூல்களையும் படிக்கவேண்டும். ஒரு மனிதனுடைய உருவத்தைப் பார்த்து எதையும் முடிவு செய்யக்கூடாது”, என்று கூறிய செல்வம் தன் குள்ளமான உருவத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டார்.
அதைக் கண்ட அய்ஸ்வர்யா,
“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து”,
என்ற திருக்குறள் எல்லோருக்கும் தெரியும் அய்யா. உங்கள் உருவம் சிறியது. ஆனால் ஆற்றலோ பெரியது. நீங்கள்தான் எனக்கு முன் மாதிரி அய்யா”, என்றார்.
“தாத்தா, எங்களுக்கு முன்மாதிரி நீங்கதான். அதுபோல உங்களுக்கு முன் மாதிரி யார்? யாரிடமிருந்து தலைமைப் பண்புகளை கற்றுக்கொண்டீர்கள்?” என்று கேட்டார் இதழ்யா.
செல்வம் உடனே பதில் சொன்னார்.
“எனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே முன் மாதிரியும், வழிகாட்டியும் தந்தை பெரியார் அவர்கள்தான். தலைமைப் பண்புக்கு அவரே சிறந்த உதாரணம்.”
“அது பற்றிச் சொல்லுங்களேன் தாத்தா.”
“உங்கள் இருவருக்கும் தேவையான செய்திகளை மட்டும் சுருக்கமாகச் சொல்கிறேன். ஒரு நல்ல தலைமைப் பண்புக்கு அவசியம் காலம் தவறாமை. அதை தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். ஒரு கூட்டத்திற்குச் செல்ல ஒப்புக்கொண்டால் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சென்றுவிடுவார். தலைவர் இன்னும் வரவில்லை
யென்ற பேச்சே இருக்காது.
அதுபோலவே நீங்களும்
குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் இருக்கவேண்டும். பள்ளியைப் பொருத்தவரை தலைமை ஆசிரியர் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வந்தால்தான் மற்றவர்களும் சரியான நேரத்திற்கு வருவார்கள்.”
அவர் சொல்வதை தலையசைத்து ஆமோதித்தார் அய்ஸ்வர்யா. செல்வம் பேச்சைத் தொடர்ந்தார்.
“தன்னைவிட இளையவர்கள் வந்தாலும் அவர்களுக்குரிய மரியாதையைத் தரவேண்டும். தந்தை பெரியாரிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பண்பு இதுவாகும். ஒரு ஆசிரியர் அவர் வேலை செய்யும் ஊரில் உள்ள மக்களிடம் நட்பு முறையில் பழக வேண்டும். படிக்கும் பிள்ளைகளின் சூழல் பற்றி நன்கு அறிய வேண்டும். அவர்களுடைய பிரச்சனைகளை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் அவர்களைக் கல்வியில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும். தந்தை பெரியார் ஒரு ஊருக்கு கூட்டத்தில் பங்குகொள்ளச் சென்றால் அந்த ஊருக்கு முன்கூட்டியே சென்று மக்களுடன் உரையாடுவார். அவர்களுக்குள்ள பிரச்சினைகளைக் கேட்டறிவார். அவற்றைப் போக்க பல்வேறு யோசனைகளும் சொல்வார். தொண்டர்களுக்கு உடல்நலமில்லாமல் இருந்தால் அவர்களின் நோய் குணமாக தக்க மருத்துவரைப் பரிந்துரை செய்து பார்க்கச் சொல்வாராம். இப்படி மக்களோடு பழகி அவர்களுக்கு நல்ல சிந்தனைகளை ஊட்டினார் தந்தை பெரியார். அதோடு இதழ்யா நீ முக்கியமான ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும்,” என்று கூறிவிட்டு இதழ்யாவைப் பார்த்தார் செல்வம்.
“என்ன தாத்தா, சொல்லுங்க”, என்று ஆவலுடன் கேட்டாள் இதழ்யா.
“விளையாட்டில் உன் திறமையை நீ நம்ப
வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்று பூசை செய்வது, யாகம் நடத்துவது போன்ற செயல்களில் நீயோ, உன் குழுவில் உள்ளவர்களோ ஈடுபடக்கூடாது. விளையாட்டில் ஜாதி, மதம் நுழைய விடக்கூடாது. இதை நீ எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.
“கடைபிடிப்பேன்”, என்று கைகளை உயர்த்திக் காட்டினாள் இதழ்யா.
“அதேபோல் ஆசிரியர் கள் அனைவரும் பகுத்தறிவு
வாதிகளாக விளங்கவேண்டும். பிள்ளைகளுக்குப் பகுத்தறிவை ஊட்டி அறிவியல் மனப் பான்மையை வளர்க்க வேண்டும்.
அதுவும் தற்போது மிகவும் முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். மதவாதம் தனது
கோர முகத்தைக் காட்டத்துடிக்கிறது. செயற்கைக் கோள் திருநள்ளாறு கோயிலின்மீது பறக்கும்போது செயலிழந்து பிறகு செயல்படும் என்று பாட நூலிலேயே வரும் அளவுக்கு மூடத்தனமான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்தப் பொய்யுரைகளையெல்லாம் ஒழித்துக்கட்டி பகுத்தறிவு வெளிச்சத்தை பிள்ளைகளின் எண்ணத்தில் பாய்ச்ச வேண்டும். இதுவே என்னுடைய யோசனையும் வேண்டுகோளும். நான் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பாருங்கள். சரியாக இருந்தால் செயல்படுத்துங்கள்”, என்று சொல்லி முடித்தார் செல்வம்.
“நிச்சயமாக அய்யா. நான் படிக்கும்போதே என்னை நீங்கள் பகுத்தறிவுவாதியாக ஆக்கிவிட்டீர்களே! உங்கள் பணியை நான் தொடர்வேன்”, என்று சொல்லி விடைபெற்றார் அய்ஸ்வர்யா.