சம உரிமையுடன் வாழ விரும்பும் ஈழத்தமிழர்கள்

ஆகஸ்ட் 16-31

பாதிக்ககப்பட்ட ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்த மனநல மருத்துவர் மா.திருநாவுக்கரசு


இலங்கையில் சிங்கள இனவாத அரசு நடத்திய இனப்படுகொலைக்குப் பிறகும் எஞ்சி வாழும் தமிழர்களின் வாழ்வுரிமை என்பது கேள்விக்குறி என்ற நிலையில், உலகத் தமிழர்களெல்லாம் கவலையோடு இருக்கின்ற வேளையில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தற்போதைய மனநிலை எப்படி உள்ளது?

அவர்களுக்கு தற்போதைய தேவைகள் என்ன? அவர்கள் எதை எதிர் பார்க்கிறார்கள்? என்பதை அறிய இலங்கையில் கொழும்பு, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, வன்னிபிரதேசம், யானையிறவு, யாழ்ப்பாணம் போன்ற தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று வந்த உலக மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பின் தெற்காசியப் பிரிவுத் தலைவரும், சிறந்த மனநல மருத்துவ நிபுணருமான பேராசிரியர் மா.திருநாவுக்கரசு அவர்கள், தமிழர்களை சந்தித்து அவர்களுக்கு மன உறுதிக்கான ஆலோசனைகளை வழங்கியதோடு, தற்போது அங்குள்ள சூழ்நிலைகளை நம்மிடம் எடுத்துரைத்தார்.

அதன் விவரம் வருமாறு: கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி  கொழும்புவில் உள்ள மனநல மருத்துவர் சிவதாஸ் எழுதிய நலமுடன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றினேன். மக்கள் ஆர்வத்துடன் இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்கள். இந்தியாவில் இருந்து வந்திருந்து தமிழில் உரையாற்றி, கலந்துரையாடலும் செய்ததைப் பற்றி அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

அவர்களுடைய ஆர்வமும், தமிழ்ப் பற்றும் வெளிப்படையாகத் தெரிந்தது. அன்று இரவே அனுராதபுரம் வழியாகப் பயணம் செய்து வவுனியா வந்தடைந்ததோம், வவுனியா தற்போதுதான் மீண்டெழுந்து செயல்பட்டு வருகிறது. மக்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டு மணி நேரம் பயணம் செய்து கிளிநொச்சியைச் சென்றடைந்தோம். அங்கு உள்ள மத்திய பள்ளி வளாகத்தில் புத்தக வெளியீட்டு விழா. போருக்குப் பின் அப்பள்ளியில் நடக்கும் ஒரு பொது நிகழ்ச்சி என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

நிகழ்ச்சி வன்னி பிரதேச கல்வி இயக்குனர் தலைமையில் நடந்தது. போரின்போதெல்லாம் அப்பள்ளி வளாகம் சிகிச்சை அளிக்கக் கூட பயன்படுத்தப்பட்டது என்று கூறினர். அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.

சுனாமி பேரழிவின் பாதிப்புகள், போரின் அவலங்கள், அதனால் ஏற்பட்ட காயங்கள்,  மிச்சங்கள் மற்றும் எச்சங்கள் ஆகியவை பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள். வவுனியா பிரதேசத்தின் பொது மருத்துவமனையின் இயக்குனரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது முள்ளி வாய்க்கால் முழுக்க அவரது நிர்வாகப் பொறுப்பில்தான் இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. அனைவருமே நம்பிக்கையூட்டும் விதமாக பேசினார்கள். பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஏதாவது ஒரு முகாமை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கெல்லாம் வந்து பேச, உரையாட, அறிவுரை வழங்க கேட்டுக் கொண்டார்கள்.

கல்வி நிலைய முதல்வர்களுடனும், களப் பணியாளர்களுடனும் ஒரு மணி நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது. போரினால் ஏற்பட்ட இழப்புகள், தாக்கங்கள், காயங்கள் மற்றும் மன அழுத்தங்கள் தெளிவாகத் தெரிந்தன. அனைவருமே எதையாவது இழந்திருந்தார்கள். இழப்பை சந்திக்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

போருக்கு முன் ஏறத்தாழ நான்கு அய்ந்து ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகளே செயல்பட வில்லை. கிளிநொச்சி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரம் கிடையாது என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

யானையிறவு பகுதியில் பலத்த பாதுகாப்பு சோதனை இருந்தது. யாழ்ப்பாணம் பகுதி சுறுசுறுப்பாகத்தான் இருந்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லூர் முருகன் கோயில் பகுதிக்குச் சென்ற பிறகு வெவல்வெட்டித்துறை, கணேசன்துறை, பலாலி வழியாக செல்லும்போது பிரபாகரன் வீடு அமைந்த சந்தையும் (வீதி) பார்க்க நேர்ந்தது. இராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீட்டைப் பார்க்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள். அங்கிருந்து பாயின்ட் பெட்ரோ சென்று கடற்கரையைப் பார்த்தோம். வெகு நாட்களாக மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்டிருந்த இடம் இது.

அங்கிருந்து வேதாரண்யம் மிக அருகில் உள்ளது என்றார்கள். சமீபத்தில்தான் மீன் பிடி தொழில்தடை நீங்கி, உயிர் பெற்று சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மீண்டும் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தைப் பார்த்த பிறகு பொதுஜன நூலகத்தைப் பார்த்துவிட்டு கொழும்பு திரும்பினோம்.

2006 இல் சுனாமியின்போது மீட்புப் பணிகளுக்காக கொழும்பு சென்றிருந்தேன். அப்போது திரிகோண மலை மற்றும் மட்டக்களப்பு வரைதான் செல்ல அனுமதி கிடைத்தது. வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் செல்ல தடையிருந்ததாகக் கூறினார்கள்.

தற்போது சென்றபோது தடை இல்லை. கண்காணிப்போடு எந்த இடத்திற்கும் சென்றுவர முடிந்தது. மக்களை சந்திக்க முடிந்தது. உரையாட முடிந்தது. அதிலிருந்து நான் அறிந்து கொண்டவை இவைதான்:-

போருக்குப் பின் ஏற்பட்ட அமைதி தெளிவாகப் புலப்பட்டது. மக்கள் சகஜமாக நடமாடுகிறார்கள். இயல்பாக இருக்க முயற்சிக்கிறார்கள். வழி நெடுக சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் ராணுவ மற்றும் காவலர் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை மய்யங்கள் உள்ளன.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்கள்தான் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்கள். பலர் யாழ்ப்பாணத் திலிருந்து புலம் பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் சென்று செட்டிலாகிவிட்டார்கள். அதே சமயம் வவுனியா பகுதியில் உள்ள மக்கள்தான் இரண்டு பக்கத்திலும் மாட்டிக்கொண்டு இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள்.

தற்போது தமிழர்களிடம் இருப்பது மனிதவளம்தான். தைரியத்தோடும், தெளிவோடும் இருக்கிறார்கள்.

மேற்கொண்டு போராடுவதற்கு அவர்கள் தயாராக இல்லை என்று தெரிகிறது. அதே சமயம் நடந்தவைகளை நினைத்து அசைபோட விரும்பவில்லை. மேற்கொண்டு என்ன செய்யலாம் எவ்வாறு முன்னேறலாம் என்றுதான் முயற்சிக்கிறார்கள்.

மனித வளத்தை முதலீடு செய்து மேம்படவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தைரியம், தன்னம்பிக்கையை இழந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் பாதுகாப்பின்றிதான் இருக்கிறார்கள். சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்ற நினைப்பும், சமத்துவமாக நடத்தப்படுவதில்லை என்ற ஆதங்கமும், கவலையும் அவர்களது பேச்சில் தெரிகிறது.

சுதந்திரமாக செயல்படவும், சமத்துவமாக நடத்தப்படவுமான உலக நாடுகளின் உதவி மற்றும் செயல் பாடுகளால், வற்புறுத்தலால் தங்களுக்குக் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள். எல்லோரும் தோற்றதாகத்தான்  நினைக்கிறார்கள். யாரும் வெல்லவில்லை என்பதுதான் அவர்களது கருத்து.

தமிழ் மக்கள் செய்த தியாகம் மகத்தானதுதான். அம்மக்களுக்குக் கிடைக்கவேண்டிய பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் சமத்துவம் கிடைத்திட, உலக நாடுகள் முயன்றிட வேண்டும் என எண்ணுகிறேன் என்று மனநல மருத்துவ நிபுணர் பேராசிரியர் மா.திருநாவுக்கரசு அவர்கள் ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்த தனது அனுபவங்களை உண்மை இதழ் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டார்.

சந்திப்பு: வே.சிறீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *