இப்பொழுது பரபரப்பான ஒரு தகவல் முக்கிய தகவலாகச் சிம்மாசனம் ஏறியிருக்கிறது. அதுதான் கோயில்களில் சாமி சிலைத் திருட்டுகள்.
2008ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் திருப்பரந்தம், சுத்தமல்லி முதலிய கோயில்களிலிருந்து சிலைகள் திருடப்பட்டன.
இது தொடர்பாக 61 வயதுடைய சுபாஷ் சந்திர கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழும் இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சாமி சிலைகளைத் திருடி விற்பதைக் கைவந்த கலையாக நடத்திவரும் இவர் இப்பொழுது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிலை திருட்டு என்பது ஒரு பன்னாட்டுத் தொழிலாகவும், கலையாகவும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆங்காங்கே உள்ளூரில் உள்ளவர்கள் இவருக்குக் கையாட்கள்; உலக அளவில் வலைப்பின்னல் (NETWORK) ஒன்று இவர் கைவசம் உள்ளது.
பழங்கால கோயில்களில் பாழடைந்த கோயில்களில் சிதிலம் அடைந்து கிடக்கும் சிலைகள்தான் இவர்களின் இலக்கு. அந்த வகையில்தான் அரியலூர் மாவட்ட சிலைகளும் ஹாங்காங் வழியாகக் கடத்தப்பட்டன.
இந்தச் சிலைகள் கடத்தலில் புதுச்சேரியைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன் முக்கிய புள்ளி.
இந்த அசோகனுக்கு நியுயார்க்கிலிருந்து சுபாஷ் சந்திர கபூர் ஆன்லைன் மூலம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை அனுப்பியதுதான் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டதற்கான தக்க ஆதாரமாகிவிட்டது.
யானைக்கும் அடிசறுக்கும் அல்லவா!
ஜெர்மனியில் கபூர் பிடிபட்டு (30.11.2011) பத்து மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். இம்மாதம் 14ஆம் தேதி இங்கே கொண்டுவரப்பட்டார்.
கோயில் பழங்கால அய்ம்பொன் கடவுள் சிலை திருடர்கள்
கோயில்களுக்குப் புகழ் பெற்றது தமிழ்நாடு. காஞ்சிபுரம், மதுரை, தஞ்சாவூர் போன்ற நகரங்களில் கோயில்கள் அதிகம். பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில்கள் கட்டடக் கலை, சிற்பக் கலை மற்றும் வரலாற்றுப் பிரியர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளவையாகும். கோயில்களின் அழகைப் போற்றவும், கடவுளை வழிபடவும் மட்டுமே அனைவரும் அவற்றிற்கு வருவதில்லை. சில திருடர்களுக்கு கோயில்கள் எளிதான இலக்காக ஆகிவிட்டன. 2008 ஜூன் மாதவாக்கில் மூன்று திருட்டுகள் நடைபெற்றன. கலைநயமிக்க யானை மரப் பொம்மை பிரான்சுக்கு கடத்தப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது.
12ஆம் நூற்றாண்டுக்கு முன் அழகு நயத்துடன் வார்க்கப்பட்டுள்ள நடராஜர், ஆழ்வார்கள், முருகன் சிலைகள், பாதுகாப்பு அதிகமில்லாத இக்கோயில்களிலிருந்து திருடப்பட்டு, பல அயல் நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இச்சிலைகளுக்கு மேலை நாட்டினர் மிக அதிகப்படியான விலை தருகின்றனர்.
சிலை திருட்டு வழக்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சிறப்புப் பிரிவு 2008இல் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் 16 திருடப்பட்ட சிலைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிலை திருடர்க்ள செயல்படுவதாக இப்பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர். சோழர் காலத்தைச் சேர்ந்த தஞ்சை மதுரை கோயில்கள், பல்லவர் காலத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், வேலூர் கோயில்கள், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த திருநெல்வேலி கோயில்களை இலக்காக வைத்து இத்திருடர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இத்திருடர் கூட்டங்கள் இந்த மாவட்டங்களில் தொடர்ந்து சுற்றித் திரிந்து, போதுமான பாதுகாப்பு அற்ற கோயில்களைத் தங்கள் இலக்காகத் தேர்ந்து எடுக்கின்றனர். கோயிலுக்குள் திருடச் செல்லும்போது, விலை உயர்ந்த சிலைகளை மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுத்து திருடுகின்றனர். பல நேரங்களில், கோயில் பாதுகாப்புக்காக இருக்கும் காவலர்களை அவர்கள் கொன்று விடுகின்றனர் என்று சிலை திருட்டுப் பிரிவு காவல்துறை அதிகாரி கூறுகிறார்.
சிலைகளைத் திருடியவுடன் அவற்றை நடுவர் ஒருவரிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். சிலை கடத்தலில் ஈடுபட்டுள்ள இடைத் தரகர்கள் பலர் உள்ளனர். திருடர்கள் சிலைகளை காரைக்குடி, மதுரை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள முதல்நிலை தரகர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். திருடப்பட்ட சிலைகளுக்கு காரைக்குடி முக்கிய சந்தையாக உள்ளது. சிலைகளைப் பெற்றுக் கொள்ளும் முதல்நிலை தரகர் தங்களுடன் தொடர்பு வைத்துள்ள இரண்டாம் நிலை இடைத்தரகர்களுடன் தொடர்பு கொண்டு, சிலையின் விலையை மதிப்பிட அதன் ஒளிப்படத்தையும் அளிக்கிறார். மூன்றாம் நிலை இடைத்தரகர் பின்னர் இந்த சிலையை விலைக்கு வாங்கி வெளிநாட்டுக்கோ, அல்லது டில்லி, மும்பை போன்ற நகரங்களுக்கோ அனுப்பிவிடுகிறார்.
இந்தப் பஞ்சலோக சிலைகளின் மதிப்பை தொல்பொருள் ஆய்வுத் துறையினராலும் கூட மதிப்பிட முடிவதில்லை. இவை முதல் நிலை இடைத் தரகருக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலான விலைக்கு விற்கப்படுகின்றன. அதனை அவர் இரண்டாம்நிலை இடைத்தரகருக்கு ஒரு லட்சம் வரைக்கும் விலை வைத்து விற்றுவிடுகிறார். அவர் அதனை 5 முதல் 10 லட்சம் வரை விலை வைத்து மூன்றாம் நிலை இடைத்தரகருக்கு விற்றுவிடுகிறார். சர்வதேச சந்தையில் இந்த சிலைகள் 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை விலை போகின்றன என்று அந்த அதிகாரி கூறுகிறார்.
சிலையின் தொன்மை, அளவு மற்றும் எடையை வைத்து சிலை மதிப்பிடப்படுகிறது. 12ஆம் நூற்றாண்டு சிலைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை இருக்கிறது. அதனால் சிலை திருடர்கள் தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களின் மீதே தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றனர் என்று அவர் கூறுகிறார்.
100 ஆண்டுகளுக்கு முந்தைய கலைப்பொருள் பரிமாற்றம், விற்பனைக்கு அரசின் அனுமதி தேவை. இவற்றை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்புவது மிகவும் எளிது. தங்கள் மூலம் அனுப்பப்படும் கலைப்பொருள்களின் தொன்மையை பொருள்களை அனுப்பும் கன்டெய்னர் நிறுவனம் பரிசீலனை செய்வதில்லை. அதை அனுப்புபவர் அது புதிய கலைப்பொருள் என்று பதிவு செய்து புதிய கலைப் பொருளின் ஒளிப்படத்தையும் வைத்து விடுகிறார். பின்னர் இந்த பார்சல் தொன்மையானது அல்ல என்று சான்றளிக்கப்படுகிறது. இந்த அறிவிக்கையையே கலால்துறை அதிகாரிகளும் நம்பி, பார்சல்களை அனுப்ப அனுமதிக்கின்றனர் என்று மற்றொரு அதிகாரி கூறுகிறார்.
சிலைகள் கைப்பற்றப்படும்போது ஆய்வுக்காக அவை அனுப்பப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டில்லியில் இருந்து வரும் தொல்பொருள் ஆய்வுத் துறை நிபுணர் குழு ஒன்று இச்சிலைகளை ஆய்வு செய்கின்றன என்று ஒரு அதிகாரி கூறுகிறார்.
சிலை திருடர்கள் பெரும்பாலும் 12ஆம் நூற்றாண்டு கோயில்கள் மீதே கவனம் செலுத்துகின்றனர். தொன்மைக் கலைப் பொருள்களுக்கான சர்வதேச சந்தையில் இச்சிலைகளுக்கு மிகச் சிறந்த விலை கிடைக்கின்றது.
இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் வெளியிட்ட வழிகாட்டும் நூல்களைக் கொண்டு, கடத்தல்காரர்கள் அனுப்பும் தகவல் அனைத்தையும் மேலை நாட்டினர் சரி பார்ப்பதால், அவர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியாது.
2007 _ கடலூர் மாவட்டத்தல் தீனபந்து நாச்சியார் கோயில் காவலர் கொல்லப்பட்டு 3 சிலைகள் திருடப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்னும் புலன் விசாரணையில் உள்ளது.
2007 _ கோட்டூர் குழந்தீஸ்வரர் கோயில் காவலர் கொல்லப்பட்டு 7 சிலைகள் திருடப்பட்டன. காவல் துறையினரால் இவை மீட்கப்பட்டன.
2007 _ தஞ்சாவூர் பாபநாசம் விழுதியூர் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட மூன்று சிலைகள் பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டன.
திருடப்படும் சிலைகள் மும்பை அல்லது டில்லி போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அல்லது பாங்காக்கு அனுப்பப்படுகின்றன. பாங்காக்கிலிருந்து முக்கியமாக அவை அய்ரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோயில்களுக்கு மட்டுமல்ல; சிலைத் திருட்டுப் பிரிவு காவல்துறைக்காகவும் தமிழ்நாடு பெயர் பெற்றதுதான். சென்னையில் மட்டுமே அலுவலகம் உள்ள இப்பிரிவில் உள்ள 25 அதிகாரிகள் மட்டுமே மாநிலத்தில் உள்ள 33,000 கோயில்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். காவல் துறையினர் தங்களுக்கு தகவல் தரும் நபர்களிடம் இருந்து (இன்பார்மர்) தகவல் சேகரிக்கின்றனர். மாநிலம் முழுவதிலும் நடைபெறும் சிலை திருட்டுகளைக் கையாளும் அளவுக்கு எங்களிடம் பணியாளர்கள் இல்லாததால், இன்பார்மர்களையே நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம். என்றாலும், பல விலையுயர்ந்த சிலைகளின் திருட்டுகளை நாங்கள் கண்டுபிடித்துக் கைப்பற்றியுள்ளோம் என்கின்றனர் அதிகாரிகள்.
சிலை திருடர்களும், இடைத் தரகர்களும் மிகவும் புத்திசாலிகள். திருட்டு நடந்த பல மாதங்கள் கழிந்த பின்னர்தான் அவை வெளியே வரும். இடைத் தரகர் அதனை சிறிது காலம் மறைத்து வைத்திருந்து விட்டு பின்னர் இரண்டாம் நிலை இடைத்தரகரிடம் கொடுப்பார். குற்றவாளிகளைக் கைது செய்து சிலைகளைக் கைப்பற்ற நாங்கள் சில நேரங்களில் வெளி மாநிலங்களுக்கும் செல்கிறோம் என்கின்றனர்.
போலி நடவடிக்கைகள்!
சிலை திருட்டு பற்றி தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் தங்களின் போலி நடவடிக்கையை தொடங்கி விடுகின்றனர். பல வழக்குகளைக் கண்டுபிடித்த ஆய்வாளர் காதர் பாட்சா இத்தகைய செயல்பாடுகளில் திறமை மிக்கவர். வழக்கமான எங்கள் அதிகாரிகள் ஒரு பணக்கார மார்வாடியைப் போல உடையணிந்துகொண்டு இடைத்தரகரை தொடர்பு கொள்வர். சிலையை வாங்குவதற்கு எங்களுக்கு ஆர்வம் இருப்பதாகக் காட்டிக் கொண்டதும், அவர்கள் சிலையின் ஒளிப்படத்தை அனுப்புவர். பின்னர் நாங்கள் விலைபேசி முடிவு செய்து முன்பணம் தருவோம். பின்னர் எங்களை அவர்கள் சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வர். சிலைகளை அவர்கள் வெளியே எடுத்தவுடன் அவர்களைக் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்வார்களாம்.
இதுபோல் செயல்படும் காவல்துறை அதிகாரிகளும் கூட திறமை மிக்கவர்கள். இவ்வாறு பலமுறை சிலைத் திருட்டுகளைக் கண்டுபிடித்த பிறகும், இதே தந்திரத்தைக் கடைப்பிடித்து மேலும் மேலும் திருட்டுகளைக் கண்டுபிடிக்க அவர்களால் முடிகிறது. சிலைகள் பெரும்பாலும் விமானத்திலோ, கப்பலிலோ பாங்காக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால் சிலை கடத்துபவர்கள் பெரும்பாலும் கடல் வழியையே விரும்புகின்றனர்.
சிலைத் திருடர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பது கோயில்களில் சரியான பாதுகாப்பு இல்லாமல் இருப்பதுவே. மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்களைப் பாதுகாக்க ஒரு கோயில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இதில் இருந்தவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும், காவல் துறையினரும்தான். அவர்களில் பெரும்பாலோர் 50 வயதைக் கடந்தவர்கள். திருட்டைப் பற்றி எச்சரிக்கை செய்யும், கம்பியில்லாத எச்சரிக்கை மணியைப் பொருத்துமாறு சம்பந்தப்பட்ட இலாக்காக்களை நாங்கள் கேட்டுள்ளோம். கோயில்களில் எவரேனும் நுழைந்தால், இந்த எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிவிடும். இந்த ஓசையை ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை கேட்கலாம். அதுவுமன்றி மூன்று தொலைபேசிகளுக்கு இந்த அமைப்பு தகவல் தந்துவிடும் என்கின்றனர்.
போலி தொல்கலைப் பொருள்களுக்கு உள்ள மிகப் பெரிய சந்தை
விலைவாசி உயர்வு மற்ற துறைகளில் வேண்டுமானால் விற்பனையைக் குறைத்திருக்கலாம். ஆனால் அது எந்த விதத்திலும் தொல்கலைப் பொருள் பிரியர்களின் ஆர்வத்தைக் குறைக்கவில்லை. தொன்மையான சிலைகளைத் தேடி வாங்குவதற்கு மக்கள் தமிழ்நாட்டுக்குக் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்; இந்த விலைமதிப்பற்ற, காலமதிப்பற்ற கலைப் பொருள்களுக்கு மிகப் பெரிய விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.
இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சில இடைத் தரகர்கள் பல இடங்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளை தொன்மை வாய்ந்தவை என்று தவறாகக் கூறி விற்றுவிடுகின்றனர்.
இலக்கைத் தேர்ந்தெடுத்தபின், வழக்கமாக அதிக பாதுகாப்பு இல்லாத இத்தகைய கோயில்களில் இருந்து சிலைகளைத் திருடுவார்கள். பின்னர் அவற்றை ஒரு மரப்பெட்டியில் வைத்து ஒரு தென்னந்தோப்பிற்கு அருகில் மண்ணில் புதைத்துவிடுவார்களாம். இந்தச் சிலைகளை நைட்ரிக் அமிலத்தில் போட்டு ஒரு நாள் முழுவதும் வைத்திருப்பார்கள். அடுத்த நாள் சிலையைப் புளி கொண்டு விளக்கி அதனை தென்னந்தோப்பில் மண்ணில் புதைத்து விடுவர். ஓராண்டு கழித்து அவர்கள் அதை வெளியே எடுப்பார்களாம். பஞ்சலோக சிலைகளின் சில பகுதிகளை நைட்ரிக் அமிலம் அரித்துவிடும். சிலையில் உள்ள தாமிரம் நைட்ரிக் அமிலத்துடன் எதிர்வினையாற்றும். அதனால் உருவாகும் காப்பர்நைட்ரேட் சிலையின் மீது படியும். புளியும், மண்ணில் உள்ள சல்பரும் பச்சை நீல வடிவில் உள்ள சல்பேட் படிமத்துடன் மேலும் எதிர்வினையாற்றி, சிலைக்கு ஒரு பழமையான தோற்றத்தை அளிக்கும். பழமைவாய்ந்த கலைப்பொருள் என்று கூறி அதனை விற்பதற்கு இந்தத் திருடர்கள் ஓராண்டு காலம் வரை காத்திருக்க வேண்டும். ஓரடி உயரம் உள்ள அய்ம்பொன் சிலை அரை கோடி ரூபாயைப் பெற்றுத் தரும்.
பின்னர் அவர்கள், தாங்கள் மண்ணைத் தோண்டும்போது கிடைத்தது என்று கூறி அந்தச் சிலையை ஒரு பெரிய விலைக்கு விறறுவிடுவர். சிலைத் திருட்டில் குற்றவாளிகள் என்று சந்தேகப்படும் 120 நபர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றிய ஆவணங்களை நாங்கள் பராமரித்து வருகிறோம் என்று இப்பிரிவின் டி.அய்.ஜி.ஆறுமுகம் கூறினார்.
(ஆதாரக் குறிப்பு: 2008 ஜூன் 26 டைம்ஸ் ஆப் இந்தியா)
திருப்பதி கோயிலில் ரூ.125 கோடி ஊழல்
சித்தூர்: திருப்பதி மற்றும் திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக வஸ்திர சேவை டிக்கெட்டில் இதுவரை ரூ.125 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக விஜிலன்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏழுமலையான் தரிசனத்திற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். அவர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
அபிஷேக வஸ்திர சேவை: சுப்ரபாதம் முதல் ஏகாந்த சேவை என பல்வேறு சிறப்பு பிரிவுகளில் கட்டணம் செலுத்தி பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர். இது தவிர ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை யன்று மூலவருக்கு அபிஷேக வஸ்திர சேவை நடைபெறுவது வழக்கம். இதில் வாரந்தோறும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். முன்பதிவு செய்பவர்களிடம் ரூ.12,500ம், வி.வி.அய்.பி. சிபாரிசு கடிதம் மூலம் வருபவர்களிடம் ரூ.50 ஆயிரமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு மூலவர் சன்னதி முன்பு சுமார் 2 மணி நேரம் உட்கார வைத்து சுவாமிக்கு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்படும். அதன் பிறகு சுவாமிக்கு அணிவித்த பட்டு வஸ்திரம், தீர்த்த பிரசாதங்கள் இலவசமாக வழங்கி கவுரவிக்கப்படுவர்.
இதனால் பக்தர்கள் சிலர் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த சேவையை தரிசிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு லட்சக் கணக்கில் பணம் தரவும் அவர்கள் தயாராக உள்ளனர். இதை சில இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தேவஸ்தான அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.
அதிரடி சோதனை: தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் திருமலை தேவஸ்தான அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது இந்த சேவை டிக்கெட்டுகள் வரும் 2032ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு கோயிலுக்கு ரூ.78 கோடி வருவாய் கிடைத்துள்ளது தெரியவந்தது. புரோக்கர்கள், சில அதிகாரிகளின் உதவியோடு கள்ளச்சந்தையில் ஒரு டிக்கெட்டை ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு சென்னை பக்தரின் பெயரில் மட்டும் 560 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளதும், 3,600 டிக்கெட்டுகளை புரோக்கர்கள் பதிவு செய்துள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மூலம் சுமார் ரூ.125 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் விவரம் குறித்து விஜிலன்ஸ் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த முறைகேட்டில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் பலர் சிக்குவார்கள் என விஜிலன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வஸ்திர சேவை டிக்கெட் விற்றதாக 3 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்தன ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. (தினகரன் 8.5.2010)
அம்மனின் நகையை திருடிய பூசாரி கைது
கோயிலில் அம்மன் சிலையில் இருந்த நகையை திருடிய பூசாரி பிடிபட்டார்.
போரூர் ராமசாமி நகரில் தாய்மூகாம்பிகை கோயில் உள்ளது. இங்கு, முகலிவாக்கம் ஆறுமுகம் நகரைச் சேர்ந்த விக்னேஷ் (23) என்பவர் பூஜை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்தார்.
பக்தர்கள் சென்றபிறகு அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 பவுன் செயினை கழற்றி டவுசர் பாக்கெட்டில் போட்டுள்ளார். இதைப் பார்த்த கோயில் ஊழியர் பாண்டியன், பூசாரி விக்னேஷை கையும் களவுமாக பிடித்து மதுரவாயல் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேறு கோயில்களிலும் விக்னேஷ் கொள்ளை அடித்துள்ளாரா என்று விசாரணை நடத்துகின்றனர். (தினகரன் 22.5.2010)
– கவிஞர் கலி.பூங்குன்றன்
அர்ச்சகர்களே உடந்தையாக இருந்து சிலைகள் கடத்தப்படுவதும் உண்டு. அதுபற்றி அடுத்த இதழில்…