நினைவு தெரிந்த நாளில் இருந்தே தினமலர், தினமணி, துக்ளக், விகடன், கல்கி மற்றும் The Hindu இதழ்களையே படித்துக் கொண்டிருந்ததால், இணையத்தில் விடுதலை நாளிதழை வாசித்த போதோ பெரும் பிரமிப்பு !
இப்படியும் ஒரு நாளிதழ் இருக்க முடியுமா? இது சாத்தியமா? அல்லது காண்பது கனவா? எனும் நினைவே வந்தது.
பிரமிப்பு
க்கு காரணம்? வேறொன்றுமில்லை, இதுகாரும் தந்தை பெரியாரை பற்றியும், தந்தை பெரியாரின் கொள்கையைப் பற்றியும் அறியாத நிலையில் இருந்திருக்கிறோம் என்பதே பிரமிப்புக்கு ( வேதனைக்கு ) காரணம்.
இவ்வளவு நாளாக வாசித்து வந்த சராசரி இதழ்களில், தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏன் பகிரவில்லை? என்ற கேள்விதான் முதலில் வந்தது. தந்தை பெரியாரின் கொள்கைகளை விடுதலை மூலம் தெரிந்து கொண்ட பின்னரே புரிந்தது, இதுகாரும் வாசித்து வந்த சராசரி இதழ்கள், தந்தை பெரியாரின் கருத்துக்களை பரப்பவும் இல்லை; அதே வேளையில் மூட நம்பிக்கை கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதும் புரிந்தது. அதாவது, பெரியாரின் கருத்துக்கள் இருட்டடிப்பு; தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு எதிர்மறையான செய்திகளைப் பரப்புவது. இப்படியாகத்தான் தமிழகத்தின் இதழ்கள் இருக்கின்றன.
எவ்வளவு காலம்தான் உண்மையை மறைத்து வைக்க முடியும் ? உண்மை ஒரு நாள் உலகத்தின் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். யாரெல்லாம் உண்மையை மறைத்தார்களோ அவர்களைப் பார்த்து காலம் கட்டாயம் கேள்வி கேட்கும்.
வலைப்பூ எழுதத் தொடங்கிய காலத்தில், செய்திகள் தேட விழைந்த போது, கூகுளில் வந்து விழுந்ததுதான் விடுதலை எனும் அறிவுச் சுரங்கம். அன்றிலிருந்து இஇன்றுவரை வாசித்து வந்த இதழ்களான தினமலர், தினமணி, துக்ளக், விகடன், கல்கி மற்றும் The Hindu போன்றவற்றை வாசிக்கும் ஈடுபாடு குறைந்து, தினமும் விடுதலை வாசித்தால்தான் திருப்தி எனும் நிலை வந்துவிட்டது.
எங்கிருந்தோ, தமிழகத்தில் உள்ள ஓர் ஆற்றங்கரையில் உள்ள குக்கிராமத்தில் இருந்து இங்கிலாந்தில் உள்ள பெரும் வங்கியில் மென் பொருள் நிபுணராகப் பணி புரியும் வாய்ப்பு அமையப் பெற்றது என்றால்? அதற்கு அடித்தளம் இட்டது திராவிடர் கழகம் ! திராவிடர் கழகம் ! திராவிடர் கழகம் !
தந்தை பெரியாரின், அன்னை மணியம்மையாரின், தமிழர் தலைவர் அவர்களின் தன்னலமற்ற தொண்டறமே தமிழகம் கல்வி நீரோடையில் தங்கு தடையின்றி பயணிக்கக் காரணம்.
தந்தை பெரியாரின் வாக்கின் படி, நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய குணமேயன்றி; பலனை விளைவித்தவர்கள் எதிர்பார்க்கக் கூடிய குணம் அல்ல, எனும் நிலையிலேயே திராவிடர் கழகம் தன்னலம் பாராது சமுதாய வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுகிறது.
சமூக நீதியினை நிலை நாட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 31% லிருந்து 50% ஆக உயர்ந்ததும்; பின்னர், 50% லிருந்து 69% ஆக உயர்ந்ததும் திராவிடர் கழகமே என்பதை அறியாத பலன் பெற்ற பலனாளிகள் பலரும் இருக்கிறார்கள்.
அப்படிப் பலன் பெற்ற பலரும் நன்றியைக் காட்டவில்லை. ஆனாலும் மறக்காமல், அதே வேளையில் தாங்கள் பெற்ற பலனை மட்டும் லாவகமாக மறைத்துக் கொண்டு, திராவிடர் கழகத்தை குறை கூற முனைகிறார்கள்.
அப்போதுதான் புரிந்தது, குறை கூறுவோர் பலன் பெற்றவர்கள் என்றும்; அவர்கள் நன்றியை காட்டவில்லை என்றும்; பலனுக்கு காரணமான திராவிடர் கழகமோ நன்றியை எதிர்பார்க்கவும் இல்லை என்று.
சரி போகட்டும்! குறை கூறுகிறார்களே; கூறுகிற குறையிலாவது நியாயம் நேர்மை பொது நலம் இருக்கிறதா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. இப்படிப் பட்ட பலன் பெற்ற படித்த மேதைகள் பலரும் இருக்கிறார்கள்.
இப்படிப் பட்ட பலன் பெற்ற படித்த மேதைகள் தங்களைப் பற்றி மட்டும் கவலைப்படும் அதே வேளையில், திராவிடர் கழகமோ, ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையில், பலன் பெற வேண்டிய எண்ணற்ற மக்களின் கல்வி வளர்ச்சிக்காக, சமூக நீதிக்காக, பகுத்தறிவு வளர்ச்சிக்காக, ஜாதி ஒழிப்புக்காக, சமுத்துவ சமுதாயம் அடைய உழைத்துக் கொண்டிருக்கிறது என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.
– திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன்