வாருங்கள் அய்ஸ்லாந்து போவோம் !  – சரோ. இளங்கோவன்

2024 கட்டுரைகள் மற்றவர்கள் மே 1-15, 2024

பெரியார் பகுத்தறிவு வழியை ஏற்று முன்னேறும் குடும்பம் நாங்கள். வேலை ஓய்வுக்குப் பிறகு எங்கள் குறிக்கோள் பெரியார் மனித நேயத்தை உலகெங்கும் பரப்புவது. எங்கள் உழைப்பிற்கு பரிசு பேரக்குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் செல்வது என நிறைய இடங்களுக்குச் சென்றுள்ளோம். அந்தப் பயணங்களுள் ஒன்றுதான் அய்ஸ்லாந்து பயணம். எங்கள் பேத்தி மேனகாவிற்கு இளவேனில் கால (spring break) 5 நாள்கள் விடுமுறை.

அய்ஸ்லாந்து அது எங்கே உள்ளது?

வட அட்லாண்டிக் கடலில் கிரீன்லாந்துக்கும் நார்வேக்கும் இடையே அமைந்துள்ள ஒரு தீவு நாடு. இது அய்ரோப்பாவைச் சார்ந்தது. பரப்பளவு 103,000 சதுர கிலோமீட்டர்கள். இதன் தலைநகரம் ரெய்க்ஜவிக்.
அய்ஸ்லாந்து ஒரு தனித்த வரலாறு படைத்த நாடு. வைக்கிங் என்கிற நார்வே இனம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
குடியேறிய நாடு. வருடத்தில் மூன்றில் இரு பங்கு நாட்கள் குளிரும் கடுமையான காற்றும் இந்நாட்டின் சிறப்பு.

இரு மாதங்களுக்கு முன்பு இங்கு எரிமலை ஒன்று வெடித்தது. உயிருக்கும் பொருட்களுக்கும் சேதமில்லை. எங்கள் பயணம் தள்ளிப் போய் விடுமோ என்று கவலையாக இருந்தது, ஆனால் பயணம் தடைபடவில்லை.

இந்நாடு எரிமலைகளுக்கும் பனிமலைகளுக்கும் சொந்தம் என்றுதான் சொல்ல வேண்டும். இது மக்களாட்சி நாடு. தாய்மொழி அய்ஸ்லாண்டிக். ஆங்கிலத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கின்றனர். பொருளாதாரம் – மீன் பிடிப்பு, விவசாயம், சுற்றுலா ஆகியன. மின்சாரம் நிலத்தின் சுடுநீர் ஊற்றுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
நாங்கள் ராலி வடகரோலைனா விமான நிலையத்திலிருந்து இரவு 9 மணிக்கு விமானம்Icelandic கிளம்பியது.

5 மணி நேரம் கழித்து அய்ஸ்லேண்டு Keflavik விமானநிலையத்தில் காலை 7 மணிக்கு இறங்கியது. இரண்டு ஊர்திகளில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விடுதியைச் சென்றடைந்தோம். உணவு உண்டுவிட்டு விடுதியைச் சென்றடைந்தோம். மொத்தம் 3 அறைகள் கிடைத்தன. பெட்டிகளையெல்லாம் அவரவர் அறைகளில் வைத்துவிட்டு “வடக்கு வெளிச்ச அலைகள் (Northern Lights)” என்கிற விண் விந்தை ஒளியைப் பார்க்க 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூடு ஏற்றப்பட்ட கூடாரத்தில் நள்ளிரவில் கும்மிருட்டில் இருந்தவாறு பார்க்கச் சென்றோம். ஒரு கல்லூரி மாணவர் Iceland பல்கலைக்கழக மாணவர் Northern lights உண்டாகும் விஞ்ஞானத்தை விரிவாக விளக்கினார்.

பூமியின் காந்த விசையும் சூரியனின் காந்த அலைகளும் சேரும் பொழுது இந்த அழகிய கதிர்கள் பச்சை நிறத்தில் ஒளிர்கின்றன. கும்இருட்டில் தான் இந்த விந்தையைப் பார்க்க முடியும். அதற்காக மின்விளக்குகள் இல்லாத காட்டில் பார்க்கச் சென்றோம். அன்று இரவு 12 மணிவரை காத்திருந்தும் அலை வீச்சு வெளிவரவில்லை. ஏமாற்றத்துடன் விடுதிக்குத் திரும்பினோம். மறுநாள் மார்ச் 27ஆம் தேதி அய்ஸ்லாந்து அரசு இயற்கை தோட்டத்திற்குச் (state park) சென்றோம். தோட்டம் என்றால் பசுமையான மரங்கள் பூந்தோட்டங்கள் ஒன்றுமே கிடையாது. குளிர் காற்றும் பனியும் எரிமலைக் குன்றுகளுந்தான். பார்ப்பதற்கு அழகிய நெளிவு சுளிவுகளுடன் மலைகள் காட்சி அளித்தன. இங்கேதான் வடஅமெரிக்க நிலத்தட்டும் அய்ரோப்பா ஆசிய நிலத்தட்டும் மோதி மிகப்பெரிய எரிமலை பள்ளத்தாக்கு(The great divide) உண்டாகியுள்ளது. அடுத்த இடம் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Gullies water fall என்னும் உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள மூத்த அருவியைக் காணச் சென்றோம். அழகான அருவியை நின்று ரசிக்க முடியாத அளவிற்கு கடுமையான குளிர்காற்று வீசியது. இருந்தாலும் சில மணித்துளிகள் அருவியின் மிக அருகே சென்று கண்டு களித்துவிட்டு ஊர்திக்குள் தஞ்சம் புகுந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். இன்னும் சில கிலோமீட்டர்கள் கடந்து அதிவெப்ப ஊற்றுகள் நீராவியுடன் வெளிவரும் ஓடைகள் ஓடும் பல ஏக்கர்கள் உள்ள இடத்தைக் கண்டு வியந்தோம். திடீரென்று அதிவேகமாக சுடுநீர் ஊற்று பீறி அடிப்பதையும் பார்த்தோம். குளிரையும் சூட்டையும் அருகருகே பெற்றிருக்கும் விந்தையைக் கண்டு வியந்தோம்.

இந்தக் குளிர் பிரதேசத்தில் எங்கு சென்றாலும் கழிவறைகளுக்கும் குடிநீருக்கும் பஞ்சமில்லை. அவ்வளவு தூய்மையாக வைத்துள்ளார்கள். குடிநீர் பாட்டில்கள் தேவையே இல்லை. குழாயிலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் தூய்மையான தண்ணீர் குடிக்கலாம். இங்கு கிடைக்கும் தண்ணீர் உலகத்திலேயே மிகத் தூய்மையானது என்று பெருமையுடன் அறிவிக்கிறார்கள்.

அடுத்தாற்போல் சுடுநீர்க் குளத்தில் குளிக்கச் சென்றோம். இந்தச் சுடுநீர் இயற்கைச் சுனையிலிருந்து எடுக்கப்பட்டு நீச்சல் குளங்களில் நிரப்பப்பட்டு மக்கள் பயன்படுத்த உதவுகிறார்கள். இதற்கெல்லாம் பல வாரங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும். உணவகத்தில் அருமையான உணவு வழங்கினார்கள். அங்கே கிடைக்கும் கவரிமான் இறைச்சி மற்றும் மீன் வகை உணவுகள் நன்றாக இருந்தன. அன்று இரவு திரும்பவும் Northern lights பார்க்க கடும் இருட்டாக இருக்கும் State Park என்னும் இடத்துக்குச் சென்றோம். எங்கள் மகன் குமார் தொலைநோக்கி கேமராவுடன் கடும் குளிரில் 2 மணிநேரம் காத்திருந்தார். நம் கண்களால் பார்க்கும் அளவிற்குத் தெளிவாகத் தெரியவில்லை. கேமராவில் சிறிது மங்கலாகத் தெரிந்தது. அடுத்த நாள் மார்ச் 28ஆம் தேதி விடியற்காலை கிளம்பி 2 மணி நேரம் பயணம் செய்து ஒரு தக்காளிப் பண்ணையைப் பார்த்தோம். இந்த கடும் குளிரில் தக்காளிப் பண்ணை என்பது வியப்பான செய்தி. சூடு கூடாரங்கள் மின் ஒளி விளக்குகள் அமைத்து தக்காளிச் செடிகளைக் கொடி போல் வளர்த்து இயற்கை உரம், சொட்டுநீர் விவசாயம் செய்கிறார்கள். ஆண்டு முழுவதும் அறுவடை செய்கிறார்கள். பிறகு பெரும் பனிப்பாறைகள் (Glacier) உருகி 300 அடிக்கு மேல் இருந்து விழும் நீர்வீழ்ச்சியைப் (Skogafoss) பார்த்தோம். மிகக் குளிரான வேகமான காற்று வீசினாலும் நடந்து சென்று இந்த இயற்கை எழிலைப் பார்த்து மகிழ்ந்தோம். இரண்டு வானவில்களை நீர்த் துவாலையில் ஒரே சமயத்தில் பார்த்தது மேலும் மகிழ்ச்சியை அளித்தது. பிறகு கடல்கரையில் அமைந்த செங்குத்துப் பாறை 2000 அடி உயரமுள்ளது, அதன் மேல் ஏற நல்ல சாலை அமைத்துள்ளார்கள். அதன் மேல் காரில் பயணம் செய்து பனியில் வழுக்கிவிழாமல் நடந்து கீழே கடலையும் பறக்கும் வெள்ளை நிற கடல் புறாக்களையும் பேரக்குழந்தைகளுக்குக் காட்டி மகிழ்ந்தோம். அக்கடலில் என்ன சிறப்பு என்றால் கடற்கரை முழுதும் கருப்பு மண்தான். அங்கு எங்கு பார்த்தாலும் எரிமலையின் எச்சங்கள். அந்த மலைகளிலிருந்து கடலுக்கு வந்த கருப்பு மண் என்று விளங்குகிறது. 28/3/2024ஆம் தேதி அய்ஸ்லாந்து நாட்டின் நடுப் பகுதியில் நீண்ட நேரம் பயணம் செய்தோம். இந்தப் பயணத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அமைதியாக உறங்கும் எரிமலைகள், மரங்களே இல்லாத புல் மட்டும் உள்ள பள்ளத்தாக்குகள், பனியில் உறைந்த ஏரிகள் குளங்கள், மக்கள் வளர்க்கும் ஒருவகையான குட்டைக் குதிரைப் பண்ணைகள் பார்த்தோம். 4ஆம் நாள் காலை 9 மணிக்கு 2 டிகிரி செல்சியஸ் அளவைத் தாங்கும் அளவிற்கு உடை அணிந்து கொண்டு அரை மணி நேரம் ஊர்தியில் பனி அடர்ந்த மலைகளைக் கடந்து ஒரு பனியில் உறைந்த ஏரியை அடைந்தோம். பனியில் வழுக்கி விடாமல் இருக்க பாதுகாப்புக் காலணிகளை அணிந்திருந்தோம். எங்களுக்கு ஏரியில் சவாரி கொடுக்க நாய்கள் இழுக்கும் சறுக்குவண்டி ஆயத்தமாக இருந்தது. 7 நாய்கள் வண்டியில் பூட்டப்பட்டன. வண்டி ஓட்டுநர் ஒரு பிரஞ்ச் பெண்மணி. அவர் 19 வயதிலிருந்து கடந்த 15 ஆண்டுகளாக இந்த வேலை செய்கிறாராம். இந்த வண்டியில் ஒரு மணி நேரம் பயணம் செய்தோம். குளிரோ குளிர். இருந்தாலும் வாழ்க்கையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அய்ஸ்லாந்து தலைநகரம் ராய்விக் நகரில் துறைமுகம் அருகில் உள்ள நேப்பாள உணவு விடுதிக்குச் சென்றோம். உணவு தமிழ் நாட்டு உணவு போல் இருந்தது. உணவைச் சிறு கும்பா போன்ற கிண்ணங்களில் வைத்துக் கொடுத்தார்கள். சுவையான மதிய உணவு. பிறகு விடுதியில் இளைப்பாறினோம். Northern lights பார்க்க கடைசி முயற்சி செய்தோம். இரவு 10 மணிக்கு மிக இருட்டான இடத்தைத் தேடிச் சென்றோம். நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒளிவீச்சு Northern lights வானத்தில் இளம்பச்சை நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது. கைபேசி கேமராவில் இன்னும் அழகாகத் தெரிந்தது. கண்டு களித்த மகிழ்ச்சியுடன் அமெரிக்காவுக்குத் திரும்பினோம்.

நான்கு நாட்கள் பயணம் – ஒரு மாதம் போனது போன்ற உணர்வு. அனைவருக்கும் மனநிறைவு.
அடுத்த பயணத்தில் சந்திப்போம்…