ஜஸ்டிஸ் என்ற பெயரில் பத்திரிகை நடத்தியதால் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்று பொதுமக்கள் அழைக்க, அது தமிழில் ‘நீதிக் கட்சி’ என்று பெயர் பெற்றுவிட்டது. திராவிட இயக்கத்தின் மற்றொரு பரிமாணமான சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் என்பது ‘குடிஅரசு’ பத்திரிகை தொடங்கப்பட்ட நாளினையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியின் சீடராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்த தந்தை பெரியார், கேரள மாநிலம் வைக்கம் மகாதேவ சாமி கோயில் அமைந்துள்ள தெருவில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த சமுதாயத்தினருக்கான போராட்டத்தை முன்னெடுத்து, அவர்களின் உரிமையை மீட்டுத் தந்தார். வைக்கம் போராட்டத்தின் வெற்றி விழா மேடையில் பேசும்போது, “தெருவில் நடக்கின்ற உரிமை மட்டுமல்ல, கோயிலுக்குள்ளும் எல்லா ஜாதிகளும் சென்று வழிபடும் உரிமையைப் பெறவேண்டும்” என்றார் பெரியார்.
ஜாதியை அடிப்படை அளவுகோலாகக் கொண்டு எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராடுவது பெரியாரின் இயல்பு. தனது போராட்டங்களை அவர் சுயமரியாதைக் கண்ணோட்டத்தில் அணுகினார். காங்கிரஸ் கட்சிக்குள் அதை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பெரியார் கொண்டு வந்த தீர்மானம் அனுமதிக்கப்படாத காரணத்தால்தான் அவர் காங்கிரசிலிருந்து வெளியேறும் சூழல் உருவானது.
காங்கிரசிலிருந்து வெளியேறுவதற்கு முன்பே ‘குடிஅரசு’ பத்திரிகையைப் பெரியார் தொடங்கிவிட்டார். அவருடன் சேர்ந்து அந்தப் பத்திரிகையைத் தொடங்கியவர் ஈரோடு குமாரபாளையம் வா.மு.தங்கப்பெருமாள் பிள்ளை. (பின்னர் உடல்நலக்குறைவால் அவர் விலக நேர்ந்தது). 1925 மே 2ஆம் நாள் ‘குடிஅரசு’ பத்திரிகை அலுவலகத்தைத் திறந்துவைத்தவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் எனப்படும் ஞானியாரடிகள். தமிழும் சைவநெறியும் தழைத்தோங்கத் தொண்டாற்றியவர்.
தனது சமூக நீதிக் கொள்கைக்கு உடன்பாடான வர்கள் எங்கே இருந்தாலும், என்னவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் பெரியார் முனைப்பாக இருந்தார்.
‘குடிஅரசு’ இதழின் முதல் தலையங்கத்தில், “மக்களுக்கு தன்மதிப்பும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளரவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார் பெரியார். இந்த தன்மதிப்பு எனுஞ் சொல்தான், சுயமரியாதை எனப்படுகிறது. 1925 நவம்பரில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பெரியாரும் அவருடைய ஆதரவாளர்களும் வெளியேறிய பிறகு, அவர்களின் நோக்கமும் செயல்பாடுகளும் ‘குடிஅரசு’ பத்திரிகை வழியாகவே வெளிப்பட்டன. எனவே, ‘குடிஅரசு’ இதழின் தொடக்க நாளை அடிப்படையாகக் கொண்டு, சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் வரையறுக்கப்படுகிறது. சுயமரியாதை இயக்கத்தினரை ‘சூனா மானா’ கட்சியினர் என்று சொல்வது அக்காலத்தில் பழக்கமாகவும், பகடியாகவும் இருந்தது. சூனா மானா இயக்கத்தின் தாக்கம் பரவலாக இருந்தது.
செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை இயக்க மாநாட்டில், பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பட்டங்கள் நீக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில், ‘குடிஅரசு’ பத்திரிகையின் முகப்பில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றிருந்த பெயர் ஈ.வெ.ராமசாமி ஆனது. அதே மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, பெண்களுக்கு குடும்பப் பரம்பரை சொத்தில் பங்கு தரவேண்டும் என்ற தீர்மானம் 1989இல் கலைஞர் ஆட்சியில் சட்டவடிவம் பெற்று, நடைமுறைக்கு வந்தது.
சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் சுசீந்திரம், ஈரோடு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை (மாயவரம்), திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட கோயில்களில் நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்குப் பிறகே, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டு, அனைத்து ஜாதியினரும் சென்று வழிபடுவதற்கான சட்டம் நிறைவேறியது.
தமிழறிஞர்களான மறைமலையடிகள், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்கள் பெரியாருடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க பல நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். ஆரியத்தால் வீழ்த்தப்பட்ட தமிழர்களின் பண்பாட்டை மீட்டெடுத்து, திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் மறுமலர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்ற தமிழறிஞர்களின் எண்ணத்தைச் செயல் வடிவமாக்கிக் காட்டியவர் பெரியார். அவர் உருவாக்கிய திருமண முறை, சுயமரியாதைத் திருமண முறை என்று பெயர் பெற்றது. அந்த சுயமரியாதைத் திருமண முறையைப் பேரறிஞர் அண்ணா தன்னுடைய (1967-69) ஆட்சியில் முன்தேதியிட்டு சட்டமாக்கினார்.
‘குடிஅரசு’ பத்திரிகையில் பொதுவுடைமைச் சிந்தனையாளர்களான சிங்காரவேலர், ஜீவா உள்ளிட்டோர் சிறப்பான கட்டுரைகளை எழுதி முற்போக்கு எண்ணங்களை விதைத்தனர். இன்றுவரை அரசியல்-பொருளாதாரத் துறைகளில் அதன் தாக்கம் உள்ளது.
சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டு, 1938இல் முதல் ஹிந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியது. தமிழறிஞர்கள் மூட்டிய நெருப்பைத் திக்கெட்டும் பரவச் செய்து புரட்சிகரமாக்கியவர் பெரியார். அதற்காகக் கடும் சிறைத் தண்டனையை ஏற்றார். அந்தப் போராட்டக் களத்தில்தான் அண்ணா முதன்முதலாக சிறை சென்றார். 14 வயது சிறுவனாகத் தமிழ்க் கொடி ஏந்தி, திருவாரூர் வீதிகளில் போராட்டம் நடத்தி, பொதுவாழ்க்கையில் நுழைந்தார் கலைஞர்.
தமிழ் மண்ணுக்கு மகத்தான தலைவர்கள் பலரைத் தந்த சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் இணைந்து 1944ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. பின்னர், திராவிட முன்னேற்றக் கழகம் 1949இல் உருவானது.
வைக்கம் கோயில் தெருவில் தொடங்கிய பெரியாரின் சிந்தனை, 2021ஆம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசால் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டபோது, முழுமையான செயல்வடிவமானது.
50% வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரும் தீர்மானம் அனுமதிக்கப்படாததால் அன்று காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் பெரியார். இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டு அளவை 50 விழுக்காட்டிற்கு மேல் கொண்டு வருவோம் என உறுதி அளித்துள்ளது.
தி.மு.கவின் சமூக நீதிக் கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது என புதுடெல்லியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் படிக்கப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் உரை பெருமை கொள்கிறது.
பெரியாரின் கொள்கைகள்-திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் இன்று இந்தியா முழுமைக்கும் தேவையாக உள்ளன. பெரியார் தொடங்கிய ‘குடிஅரசு’ பத்திரிகைக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் இது நூற்றாண்டு தொடக்க விழா.
ஒரு நூறாண்டு கடந்தும் எதிரிகள் அலற, தனது கொள்கையால் நம்மை வழிநடத்துகிறார் பெரியார்.