எனக்குள் அடிமைத்தனம்
ஒளிந்திருக்கிறது என அறிந்த நாளில்
பிடித்துப் போனது விடுதலை
கேட்காமலே உள்ளிருந்த இருட்டை
விரட்டிவிட்டு,
வெளிச்சத்தை விதைத்தது!
ஒரு வெளிச்சம்
இன்னொரு வெளிச்சத்தோடு
கலப்பதைப் போல,
விடுதலையோடு கலந்தவர்
ஆசிரியர்
விடுதலைக் கொடி பறக்கிறது
அதைத் தொப்புள் கொடி என்கிறார்கள்
பகுத்தறிவுக் கொடி என்கிறார்கள்
எல்லாக் கொடிகளிலும் தெரிகிறது
ஆசிரியரின் ரேகைக் கொடி
பிடிக்காதவருக்கும் பிடிக்கிறது
ஆசிரியரை.
ஏனெனில்,
எல்லோருக்கும் சரியானதை
சொல்லித் தருபவராக இருக்கிறார்.
அவர் இடிபாடுகளை
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த இடிபாடுகள்
போரினால் வந்தவை அல்ல
பூகம்பம் கொண்டு வந்தவை அல்ல.
சூழ்ச்சிகள் கொண்டு வந்தவை
வெறும் மனிதர்களால்
கொண்டு வரப்பட்டவை.
நிற பேதத்தாலான இடிபாடுகள்
சடங்கால், ஜாதியால், மதத்தால்
எல்லாமே மனிதனை
இடித்துவிட்டுப் போயிருக்கின்றன.
எல்லா இடிபாடுகளையும்
மனிதன் சட்டைபோட்டு
மறைத்துக் கொண்டிருக்கிறான்.
அவனுக்கு சொல்லிக் கொடுக்கிறார்
இடிபாடுகளை எப்படி
சரிசெய்ய வேண்டுமென்று.
இடிபாடுகளிலிருந்து
எப்படி மீள்வதென்று
எல்லா இடிபாடுகள் மீதும்
கடவுள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
சாதாரண மனிதனால்
எதுவும் செய்ய இயலவில்லை.
அவரை யார்தான் நகரச் செய்ய முடியும்?
கடவுளை நகர்த்தும் சக்தியாக
விடுதலையின் கரங்கள் இருக்கிறது.
கடவுள்களை நிரப்பி
இடிபாடுகளை சரி செய்கிறார் ஆசிரியர்!
கடவுள் விடுதலை ஆசிரியரிடம்
மல்லுக்கு நிற்பதில்லை!
எல்லா ஆசிரியர்களும் கடவுளோடு
சமாதானமாகப் போகிறார்கள்.
கடவுள் மட்டும் விடுதலையோடு
சமாதானமாக போகிறார் போலும்
ஏனெனில், எந்தக் கடவுளும்
விடுதலையின் நாக்கை
பொய்யென்று சொன்னதில்லை.
விடுதலையின் ஆசிரியர் முக்கியமற்றதைப் பேசுவதில்லை.
அவர் தன்னை அடையாளப்
படுத்திக் கொள்வதில்லை.
ஆனால், அவரிடம் வந்து
பொருந்திக் கொள்கிறது
ஆசிரியர் என்ற அடையாளம்!
அது காற்று போல
எல்லோரது வீடுகளிலும் நுழைகிறது.
அது வார்த்தை இல்லாதவர்களுக்கு
வார்த்தையாகிறது.
பாதையில்லாதவர்களுக்கு
பாதையாகத் தொடர்கிறது.
இங்கு கட்சிகள் வெறும்
மரங்களாக வளர்கின்றன.
மரங்களுக்கு பூப்பது பற்றியும்
காய்ப்பது பற்றியும் சொல்லித்தர
வேண்டியிருக்கிறது.
உலகில் மனிதனைவிட
முக்கியமானது எதுவுமில்லை.
மனிதன் மீது முக்கியமற்றவைகள்
வளர்ந்து வருகின்றன.
அடிமைத்தனத்தின்
கையெழுத்துகள் போல
சிலர் அதை கடவுளின் கையெழுத்தென்கிறார்கள்.
சிலர், அதை விதியின்
கையெழுத்தென்கிறார்கள்.
எல்லா கையெழுத்துகளையும்
மாற்றி எழுதுகிற கையெழுத்தாக
இருக்கிறது விடுதலையின் கையெழுத்து
அதைப் புரட்சியின் கையெழுத்தாக
மாற்றுகிறார் ஆசிரியர்
துருப்பிடித்த மதங்கள்
ஈயம் பித்தளைக்கு காத்திருக்கும்
சம்பிரதாயங்கள்
கைவிடப்பட்ட ரயில் நிலையம் போலிருக்கும்
கடவுளின் பின்னால் நிற்கின்றன.
எல்லாவற்றையும்
சொல்லித் தருகிறார் ஆசிரியர்
விடுதலை அவருடைய வானம்
விடுதலை அவருடைய நிலம்
விடுதலை அவருடைய உலகம்
சொல்லிக் கொடுப்பதில்
அவர் சலிப்பதேயில்லை.
சமூகம் ஒரு மாணவனைப் போல
காத்திருக்கிறது.
சமூகம் ஒரு குற்றவாளியைப் போல
நின்று கொண்டிருக்கிறது.
சமூகம் ஒரு குழந்தையைப் போல
தவழ்கிறது.
எல்லாவற்றுக்குமாக
அவர் இயங்குகிறார்
அவரது முகமாகிறது விடுதலை.
– கோசின்ரா