தொடர்ந்து விடுதலையை வாசிக்கும் சில வாசகர்களின் எண்ணங்கள்
வலுவான கருத்துகள்
தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மீது முழு நம்பிக்கையோடு விடுதலையைக் கொடுத்தார். அந்த நம்பிக்கைக்கு சிறு துளியளவும் ஊனம் நேராமல் இன்று வரையிலும் ஆசிரியர் பணியாற்றி வருகிறார். விடுதலை, மற்ற நாளிதழ்களோடு போட்டி போடுகின்ற வகையில் வடிவமைப்பில் மாறியிருந்தாலும் கருத்துக்களில் இன்னமும் அதே வலுவோடுதான் இருக்கிறது. எனது நினைவில் நின்றவை, ஒற்றைப்பத்தி, மயிலாடன், மின்சாரம் எழுதும் பகுதிகள், ஆசிரியருடைய உரைகள், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் அ.குமரேசன் தொகுத்துத் தரும் கட்டுரைகள் ஆகியவைதான். இன்னமும் சொல்லலாம். ஆதலால், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் வீறுநடை போடும் விடுதலைக்கு வீழ்ச்சி கிடையாது. – சித்ரா, மடிப்பாக்கம்
வாழ்வியல் சிந்தனைகள்
விடுதலை என்று சொன்னதும் எனது நினைவில் நிற்பவை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதுகின்ற, வாழ்வியல் சிந்தனைகள். காரணம், கொள்கை சாராத பொதுவான மக்களையும் நம்பக்கம் ஈர்ப்பதற்கு வாழ்வியல் சிந்தனைகள் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. பிறகு, ஒற்றைப்பத்தி, வரலாற்றுச் சுவடுகள், இளைஞர் மலர், மாணவர் மலர், மகளிர் மலர் ஆகியவற்றைச் சொல்லலாம். காரணம் மாணவர்களையும், இளைஞர்களையும் விடுதலையின் பக்கம் திருப்புவதில் இந்தப் பகுதிகள் முக்கிய பங்காற்றி இருக்கின்றன.
உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான விடுதலை தந்தை பெரியாருக்குப் பிறகும், தொடர்ந்து வெளிவந்து, திராவிட மக்களிடையே புதிய சிந்தனைகளை ஆழமாக எழுச்சியுடன் மேலோங்கச் செய்வதில் ஆசிரியரின் 50 ஆண்டுகால மானம் பாராத உழைப்பை, அரும்பணியை உலகெங்கிலும் உள்ள திராவிட மக்கள் போற்றிப் புகழ்கின்றனர்.
– லட்சுமிபதி, தாம்பரம்
புத்தியில் “பளிச்”
என்னைப் பொறுத்தவரையில் விடுதலையில் எல்லாமே நினைவில் நின்றவைதான். காரணம் அன்றைக்கு மன்னர்கள் காலத்தில், மனுநீதியின்படி நடந்த கொடுமைகளாகட்டும், இன்றைக்கும் பார்ப்பனியத்தை தோலுரித்துக் காட்டுவதாகட்டும் மறைக்கப்பட்ட நமது வரலாற்றை நமக்கு மீட்டுக் கொடுப்பதாகட்டும் அனைத்தும் செய்து கொண்டிருப்பது விடுதலைதான். அந்தப் பணியை ஆசிரியரின் வழிகாட்டுதலில், விடுதலை மிகச் சிறப்பாக ஆற்றி வருகிறது.
1987 என்று நினைக்கிறேன். அம்பாசமுத்திரம் அல்லது விக்கிரசிங்கபுரத்தில் ஆசிரியர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நான் அப்பொழுது மாவட்ட உதவி ஆய்வாளர். பேசுவதை கவனிப்பது எனது பணி. அப்போது, பக்தி இருந்தால்தான் தீ மிதிக்க முடியும்னு சொல்றாங்க. கடவுளே இல்லேன்னு சொல்ற எங்க தோழர்களும் தாராளமா தீ மிதிச்சுக் காட்டுவாங்க. அதனால, தீ மிதிக்கறதுக்குப் பதிலா, பக்தி இருக்குனு சொல்லறவங்க, கரண்ட் கம்பியை புடிச்சுக் காட்டட்டும் பார்க்கலாம் என்று பேசினார். எனக்கு புத்தியில் பளிச் சென்று வெளிச்சம் பாய்ச்சியது போல ஆயிற்று. அன்றிலிருந்து இன்று வரை விடுதலை வாசகன் நான். ஆசிரியரின் பணி அரும்பணி.
– சுப்புராஜ், கோவை