தமிழ் மொழியில் இணையத்தில் வந்த முதல் நாளிதழ் விடுதலை. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஒருங்குறி (Unicode) பயன்படுத்திய முதல் இதழும் விடுதலையே.
முரசொலி நாளேட்டின் ஆசிரியர் செல்வம் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்படுவதன் மூலம் அதிமுக அரசால் எழுத்துரிமை பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தலையங்கப் பகுதி வெற்றிடமாக அச்சிடப்பட்டது. (21.09.1992) விடுதலையின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தேவநேயப் பாவாணருக்கு தபால்தலை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோள் முதல்வர் கலைஞர் அவர்களால் கத்தரித்து டெல்லிக்கு அனுப்பப்பட்டு, அதன் விளைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
ஆசிரியர் கி.வீரமணி பொறுப்பேற்ற பின் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு படக்கதையாக விடுதலையில் வெளிவந்தது.
உலகின் ஒரே நாத்திக நாளேடான விடுதலை தனது இரண்டாம் பதிப்பை திருச்சியில் தொடங்கியது.
சென்னை ரிசர்வ் வங்கியின் பார்ப்பன அலுவலர்கள் தீட்டுக் கழிப்பது என்ற பெயரால் நடத்தவிருந்த யாகத்தைக் கண்டித்து விடுதலை எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. இதன் பலனாக வங்கி மேலாளர் ராமசந்திர ராஜூ அவர்கள் யாகம் நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தார். (17.11.1993)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏ.மேட்டூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவுக் கூடத்துக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி மகேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டதை மக்கள் எதிர்த்ததால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதைக் கண்டித்து விடுதலை தலையங்கம் தீட்டியது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்தார்.