பேச்சால் வரலாமா பெருந்துன்பம்? – நம். சீனிவாசன்

2024 ஏப்ரல் 16-30, 2024 கட்டுரைகள் மற்றவர்கள்

மொழியின் பயன் நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிப்பதேயாகும். எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் மொழி பயன்படுத்தப்படுகிறது. அதிலும் பேச்சே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அப்படிப்பட்ட பயனுள்ள பேச்சு மிக நேர்த்தியாக ஆளபடவேண்டும். அதனால்தான் பேச்சு ஒரு கலையாயிற்று. தேவையற்ற, பயனற்ற சிக்கல் தரும் பேச்சுகள் தவிர்க்கப்படல் வேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் அதிகம் ஈடுபடுவது பெரிதும் விரும்பப்படுவது.

சாதனையாளர்களின் செயல்கள்தான் வரலாற்றில் பேசப்படுகிறதே ஒழிய, வாய்ச்சவடால் கள் நிலைப்பதில்லை. வகுப்பறையில் ஆசிரியர்
அதிகம் பயன்படுத்தும் வார்த்தை ‘பேசாதே’. அதிகமான சாலை விபத்துகள் செல்போன் பேச்சுகளாலே ஏற்பட்டிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு பல திருமணங்கள் நின்றுபோனதற்கு வரதட்சணை காரணமல்ல; விரும்பத்தகாத பேச்சே காரணம். பேசிச்
சாதித்தவர்களைவிட, பேசிக் கெட்டுப் போனவர்களே அதிகம். பேச்சை அளவோடு கையாளத் தெரிந்தவர்களுக்குத் துன்பங்கள் குறைவு.

ஒரு குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கிலிடும்போது கயிறு அறுந்து விடுகிறது. கயிறு அறுந்து விட்டால் விடுதலை
செய்வது மரபு. அவன் விடுதலை செய்யப்படுவதாக அரசன் அறிவிக்கின்றான்.

‘வலுவான கயிறுகூட தயாரிக்கும் வக்கில்லை
உனது அரசுக்கு’ என்று அவன் சொல்ல, அதன்பிறகு ‘வலுவான கயிறால் தூக்கில் போடுங்
கள்’ என்று உத்தரவிட்டான் மன்னன். இது
தேவையற்ற அகம்பாவப் பேச்சு. அது அழிவையே தரும்.
ஒருவன் அறிவாளியா? முட்டாளா? என்பது அவனவன் பேச்சே காட்டிக்
கொடுத்துவிடும்.

மறுப்புச் சொல்கிறோம் என்கிற பெயரில் விரிவான பதில் அடுக்குவதை விட, அளவோடு உரிய கருத்துகளை ஆழமாகக் கூறுவது ஆளுமையின் அடையாளம்.
அரிதாகப் பேசுபவன் கூற்றே அதிகம் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

சின்னச் சின்னச் சண்டைகள் பெரிதாக வளர்வதற்கு எருவாகத் திகழ்வது தேவையற்ற சொற்களைப் பயன்படுத்துவதே! சவால்களும் சபதங்களுமே பகைத் தீயை வளர்த்து, நிரந்தரப் பிளவைப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

பேசாத சொற்களுக்கு நாம் எஜமான் ; பேசிய சொற்களோ நமக்கு எஜமான். திடப்பொருளும் திரவப்பொருளும் எதுவாயினும் கொட்டி விட்டால் அள்ளிவிடலாம். வார்த்தைகளை அள்ள முடியாது. எனவே, எதிரிகளைக் கூட ஈர்க்கப் பேசுவது, அவரின் மதிப்பை உயர்த்தும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
தேவையற்றவற்றில் மூக்கை நுழைத்துக்கொண்டு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அது மதிப்பை இழக்கச் செய்யும்.

‘யாகாவாராயினும் நாகாக்க’ – நினைவில்
கொள்ளுங்கள். ‘நுணலும் தன் வாயால் கெடும்’
– தமிழ்ப் பழமொழி நினைவு இருக்கட்டும்.

உண்மைத் துலங்க உதவ வேண்டுமேயன்றி, மோதலுக்கும், வாக்குவாதங்கள் மன வருத்தத்திற்கும் காரணமாய் இருக்கக்கூடாது. வாதங்கள் வெற்றி, தோல்விக்கான களம் அல்ல, சரியானதை நிலைநாட்டும் முயற்சி மட்டுமே! வாதங்கள் முடிவு சரியானதை ஏற்பதாக இருக்கவேண்டும். பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதாக இருக்கக்கூடாது.
நாம் பணத்தை எண்ணி எண்ணிச் செலவு செய்கின்றோம். தண்ணீரைக் கூட சிக்கனமாகப் பயன்படுத்துகின்றோம். ஆனால், சொற்களை மட்டும் பஞ்சமில்லாமல் செலவழிக்கின்றோம்; தேவையில்லாமல் விரயமாக்குகின்றோம்.

கேட்போரை ஈர்க்கும் அளவான பேச்சு நன்மை பயக்கும். தேவையின்றி அதிகம் பேசுவது போல கேடு எதுவும் இல்லை. அளவோடு, தேவைக்கு ஏற்ப பேசுவோம்.
அதுவே ஆளுமையின் அடையாளம்! l