விடுதலை “லை”

ஆகஸ்ட் 01-15

விடுதலை என்றதும் எனது பள்ளி மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நிழலாடுகின்றது.

அப்பொழுது நான்  அரசு உயர்நிலைப் பள்ளியில் அய்யங்கார் பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் நன்றாகப் படிக்கக் கூடியவள்; ஆசிரியரால் பாராட்டப்பட்டவள்.   செய்தித்தாள் பற்றிய கட்டுரை ஒன்று எழுதச் சொல்லியிருந்தார் எனது தமிழ் அய்யா. நானும் கட்டுரை எழுதி இன்று நம் நாட்டில் வெளிவரும் செய்திதாள்களின் பெயர்களில் ஒன்றாக விடுதலை என்பதனைக் குறிப்பிட்டு இருந்தேன். எனது தந்தையார், குடும்பம்பற்றி நன்றாகத் தெரிந்த தமிழ் அய்யாவிற்கும், எனக்கும் எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம்தான். தமிழ்ச் செய்யுட் பகுதியில் உள்ள பொருள் குறித்து கம்பராமாயணம், அரிச்சந்திரபுராணம், பாஞ்சாலி சபதம், புரட்சிக்கவிஞர் பாடல் என ஏதாவது ஒரு பாடல் குறித்து விவாதம் செய்துகொண்டே இருப்பேன். அதனால் அவருக்கு என் மேல் சற்று வெறுப்புண்டு. எனது கட்டுரைப் பயிற்சி ஏட்டில் பிழைத் திருத்தம் பகுதியில் எப்பொழுதும் எந்தத் திருத்தமும் செய்யும்படியாக நான் எழுதியதில்லை என்பதால், விடுதலை என்ற பெயரில் லை தவறாக உள்ளது என்று கூறி திருத்தம் செய்யச் சொன்னார். நான் நாளிதழின் பெயரே அவ்வாறு இருக்கும்போது அதனை எப்படி மாற்ற முடியும் என்றும், அய்யா தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்பற்றியும் கூறி,  அவரிடம் வாதாடினேன்.

ஆனால், முடிவில் மாணவியாக  இருந்ததால் ஆசிரியருக்குக் கட்டுப்பட வேண்டிய நிலை உருவாயிற்று. அதனால், மிகவும் அவமானத்திற்குரியதாகவே நான் கருதினேன். ஆனால், அதே ஆண்டு இறுதியில் அன்னை மணியம்மையாரின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால் அய்யாவின் நூற்றாண்டு விழா சிறப்பாக எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் ஆணையை வெளியிட்ட பொழுது  நான் மறுபடியும் அவரிடம் சென்று பிழை திருத்தம் செய்திருந்த அந்த விடுதலையைக் காட்டி சரியென்று கையெழுத்து வாங்கினேன். நம் மாநில முதல்வர் உன்னைக் காப்பாற்றி விட்டார் என்று கூறினார் தமிழ் அய்யா.

இன்று இல்லாவிட்டாலும்,  என்றாவது ஒரு நாள் யார் வந்தாலும் அதனைச் செய்துதான் இருப்பார்கள். அப்படி எப்பொழுது நடந்திருந்தாலும் நான் உங்களைச் சந்தித்து இதனைப்பற்றி கூறியிருப்பேன் என்று மறுமொழி பகன்று நிம்மதியடைந்தேன். அதன் பின் 10 ஆம் வகுப்பில் அதே தமிழாசிரியரின் எழுத்துச் சீர்திருத்த முறையில் பாடங்களை எழுதிக் காட்டும் பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
இன்று தமிழின் அடுத்த கட்ட எழுத்துச் சீர்திருத்தத்திற்கும் அடிகோலியவர் ஆசிரியர் என்பதும், அதற்கு அச்சாணி விடுதலையே என்பதும் பெருமைக்குரியதாகும்.

– இறைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *