கேள்வி: அய்யா வாழ்ந்த காலத்தில், 1962 முதல் 1973 வரை விடுதலை பொறுப்பு, இயக்கப் பொறுப்புகளில் இருந்துள்ளீர்கள். (தந்தை பெரியார் அவர்களின் நேரடிப் பொறுப்பில்); இந்தக் காலகட்டத்திலோ, வேறு காலகட்டத்திலோ தந்தை பெரியார் தங்களிடம் வருத்தப்படவோ,
குறை காணவோ ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?
பதில்: 1962இல் முந்தைய ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் விலகிய நிலையில், விடுதலையை நாளேடாகத் தொடர இப்படி ஒருவர் தேவை என்று விரைந்து என்னை சென்னை மருத்துவமனையில் அய்யா அவர்கள் இருந்தபோது அழைத்துப் பேசியதும், எனது வாழ்விணையர் மோகனாவுடன் கலந்து ஆலோசித்து இருவரும் இணைந்து முடிவு எடுத்து சென்னைக்கு வந்தோம். எங்கள் குடும்பச் செலவுப் பொறுப்பை என் மாமனார் மாமியார் ஏற்றுவிட்டதால், எனது முழுநேர உழைப்பு கவலையின்றித் தொடர, என் வாழ்விணையர் எனக்கு முழு ஒத்துழைப்பைத் தந்து இல்லத்துக் கவலையை, பொறுப்பை ஏற்றவராகியே வாழ்ந்துவிட்டார். நான் இயக்கத்தின் முழு நேரத் தொண்டனாகத் தொடர்கிறேன்.
ஒளிவு மறைவின்றி நினைத்துப் பார்க்கிறேன்…! விடுதலை பொறுப்பாசிரியராக இருந்த காலத்திலும் இயக்கப் பொறுப்புகளில் இருந்தபோதும் சரி, அய்யா அவர்கள் என்னிடம் வருத்தப்படவோ, குறைகாணும்படியோ நான் எப்போதும் நடந்து கொண்டதே இல்லை என்பதுதான் நான் அய்யாவிடம் பெற்ற பெரும் சிறப்பூதியம்.
நான் பொறுப்பு ஏற்பதற்கு முன் மிகவும் அச்சப்பட்டேன். சில நேரங்களில் விடுதலையில் அய்யாவின் அறிக்கையாக வரும் தலையங்கத்தில் எழுதப்பட்ட கருத்து என் கருத்தல்ல. அது எனக்கு உடன்பாடனவை அல்ல என்று அய்யா கையொப்பத்துடன் மறுப்பு விளக்கம் வந்த காரணத்தால், அதை எண்ணி நாம் மிகவும் எச்சரிக்கையுடன் எழுதவும், செயல்படவும் வேண்டும் என்று உணர்ந்து எனது கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றி வந்தேன்.
கூட்டங்களில் அய்யாவை வைத்துக் கொண்டு பேசும் நிகழ்ச்சிகளில்கூட, அவர் நிறுத்துங்கள் என்று தடியைத் தட்டவோ, ஜாடை காட்டிடும் நிலைமையோ எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. மாறாக, சில கூட்டங்களில் மேலும் பேசுங்கள் என்று கட்டளையிட்டு மகிழ்ந்துள்ளார்.
சில, பல செய்திகள் பற்றி தலையங்கங்கள் எழுதுங்கள் என்று சுற்றுப் பயணத்தில் இருக்கும் தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள்; கடிதம் எழுதுவார்கள்; அதுதான் அய்யா தலையங்கமாக அச்சாகி இருக்கிறது. அதையே நான் எழுதியுள்ளேன் என்று பதில் அளித்ததைக் கேட்டு அய்யா மகிழ்ந்துள்ளார்; அதுதான் என் ஆசிரியப் பணிக்குக் கிடைத்த முறையான அங்கீகாரம்!
கவிஞர் கலி.பூங்குன்றன் கேள்விகளுக்கு ஆசிரியர் கி.வீரமணி அளித்த பதிலில்…
(ஆசிரியர் கி.வீரமணி பவள விழா மலர்)