என் உடல் நிலை எனக்கு திருப்தி அளிக்கத்தக்கதாய் இல்லை. இப்போது போல் சுற்றுப்பிரயாணம் செய்ய என்னால் இனி முடியாது. கழகம் நல்லபடி இயங்க வேண்டுமானால் பிரசாரமும் பத்திரிகையும் மிக்க அவசியமாகும். இந்த இரண்டு காரியத்திற்கும் தகுதியான தன்மையில் தான் நான் இருந்து வந்தேன்.
எப்படி என்றால் நான் ஒருவன்தான் இவற்றிற்கு முழு நேரத் தொண்டனாகவும் கழகத்தில் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாதவனாகவும் இருந்து வந்தேன்; வருகிறேன். இன்று கழகத்தின் மூலம் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாத தோழர்கள் கழகத்தில் ஏராளமான பேர் இருந்து நல்ல தொண்டு ஆற்றிவருகிறார்கள்.
ஆனால் கழகத் தொண்டுக்கு முழுநேரம் ஒப்படைக்கக் கூடிய தோழர்கள் இல்லை. பிரசாரத்திற்கும் அப்படிப்பட்ட தோழர் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைக்கும் அப்படிப்பட்ட தோழர் கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் கழக விஷயமாய் நான் நீண்ட நாளாகப் பெருங்கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன். இதற்கென்றே இரு தோழரை வேண்டினேன். அவர்களில் ஒருவர் தோழர் ஆனைமலை நரசிம்மன் பி.ஏ. ஆவார்கள். மற்றொருவர் தோழர் கடலூர் வீரமணி எம்.ஏ., பி.எல்., அவர்கள். இதில் தோழர் நரசிம்மன் அவர்கள். எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தனது எஸ்ட்டேட்டை மக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, வீட்டை விட்டே வந்து விட்டார். அதனாலேயே அவரை கழக மத்திய கமிட்டிக்கு தலைவராகத் தேர்ந்து எடுக்கலாம் என்று கருதி, முதலில் கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கச் செய்தேன். தோழர் வீரமணி அவர்களைக் கேட்டுக் கொண்டபோது அவர் சென்னையில் வக்கீலாக தொழில் நடத்திக் கொண்டு கழக வேலையையும், பத்திரிகை வேலையையும் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். அது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. என்றாலும் அந்த அளவுக்கு ஆவது கிடைத்த அனுகூலத்தை விடக் கூடாது என்று கருதி அவரை கழக துணைப் பொதுக்காரியதரிசியாக தேர்ந்தெடுக்கச் செய்தேன்.
இந்த நிலையில் தோழர் நரசிம்மன் அவர்களுக்கு ஒரு சங்கடமாக நிலை ஏற்பட்டது. அதாவது அவர் எஸ்டேட்டை. குடும்ப நிர்வாகத்தை, கவனித்து வந்த அவரது மூத்த மகன் – வயது சுமார் 25 உள்ள சங்கருக்கு உடல் நோய்ப்பட்டதோடு அது ஒரு அளவு மூளைத்தாக்குதலுக்கு ஆளாகிவிட்டதால், குடும்ப நிர்வாகத்திற்கும் எஸ்டேட் கவனிப்புக்கும் சிறிது காலத்திற்காவது அவர் (நரசிம்மன்) ஆனைமலையில் இருந்தாகவேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அதன் பயனாக இன்னும் சில நாளைக்கு அவரது முழு நேரத் தொண்டுக்கு இடமில்லாமல் போய் விட்டது.
இந்த நிலையில் தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரசாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார்.
இது நமது கழகத்திற்கு கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி திரு. வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200. ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்துவிட்டார்.
அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப்பற்றி சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழு நேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.
மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத் தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால் மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும், நாளைக்கும் அவர் (வீரமணி) ஒப்புக் கொள்வதானால் (எம்.ஏ., பி.எல்.,) என்பதனாலும் பரீட்சையில் உயர்ந்த மார்க்கு வாங்கி இருக்கும் தகுதியாலும்) மாதம் 1-க்கு ரூ.250-க்கு குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரிய பதவி அவருக்கு காத்திருந்து ஆசை காட்டிக் கொண்டிருக்கும் போதும், அவைகளைப்பற்றிய கவலையில்லாமல் முழு நேரப் பொதுத் தொண்டில் இறங்குவதென்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும்.
உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்.
எனக்கு திருச்சியிலும் தாங்க முடியாத பளு ஏற்பட்டு விட்டது.
ஆண்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியுடன் பெண்கள் பயிற்சிப் பள்ளி; அனாதைப் பெண்கள் பள்ளி; எலிமெண்டரி பள்ளி ஆகியவை ஆஸ்ட்டல் உடனும் நடைபெற்று வருவதோடு அனாதைப் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு, கைத்தொழில், தச்சு, தையல், அச்சு எழுத்து சேர்த்தல் (கம்போசிங்) வேலையும் ஒரு 100 பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கத் திட்டமிட்டு அதற்காக முன் ஏற்பாடு வேலையும் நடந்து வருகிறது. இந்த பெரிய பொறுப்புகளில் பெரும் அளவு திருமதி மணியம்மையார் மேற்போட்டுக் கொண்டு பார்த்துவருவதால் என்னாலும் இந்த அளவுக்கு ஆவது சமாளிக்க முடிகிறது.
கழகத் தொண்டிற்கு ஆதரவளிக்கவும் தொண்டாற்றவும் இன்று பல தோழர்கள் இருந்தாலும், முழு நேரத் தொண்டர்களாக இன்னும் சில பேர் வேண்டி இருக்கிறது. இப்போது தோழர் இமயவரம்பன் (புலவர் பரீட்சை பாஸ் செய்தவர்) மாதம் 150 ரூபாய் வரை சம்பள வருவாயை விட்டு, தனது குடும்ப பெரிய சொத்து நிர்வாகத்தையும் விட்டு, மற்றும் பல பணத்தோடு வரக்கூடிய சவுகரியத்தையும் தள்ளிவிட்டு, வீட்டிலிருந்து பணம் தருவித்து செலவு செய்து கொண்டு கழகத்துக்கு ஒரு வேலை ஆளாக 3,4 ஆண்டாக தொண்டாற்றி வருகிறார்.
இந்த நாட்டில் சொந்த சுயநலம் கருதாமலும், பொது பயனுள்ளதுமான தொண்டாற்றிவரும் கழகம் திராவிடர் கழகம் ஒன்றுதானே இருந்து வருகிறது? இக்கழகத்தில் இருப்பவர்கள்தான் சுயநலமில்லாமல் பாடுபடுகிறார்கள். மற்ற கழகங்கள், கழகத்தால் சுயநலம் பயன் அடையக் கருதி பாடுபடுபவை. அதுவும் பயனற்ற. உண்மையற்ற, காரியத்திற்கு பாடுபடும் கழகங்களாகத்தானே இருக்கின்றன? ஆகையால் மற்றும் முழு நேரத் தொண்டர்கள் கிடைத்தால் ஆவலோடு வரவேற்க காத்திருக்கின்றேன். ஆண்கள் வந்தாலும் சரி; பெண்கள் வந்தாலும் சரி; உடை, உணவு பெறலாம்.
ஈ.வெ. ராமசாமி
(விடுதலை 10.8.1962)