தஸ்லீமா நஸ் ரீன் எல்லா மதங்களின் மீதும்,,,,

ஜனவரி 01-15

ஏன் அந்தக் கனியை

ஏவாள் புசிக்கக் கூடாது?

கனிபறிக்கக் கைகள் இல்லையா?

பசியுணர வயிறு இல்லையா?  தாகம் உணர நா இல்லையா?

நேசம் காட்ட இதயம் இல்லையா?

ஏன் ஏவாள் கனியைப் புசிக்கக்கூடாது?

ஏவாள், விலக்கப்பட்டகனி, கடவுள் கட்டளை, ஏவாளும் ஆதாமும் அதனை மீறல், கடவுளின் கோபம், சாபம், தண்டனை, பாவம் என்றெல்லாம் ஏற்படுத்தித் திணித்த புளுகுகள் யூதம், கிறித்துவம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களிலும் கூறப்பட்டுள்ள கற்பிதங்கள்.  தஸ்லீமாவின் கேள்விகள் மூவரையுமே அதிர்ச்சிக்கு ஆளாக்க வேண்டும்! முசுலிம்களுக்கு மட்டும் ஏன் கோபம்?  தஸ்லீமா நஸ்ரீனின் தந்தை முசுலிம். எனவே இவரும் முசுலிம்.

ஏவாள் கனியைத் தின்றதால் வந்தது.

மகிழ்ச்சி வாழ்வு வந்ததும்கூட

ஏவாள் கனியைத் தின்றதால்தான்.

மேலே இருந்த சொர்க்கம் பூமியிலேயே வந்ததும்கூட

ஏவாள் கனியைத் தின்றதால்தான் மகிழ்ச்சி, வாழ்வு, சொர்க்கம் இவையெல்லாம் கிட்டியதால் வளர்ந்ததுதானே, வம்சம்?  பின் ஏன் ஏவாளைக் குற்றம் கூறிப் பிதற்றுகிறார்கள்? இத்தகைய கருத்துகளை மதஉலகம் எங்ஙனம் செரிக்கும்?
தஸ்லீமா பிறந்த மதத்தில், பெண்கள் மதச்சட்டங்களின்படி இரண்டாம் தரத்தில்  வைக்கப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்டதை நேரிலும் அனுபவரீதியிலும் அனுபவித்த காரணத்தினால் அவற்றை எதிர்த்துத் தம் கருத்துகளைப் பகிரங்கமாக எழுதினார்.  இதற்கு மதவாதிகளின் எதிர்ப்பு வலுக்கவே மதத்தின்மீது நம்பிக்கை தளர்ந்து, அத்தகைய மதம் தேவையில்லை எனும் எண்ணம் வளர்ந்து, மதத்திற்கு எதிரியானார்.  அதுவே வளர்ந்து வலுப்பெற்று கடவுளுக்கும் எதிரியானார்.  நாத்திகரானார்.  அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மாநாடு ஒன்றில் 1999 இல் உரையாற்றும்போது முசுலிம் குடும்பத்தில் பிறந்தாலும் நான் நாத்திகக் கொள்கை கொண்டவள் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

வசவுகளும் வாழ்த்துகளும்

அண்மையில் இந்த ஆண்டில் (2010) உலக நாத்திகர் பேரவை (GLOBAL  ATHEIST CONVENTION)  யில் பேசிப் பெருமை பெற்றார்.

இவர் மருத்துவம் பயின்று மருத்துவர் பணியில் இருந்தபோது இவருடைய எழுத்தின் வீச்சையும் பெண்ணுரிமைக் கருத்துகளையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமும் அறிவும் அற்ற அரசு இவரைப் பணியில் இருந்து நீக்கியது.  20_21 ஆம் நூற்றாண்டுகளில்கூட இப்படி ஓர் அரசு!  கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், சொந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட நிலையில், ஓடினார், ஓடினார், உலகின் பல நாடுகளுக்கும் ஓடினார். கிழக்குக்கும் மேற்குக்குமாக ஓடினார்.  எல்லா நாடுகளிலும் மத பக்தர்கள்தான், கடவுள் நம்பிக்கையாளர்-தான்.  1995, 96இல் ஜெர்மனி.  1997 இல் சுவீடன்.  1998 இல் அமெரிக்கா.  1999, 2000இல் ஃபிரான்சு  2001, 2002 இல் சுவீடன்.  பின்னர் இந்தியா. இங்கே ஒரு மாநிலத்திலிருந்து ஒரு மாநிலத்திற்குத் துரத்தி அடிப்பு.  தனிமைவதை.  வீட்டுக் காவல். உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் வன்முறைத் தாக்குதல்.  மேற்குவங்க மாநிலத்தில் எல்லா ஊர்களிலும் எதிர்ப்பு. இறுதியில் 2008 இல் இந்தியாவைவிட்டுத் துரத்தப்பட்டார்.  இங்கே, நாடும் பெண், நதிகளும் பெண், தெய்வமும் பெண் (உலகில் எந்த மதத்திலும் கடவுள் பெண்ணாக இல்லை). ஆனாலும் பெண் ஒருத்தி நாட்டைவிட்டுத் துரத்தப்-பட்டார்.  காரணம் அவர் நாத்திகர்.

ஆனாலும் அவருடைய ஆற்றல், எழுத்து, எண்ணம், கருத்து எல்லோராலும், எதிர்க்கப்-படவில்லை.  யாரும் பெறாத பாராட்டுகளை உலகம் அவருக்கு வழங்கியுள்ளது.  1992முதல் விருதுகளும் பெருமைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.  அதாவது, அவருடைய 30 ஆம் வயதிலிருந்தே உலகம் அவரைக் கொண்டாடி வருகிறது.  ஆனந்தா இலக்கியப் பரிசு 1992 இல் இந்தியா அளித்ததுதான் அவர் பெற்ற முதல் அங்கீகாரம். அதே ஆண்டில் அவருடைய சொந்த நாடான பங்களாதேஷ் நாட்டிய சேவா விருது அளித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கான அய்ரோப்பியப் பாராளுமன்ற விருதும், மனித உரிமைக்கான ஃபிரான்சு நாட்டு விருதும், இலக்கியத்திற்கான ஃபிரான்சு விருதும், சுவீடனின் றிணிழி இலக்கியப் பரிசும், மனித உரிமைகள் கண்காணிப்புக்கான அமெரிக்க உதவியும் விருதும், நோர்வே நாட்டின் மனிதநேய விருதும், அமெரிக்காவின் பெண்ணுரிமை விருதும் 1994ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டன.

கல்வி நிறுவனங்களின் கவுரவம்

பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழகம் அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் 1995 இல் வழங்கியது.  சுவீடன் நாட்டின் மானிஸ்மானியன் பரிசு, உப்சலா பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டதும் இதே ஆண்டில்தான்.  ஜெர்மனியின் கல்வியாளர் பரிமாற்ற சேவையின் உதவித்தொகை இந்த ஆண்டில் அவருக்கு அளிக்கப்பட்டது. பாரிஸ் நகரிலுள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் 2005இல் வழங்கியது.  நியூயார்க் பல்கலைக் கழகம் உறுப்பினர் பெருமையை (FELLOWSHIP) 2009 இல் வழங்கியுள்ளது.  ஹார்வார்டு பல்கலைக்கழகம் இதே பெருமையை 2003ஆம் ஆண்டிலேயே அவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

இலக்கிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், பெண்ணுரிமை அமைப்புகளின் விருதுகளும் பாராட்டுகளும் பெருமைகளும், பிரிட்டன், அமெரிக்கா, ஃபிரான்சு, போன்ற நாடுகளில் இருந்து குவிந்துள்ளன.  இந்தியாவின் மேற்கு வங்க மாநில இலக்கியப் பரிசுகளும் 2000, 2006ஆம் ஆண்டுகளில் அளிக்கப்பட்டன.  (IBKA) மதமற்ற நாத்திகர்களின் அனைத்துலக அமைப்பு ஜெர்மனியில் இயங்கிவரும் உயரிய அமைப்பாகும்.  அதன் சார்பாக வழங்கப்படும் இர்வின் ஃபிஷர் விருது இவருக்கு 2002 இல் வழங்கப்பட்டது இவருடைய நாத்திகக் கொள்கைக்கான சர்வதேச அங்கீகாரமாகும். பாரிஸ் நகரத்தின் குடிமகள் ஆக இவர் கவுரவிக்கப்பட்டுள்ளார், பெண்ணுரிமைப் போராளி விருது அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இவர் பெற்ற பெருமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர் நாத்திகர் என்பதால்தான் இப்பெருமைகள். உலகமே புகழும்

நாத்திகரான இவரைப் பெண் தெய்வமாக வருணிக்கும் (GODDESS IN YOU, TASLIMA) எனும் பாடலை சுவீடன் நாட்டின் பாடகி மகோரியா பாடும் பாடல் புகழ்பெற்றது.  வேடிக்கைதான்! கவலைப்படாதே, தஸ்லீமா எனும் பாடல் பிரான்சு நாட்டின் ஜீப்டா இசைக்குழு பாடும் மற்றொரு பாடலாகும்.  கலைஞர்களுக்கென பாரிஸில் உள்ள குடியிருப்பில் இவர் ஆறுமாதம் தங்கியிருக்க எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது அந்நாட்டு அரசு.

புகழ், பெருமை, வசவு, வழக்கு, வன்முறைத் தாக்குதல் அத்தனையையும் ஒரே மனநிலையில் ஏற்றுக் கொள்ளும் மனத்திண்மை படைத்தவர் தஸ்லீமா. தன்வாழ்க்கையைப் பெண்களின் மத, கருத்து, உடல் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்துள்ள தஸ்லீமா நஸ் ரீன் செயல்வடிவிலும் நிரூபிக்கிறார். தர்ம முக்த மனாப் – பா மஞ்ச்சா (மதம் அற்ற மனிதநேய அமைப்பு) என்பதை கொல்கத்தா நகரில் அமைத்துள்ளார்.  மதமற்ற கல்வி பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுதல், பொதுவான (சிவில்) குடிமைச்-சட்டம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கம் இது. ஒரு லட்சம் டாகா (DAKA பங்களாதேச நாணயம்) அளவுக்கு உதவித் தொகையை 20 மாணவியருக்கு வழங்கிடும் திட்டமான எடுல்வாரா உதவிப்பணத் திட்டம் அவருடைய அன்னையின் பெயரால் நடத்தி-வருகிறார். இதன் மூலம் 7 முதல் 10ஆம் வகுப்புவரை படிக்கும் ஏழை மாணவியர் பயன் அடைகின்றனர்.  சொல்வதைச் செய்கிறார், தான் செய்வதையே பிறரையும் செய்யச் சொல்கிறார்.

–  சு. அறிவுக்கரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *