– அன்பன்
அட்சய திருதியை பலன்
அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்று புரளி கிளப்பி 10 ஆண்டுகளாக நகை வியாபாரிகள் நல்லா கல்லா கட்டுகிறார்கள். மூடநம்பிக்கையால் பக்தைகளும் இதற்குப் பலியாகிறார்கள். அன்றைய தினம் திரளும் கூட்டத்தில் திருட்டுகள் பெருமளவு நடக்கின்றன. ஆனால், ஒன்றிரண்டே தெரியவருகின்றன. இந்த ஆண்டு ஏப்.24இல் அட்சய திருதியையன்று சென்னை, தியாகராயர் நகரில் கூட்டம் அலைமோதியது. வியாசர்பாடி மாலகொண்டையா என்பவரின் மனைவி ஓபுலம்மா நகை வாங்கக் கொண்டுவந்த 5.50 இலட்சம் ரூபாய் திருட்டுக் கொடுத்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே அட்சய திருதியை அன்று இன்னொரு செய்தி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க நாணயங்கள் விற்கப்படுகின்றன. அட்சய திருதியை அன்று மட்டும் ரூ.50 இலட்சத்துக்கு தங்க நாணயங்கள் விற்பனையாகி யுள்ளன. பலநூறு நகைக்கடைகளுக்கோ பலநூறு கோடிக்கு தங்க விற்பனை. ஏழுமலையானுக்கு 50 இலட்சம் ரூபாய் இலாபம். ஓபுலம்மாவுக்கு ரூ.5.50 இலட்சம் நட்டம்.
ஆச்சரிய ஆட்சியர்
ராஜஸ்தானில் இன்னும் குழந்தைகள் திருமணங்கள் நடந்துகொண்டுள்ளன. அவ்வளவு இறுக்கமான இந்துமத மூடநம்பிக்கை நிறைந்த மாநிலம் அது. ஆனால், அங்கே ஒரு மாவட்ட ஆட்சியர் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். இனிமேல் திருமண அழைப்பிதழ்களில் மணமகன்-_மணமகள் பிறந்த தேதிகளை அச்சிட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்திய பாரத்தா மாவட்ட ஆட்சியர் கவுரவ் கோபால் கூறியுள்ளார். அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் அகதீச் எனும் பராம்பரிய விழாவில் குழந்தைத் திருமணங்கள் நடப்பது வழக்கமாம். ஆனால் இந்த அதிரடி உத்தரவால் இந்த ஆண்டு அது தடுக்கப்பட்டுள்ளதாம். இந்துப் பண்பாட்டுப் பாதுகாவலர்களான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் இது எங்கள் மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று சொல்வார்களா?
மனைவியை அடிக்கலாமாம்
மனைவிக்கான கடமையை செய்யத் தவறுதல், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் விடுதல் போன்ற சூழல்கள் கணவன் கோபப்படும் சந்தர்ப்பங்கள் என 53 சதவீத பெண்களும், 57 சதவீத ஆண்களும் கூறுகின்றனர். அதாவது மேற்கூறிய சூழல்களில் மனைவியை கணவன் அடிப்பது தப்பில்லை என்ற கருத்தை இவர்கள் கொண்டிருக்கின்றனர். ஆனால் 43 சதவீத ஆண்கள் இதனை எதிர்க்கின்றனர். இது இந்திய மக்களின் மனநிலை குறித்து அய்.நா.வின் யுனிசெப் எடுத்த ஆய்வின் தகவல், ஆணாதிக்க சமுதாய முறை உள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்நிலை உள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.
பாகிஸ்தானில் நீதி!
குண்டுவெடிப்பும், கலவரமும் நிறைந்த பாகிஸ்தானில் இன்னும் நீதி வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது. ஊழல் வழக்குகளை நீக்கியது தொடர்பான வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி ஏப்.26 அன்று நீதிமன்றம் வரவழைக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாததால் நீதிமன்றம் கலையும்வரை சிறை என்று தீர்ப்புக்கூறி கிலானியை உட்கார வைத்துவிட்டனர். 30 வினாடிகள் சிறையிருந்துள்ளார் கிலானி. வாய்தா மேல் வாய்தா வாங்கும் வழக்குகளை நாளும் பார்த்துவரும் இந்திய நீதித்துறை இந்தச் செய்தியை படிக்காமலா இருக்கும்?
சபாஷ் அஜீத்
தமிழ் சினிமாவுக்கு வரும் ஹீரோக்களுக்கெல்லாம் அரசியல் கனவு வந்துவிடும். சினிமா மார்க்கெட் முடிந்தவுடன் அரசியலில் கரை ஒதுங்குவார்கள். அதனாலேயே திட்டமிட்டு ரசிகர் பட்டாளத்தை வளர்த்து வைத்துக்கொள்வதும் உண்டு. ஆனால், நடிகர் அஜித் இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்றார். இப்போது தன் ரசிகர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும் கூறியிருக்கிறார். உங்க தன்மானத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க. உங்க வேலையை 100 சதவீதம் ரசிச்சு செய்யுங்க. நல்லா படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாலயும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க என அஜித் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். தன்னுடைய சுயநலத்துக்காக ஆயிரமாயிரம் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கும் ஹீரோக்கள் மத்தியில் இப்படி ஒரு கருத்தைச் சொல்வது பாராட்டுக்குரியதுதானே!
மோடிக்கு அடுத்த ஆப்பு
மிஸ்டர் க்ளீன் அவதாரம் எடுக்க படாதபாடுபட்டுவரும் நரேந்திர மோடிக்கு அடுத்தடுத்து ஆப்புகள் வைக்கப்பட்டு வருகின்றன. குஜராத்தில் மனித உரிமைகளை மீறியதாக ஆம்னஸ்டி இண்டர்நேசனல் வரை புகார் சொல்லப்பட்ட மோடிக்கு 2005இல் அமெரிக்கா விசா தர மறுத்திருந்தது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் கடந்த ஏப்ரல் 25இல் அந்த நிலை நீடிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து இங்கிலாந்தும் தனது நாட்டிற்குள் நுழைய மோடிக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாம். பிரிட்டன் அரசு மனித உரிமை மீறல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற உள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மற்ற நாடுகளில் மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்படுபவர்களை பிரிட்டன் கண்காணிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற சட்டம் இயற்றப்பட்டால் அதைப் பயன்படுத்தி நரேந்திர மோடி வருவதைத் தடுக்க வேண்டும். ஏனெனில் குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதில் நரேந்திர மோடிக்கு பங்கு உள்ளதாக பல்வேறு மனித உரிமைக் குழுக்களும், ஆம்னஸ்டி உள்ளிட்ட சுயேச்சை அமைப்புகளும் தெரிவித்துள்ளன என்று அச்செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.