மாவோயிஸ்ட் பிரச்சினை : அணுகுவது எப்படி?

மே 16-31

அனைத்து மனிதநேயர்களாலும் மிகவும் கவலையோடு எதிர்பார்க்கப்பட்ட சட்டீஷ்கர் மாநில சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால்மேனன் அய்.ஏ.எஸ். அவர்கள், மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு, கடந்த 10 நாள்களுக்கு மேல் வனப்பகுதியில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மாவோயிஸ்டுகளுடன் பொதுவானவர்களும், அந்த அரசு சார்பானவர்களின் பிரதிநிதிகளும் கலந்து பேசி, அவர்கள் விடுத்த சில கோரிக்கைகளை, நிபந்தனைகளை ஏற்று, மாவட்ட ஆட்சியர் விடுவிக்கப்பட்டார்! மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சி.

பல வடமாநிலங்களிலும், ஆந்திரா போன்ற மாநிலத்திலும், மாவோயிஸ்டுகள் வசம் பல மலைப் பகுதி மாவட்டங்கள் சென்றதற்கு என்ன காரணம்?

இதை வெறும் சட்டம், ஒழுங்குபிரச்சினையாகவே அரசுகள் (மத்திய – மாநில அரசுகள்) கருதி, நடவடிக்கை களில் ஈடுபட்டு, அவ்வப்போது சில தற்காலிக கோரிக்கை களை விட்டுக் கொடுத்தும், பிரச்சினைகள் தீர்ந்து விட்டதைப் போல நடந்து கொள்ளுவது தவறான அணுகு முறையாகும்.

நோய்நாடி, நோய் முதல் நாடும் அணுகுமுறையே தேவை. நக்சல் பிரச்சினை – மாவோயிஸ்டுகளின் வளர்ச்சி என்பதற்குரிய மூல காரணங்கள் பற்றிய ஆழமான புரிந்துணர்வு அதற்கேற்ற கொள்கை முடிவு மாற்றங்களும் தான் நிரந்தரப் பரிகாரமாக முடியும்.

சத்நாம் என்பவர் எழுதியுள்ள வனம் எழுதும் வரலாறு – மாவோயிஸ்ட்  கொரில்லாக்களுடன் என்ற ஒரு நூல் அண்மையில் படிக்க நேர்ந்தபோது, எவரும் இப்பிரச் சினைகளின் மூல வேர் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கெ னவே பல முறை நாம் எடுத்து வைத்த கருத்துக்கள் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மக்களின் பிரச்சினைகள் முளைவிடும்போதே, அரசு களின் காதுகளும், கண்களும் அவற்றை அலட்சியப் படுத்தி, பாராமுகம், கேளாக் காதுடன் நடந்து கொள்ளுவதே இதனை வளர்த்தெடுக்கும் விதைகளாகும்!

இன்றைய ஊடகங்களும், சரியான மக்கள் பணி செய்பவர்களாக இல்லாமல், முதலாளிகளின் பாதுகாப்புக் கேடயமாகவும், ஆதிக்கச் சக்திகளின் பாசறையாகவும் இருப்பதால், உண்மையைத் திசை திருப்பி விடுகின்றன!

அய்ந்து லட்சம் மக்கள் கூடி, அமைதியாக அரசின் முடிவு தவறு, மக்கள் விரோதம் என்று தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பினால் அத்தீர்மானம் குப்பைக் கூடைக்குத்தான் செல்லுகிறது.

அதே நேரத்தில் ஒரு 500 அல்லது 5000 பேரும் கூடி, பேருந்து மறியல், சாலை மறியல், ரகளை முதலியன நடத்தினால் உடனே அரசு அதிகாரிகள் ஓடோடி வருகின்றனர் தற்காலிகத் தீர்வு கண்டு – சமாதானம் பேசி, முடித்து விட்டதாக கருதிப் போய் விடுகின்றனர்!

உண்மையான குறைபாடுகளுக்கு நிரந்தர நியாயமான பரிகாரம் தேடிட, அரசுகள் கிராமப்புறங்களையும், மலைவாழ் மக்களையும் அவர்களது வாழ்வுரிமைக்கும் முன்னுரிமை, முக்கியத்துவம் தர முன்வர வேண்டும்.

சுதந்தரம் பெற்று 65 ஆண்டுகளாகியும் அந்த மக்களின் வறுமை, பசி, பஞ்சம், பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் அகன்று சுபிட்ச வாழ்வுக்கு அவர்கள் சொந்தக்காரர் களாக்கப்படவே இல்லை. பழைய தாய் வழிச் சமுதாயம் மறைந்து, தனி முதலாளித்துவ சமுதாயம் வந்ததோடு, ஆதிக்கவாதிகளின் சுரண்டல் தொடர்ந்த வண்ணம் உள்ளது!

அம்மக்களின் வாழ்வாதாரம் இயற்கையின் பசுமை; அவை பகற்கொள்ளையடிக்கப்படுகின்ற நிலை! மலைகளும், பாறைகளும், மண் வளங்களும் பறிக்கப்பட்டு, சுரண்டப்படுகின்றதைக் கண்டு ஏமாற்றமும், வேதனையும் கொண்ட மக்களிடையே வெடிப்பதுதான் இந்த, வேகமான நிலை! விபரீதமானதாக மாறுவதற்கும் அதுவே காரணம்.

மேலே குறிப்பிட்ட அந்த நூலுக்கு வனம் எழுதும் வரலாறு முன்னுரை எழுதியுள்ள தோழர் பிரசன்னா கூறுகிறார்.

மக்களுக்கான போராட்டங்கள் அனைத்தையும், மக்கள் விரோதப் போராட்டங்களாக மக்களின் மனதில் பதியச் செய்யும் வேலையையே இன்றைய வெகு ஜன ஊடகங்கள் செய்து வருகின்றன

அடர்ந்த காடுகளைப் பொட்டல் வெளிகளாக்கிய பிறகு பொட்டல் வெளிகளைச் சுரங்கங்களாக்கி, ஏக போகக் கொள்ளையில் ஈடுபடும் டாட்டாக்களும், மிட்டல்களும், வேதாந்தாக்களும், கூலிப்படைகளைக் கொண்டு பழங்குடியினரைக் காடுகளிலிருந்து விரட்டு வதும், காவல்துறை கார்ப்பரேட்டுகளின் சீருடையணிந்த கூலிப்படையாகச் செயல்படுவதை வெகுஜன ஊடகங்கள் உச்சரிக்க மறுக்கும் உண்மைகள். தங்கள்மீது நிகழ்த் தப்படும் கொடுமைகளுக்கு எதி ராக ஒருhyhyyyyyyyyy பழங்குடி, தனக்காக அரசியலையும், ஆயுதத்தையும் கையிலெடுத்தவுடன், மாவோ யிஸ்டுகளைப் பற்றிய கவர் ஸ்டோரி சுடச்சுட வெளி வருகிறது!

இந்நிலை மாற வேண்டாமா? மாற்றப்பட வேண்டமா? அரசின் உலகமயம், தாராளமயம், தனி யார்மயக் கொள்கைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டாமா?

போராடும் அந்த மலைவாழ் மக்களுக்கு வன்முறை என்பது வழிபாட்டுக்குரிய சிந்தனையுமல்ல ஆகக் கடைசியாக அவர்களுக்குக் கிடைத்த ஒரு வழி முறைதான் அது!

அவர்கள் துப்பாக்கியைத் தொழுது கொண்டிருக்க வில்லை; பழங்குடி மக்களின் வாழ்வில் கல்வியையும், தற்சார்பையும், உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருவதற்காக தங்களையே இழந்து போராடும் தோழர்கள் என்றுதான் அவர்கள் வரவேற்கின்றனர்!

ஒடிசா மாநிலத்தின் கனிமவளங்கள், மற்றும் பல மாநிலங்கள் கர்நாடகம் உட்பட சுரண்டி சுரண்டி அன்னக் காவடிகள் எல்லாம் புதிய கோடீசுவரர்களாகி 100 சி, 2000 சி என்றும், ஸ்விஸ் வங்கிகளிலும் தேர்தலில் வாக்கு வங்கிக்கு மொத்த விலை நிர்ணயிப்பதுமான இந்த வெட்கக்கேடான ஜனநாயகத்தில் இதற்கு சட்ட பூர்வமான சரியான பரிகாரம்,  கொள்கை முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்கள் நலம் சார்ந்ததாக அமைதல் வேண்டும். ஆள் தூக்கிச் சட்டங்கள் இதற்குத் தடுப்புச் சாதனமாகாது.

அணுகுமுறையில் புதுநோக்கு புதுப்போக்குத் தேவை. காய்ந்த வயிற்றில்தான் கம்யூனிசம் பிறக்கிறது. மறக்க வேண்டாம். இதை எண்ணி ஏற்றமுறு பரிகாரம் காணுவீர்!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *