முனைவர் கடவூர் மணிமாறன்
பகுத்தறிவின் உயர்மாண்பைப் பரப்பி வந்த
பகலவனே நம் பெரியார்; புரிநூல் கூட்டம்
வகுத்துரைத்த மனுதரும் வேத நஞ்சோ
வண்டமிழர் வளவாழ்வை அழிக்கும் என்றே
மிகத்தெளிவாய் எடுத்துரைத்தார்; தமிழி னத்தார்
மேன்மைக்குக் குரல்தந்தார்; மகளிர் எல்லாம்
அகங்குளிரச் சொத்துரிமை கிடைக்கச் செய்த
அய்யாவின் அடிச்சுவட்டில் செல்வோம்; வெல்வோம்!
சாதிமதப் புரட்டுகளை ஏற்க வேண்டா!
சாத்திரங்கள் என்பதெலாம் சழக்கர் செய்த
நீதியற்ற சூழ்ச்சியென்றார்; ஆரியத்தைத்
தீண்டவரும் நச்சுப்பாம் பென்றார்! நம்மை
மோதிடவும் மிதித்திடவும் முனைந்தோர் தம்மின்
முடைநாற்ற மடமையினை ஒதுக்கித் தள்ளி
ஏதமிலாப் பெருவாழ்வு வாழ்வோம் என்றே
ஏற்புடைய வரலாற்று விளக்கம் தந்தார்!
மானமுடன் அறிவாண்மை எந்த நாளும்
மாந்தருக்கே அழகாகும்; மறக்க வேண்டா!
ஆனவரை ஏமாற்றி மூடர் ஆக்கி
அறியாமைப் புதை குழிக்குள் அமிழ்த்தி வந்த
வீணருக்கே அறைகூவல் விடுத்தார்; நம்மோர்
விழித்தெழவே வழிவகுத்தார்; குனிந்து நின்ற
கூனர்களை நிமிர்த்திடவே புரட்சி செய்தார்!
கோழைகளைப் போர்மறவர் ஆகச் செய்தார்!
விடுதலையில் குடிஅரசில் விளக்கம் தந்தார்;
வீறார்ந்த அரிமாவாய் மேடை தோறும்
நடுங்காமல் நற்றமிழர் வாழ்வில் மாற்றம்
நனிசிறக்க நல்லுணர்வை ஊட்டி வந்தார்!
மிடுக்குறவே செப்டம்பர் பதினே ழாம்நாள்
மீட்பர்நம் அய்யாவின் பிறந்த நாளில்
துடிப்போடு தொண்டாற்ற உறுதி ஏற்போம்!
தொடர்கின்ற வஞ்சத்தை வீழ்த்தி வெல்வோம்!ஸீ