முனைவர் வா.நேரு
இணையம் என்பது அறிவியல் தந்த கொடை. எத்தனையோ நல்ல செயல்கள் நடைபெறுவதற்கு இணைய வழித் தொடர்பு பயன்படுகிறது. ஆனால் அந்த இணைய வழித் தொடர்பே சிலபேர் தற்கொலை செய்து கொள்வதற்கும், சிலர் தங்களிடம் இருக்கும் பணத்தை இழப்பதற்குமான வழியாகவும் இருக்கிறது. அண்மையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பணத்தை இழந்த ஒருவர், தன் குடும்பத்தினரைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட செய்தியைப் படித்தோம். ஒன்றிய மத்திய அரசு ஊழியர் ஒருவர் தனது மனைவியோடு இணைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதற்கும் காரணம், அந்த ஊழியரின் ஆன்லைன் சூதாட்ட மோகமும், அதனால் ஏற்பட்ட பண இழப்பும்தான் என்னும் செய்தியையும் படித்தோம். ஏன் இப்படி?… இணைய உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது…
அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அறியாமையும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அறியாமையால் ஒரு காலத்தில் கல்வி கல்லாமையாக இருந்தது. ஆனால், இன்றைக்கு படிப்பு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. நிறையப் பேர் படித்திருக்-கிறார்கள். ஆனால் படித்தவர்கள் சிலரின் மனதில் எப்படியாவது திடீர் பணக்காரர்கள் ஆகிவிடவேண்டும் என்னும் அறியாமை இருக்கிறது. குறுக்கு வழியில் எப்படி பணம் சம்பாதிப்பது என்னும் எண்ணம் அவர்களின் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமிக்கிறது. அதற்காகப் பல வழிகளைத் தேடுகிறார்கள். அப்படித் தேடுகிறவர்களின் கண்களில் படுவதுதான் ஆன்லைன் சூதாட்டம்.
சூதாட்டம் என்பது பலவகை. கொஞ்சமாகப் பணம் போட்டு நிறையப் பணம் எடுக்க வேண்டும். இதுதான் சூதாட்டத்தின் நோக்கம். பந்தயம் கட்டி சீட்டு விளையாண்டவர்களுக்குத் தெரியும். முதலில் கையில் கொஞ்சம் பணம் கிடைக்கும். ஆகா, பணம் கிடைத்ததே, இன்னும் விளையாடுவோம் என்று உட்கார்ந்து மொத்தமாக இழந்து திரும்புபவர்கள்தான் அதிகம். விளையாட உட்காருபவர்களின் நோக்கம் கொஞ்சமாக பணம் போட்டு நிறையப் பணம் எடுப்பது. சூதாட்டத்தை நடத்துபவர்-களின் நோக்கம் கொஞ்சமாக முதலில் பணத்தைக் காட்டி, ஆசையூட்டி, மொத்தமாக இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து விடுவது. இதுதான் காலம் காலமாக நடந்து வருவது. இப்போது நடக்கும் சூதாட்டம், அறிவியல் வளர்ச்சியால் இணைய வழியில் நடைபெறும் ஆன்லைன் சூதாட்டம்.
நாம் சீட்டு விளையாட உட்கார்ந்தால், நாலைந்து பேர் நம்மோடு உட்கார்ந்திருப்-பார்கள். விளையாடுவோம். ஆனால், ஆன்லைன் விளையாட்டில் நாம் யாருடன் விளையாடுகிறோம் என்பதே தெரியாது. நம்மை எதிர்த்து விளையாடுபவர் ஒரு நபரா, சில நபர்களா அல்லது கணினி மென்பொருளா (சாப்டுவேரா) என்பது தெரியாது. ஆனால், ஒரு தரம் நாம் ஆன்லைனில் விளையாட உட்கார்ந்து விட்டால், தொடர்ந்து நம்மை விளையாட ஈர்க்கும் வண்ணம் அந்த ஆன்லைன் சூதாட்டங்களை வடிவமைக்-கிறார்கள். எப்படி மனிதர்கள் மதுவுக்கு படிப்படியாக அடிமை ஆகிறார்களோ, அப்படி ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் அடிமையா-கிறார்கள். பல பேர் விளையாட வேண்டும் என்று போவதில்லை. விளையாட்டாகப் போய், இன்னலில் மாட்டிக்கொள்கிறார்கள்.
நாம் கணினியில் வேறு ஏதோ தகவலைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு விளம்பரம் குதித்து, நம்மை ரம்மி விளையாட வரும்படி அழைக்கின்றது. இந்த விளம்பரத்தை யார் அனுப்புகிறார்கள், நமது செல்பேசிக்குள் எப்படி அனுப்பப்படுகிறது என்பது தெரிவதில்லை. ஆனால் அந்த விளம்பரத்தைப் பார்த்து உள்ளே போனால், நமது வங்கிக் கணக்கு எண்ணைக் கேட்கும். முதலில் கொஞ்சமாகப் பணம் நமது வங்கிக் கணக்கிற்கு வரும். பின்பு கொஞ்சம், கொஞ்சமாக நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் எல்லாம் போகும். இப்படித்தான் ஆசைப்பட்டு மாட்டிக் கொள்கிறார்கள். சூதாட்டத்திற்கு அடிமைப்பட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்
“உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று அய்ந்தும் அடையாவாம் ஆயம் கொளின்’’ (திருக்குறள் 939) என்று திருவள்ளுவர் சொல்லிய கருத்து இன்றைய ஆன்லைன் சூதாட்டத்திற்கும் பொருந்தும்.
“எனது மகளுக்கு ஆன்லைனில் வேலைவாய்ப்பு என்று சொல்லி, ஒரு படிவத்தை நிரப்பச் சொல்லியிருக்கிறார்கள். நிரப்பிய பின்பு, மாதச் சம்பளம் 40,000 ரூபாய். ஒன்றாம் தேதி முதல் நீங்கள் வேலைக்குச் சேரலாம். முன் பணமாக ரூ.20,000 கட்டுங்கள் என்று சொல்லியிருக் கிறார்கள். என் மகள், அவள் வங்கிக் கணக்கில் இருந்த 22,000 ரூபாயில் 20000 ரூபாய் கட்டிவிட்டார். அதற்குப் பிறகு அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் கொடுத்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டால், இப்போது உபயோகத்தில் இல்லை என்று வருகிறது” என்று அழுவது போலச் சொன்னார். சைபர் கிரைம் எண்ணைச் சொன்னேன் என்றாலும், நான்கு ஆண்டுகள் படித்து நல்ல மதிப்பெண் எடுத்த அந்தப் பெண்ணுக்கு, வேலைக்கு முன் பணம் என்று கேட்டவுடனேயே சுதாரிக்கத் தெரியவில்லையே என்று மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போது இந்த மாதிரி நிறையப் பேர் கிளம்பியிருக்-கிறார்கள். நீங்கள் வீட்டிலிருந்தே கணிணியில் ‘டைப்’ அடித்துத் தரலாம், ‘புரூப்’ திருத்தித் தரலாம், வேலை தருகிறோம். ஆனால், அதற்கு முன்பணம் 5,000 கட்டுங்கள், 10,000 கட்டுங்கள் என்று கேட்டு ஏமாற்றுகிறார்கள். கவனமாக இருக்க நமது பிள்ளைகளுக்கும் உறவினர்-களுக்கும் சொல்ல வேண்டும்.
இதைப் போல ஆன்லைனில் மூலமாக வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறோம் என்று இலட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய நிகழ்வுகளும் செய்தித்தாள்களில் வருகின்றன. இந்த இணைய உலகத்தில் நம் பையில் வைத்திருக்கும் பணத்தை பேருந்தில் களவாடும் ‘பிக்பாக்கெட்’ திருடர்கள்போல, ஆன்லைன் வழியாகப் பணம் திருடும் திருட்டுக் கும்பல் பெருமளவில் இருக்கின்றனர். அரசுப் பணி புரிந்து, ஓய்வு பெற்ற பலர், செல்பேசியில் கேட்கப்படும் சில விவரங்களைக் கொடுத்து பணத்தை இழந்து நிற்பது குறித்து செய்திகளும் நிறைய வருகின்றன.
தனி நபர்கள் மட்டுமல்ல; ஒரு ஊரே பணம் கட்டி ஏமாந்த கதையை 8.1.2022-இல் பி.பி.சி. தமிழ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. “தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள கட்மூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு, ஒரு நிறுவனத்தின் பேரில் வாட்ஸ்-ஆப் மூலம் ஒரு மொபைல் செயலிக்கான இணைப்பு வந்துள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்த போது, அந்தச் செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்-பட்டிருந்தது. இதனை நம்பி சிலர் அதில் 500 ரூபாய் வரை முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணம் அடுத்த நாள் இரட்டிப்பாகி வந்துள்ளது. இந்தத் தகவல் அந்தக் கிராமம் முழுவதும் வேகமாகப் பரவியுள்ளது. உடனே, இதை நம்பி அந்தச் செயலியில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், இந்த முறை முதலீடு செய்யப்பட்ட பணம் திரும்ப வரவில்லை.
தந்தை பெரியார், வலியுறுத்திய ஒழுக்கங்-களில் மிக முக்கியமானது நாணயம். தேவைக்கு ஏற்ப செலவு செய்வது, மிகக் குறைந்த வருமானம் என்றாலும், கொஞ்சமாவது சேமிப்பது, கடன் வாங்காமல் இருப்பது போன்றவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தந்தை பெரியார் வலியுறுத்தினார். இன்றைய தேவை பேராசைப் படாமை.
குறுக்கு வழியில், உழைக்காமல்; நமக்குப் பணம் வந்து கொட்டிவிடும் என்பது மிகப்பெரிய மூட நம்பிக்கை. ஜோதிட மூட நம்பிக்கை போல இந்த மூட நம்பிக்கையும் நம் வாழ்வைக் கெடுக்கும்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள உறுதிமொழி நமக்கு ஆறுதல் அளித்துள்ளது.ஸீ