சிறுகதை : “பொங்கலுக்கு வாங்க’’

ஜனவரி 1-15,2022

ஆறு.கலைச்செல்வன்

நாற்காலியில் அமர்ந்தபடியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார் சந்திரன்.

எழுபத்தைந்து வயது நிரம்பிய அவர் இன்னமும் சுறுசுறுப்பாகவே இயங்கி வந்தார்.

நாள்காட்டியை ஏறிட்டு நோக்கினார் சந்திரன். புரட்டாசி மாதம் நிறைவடையும் நிலையில் இருந்தது. நாள்காட்டியை எடுத்து நாள்களைப் புரட்டினார்.

தீபாவளி வரும் தேதியைப் பார்த்தார். அய்ப்பசி மாதம் 12ஆம் தேதி தீபாவளி எனக் குறிக்கப்பட்டிருந்தது.

இன்னும் பதினைந்து நாள்களில் தீபாவளி. சந்திரனின் நினைவுகள் அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றது.

தீபாவளிப் பண்டிகைக்கு பத்து நாள்களுக்கு முன்னதாகவே அம்மா பரபரப்பாகி விடுவார். அப்பாவை நச்சரித்து அனைவருக்கும் புதிய துணிகள் எடுக்க வைத்து விடுவார்.

சந்திரனுக்கு துரை, செழியன் என்று இரண்டு தம்பிகளும், செல்வி, கவிதா என்று இரண்டு தங்கைகளும் இருந்தனர்.

தந்தை தனக்கிருந்த குறைந்த அளவிலான நிலத்தில் வரும் வருவாயைக் கொண்டுதான் குடும்பத்தை நடத்தி வந்தார். வருவாய் மிகவும் குறைவாக இருந்ததால் மிகவும் சிக்கனமாகவே இருந்தார்.

ஆனாலும், அம்மாவுக்கு விவரம் போதாது. தீபாவளியன்று அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் புத்தாடை உடுத்தும்போது நம் பிள்ளைகளும் அதைப் போலவே இருக்க வேண்டும் என ஆசைப்படுவார். பலகாரங்களும் செய்வார்.

இதனால் ஒவ்வோர் ஆண்டும் அப்பா கணிசமான தொகையைக் கடன் வாங்குவார். இருந்த நகைகளையெல்லாம் அடகு வைத்து விட்டார். ஒவ்வோர் ஆண்டும் கடன் வாங்கியே பண்டிகைகளைக் கொண்டாடி வந்தார்.

தனது பத்தாம் வயதில் தீபாவளியைக் கொண்டாடியது ஓரளவு நினைவில் இருந்தது சந்திரனுக்கு.

ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் தீபாவளியைக் கொண்டாடியது நன்றாகவே நினைவில் இருந்தது.

அம்மா பத்து நாள்களுக்கு முன்பே பொருள்களைச் சேகரிக்க ஆரம்பித்து விடுவார்.

குந்தாணியில் இடித்து அரிசியைச் சேகரிப்பார். இட்லி அவிக்க வேண்டுமல்லவா? அந்தக் காலத்தில் தீபாவளி மற்றும் சில அமாவாசை நாள்களில் மட்டுமே இட்லி கிடைக்கும். இட்லி, தோசை சாப்பிடுவதை அப்போது பெருமையாக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதை நினைவுபடுத்திக் கொண்டார் சந்திரன்.

முறுக்கு போன்ற பலகாரங்களைச் செய்வதற்கு மாவுகள் தயார் செய்துகொள்வார் அம்மா.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு அம்மா தூங்க மாட்டார். இட்லி, வடை செய்ய குடைக் கல்லில் மாவு அரைப்பார். அப்போது அவரும் அம்மாவுக்கு உதவியாக குடைக்கல்லுக்கு அருகில் அமர்ந்து கொண்டு மாவினைத் தள்ளித் தள்ளி விடுவார்.

விறகு அடுப்புக்கு அருகில் அதன் சூட்டில் அப்பா வாங்கி வந்த வெடி, மத்தாப்புகளைக் காய வைப்பார் சந்திரன். அதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அவரது தம்பிகளும் தங்கைகளும்.

குடைக் கல்லில் மாவைத் தள்ளிக் கொண்டே தூக்கம் சந்திரனை ஆட்கொள்ளும். அவர் தூங்கி விழும்போது அம்மா தட்டிவிட்டு விழிக்கச் செய்வார்.

ஒரே நாளில் நிறைய பலகாரங்களைச் செய்வதும், அவற்றை நிறைய சாப்பிட்டுவிட்டு அடுத்த சில நாள்களுக்கு வயிற்றுப் போக்கு, வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவ-மனைக்குச் சென்று ஊசி போட்டுக் கொண்டு வருவதையும், இதனால் அப்பா மேலும் கடனாளியாகி அவதிப்படுவதையும் நினைத்துப் பார்த்தார் சந்திரன். அவரது கண்கள் கலங்கின.

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அம்மா, அப்பா ஒளிப்படங்களைப் பார்த்தார் சந்திரன். பண்டிகைகளைக் கொண்டாடியே உடல் நலம் கெட்டு மறைந்த தாயையும், கடனாளியாக்கி மறைந்த தந்தையையும் நினைத்துப் பார்த்து வருந்தினார் சந்திரன்.

இப்போது அவரும் அவரது துணைவியார் காந்திமதியும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள். அவரது இரண்டு மகன்களும் திருமணமாகி வெளியூரில் பணி செய்து வருகிறார்கள். இருவருக்கும் பெண் பிள்ளைகள் இருந்தனர். அவரது தம்பிகளும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள்தான். அவர்கள் தாங்கள் பணி செய்த ஊர்களிலேயே வீடு கட்டிக் கொண்டு பெயரன், பெயர்த்திகளோடு வாழ்ந்து வந்தனர். தங்கைகள் இருவரும் அதிகம் படிக்காதவர்கள். விவசாயக் குடும்பங்களில் வாழ்க்கைப்பட்டு வெளியூர்களில் வசித்து வந்தனர்.

எல்லாருமே வெளியூரில் வசித்துவந்த நிலையில் கிராமத்தில் இருந்த அவர்களின் பூர்வீக வீடு யாரும் வசிக்காமல் பூட்டியே கிடந்தது. யாரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவது இல்லை.

இந்த நிலையில் சந்திரனுக்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது.

இந்த ஆண்டு கிராமத்திற்குச் சென்று தீபாவளியைக் கொண்டாடினால் என்ன? என்ற எண்ணம்தான் அது.

உடனே தனது எண்ணத்தை தனது தம்பிகள் இருவருக்கும் தொலைபேசி வழியாக வெளிப்படுத்தினார். குடும்பத்தில் அனை-வரையும் அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் தங்கள் துணைவி, பிள்ளை, மருமகள், பெயரன், பெயர்த்திகளுடன் வருவதாக மகிழ்வுடன் தெரிவித்தனர்.

இருப்பினும் அவரது மூத்த தம்பி துரை தனது துணைவி, மகன், பெயர்த்திகளுடன் அடுத்த இரண்டு நாள்களில் சந்திரனின் வீட்டுக்கு வந்து விட்டார். அந்த ஊரில் துரைக்கு சில வேலைகள் இருந்ததால் முன்கூட்டியே வந்துவிட்டார். தீபாவளிக்கு முதல் நாள் அனைவரும் சேர்ந்து கிராமத்திற்குச்  செல்வதாக ஏற்பாடு.

தம்பி துரையின் குடும்பம் வந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சந்திரனுக்கு. இன்னும் சில நாள்களில் மூவரின் குடும்பங்களும் கிராமத்தில் கூடப் போவதை நினைத்து மகிழ்ந்தார்.

துரைக்கு இரண்டு பெயர்த்திகள் இருந்தனர். மூத்தவள் மதியழகி எட்டாம் வகுப்பிலும் இளையவள் கவிநிலவு அய்ந்தாம் வகுப்பிலும் படித்து வருகிறார்கள். அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது சந்திரனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. மிகவும் அறிவுபூர்வமாகப் பேசினாள் மதியழகி. தாத்தா சந்திரனிடம் நிறைய செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். ஒரு நாள் திடீரென ஒரு கேள்வியை சந்திரனிடம் கேட்டாள் மதியழகி.

“தீபாவளியை எதுக்காக கொண்டாடணும்?’’

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை சந்திரன். இருப்பினும் பதில் சொன்னார்.

“நரகாசுரன் என்ற அரக்கன் ரொம்ப கொடுமைக்காரனாம். அவன் கொல்லப்பட்ட நாளைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடுறாங்க.’’

மதியழகி விடவில்லை. சரமாரியாகக் கேட்டாள்.

“நரகாசுசுரன் என்பவன் யார்? எப்படிப் பிறந்தான்? அவன் பெற்றோர் யார்? அவனைக் கொன்றது யார்? கேள்விகளை அடுக்கினாள் மதியழகி. தீபாவளி தோன்றிய புராணக் கதையை நினைத்துப் பார்த்தார் சந்திரன்.

ஒரு நாள் அசுரன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். தேவர்கள் முறையிட்டதால் மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலுக்குள் புகுந்து அந்த அசுரனைக் கொன்று மீண்டும் உலகை விரித்தார். அப்போது பன்றியாகிய மகாவிஷ்ணு காம இச்சை கொண்டு பூமி என்கிற பூமாதேவியைக் கலவி செய்தார். அதனால் பூமாதேவி கற்பமாகி நரகாசுரனைப் பெற்றார். ஆனால், நரகாசுரன் வளர்ந்த பின் தேவர்களை துன்புறுத்தியதால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் நரகாசுரனிடம் போரிட்டார். ஆனால், நரகாசுரன் தன் தாயால் மட்டுமே தான் இறக்க வேண்டும் என்று ஏற்கெனவே வரம் பெற்றிருந்ததால் மகாவிஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. அதனால் மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதாரம் எடுத்து அவனும் அவன் மனைவி பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவும் சேர்ந்து நரகாசுரனைக் கொன்றார்கள். அவன் இறந்த நாளையே தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆபாசக் கதையை எப்படிச் சொல்வது எனத் தயங்கினார் சந்திரன்.

ஆனால், மதியழகியோ பேச்சைத் தொடர்ந்தாள்.

“தாத்தா, நரகாசுரனைப் பத்தி சொல்ல உங்களுக்கே வெட்கமா இருக்குதானே! ஆனாலும் எனக்கு எல்லாம் தெரியும் தாத்தா. படிச்சிருக்கேன். இப்படிப்பட்ட மோசமான பண்டிகையை நாம் கொண்டாடத்தான் வேணுமா? இதுக்குப் போய் எல்லோரையும் கிராமத்துக்குக் கூப்பிட்டு இருக்கீங்களே! இது சரியா? அதோடு தீபாவளிக்குக் கொளுத்தப்படும் பட்டாசுகள் சுற்றுச் சூழலையும் கெடுக்குமல்லவா?’’

மதியழகி பேசப் பேச சந்திரன் மகிழ்ச்சியிலும் வியப்பிலும் மூழ்கினார். பகுத்தறிவுப் பிஞ்சுகள் நாட்டில் பெருகி வருவதை உணர்ந்தார். இனி வருங்காலம் முழு பகுத்தறிவு பெற்ற உலகாக மாறும் என்ற நம்பிக்கை என்னும் ஒளிக் கீற்று அவர் கண் முன் தோன்றியது.

மதியழகி மீண்டும் பேசினாள்.

“தாத்தா, தை முதல்நாள்தானே தமிழ்ப் புத்தாண்டு? பொங்கல்தானே உலகத் தமிழ் மக்களின் திருநாள்! உழவர்களுக்கு நன்றி செலுத்தும் திருநாள் பொங்கல்தானே! அப்போது நாம் எல்லோரும் ஒன்று கூடினால் என்ன!

அதை ஆமோதித்து தலையசைத்த சந்திரன், அந்தப் பகுத்தறிவுப் பிஞ்சுக்குத் தோன்றிய எண்ணம் தனக்குத் தோன்றவில்லையே என நினைத்து சற்றே வெட்கப்பட்டார்.

“மதியழகிக் கண்ணே, நீ சொன்னபடியே நாம் எல்லோரும் பொங்கலுக்கே ஒன்று கூடுவோம்’’ என்றார்.

“தாத்தா, உங்க கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு?’’ என்று கேட்டாள் மதியழகி.

“எனக்கு ரெண்டு தம்பிங்க. ரெண்டு தங்கச்சிங்க. ஏன் கேட்கிறே மதியழகி? உனக்குத்தான் தெரியுமே!’’

“தாத்தா, தீபாவளிக்கு வரச் சொல்லி யார் யாருக்கெல்லாம் சொன்னீங்க?’’

“என்னோட ரெண்டு தம்பிகளுக்கும் சொன்னேன்?’’

“ரொம்ப சரி தாத்தா, உங்க கூடப் பொறந்த ரெண்டு தம்பிகளுக்கும் சொன்னீங்க. ஆனா, உங்க கூடப் பொறந்த ரெண்டு தங்கச்சிகளுக்கும் ஏன் சொல்லலை தாத்தா? அவங்க வரமாட்டாங்கன்னு நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா? வர்றதும் வராம இருப்பதும் அவங்க விருப்பம். நீங்க வரச் சொல்லி அழைப்பு விடுக்கலாமே!’’

மதியழகி இப்படிக் கூறியதைக் கேட்ட சந்திரன் சற்றே அதிர்ச்சியடைந்து அப்படியே அசைவற்று இருந்தார். பிறகு நிதானத்திற்கு வந்து தனது இரு பெயர்த்திகளையும் வாரி அணைத்துக் கொண்டார்.

பிறகு மதியழகியைப் பார்த்து புன்னகை பூத்தவாறே செல்பேசியை எடுத்து முதலில் தனது இரண்டு தங்கைகளையும் தொடர்பு கொண்டு பொங்கலுக்கு வருமாறு அன்புடன் அழைத்தார்.

வரும் பொங்கலுக்கு பாட்டிகளும் வருவார்கள் என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர் பெயர்த்திகள் இருவரும்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *