மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (90)

டிசம்பர் 1-15,2021

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு. இரா. கவுதமன்

நம் உடலின் ஓய்வற்ற தொழிற்சாலைகளில் ஒன்றான சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ என்றழைக்கப்-படுகிறது. பொதுவாக சிறுநீரகங்களின் செயல்பாடு 15 சதவிகிதத்-திற்கும் குறைவாக அமையுமானால், அதை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ (Kidney Failure) என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர். சிறுநீரகச் செயலிழப்பே “சிறுநீரக இறுதிக்கட்ட நோயின் இறுதிச் செயல்பாடாகக் (End stage kidney disease) கருதப்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பு, ‘உடனடி சிறுநீரகச் செயலிழப்பு’’ (Acute kidney failure) என்றும், “நாள்பட்ட காலச் சிறுநீரகச் செயலிழப்பு’’ (Chronic kidney failure) என்று இருவகைப்படும். உடனடி சிறுநீரகச் செயல்பாடு திடீரென ஏற்படும். ஆனால், எளிதில் குணமடையும். நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு தோன்றி, மெதுவாக, மெதுவாக அதிகமாகி முழுமையாக செயலிழப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்த அளவு பாதிப்பு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பின், சிறுநீரகங்கள் மீண்டும் சரியாகாது. இயல்பு நிலை திரும்பாது. நாள்பட்ட நோயில் பெரும்பாலும் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படையும். சில நோய்களில் ஏதேனும் ஒரு சிறுநீரகம் மட்டும் பாதிப்படையும் நிலை உண்டானால், மறு சிறுநீரகம் முழுச் செயல்பாட்டில் இயங்கும். சிறுநீரகச் செயல்பாடுகள் நிற்பதற்கு, முன் நோய்கள் பலதும் காரணமாக உள்ளன. உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organisation – WHO) ஆய்வின்படி உடனடி செயலிழப்பு ஆண்டுக்கு 1000 பேருக்கு, மூவர் பெறுவதாகவும், நாள்பட்ட செயலிழப்பு 1000 பேரில் ஒருவருக்கு வருவதாகவும் ஆண்டு ஆய்வில் தெரிவித்-துள்ளது. 10,000 பேரில் மூவர் புதியதாக இந்நோயால் பாதிப்படைவதாகவும் மற்றொரு அறிக்கையில் உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிறுநீரகச் செயலிழப்பு வகைகள்:

சிறுநீரகச் செயலிழப்பு, உடனடி செயலிழப்பா அல்லது நாள்பட்ட காலச் செயலிழப்பு என்பதை இரத்தத்தில் உள்ள “கிரியேட்டினின்’ (Creatinine) அளவை வைத்தே மருத்துவர்கள் முடிவு செய்வர். இரத்த சோகை (Anaemia), சிறுநீரகங்கள் சிறுத்து விடுதல் (பொதுவாக “மீள் ஒலி அலைப் பதிவு (Ultrasonography) மூலம் சிறுநீரகத்தின் அளவை அறியலாம்) போன்றவற்றைக் கொண்டும் நோயின் தன்மையை அறிய முடியும்.

உடனடி சிறுநீரகச் செயலிழப்பு:

இச்செயலிழப்பு பொதுவாக நச்சுப் பொருள்களை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ உட்கொள்வதால், அந்த நஞ்சு சிறுநீரகங்களைப் பாதித்து சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும். இதன் விளைவாக சிறுநீர் போவது முழுமையாகத் (Oliguria) தடைப்பட்டு விடும். ஒரு நாளைக்கு வளர்ந்தவர்கள் 400 மி.லி. அளவேயும், 1 கிலோ எடையுள்ள குழந்தை 0.5 மி.லி.  சிறுநீருமே கழித்தால் சிறுநீரகப் பாதிப்பை உணர்த்தும். சிறுநீரக உடனடிச் செயலிழப்பு, சிறுநீரகம் முன்புறம் (Pre renal), சிறுநீரக உட்புறம் (Intrinsic), சிறுநீரகம் பின்புறம் (Post renal) என்று மூன்று வகைப் பாதிப்புகளை ஏற்படுத்தும். பெரும்பாலும் நஞ்சுகள் என்ன வகை என்பதை உடனே அறிந்து, மருத்துவம் செய்யாவிடில் சிறுநீரகங்கள் சட்டென்று செயலிழந்து விடுவதோடு, மீண்டும் சீராக்க முடியாமலேயே போய்விடும். விரைவான, சரியான நஞ்சு முறிவுகள், சிறுநீர்ப் பிரிப்பு (Dialysis) போன்றவை உடனடியாக மேற்கொள்வதாலும், மற்ற உடலுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் கண்டறிந்து மருத்துவம் மேற்கொள்வதாலும், நோயாளி இயல்பு நிலைக்குத் திரும்புவார். சிறுநீர்ப் பிரிப்பு மருத்துவம் உடனடி மேற்கொள்வதால், மற்ற மருத்துவமும், மற்ற உறுப்புகளைச் சீராக்க நேரமும் மருத்துவருக்குக் கிடைக்கும்.

*              சில பெரிய அறுவை மருத்துவத்தின்-பொழுது, நீண்ட நேரம் சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்தம் தடைபடும் நிலை ஏற்படும். அதனால் சிறுநீரகங்கள் செயலிழக்கும். எடுத்துக்காட்டாக, இதயத் தமனி மாற்று (வழி) பாதை (Coronary Artery Bye pass surgery – CABG) அறுவை மருத்துவம் போன்றவற்றில் நான்கு, அய்ந்து மணி நேரம் அறுவை மருத்துவம் நடக்கும். அதுபோன்று சிறுநீரகங்கள் பாதிப்படையும் வாய்ப்பும் ஏற்படும்.

*              கிருமிக் கொல்லி மருந்துகள் (Anti-biotics) எதிர்பாராத விதமாக அதிக அளவு எடுத்துக் கொள்வதால், சிறு நீரகங்கள் சேதமடையும். நீண்ட நாள்கள் உட்கொள்ளப்படும் கிருமிக் கொல்லிகள் (Anti-biotics) எதிர் வினையாகச் சிறுநீரகங்கள் பாதிப்படையும். எந்தெந்த மருந்துகளால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்றறிந்து அவற்றைத் தவிர்ப்பதும் அல்லது எச்சரிக்கையோடு பயன்படுத்துவதும் சிறுநீரகங்களைப் பாதுகாக்க உதவும்.

*              தேனீப் பூச்சிகள், பாம்புக்கடி நஞ்சு போன்றவை சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும்.

*             தொடைப் பகுதி அறுவை மருத்துவத்தில் இரத்த ஓட்டக் குறைவை உண்டாக்க தொடைப் பகுதியைக் கட்டி விடுவர். அறுவை மருத்துவம் முடிந்த பிறகு, கட்டுகள் பிரிக்கப்பட்டவுடன், திடீரென ஏற்படும் இரத்த ஓட்டத்தின் பின் விளைவாக சில நேரங்களில் சிறுநீரகங்கள் செயலிழந்து விடும்.

*              உடனடி சிறுநீரகங்கள் செயலிழப்பு பெரும்பாலும் நலமடையக் கூடிய நோய். எதனால் அந்நோய் உண்டானது என்ற சரியான காரணத்தைக் கண்டறிந்தால் சிறுநீரகங்களின் செயல்பாட்டைச் சீராக்கும் வாய்ப்புகள் அதிகம். நஞ்சுப் பொருள்களுக்கு, மருந்துகளுக்கு எதிர் வினையாற்றும் மருந்துகள் கொடுப்பதன் மூலம், சிறுநீரகங்களின் செயல்பாட்டை மீண்டும் சீராக்க முடியும். அதேபோல் பூச்சிகள், பாம்புக் கடியையும் எளிதில் குணமாக்கலாம்.

*             ஆனால், உடனடி செயலிழப்புக்கு ஆளானவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்புக்கு உடனடி செயலிழப்பு ஏற்பட்டதும் ஒரு காரணமாக அமையும். எனவே, இந்நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பிற்கு பின்னணியில் நீரிழிவு நோய் (Diabetes) ஒரு முக்கியக் காரணியாக இருக்கும்.

*             மிகு இரத்த அழுத்தம் (Hypertension) ஒரு முக்கியக் காரணி.

*              இரத்தக் குழாய் நோய்கள் (Vascular diseases)  நீண்ட நாள்கள் இருக்கும்பொழுது, சிறுநீரக இரத்தக் குழாய்களையும் பாதிக்கும்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *