பாராட்டுகிறோம் – பின்பற்றுவதற்காக!
சுப. வீரபாண்டியன்
பொதுவாழ்க்கை என்பது அமைதியான ஆற்றின் நீரோட்டம் போன்றதன்று!
அதில் பெருமையும் சிறுமையும் வரும். புகழும், வசையும் வரும். ஏற்றமும் இறக்கமும் வரும்! அதனால் பலருக்கு ஒரு கட்டத்தில் சலிப்பும், வெறுப்பும் வரும். போதும் இந்தப் பொது வாழ்க்கை என்ற எண்ணம் கூட வந்துவிடும்!
எல்லாவற்றையும் கடந்து, மிக மிகச் சிலரே நீண்ட பொதுவாழ்வில் நிலைத்து நிற்கின்றனர் _ நல்ல பெயரோடும் நிலைத்து நிற்கின்றனர். ஏன் அவர்கள் இன்றும் சிலராக மட்டுமே உள்ளனர்?
மூன்று முடிவுகளோடு பொதுவாழ்வுக்குள் வருபவர்கள் மட்டும்தான் அதில் நிலைத்து நிற்பார்கள்! 1. தலைமையை வியந்தோ, தனிமனித ஆளுமையில் மயங்கியோ அல்லாமல், கொள்கை உணர்ந்தும், கொள்கை-யில் இரண்டறக் கலந்தும் எடுக்கப்படும் முடிவு!
2. தன்னலம் என்பது மனித இயல்பே என்றாலும், பொதுநலம் அதனை விஞ்சி நிற்கவேண்டும் என்கிற உறுதியில் எடுக்கப்படும் முடிவு! 3. அறிவுத் தாகம் அடங்காமல், அன்றாடம் புதியனவற்றைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்படும் முடிவு!
நம் அன்பிற்குரிய ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் நீண்ட நெடுங்காலம் பொதுவாழ்வில் நிலைத்து நிற்பதற்கான காரணங்கள் எவை என்பது இப்போது புரிகிறதல்லவா! 89 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் ஆசிரியர், 78 ஆண்டுப் பொது-வாழ்விற்குச் சொந்தக்-காரராக இருப்பதன் ரகசியம் இதுதான்!
மேற்சொன்ன மூன்று முடிவுகளோடும் அவர் பொது வாழ்வுக்கு வந்துள்ளார் என்பதால் தான், இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார். மகிழ்ச்சியோடும், புதிதாக இயக்கத்திற்கு வந்திருக்கும் இளைஞனைப் போலவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
அவர் புகழ் வலையில் சிக்குவதுமில்லை; இகழ்ச்சிச் சேற்றால் கறைபடுவதும் இல்லை!
தந்தை பெரியார் இறந்து அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. இன்னமும் அவரைச் சிலர் வசை பாடிக் கொண்டே இருக்கின்றனர். அவர் சிலைகளைச் சிலர் உடைக்க முயற்சி செய்கின்றனர். பெரியாரின் மீது தொடுக்கப்-படுகின்ற வசைகளில் பெரும்பகுதி, இன்று ஆசிரியரை நோக்கியே பாய்கின்றன.
என் அனுபவத்தில் நான் நேரில் பார்த்திருக்-கின்றேன். சிலநேரம் அவற்றை அவர் அறிந்து-கொள்ள வேண்டும் என்ற கருத்தில், நாம் எடுத்துச் சொல்லும்போது கூட, ஆசிரியர் அவற்றைப் பொருட்படுத்துவதே இல்லை. அப்போது அவர் முகத்தில் தோன்றும் ஒரு புன்னகை என்னைப் பல நேரங்களில் வியக்க வைத்திருக்கிறது.
“அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்க. நாம வேலைய பாப்போம்” என்பார். சில நேரங்களில், “நாம் சரியா இருக்கிறோம் என்பதற்கான சர்டிபிகேட் இது” என்பார். “சுபவீ, நீங்க ஏன் இந்த அக்கப்போர் பத்திரிகை எல்லாம் படிக்கிறீங்க?” என்று கேலியாகக் கேட்பார்.
இன்றும் ஆசிரியர் அவர்களின் விரைவு நடைக்கு இணையாக நடக்க முடியாமல், சில நேரம் நான் தடுமாறி இருக்கின்றேன். அதனால், உடல்நலக் குறைவே இல்லாதவர் என்றும் ஆசிரியரைச் சொல்லிவிட முடியாது. இதய அறுவை சிகிச்சையே இரண்டுமுறை நடந்துள்ளது என்று நினைக்கிறேன். பிறகு எப்படி? மன நலம், உடல் நலத்தைச் சரிசெய்யும் என்பதுதான் அதற்குள் இருக்கும் உண்மை.
மனநலம் என்பது, பொதுநலம் சார்ந்த மனநலம்!
அந்த மனநலம் இருப்பதால்தான், தொடர்ந்து அவரால் புதிய நூல்களைப் படித்துக் கொண்டும் இருக்க முடிகிறது. படித்துக் கொண்டே இருக்கிறார் என்பது வெறும் படிப்பு அன்று; நம்மையும் படிக்கத் தூண்டுகிற ஒரு செயல்!
அய்யா பெரியார் பற்றிய அரிய தகவல்கள் பலவற்றை நான் ஆசிரியர் மூலம் அறிந்திருக்-கிறேன். ஒரு கிழவனைப் பற்றி பேசிப் பேசியே இளமையாக இருப்பவர் அவர்!
ஒருமுறை, ஒரு புகழ்பெற்ற பார்ப்பன எழுத்தாளர், ஒரு கூட்டத்தில், “எங்களுக்-கெல்லாம் இந்துமதம் என்ற ஒரு கடல் இருக்கிறது” என்றார். அடுத்துப் பேசிய நான், “எங்களுக்குப் பெரியார் திடல் இருக்கிறது” என்றேன்.
பெரியார் திடலும், அண்ணா அறிவாலயமும்-தான் என் போன்றவர்களுக்கு கண் முன்னால் விரிந்து கிடக்கும் கடல்! ஆசிரியரும், தளபதியும்தான் இன்று எம் போன்றோரை வழிநடத்தும் மாலுமிகள்!
ஆசிரியரைப் பாராட்டுவதே, அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்!
வாழ்க ஆசிரியர்! வளர்க தொண்டறம்!!