தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் சமூகநீதி விழாவில் ஆசிரியரின் சிறப்புரை:
இன்றைக்குத் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பது _ திராவிடர் திருவிழாவாக அருமையாக நம்மால் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டாடப்படக் கூடிய விழாவாக அமைந்திருப்பது இந்த ஆண்டினுடைய சிறப்பாகும்.
ஒவ்வோர் ஆண்டும், எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதோ, அவ்வளவு பெருமையும் இருக்கிறது. அதுதான் அவருடைய தனிச் சிறப்பு.
ஒரு தத்துவஞானிபோல தந்தை பெரியார், சிறப்பான ஒரு கருத்தைச் சொன்னார்.
சுயமரியாதை இயக்கம் என்பதை, எப்படி அவர் தனியாக உருவாக்கியதைப்பற்றி பேராசிரியர் சுப.வீ. அவர்கள் அழகாக எடுத்துச் சொன்னார்களோ, அதுபோல, மனிதநேயத்தைப் பற்றிச் சொல்கின்றபொழுது, மிக எளிமையாகச் சொன்னார்.
பெரியாருடைய பார்வை – உலகப் பார்வை – மானுடப் பார்வை
அவருடைய பார்வை உலகப் பார்வை _ மானுடப் பார்வை _ அதுதான் இன்றைக்கு உறுதிமொழியில் எடுக்கப்பட்டதும்கூட.
‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று இரண்டே சொல்லில் சொன்னார்.
திராவிடரா? தமிழரா? ஜப்பான்காரரா? ஜெர்மன்காரரா? என்றெல்லாம் ஏன் ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டும்?
மனிதன் என்று யார் தன்னை நினைக்கிறானோ, அவனுக்கு என்ன இலக்கணம்?
மானம், அறிவு என்பதுதான் மிக முக்கியம்.
இந்த மானத்தையும் பழிவாங்கினார்கள், பறிமுதல் செய்தார்கள். அறிவையும் தடுத்தார்கள். இதுதான் சமூக அநீதி.
அந்த சமூக அநீதியிலிருந்து வெளியே வருவதற்காகப் போராடினார்கள் அல்லவா _ போராடி வெற்றி பெற்றார் அல்லவா, அதுதான் சமூகநீதி.
‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’’
அதற்காகத்தான் பெரியாருடைய பிறந்த நாளை _ ‘‘சமூகநீதி நாள்’’ என்று பொருத்தமான அளவிலே அறிவித்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’’ என்று நம்மால் நன்றியுணர்-வோடு பாராட்டப்படக் கூடிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு வரலாறு படைத்திருக்கிறார்கள்.
இதைக் கேட்டவுடன், யாரோ சிலருக்கு எரிச்சல். அவர்களால் தாங்க முடியவில்லை. சமூகநீதி நாள் என்று சொல்லாமல், வேறு எதைச் சொல்லுவது?
சமூகநீதி என்று வரும்பொழுது, நீதி கேட்கிறோம் என்று வந்தாலே, அதனுடைய இன்னொரு பகுதி என்ன?
அதனுடைய இன்னொரு பகுதி, அநீதி நடந்திருக்கிறது என்று அர்த்தம். அநீதி நடந்திருக்கிறது.
நம்முடைய அரசமைப்புச் சட்டத்தில் ஒரு சிறப்பான பகுதி உண்டு.
அரசுகள் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு வழி காட்டு நெறிமுறை _ அதற்குப் பெயர் Directive Principle of the State Policy என்று பெயர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்
46 ஆவது பகுதி!
அதில் மிக முக்கியமாக இருக்கக்கூடிய ஒரு பகுதியில், 46 ஆவது பகுதியில்,
The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.
இந்த அரசமைப்புச் சட்டத்தில், social justice என்பதும் இடம் பெற்றிருக்கிறது. social justice என்று சொல்லக்கூடிய சமூகநீதியை ஏன் தேடுகிறோம்? ஏன் தேவைப்படுகிறது? என்று சொல்லுகின்ற நேரத்தில், அதில் விளக்கம் இதிலேயே தெளிவாக இருக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் போராடி, சில செய்திகளை உள்ளே போட்டார். அப்படி அவர் போராடி உள்ளே போட்ட நேரத்தில், (அந்த அரசமைப்புச் சட்டத்தில்தான் நண்பர்களே, இது அறிவார்ந்த அரங்கம் _ உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நண்பர்கள் இதைக் கேட்டுக்-கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.) அப்படிப்பட்ட சூழ்நிலையில், தெளிவுபடுத்தவேண்டிய செய்தி என்ன-வென்றால், அரசமைப்புச் சட்டத்தில் இன் னொரு பகுதியில், அரசாங்கங்களுடைய கடமை என்ன? என்று வருகின்ற நேரத்தில்,
பலகீனமான மக்களாக இருக்கக் கூடியவர்-களைப் பாதுகாக்கவேண்டும். எப்படி பாதுகாக்க வேண்டும்? ஏன் பாதுகாக்க-வேண்டும்? என்று மிக முக்கியமான குறிப்பைச் சுட்டிக்காட்டுகின்றார்.
promote education and economic interests for members of Scheduled Caste, Scheduled Tribe and other weaker sections.
The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் எல்லோரும் அதில் அடக்கம்.
தனியே சொல்லவேண்டுமானால், இதில் மகளிர் மிக முக்கியமாகப் பங்களிக்கக் கூடியவர்கள்.
வருணாசிரம தருமத்தில், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று வரும்பொழுது, இவர்கள் எல்லாம் வருணஸ்தர்கள்.
பஞ்சமர் _ அவர்ணஸ்தர்கள்.
இவர்கள் எல்லாவற்றிற்கும் கீழே, படிக்கட்டு ஜாதிமுறை என்று அம்பேத்கர் சொன்னார் பாருங்கள், அதில் கடைசியாக யார் இருக்கிறார்கள் என்றால், அடித்தளத்திலும், அடியில் யார் இருக்கிறார்கள் என்றால், பெண்கள் _ அனைத்து ஜாதிப் பெண்கள்.
பெண்களைப் பொறுத்தவரையில், மேல்ஜாதி, கீழ்ஜாதி என்கிற பிரச்சினைகளே கிடையாது.
அரசமைப்புச் சட்டத்தின் 46 ஆவது பிரிவின் தமிழாக்கம்:
‘‘பட்டியலில் கண்ட ஜாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர், பிற நலிந்த பிரிவினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை வளர்த்தல்; மக்களில் நலிந்த பிரிவினர், குறிப்பாக, பட்டியலில் கண்ட ஜாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை அரசு தனிப் பொறுப்புணர்வுடன் வளர்த்தல் வேண்டும். மேலும், சமுதாய அநீதியிலிருந்தும் அனைத்து வகைப்பட்ட சுரண்டல்-களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தலும் வேண்டும்.’’
வாழ்நாள் பணியாகச் செய்த
தலைவர் தந்தை பெரியார்
இதை தன்னுடைய வாழ்நாள் பணியாகச் செய்த தலைவர் தந்தை பெரியாரைத் தவிர, இந்தியாவில், உலகத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா?
சுயமரியாதை இயக்கம் என்று தந்தை பெரியார் அவர்கள் பெயர் வைத்ததைப்பற்றி சகோதரர் சுப.வீ. அவர்கள் அந்த நூலிலிருந்து எடுத்துக்காட்டினார்.
பிறவி பேதம் கூடாது என்று நாம் இன்றைக்கு உறுதி எடுத்து இருக்கிறோம். பிறவி பேதம் என்று சொல்லும் பொழுது, ஒரே சொல்லில் தந்தை பெரியார் அவர்கள் மிக எளிதாக எடுத்துச் சொல்வார்.
பிறவி பேதம் என்றால்,
உயர்ந்த ஜாதி _ தாழ்ந்த ஜாதி,
தொடக்கூடியவன் _ தொடக்கூடாதவன்,
படிக்கக் கூடியவன் _ படிக்கக் கூடாதவன் என்பவைபற்றி மட்டுமே வருணாசிரம தர்மம் சொல்லவில்லை.
அதற்கடுத்து, அய்யாதான் சொன்னார், பிறவி பேதம் என்று சொல்லும்பொழுது, ஆண் உயர்ந்தவன் _ பெண் தாழ்ந்தவள் என்று சொல்லுகின்ற ஆதிக்க மனப்பான்மை; ஒருவர் எஜமானன் _ இன்னொருவர் அடிமை என்கிற பிறவி பேதம்தான்.
எனவேதான், எனக்கு பெண்ணுரிமை மிக முக்கியம்’’ என்றார். சமூகநீதி என்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. இரண்டு விரிவான பகுதிகளை இணைத்தார்கள்.
எனவே, பெரியாருடைய அந்த நிலை _ யாருக்கோ புரியவில்லை _ அவருடைய பிறந்த நாளை _ சமூகநீதி நாளாக ஏன் அறிவித்தார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள். பொதுவாக, அந்தப் பத்திரிகைகளை நாங்கள் பார்ப்பதைத் தவிர்த்து வருகிறோம்.
சமூகநீதி என்றால் – ‘அனைவருக்கும் அனைத்தும்‘’ என்பதுதான்!
1938இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும் பொழுது தந்தை பெரியார் அவர்கள் இரண்டே வரியில் எழுதினார். சமூகநீதி என்றால் என்ன? என்று கேட்டால், இரண்டே சொல்லில் சொன்னார். ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்றுதான்.
இது புரியவில்லை என்றால், என்ன செய்வது?
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா?
இன்றைக்குப் போராட்டமே எதற்காக _ அனைவருக்கும் அனைத்துமா? இன்னாருக்கு இதுதான் என்பதற்காகப் போராட்டமா?
சமூக அநீதி என்றால் என்ன?
கல்வியா, கூடாது!
பெண்கள் படிக்கக்கூடாது என்பதுதான் சமூக அநீதி.
பெரியார்தான் கேட்டார், சமூகநீதி விளக்கம் சொல்லும்பொழுது மிக எளிமையாகச் சொல்வார். செங்கல்பட்டு மாநாட்டில், பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்.
செய்தியாளர்களில் சிலர், பெரியாரைக் கிண்டல் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்கள்,
‘‘ஏங்க, பெண்களுக்கு உரிமை வேண்டும், உரிமை வேண்டும் என்று சொல்கிறீர்களே, எந்த அளவிற்கு உரிமை வேண்டும் என்று சொல்வீர்களா?’’ என்று.
அவர்கள் கிண்டலாகக் கேட்கிறார்கள் என்று பெரியார் அவர்கள் புரிந்துகொண்டு,
‘‘எந்த அளவிற்கு என்றுதானே கேட்கிறீர்கள்; ஆண்களுக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அந்த அளவிற்குக் உரிமை கொடுத்தால் போதும்’’ என்றார்.
(தொடரும்…)