2020ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108ஆம் இடமும், தமிழ்நாட்டுப் பெண்களில் முதலிடமும் பெற்றுள்ளார் தென்காசியைச் சேர்ந்த சண்முகவள்ளி. இவர் தமது மூன்றாவது முயற்சியில் அடைந்த இந்த வெற்றியைப் பற்றிக் கூறுகையில்,
“கல்லூரியில் படிக்கிறப்பதான் சிவில் சர்வீஸில் ஆர்வம் வந்துச்சு. தினமும் செய்தித்தாள் வாசிக்கிறது, நியூஸ் எல்லாம் ஃபாலோ பண்றதுனு இருந்தேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எட்டு செமஸ்டரிலும் எட்டு கோல்டு மெடல் வாங்கியிருக்கேன். படிப்பு மட்டுமல்ல; பொதுஅறிவிலும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப ஆர்வம். உலக நடப்புகளை சட்னு சொல்வேன். அய்.ஏ.எஸ். படிக்கணும்னு நினைக்கும்போது எனக்கு பல பேர் இன்ஸ்பிரேஷனா இருந்தாங்க. அவங்களைப் பற்றி நிறைய படிப்பேன்.
முதல் ரெண்டு முறை வெற்றி கிடைக்கல. மூன்றாவது முறையே வெற்றி கிடைத்தது. இதனை அறிந்து வீட்டுக்கு எம்.பி. கனிமொழி மேடமும், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் சார், மூர்த்தி சார் எல்லாம் நேரில் வந்து வாழ்த்தினாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு…’’ என நெகிழ்கிறார்.
‘‘நான் இதுக்காக சமூகவியல் பாடத்தை விருப்பப் பாடமா எடுத்துப் படிச்சேன். என்னுடைய எஞ்சினியரிங் பாடம் விருப்பத்தாள்ல இல்ல. அதனால, விருப்பப் பாடத் தாள்ல பொலிட்டிக்கல் சயின்ஸ், சமூகவியல் உள்ளிட்ட நாலஞ்சு பாடங்களைப் பார்த்தேன். எனக்கு சமூகவியல் ரொம்பப் பிடிக்கும். அதனால, அதைத் தேர்ந்தெடுத்துப் படிச்சேன்.
பொதுவா, சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்ள நாம் மனதளவில் தயாரா இருக்கணும். நமக்கு நிறைய தடைகள் வரும். வேற வேலைக்குப் போயிடலாம்னு கூட தோணும். சிலர் மாற்றுத்திட்டம் எல்லாம் வச்சிருப்பாங்க.
ஆனா, நம்பிக்கையோடு எல்லாத்தையும் கடந்து வரணும். அப்படி வந்தால் நிச்சயம் நமக்கு வெற்றிதான். நான் இதைவிட்டுப் போகணும்னு ஒருபோதும் நினைச்சதில்ல. ஆனா, வேறு வேலைகள் பார்த்துட்டே இதைத் தொடரணும்னு நினைச்சிருக்கேன். அதுக்காக வங்கித் தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வுகளும் தொடர்ந்தாற்போல எழுதிட்டு இருந்தேன்.
கொரோனா நேரத்துல ஒருமுகப்படுத்திப் படிச்சேன். வெற்றி கிடைச்சிருக்கு. ‘‘என்னுடைய பணியை திறமையா செய்யணும்னு ஆசைப்-படுறேன். மக்கள் எளிதா அணுகக்கூடிய ஒரு அய்ஏஎஸ்ஸா இருக்கணும்னு நினைக்கிறேன்…’’ என உற்சாகமாகச் சொல்கிறார் சண்முகவள்ளி.ஸீ