சிந்தனைக் களம் : பெரியார் என்றால் பதறுவது ஏன்?

நவம்பர் 16-30,2021

கி.தளபதிராஜ்

இந்து சமய அறநிலையத் துறையால் கொளத்தூரில் தொடங்கப்பட்டிருக்கும் கல்லூரி பணி நியமனம் தொடர்பாக அண்மையில் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் 16.10.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில், “1928க்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர், முஸ்லிம் மாணவர்கள்கூட சேர முடியாது தடுக்கப்பட்ட நிலை இருந்தது. அதைத் திராவிடர் ஆதரவு ஆட்சிதான் மாற்றியது. காரணம், பச்சையப்பர் ஒரு ஹிந்து. அவரது அறக்கட்டளை மூலம் நடத்தப்-படுகிறது. நால் வருணத்தைத் தாண்டிய அவர்ணஸ்தர்கள் ஆதிதிராவிடர்கள்; ஆகவே, அவர்களையும் சேர்க்க முடியாது என்று பல ஆண்டு காலம் இருந்ததை தந்தை பெரியார் _- சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது” என்று குறிப்பிட்டிருந்தார். மேற்படி அறிக்கை குறித்து ‘தமிழ் இந்து’ நாளிதழில் ம.வெங்கடேசன் என்பவர் அக்டோபர், 22ஆம் தேதி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர்-கள் சேர்த்துகொள்ளப்பட்ட நிகழ்வு _- பட்டியல் சமூகத் தலைவர்களின் போராட்ட வெற்றியின் குறியீடு. அதை மறைத்து பெரியார் கணக்கில் அந்தப் புகழைச் சேர்க்கப் பார்ப்பது நியாயம் இல்லை என்று கொந்தளித்திருக்கிறார். பெரியார் மீது ஏன் இந்த வெறுப்போ தெரியவில்லை.

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர்-களைச் சேர்க்க முடியாது என்று பல ஆண்டு காலம் இருந்ததை தந்தை பெரியார் -_ சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது என்று தான் ஆசிரியர் வீரமணி அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அது தானே உண்மை!

1917ஆம் ஆண்டிலேயே சேலத்தில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் “பஞ்சமர் சமுதாய மாணவர்களுக்கு இலவசக் கல்வி தரவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி.

1919இல் நடைபெற்ற தென்னிந்திய பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் நிறைவேற்றப்-பட்ட “பார்ப்பனரல்லாதாரால் முழுமையாக நிர்வகிக்கத் தக்கதானதும், பார்ப்பனரல்லாத மாணவர்களின் சிறப்பு நலன் கருதுவதுமான மாணவர் விடுதிகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளிகள் மாகாணத்தின் பல இடங்களிலும் திறக்கப்படவேண்டும்” என்ற  தீர்மானம்தான் 3.2.1919 நாளிட்ட கடிதமாக அரசுக்கு அனுப்பப்பட, அது கவர்னரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, 17.3.1919இல் அரசாங்கப் பொதுப்பள்ளிகளில் பஞ்சமர்களைச் சேர்த்துக்கொள்வது பற்றி ஒரு நீண்ட ஆணையை அரசு வெளியிடக் காரணமாக அமைந்தது.

“அக்ரஹாரத்திலும், சாவடிகளிலும், கோவில்களிலும் உள்ள பள்ளிகளை  எல்லா ஜாதியினரும் அணுகக் கூடிய வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். பள்ளிக்கு வாடகைக்கு இடம் தருபவர்கள் பஞ்சமர் பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று கூறினால் அவ்விடத்தில் உள்ள பள்ளிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். எல்லா ஜாதியாரும் அணுகக் கூடிய இடத்தில் பள்ளி உள்ளது என சான்றிதழ் அளிக்கப்பட்டாலொழிய,  பொதுப் பணத்தில் பள்ளிகள் கட்டப்படக்கூடாது.” என்றெல்லாம் பல்வேறு வரைமுறைகளை வகுத்திருந்தது அந்த ஆணை. அத்துடன் பாடிசன் கீழ் பணியாற்றும் பல துணை கலெக்டர்களால் தாழ்த்தப்-பட்டவர்களுக்கென பல பள்ளிகளும் திறக்கப்பட்டன.

19.11.1919 அன்று நடைபெற்ற லெஜிஸ்லேடிவ் கவுன்சில் கூட்டத்தில் எம்.சி.ராஜா, பஞ்சமர் மாணவர்களைச் சேர்க்காத அரசு உதவி பெறும் பள்ளிகளின் பட்டியலை அரசு அறிவிக்கக் கோரியபோது முழுமையான பட்டியல் தயாரிக்கப்படவில்லை என்று கூறி சென்னை பச்சையப்பன் கல்லூரி, கள்ளிக்கோட்டை ஜாமரின் கல்லூரி, திருவல்லிக்கேணி உயர்நிலைப் பள்ளி போன்றவற்றை சான்றாக அரசு அறிவித்தது.

(1920 நவம்பரில் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றவர் எம்.சி.ராஜா. அப்போதைய சட்டசபைக்கு நீதிகட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்-பட்டார். சென்னை மாகாண சட்ட-மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட சமூக உறுப்பினர் எம்.சி.ராஜா.

1919ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அணுக முடியாத இடங்களிலுள்ள பள்ளிகளை இத்தகைய தடைகள் இல்லாத கட்டடங்களுக்கு மாற்றவேண்டுமென அரசு வெளியிட்டிருந்த ஆணையைப் பின்பற்றி நகராட்சிகளும், ஜில்லா போர்டுகளும் எடுத்த நடவடிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக அளிக்கும்படி ஆணை பிறப்பித்திருந்தது நீதிக்கட்சி.

கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற்றுவந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எண்ணிகையை பல மடங்காக உயர்த்தி 1923இல் ஆணையிட்டது நீதிக்கட்சி.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்து 17.10.1922இல் ஆணை பிறப்பித்ததும் நீதிக்கட்சியே.

காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியார், தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். 1925ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் அவர் எழுதிய தலையங்கத்தில்,

“பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைவிட தீண்டப்-படாத சமூகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்து சொல்லுவோம். ஏனெனில், அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலோ முன்னேறவே இல்லை. சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச் சமூகங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கப்-பட்டிருக்கு-மேயானால் இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும், பிராமணக் கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா?” என்று கேட்டார். (‘குடிஅரசு’ – 8.11.1925)

மேலும் “தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடமையாகும். ஏனெனில் தீண்டாதார்களின் முன்னேற்றம்தான் பிராமணரல்லாதார் முன்னேற்றமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலம்தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும்.” என்று எழுதினார். (‘குடிஅரசு’ – 15.11.1925)

பச்சையப்பன் கல்லூரியில் பார்ப்பனர் ஆதிக்கம் தலைதூக்குவதை அறிந்த பெரியார் அங்கு பார்ப்பனரல்லாத மாணவர்கள் பார்ப்பன சமையல்காரரை எதிர்த்து பார்ப்பனரல்லாத ஒருவரை சமையல்காரராக நிறுவிடச் செய்ததை தனது ‘குடிஅரசு’ இதழில் எழுதினார். அதனைத் தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும் போராடி பார்ப்பனரல்லாத ஒருவரை சமையல்காரராக நிறுவவே அதனை வரவேற்று, எல்லா பாடசாலைகளிலும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். (‘குடிஅரசு’ 6.3.1927)

சுயமரியாதை இயக்கம் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்த இந்த காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியின் தமிழக வருகைச் செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

பச்சையப்பன் கல்லூரியில் 7.9.1927 அன்று பேசிய காந்தி, ‘பச்சையப்பன் கல்வி நிறுவனங்-களில் பஞ்சமர்கள் மற்றும் முஸ்லிம்களை அனுமதிக்க வேண்டும்’ என்று பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர்-களுக்கு வேண்டுகோள் விடுக்க, காந்தி பேசிய பிறகு, பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தனது நன்றியுரையில், ‘கல்லூரியை அனைத்துத் தரப்பு இந்தியர்களும் சேர்ந்து பயிலத்தக்கதாக மாற்ற முயற்சிப்பதாக’ கூறினார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ம.வெங்கடேசன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

காந்தியை அங்கு அப்படி பேசவைத்த காலச் சூழலைப் பற்றியும் நாம் சற்று அறிந்துகொள்ள வேண்டும். தமிழகம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மைசூர் சென்ற காந்தி வர்ணாசிரம தர்மம் பிறவியிலேயே ஏற்பட்டது என்றுதான் பேசினார். இப்படி அவர் தொடர்ந்து பேசி வந்ததை அறிந்த பெரியார் காந்தியின் தமிழக வருகை பற்றி “குடிஅரசு’ ஏட்டில் தலையங்கம் எழுதினார்.

“சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வரப்போகிறார். தீண்டாமை பற்றிப் பேசும்போது அவரது வழக்கப்படியேதான் பேசித் தீருவார். அதன் மூலம் நமது எதிரிகளுக்கு அதிகமான பலம் ஏற்பட்டு நமது முயற்சியை ஒழிக்க அதை அவர்கள் உபயோகப்படுத்திகொள்வார்கள். அதை இப்போதே நாம் வெளிப்படுத்திவிடுவது மேலானதென்று கருதுகிறோம். அதாவது, மகாத்மா காந்தி நமது பார்ப்பனர்கள் சொன்னது போலவே நமது சமூக வாழ்வில் வர்ணாசிரம தர்மம் உண்டு என்றும், அது பிறவியிலேயே ஏற்பட்டது என்றும் அடிக்கடி சொல்லி வருகிறார்.

சமீபத்தில் மைசூரில் ஒரு கூட்டத்தில் தீண்டாமையைப்பற்றிப் பேசும்போதும், “இந்த சமூகத்தில் வர்ணாசிரம தர்மம் உண்டு என்றும், அது நமது சமூகத்திற்கு அவசியம் என்றும், ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றும், அந்தந்த வருணத்தார் அந்தந்த தருமத்தைச் செய்யும்-போது அவரவர் அம்மட்டில் உயர்ந்தவர்கள் என்றும், பிராமணன் அவன் தர்மத்தைச் செய்யும்போது உயர்ந்தவனாகிறது போலவே மற்ற வர்ணத்தானும் அவனவன் தர்மத்தைச் செய்யும்போது தான் உயர்ந்தவனாகிறான்’’ என்பதாகப் பேசியிருக்கிறார். இதைத்தான் பார்ப்பனர்களும் தாங்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்பதற்குக் காரணங்களாகச் சொல்லி வருகிறார்கள்.

தீண்டாமை விஷயத்தில் மகாத்மாவுக்கு உள்ள குழப்பத்தைக் காண்பித்து, அவரும் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டவரே அல்லாமல் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவராகப் புலப்படவில்லை என்பதைக் காட்டுவதற்கே எழுதுகிறோமே அல்லாமல் அவர் மீது குறை கூறுவதற்காக அல்ல .”  என்று எழுதினார். (‘குடிஅரசு’ – 7.8.1927)

பெரியார், காந்தியின் வர்ணாசிரமக் கொள்கையை விமர்சித்து எழுதிய கட்டுரை தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. இது குறித்து பெரியாரும் எஸ்.இராமநாதனும் காந்தியை நேரிலும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்கள்.  இந்தியாவின் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் காங்கிரஸ், இந்துமதம், பார்ப்பன ஆதிக்கம் மூன்றையும் ஒழிக்க வேண்டும் என்று காந்தியிடம் சொன்னதாக பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். மேற்படி பெரியார் சந்திப்பின் விளைவால் மைசூரில் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்துப் பேசிய காந்தி, பச்சையப்பன் கல்லூரியில் அப்படி பேசியிருக்கக் கூடும். எப்படியாயினும் காந்தியின் பேச்சு வரவேற்கக் கூடியதே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதே நேரத்தில் மன்னார்குடியில் பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட தேசிய உயர்நிலைப் பள்ளிக்கு காந்தி சென்றபோது அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம் இங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கேட்டபோது, அப்படி யாரும் இங்கே படிக்கவில்லை என அந்தப் பார்ப்பனர் இறுமாப்புடன் பதிலளித்ததையும் அறிவோம்.

1927இல் இக்கல்லூரியின் பழைய மாணவர்களான எஸ்.துரைசாமி அய்யர், கே.வெங்கடாஸ்வாமி நாயுடு, என்.கிருஷ்ணமாச்சாரி ஆகிய மூவரும் ‘ஆதிதிராவிடர்களும் இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாகையால், பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அவர்களை அனுமதிப்பதற்கு ஏற்ப அறக்கட்டளை விதிகளை மாற்றியமைக்குமாறு’ சென்னை உயர் நீதி-மன்றத்தை அணுகினார்கள். மனுவில் இருந்த சில பிழை-களால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், அவர்கள் சொல்வதுபோல ஆதிதிராவிடர்களை ஏன் சேர்க்கக் கூடாது எனக் கேட்டது உயர் நீதிமன்றம். பிறகு, அறங்காவலர்கள் ஆதிதிராவிடர்களைப் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்க முடிவெடுத்து, அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதன்படி, 1927இல்தான் ஆதிதிராவிட மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப் பட்டனர். என்று அந்தப் பிரச்சனைக்கு மங்களம் பாடி முடித்துவிட்டார் கட்டுரையாளர். பிரச்சனை அத்துடன் முடிந்து விடவில்லை.

1927இல் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ந.சிவராஜ் பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மீது மேலும் ஒரு வழக்கு தொடந்ததன் விளைவே அறங்காவலர்கள் கூடி தாழ்த்தப்பட்டவர்களை தங்கள் கல்லூரியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்தனர் என்ற செய்தியையும் காண்கிறோம். ஏனோ வசதியாக சிவராஜை அவர் மறைத்துவிட்டார்.

தீர்ப்பு வந்த பிறகும் அறக்கட்டளையினர் கூடி உனடியாக தாழ்த்தப்பட்டோரை கல்லூரியில் சேர்ப்பதற்கு முடிவெடுக்க இயலவில்லை. ஆறு டிரஸ்டிகளில் பார்ப்பனராக இருந்த ஒருவர் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.

1927 அக்டோபர் 22, 23 தேதிகளில் சென்னையில் பனகல் அரசர், சர்.ஏ.ராமசாமி (முதலியார்), தந்தை பெரியார் உள்ளிட்ட நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாட்டில் “பச்சையப்பன் கல்லூரியிலும், அவர்களின் அறக்கட்டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்கச் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை கல்லூரியின் அறங்காவலர்களுக்கு இந்த மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர்களைச் சேர்க்காமல் ஒதுக்குவது பச்சையப்ப வள்ளல் அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் சேர்ப்பதாகும். இந்தக் கோரிக்கையை அறக்கட்டளை ஏற்று செயல்படத் தவறினால் அக் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.

பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் தொடர்ந்து எழுதினார், “ஆதி திராவிடர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இந்துக்கள்தான் என்று அய்க்கோர்ட் தீர்ப்பு சொன்னதின் பலனாக பச்சையப்பன் கலாசாலையில் அவர்களைச் சேர்த்துகொள்ள தர்மகர்த்தாக்களில் பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டிருக்-கிறார்களாம். பச்சையப்பன் டிரஸ்டிகளில் ஒரு பார்ப்பனர் இருப்பதாகத் தெரியவருவதுடன், அந்த ஒரு பார்ப்பனரும் ஆதி திராவிடர்கள் இந்துக்களானாலும் அவர்களை கலாசாலையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அபிப்பிராயம் கூறி இருப்பதாகவும் காணப்-படுகிறது.” என்று எழுதி அந்தப் பூனைக்-குட்டியை இழுத்து சந்தியில் விட்டார்.

மேலும், “ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்துவர்-களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குப் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குள் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள், இக்கோவிலுக்குள் போகலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும் பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்யாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும், வழக்கமும் இருக்கின்றது.

ஆனால், தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்துக் கோவிலுக்குள் போகக்கூடாது என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெறிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும், கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன், நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்”.  என்று கல்லூரி நிருவாகத்தை கடுமையாகச் சாடினார். (‘குடிஅரசு’ – 27.11.1927)

அடிப்பவர் அடித்தால் தான் அம்மியும் நகரும் என்பது போல் கல்லூரி நிருவாகத்தில் ஊடுருவியிருந்த பார்ப்பன நாகம் தன் வாலைச் சுருட்டிக் கொண்டது. இதைத்தான் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் பெரியார் _- சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் தாக்கம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். பெரியார் என்றாலே சிலருக்கு எட்டிக்காயாய்க் கசப்பது ஏன்?

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் ‘சென்னை பச்சையப்பன் கலாசாலை டிரஸ்டிகள் ஆதிதிராவிடர்களை இந்துக்கள் என்று ஒப்புக் கொண்டதோடு, அவர்களையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கு இம்மாநாடு மகிழ்கின்றது’ (‘குடிஅரசு’ – 11.12.1927) என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டும் சுட்டிக்காட்டும் வெங்கடேசன், பச்சையப்பன் அறக்கட்டளையில் ஆதிதிராவிடர் சேர்க்கப்-படுவதற்குத் தடையாயிருந்த திரு.வெங்கடேச சாஸ்திரலு பார்ப்பனரை அந்த தீர்மானம் கண்டித்ததையும் மறைத்துவிட்டார்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *