ஆசிரியர் பதில்கள் : தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு கலைஞர் வழியில் முதல்வராக்குவார்!

நவம்பர் 16-30,2021

கே1:     தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மீண்டும் தமிழ்நாடு அரசு அறிவிக்க முயற்சி மேற்கொள்-வீர்களா?

– க.தமிழ்மணி, தாம்பரம்

ப1:        நம்முடைய முதல் அமைச்சர்- _ ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மானமிகு _ மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் விருப்பங்களையும் எண்ணங்களையும் செயல்படுத்தி, திராவிட மாடல் ஆட்சியே _ தனது தலைமையிலான தி.மு.க. ஆட்சி என்பதை பற்பல சாதனைகள் மூலம் நாளும் நாட்டுக்கு உணர்த்தி வருகிறார்.

               “நித்திரையில் உள்ள தமிழா,

               சித்திரை அல்ல தமிழ்ப் புத்தாண்டு

               மார்கழி உச்சியில் மலர்ந்த பொங்கல்’’

               என்றார், புரட்சிக்கவிஞர்.

               தை என்பதே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அறிவித்த கலைஞரின் சாதனையை மீண்டும் தேரோட்டமாக  ஆக்குவார் என்ற நம்பிக்கை நமக்குண்டு.

கே2:     இலங்கையில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது தமிழரை ஒடுக்கத்-தானே?

– மு.வெங்கடேசன், திருத்தணி

ப2:        ஆம்; அதிலென்ன சந்தேகம்? தமிழினத்தின் அடையாளத்தையே அழிக்கவே ராஜபக்சேக்களின் இந்தப் புதிய இராக ஆலாபனம்! பிரிட்டிஷாரிடம் இலங்கை பெற்ற விடுதலை நிபந்தனைகளுக்குக் கூட இது எதிரானதே!

கே3:     மக்கள் நினைத்தால் மதவாத, கார்ப்பரேட் பி.ஜே.பி. ஆட்சியை வழிக்குக் கொண்டு வர முடியும் என்பதுதானே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு காட்டுகிறது?

– வெ.மலர்விழி, சேலம்

ப3:        அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். ‘அடி’ என்பது ஜனநாயகத்தில் ஒருவிரல் புரட்சியே! ‘தோல்வி’ எவரது கண்களையும் திறக்க வைக்கும்!

கே4:     வினோத்ராய் அறிவிப்பிற்குப் பின் 2ஜி வழக்கில் மேல்முறையீடு கேள்விக்-குறிதானே?

– தா.முருகானந்தம், திண்டிவனம்

ப4:        கோணிப்புளுகன் கோயபெல்ஸின் வாரிசான தணிக்கையாளர் வினோத்ராய் என்ற பார்ப்பனர் மன்னிப்பு கேட்டுள்ளார், சஞ்சய் நிருபமிடம். ஊதிய பலூன் வெடித்துவிட்டது! திராவிடர் கழகம்தான் இந்த உண்மை நிலையை முதன்முதலில் வெளியே கொண்டுவந்து, நாடு தழுவிய பிரச்சார இயக்கமாகத் தொடங்கி நடத்தியது.

               தோழர் ஆ.ராசா, கவிஞர் கனிமொழி இவர்களைப் ‘பழிவாங்கவே’ மீண்டும் மேல்முறையீடு என்ற அஸ்திவாரம் இல்லாமல் எழுப்பப்பட்ட பொய். போலிக் கட்டடம். வலுவிழந்து நொறுங்கிப் போகும்!

கே5:     அகில இந்திய நீதிபதிகள் சேவையை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது நன்மை தருமா?

– க.ஆறுமுகசாமி, திருவண்ணாமலை

ப5:        ஒன்றிய அரசின் ஆக்டோபஸ் கரங்கள் நீளுவதற்கு வாய்ப்பு உண்டு. மற்றொரு கோணத்தில் ஆராய்ந்தால் அதற்கு அய்-.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.களில் இடஒதுக்கீடு கோரும் உரிமையும் வரும் -_ நீக்க வாய்ப்பு இருந்தாலும்கூட.

கே6:     இந்தியா அளவில் எதிர்க்கட்சிகள் ‘ஈகோ’ பார்க்காமல் இணைந்து எதிர்த்தால், பி.ஜே.பி.யை படுதோல்வி அடையச் செய்யலாம் என்ற நம்பிக்கையை இடைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாகக் கொள்ளலாமா?

– தி.முத்துக்கிருஷ்ணன், நெல்லை

ப6:        உண்மை அதுதான். பிரதமர் கனவை ஒதுக்கிவிடுவது; யார் வரக் கூடாது என்பதற்கு முக்கியம் கொடுப்பது போன்றவற்றில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிந்தித்துச் செயல்பட்டால் முடியாதது எதுவுமில்லை.

கே7:     அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்திற்கு எதிர்ப்பாய் திருவள்ளுவருக்குக் காவி ஆடை, பட்டையெல்லாம் போட்டு, ஒரு நபர் யுடியூப் சேனல் நடத்துவதை சட்டப்படி தடுக்க முடியாதா?

– தே.வேலுசாமி, செங்கை

ப7:        அதை யாரும் _ பெரும்பாலோர் பார்ப்பதில்லையே! அதற்கு ஏன் தேவையற்ற விளம்பரம்?  மேலும், அதை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துவோம். அதுதான் சிறந்த உத்தி.

கே8:     ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ரீதியாக தமிழ்நாட்டில் தன்னை வலுப்-படுத்திக் கொண்டுவரும் நிலையில், திராவிடம் தமது தொண்டர் பயிற்சியில் முனைப்புக் காட்ட-வில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதா?

– ந.குமரன், திருச்சி

ப8:        நமது இளைஞரணி, மாணவரணி, திராவிட மகளிர் பாசறைகளுக்கு இந்தக் கேள்வியை அர்ப்பணிக்கிறேன்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *