ஆசிரியர் பதில்கள் : மதுரையைப் போல மற்ற இடங்களிலும் நடவடிக்கை தேவை!

ஆகஸ்ட் 1-15,2021

கே:       தமிழ்நாட்டைக் கூறுபோட்டு தமிழர்களின் எழுச்சியைச் சிதைக்க முயலும் ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சியை முறியடிக்க தீவிர செயல்திட்டங்களை மற்ற கட்சிகள் ஒன்றிணைந்து வகுத்தால் என்ன?

               – மாறன், மன்னார்குடி

ப:           அவ்வளவு எளிதாக ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சிகள் தமிழ்நாட்டில் அரங்கேறிவிட முடியாது; என்றாலும், மக்களை விழிப்போடு வைக்கும் பணியை இடையறாது நம் இயக்கம் செய்துகொண்டே இருக்கும் என்பது உறுதி!

கே:       வேளாண் சட்டங்கள், மீன்பிடிச் சட்டங்கள் என்று கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைக் கொண்டு வந்து கோடிக்கணக்கான மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசினை பணியச் செய்ய எல்லா மாநில மக்களையும் ஒன்று திரட்ட வேண்டாமா?

               – முத்துக்குமரன், காஞ்சி

ப:           காலங்கனிந்து கொண்டிருக்கிறது; ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’.

கே:       தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் சிலர் ஆர்.எஸ்.எஸ் விசுவாசிகளாக இருப்பது ஆபத்தல்லவா?

               – விசுவநாதன், வேலூர்

ப:           மதுரையில் உடனே பாய்ந்த நடவடிக்கைபோல, பல துறைகளிலும் தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட வேண்டும்!

கே:       கரோனா தீவிரமானாலும் ‘நீட்’ தேர்வை நடத்துவோம் என்ற முடிவை உச்ச நீதிமன்றத்தின் மூலம் தடை செய்ய முடியாதா?

               – ராஜா முகமது, தாம்பரம்

 

ப:           புதிய சட்ட முயற்சிகளை புதிய கோணத்தில் எடுத்து உச்சநீதிமன்றம் சென்றால் நிச்சயம் வெல்ல வாய்ப்பு அதிகம் உண்டு.

கே:       எடியூரப்பா பதவி விலகி இருப்பது எந்தப் பின்னணி? அதனால் தமிழ்நாட்டுக்குச் சாதகமா?

               – சசிகுமர், மயிலை

ப:           அது பா.ஜ.க.வின் தலைவலி. எந்த முதலமைச்சர் வந்தாலும், தமிழ்நாட்டு உரிமைகளை மதிப்பவர்களாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள்; அப்படி மீறி மதிப்பவர்களாக நடந்து கொண்டால், அங்கே அவர்கள் முதலமைச்சராக இருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்த நிலை!

கே:       செயலி மூலம் உளவு பார்க்கும் குற்றச் செயலுக்கு எதிராய் உச்சநீதிமன்றம் தானே முன்வந்து விசாரணை அமைத்து ஆணையிட்டால் என்ன?

               – அன்புச்செல்வன், திருச்சி

ப:           அதுதான் நாட்டில் பலரது வேண்டுகோளாக இருக்கிறது!

கே:       நீதிபதிகள் இடங்களைக் காலியாக வைத்திருப்பதற்கு உள்நோக்கம் உண்டா?

               – ரஃபிக், செங்கல்பட்டு

ப:           முந்நூறுக்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகள் நிரப்பப்படவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி 3, 4 பதவிகள் காலி. தங்களுக்குகந்த பெயர்களைத் தேடுகிறார்களோ என்னவோ, யார் அறிவார்?

கே:       தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66(ஏ) பிரிவு 2015இல் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இந்தப் பிரிவில் வழக்குப் பதிவதை நீதிமன்றம் கண்டித்துள்ளது பற்றி தங்கள் கருத்து?

               – மருதன், மதுரை

ப:           இதன்மூலம் எப்படி அதிகாரதுஷ்பிரயோகம் நடைபெறுகிறது என்பது உலகத்திற்கே வெளிச்சத்திற்கு

வந்துவிட்டது!

கே:       கலைஞரின் நினைவு நாளை ஒட்டி தாங்கள் உடன்பிறப்புகளுக்குக் கூற விரும்பும் செய்தி என்ன?

               – மகிழ், சைதை

ப:           கலைஞரின் பெருவிருப்பத்தை நிறைவேற்றி புயல் வேகத்தில் மவுனப் புரட்சி செய்து ஆளுமையில் அனைத்துத் தரப்பினரின் அமோக பாராட்டுகளைப் பெற்றுவரும் உழைப்புமிகு, அடக்கமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள வாராது வந்த மாமணியாம் ஆட்சியைப் பலப்படுத்துவதுதான்! தி.மு.க. கட்டுப்பாட்டுடன் அவரது தலைமையில் வழிநடப்பதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *