சமூகத்தில் மூன்றாம் பாலினமான திருநங்கைகளின் முன்னேற்றம் என்பது கலைஞர் கண்ட கனவுகளில் ஒன்று. அவர்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருநங்கைகள் எனப் பெயரிட்டு உலகம் முழுமைக்கும் அடையாளப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் போக்குவரத்து, அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு என பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களை மக்களோடு இணைத்துப் பணியாற்ற அனைத்துவகை சலுகைகளையும் கொடுத்து முன்னிலைப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் வங்கதேச தொலைக்காட்சி ஒன்றில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக பணியினை தாஷ்னுவஅனன் ஷிஷிர் ஏற்று நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.
திருநங்கை சமூகத்திலிருந்து வங்கத்தேசத்தின் முதல் செய்தி வாசிப்பாளராக உருவாகியுள்ளார் தாஷ்னுவ அனன் ஷிஷிர். திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் செயல்பட்டு வந்த இவர், கடந் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று, வங்கத்தேசத்தின் போயிஷாகி தொலைக்காட்சியில் செய்தி வாசித்ததன் மூலம் நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக ஆகி உள்ளார். இவர், முதல் செய்தி வாசிப்பை முடித்தபோது அவரது கண்களில் கண்ணீர் வழிந்துள்ளது. உடன் வேலை செய்பவர்கள் அனைவரும் அவரைத் தேற்றிய காட்சிகள், அவர் கடந்து வந்த வலிக¬ளை காண்போரையும் உணரச் செய்தன.
இது குறித்து ஷிஷிர் கூறுகையில், “நான் பல மேடை நாடகங்களை நிகழ்த்தியிருந்த போதிலும், முதல் முறையாக தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றியபோது, ஒருவித அச்ச உணர்வு இருந்தது.
வாழ்க்கையில் பல கஷ்டங்களை பார்த்த நான், நான்கு முறை தற்கொலைக்கு முயன்றேன். என் அப்பா என்னுடன் பேசுவதை நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டது. சமூக அழுத்தத்தால், நான் ஆண்போல நடந்துகொள்ள வேண்டும் என்று கண்டித்தார். என்னால் அங்கு இருக்க முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறினேன்.
தலைநகர் டாக்காவிலும், பின்னர் மத்திய நகரமான நாராயண்கஞ்சிலும் தனியாக வசித்து வந்தேன். மீண்டும் படிப்பைத் தொடர்ந்து கொண்டே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். இதன்மூலம், டாக்காவில் உள்ள ‘ஜேம்ஸ் பி கிராண்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்’ நிறுவனத்தில் சமூக நலத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமை கிடைத்தது.
கடந்த 2013ஆம் ஆண்டுதான் வங்கத்தேசத்தில் திருநங்கையர் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட்டனர். 2018இல் வாக்குரிமை அளிக்கப்பட்டது. காலப்போக்கில் திருநங்கைகளுக்கான உரிமைகள் கிடைத்து வருவது வரவேற்கத்தக்கது.
திருநங்கையர் துயரமான வாழ்வை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் சமூகத்தை எதிர்த்து தங்கள் திறமைக்கான உயரத்தை அடைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
(தகவல் : சந்தோஷ்)