சிறப்புக் கட்டுரை : இது கலைஞரின் தமிழ்நாடு

ஜூன் 01-15 2021

கோ.லெனின்

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…’’ என முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். அவரது சொற்களில் இந்த ஆட்சி, கலைஞரின் ஆட்சியின் தொடர்ச்சி என்பதை ஆவணமாக்கியது. அதனைத் தொடர்ந்து, ‘உளமார உறுதி கூறுகிறேன்’ என்று அவர் சொன்னபோது, “கலைஞர் ஆள்கிறார். பெரியாரும் அண்ணாவும் வாழ்கிறார்கள்’’ என்ற உணர்வு ஏற்பட்டது.

தேர்தல் நேரத்தில் கமலஹாசன் தொடங்கி பலரும் எம்.ஜி.ஆர். ஆட்சியைத் தருவோம் என்றார்கள். அரசியலுக்கு வராமலேயே விடைபெறுவதாக அறிவித்த ரஜினியும் எம்.ஜி.ஆர். ஆட்சி பற்றித்தான் பேசினார். இவர்களைவிட சிறந்த நடிகரான இந்திய ஒன்றியப் பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். புகழ் பாடியது மட்டுமல்லாமல், மதுரைவீரன் படம் பற்றியெல்லாம் சீரியஸாகப் பேசி காமெடி செய்தார். ஆனால், “யாரும் கலைஞர் ஆட்சி தருவோம் என்று பேசவில்லையே’’ என திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எம்.ஜி.ஆர். ஆட்சியை கமல்-, ரஜினி யாரும் தர முடியாது. அது எப்படிப்பட்ட ஆட்சி என்ற முழுப் பரிமாணமும் அவர்களுக்குத் தெரியாது. அது போல கலைஞர் ஆட்சி என்று அவர்களால் சொல்லக்கூட முடியாது. ஏனென்றால் அது சமூக நீதியின் அடிப்படையிலான அனைவருக்குமான ஆட்சி. அதை வழங்கக்கூடிய வலிமையும் திறமையும் தகுதியும் கொண்டவர் மு.க.ஸ்டாலின்தான் எனத் தீர்ப்பெழுதியிருக்கிறார்கள் _ கலைஞரின் ஆட்சியால் பெற்ற பலன்களைக் கடந்த பத்தாண்டு கால இருண்ட ஆட்சியில் நினைத்துப் பார்த்த தமிழக மக்கள்.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது தி.மு.கழகம். வெற்றி விழாவினைக்கூடக் கொண்டாட முடியாத வகையில் கொரோனா பேரிடர் பணியைப் பதவியேற்பதற்கு முன்பே தொடங்க வேண்டிய நெருக்கடிக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டார். மக்கள் உயிரே முதன்மை என முன்களப் பணியாளராக அவரும் அவரது அரசும் பணியை மேற்கொண்டது.

புழல் ஏரியில் நீர் நிறைந்து, நீர்த்தேக்கம் உடையும் அபாயத்தில் உள்ளது என நள்ளிரவு கடந்த அகால  நேரத்தில் அன்றைய முதல்வர் கலைஞரிடம் தெரிவித்தபோது, தன் முதுமையைப் பற்றிக் கவலைப்படாமல் உடனடியாக அமைச்சர்கள், அதிகாரிகள், பொறியாளர் களுடன் அந்த  இடத்திற்குச் சென்று, பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு, நீர்த்தேக்கத்தைச் சரி செய்யும் வரை அங்கேயே இருந்து, பாதுகாப்பை உறுதி செய்த பிறகே அங்கிருந்து புறப்பட்டார் மக்கள் நலனில் அக்கறை கொண்ட கலைஞர். அவர் பெயரைச் சொல்லி, உளமார உறுதியேற்ற மு.க.ஸ்டாலினிடம் அதே அக்கறை இருப்பதில் ஆச்சரியமில்லை.

பொறுப்பேற்றதும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ‘I belong to the Dravidian Stock’ என்ற வரியை இணைத்தார். 1962இல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிஞர் அண்ணாவின் தொடக்கப் பேச்சில் இடம்பெற்ற புகழ் பெற்ற வரி அது. இந்திய நாடாளுமன்றம் அதுவரை அப்படியொரு குரலையும் கருத்தையும் கேட்டிராத காரணத்தால் அதிர்ந்தது. அந்த அதிர்வை மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியபோது, பெரியாரும் அண்ணாவும் வாழ்கிறார்கள் என்பது உறுதியானது.

தி.மு.க.வின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதில், ‘மத்திய அரசின்’ ஒத்துழைப்பையும் _ ‘மத்திய அரசு’க்கான ஒத்துழைப்பையும் எனக் குறிப்பிடுகிறார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தபோது ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிடுகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கலைஞர் ஆள்கிறார் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில சுயாட்சி தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதனை ஒன்றிய அரசின் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரிடம் அளித்தவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கலைஞர். அண்ணாவுக்குப் பிறகு அவரது தம்பியான கலைஞரும் டெல்லியை அதிரவைத்தார். தமிழ்நாட்டு அரசுக்கென ஒரு கொடியை வரைந்து காட்டினார். அதன் விளைவு, இந்திய ஒன்றிய அரசின் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்குப் பெற்றுத் தந்தார்.

மு.க.ஸ்டாலின் பேரிடர் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார். ஆனாலும், தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி, புதிய கல்விக் கொள்கைக்கான ஆலோசனைக் கூட்டம் புறக்கணிப்பு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு என அவரது அரசு தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம் செய்தால் தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியைப் பெறமுடியுமா-திட்டங்களை நிறைவேற்ற முடியுமா என விமர்சனக் கணைகள் பாய ஆரம்பித்துவிட்டன.

தி.மு.க மீது விமர்சனக் கணைகள் பாய்வது புதிததல்ல. கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோதும் பாய்ந்தன. தேர்தல் நேரத்தில் கடுமையாகப் பாய்ந்தன. கடைசி நாளில், பத்தாண்டுகளுக்கு முந்தைய செய்திகளை நாளிதழ்கள் முகப்பாக வெளியிட்டு புதிய பத்திரிகா தர்மம் விற்பனை செய்யப்பட்டது. இத்தனை விமர்சனக் கணைகளுக்கும் ஈடு கொடுத்துதான் தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்திருக்கிறார். ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட நிறைவடையவில்லை மறுபடியும் விமர்சனக் கணைகளை எறிய ஆரம்பித்துவிட்டார்கள்.

மு.க.ஸ்டாலின் பேச்சால் பதில் தரக் கூடியவரல்லர். செயலால் பதிலடி தருபவர். தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டின. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் அதைத்தான் செய்கிறார். செயல்.. செயல்.. செயல்.. இதுதான் அவரது பதில். கலைஞரிடமிருந்து அவர் மாறுவது இதில்தான்.

தன்னைப் பற்றி ஒரு வரியில், ‘மானமுள்ள சுயமரியாதைக்காரன்’ என்று சொன்னவர் கலைஞர். அதற்கேற்ப அவர் செயல்பட்டார். மாநில உரிமைகளுக்கான போராட்டங்களை மேற்கொண்டவாறு, மாநில நலன்களுக்கான திட்டங்களை- மக்கள் நலன் கருதிச் செயல்பட்டவர்; செயல்படுத்தியவர். எல்லாவற்றிலும் சமூக நீதிப் பார்வை உண்டு.

கை ரிக்ஷா ஒழிப்பு என்பது 1969_-76 ஆட்சிக் காலத்தில் அவர் செய்த மகத்தான புரட்சி. மனிதனை மனிதனே இழுப்பது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால், அதற்குப் பதில் சைக்கிள் ரிக்ஷாக்களைக் கொடுத்தார். பின்னர், மனிதனை வைத்து மனிதன் ரிக்ஷாவை மிதிக்க வேண்டிய அவசியமின்றி, அறிவியல் வளர்ச்சியால் ஆட்டோ ரிக்ஷாக்கள் வந்தபோது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரியம் அமைத்துக் கொடுத்தவரும் கலைஞர்தான்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மீதுதான் அவரது பார்வை எப்போதும் இருக்கும். ஏனெனில், அவர் சமூக ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட ஜாதியிலிருந்து சுயமரியாதையோடு கிளர்ந்தெழுந்து வந்தவர். இன்றுவரை, ஜாதிய வன்மத்துடன் கலைஞர் மீது பாய்கின்றவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்கள் எல்லாருக்குமான கூர்மையான ஆப்பை அவர் செருகிவிட்டே சென்றிருக்கிறார். அந்த எரிச்சல்தான் அவர்களை இன்னமும் அலற வைக்கிறது.

தனது ஆட்சி அமைந்தபோதெல்லாம் சமூக நீதி அடிப்படையிலான அளவுகோலை உயர்த்தியவர். 1970களில் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 28% என்பதிலிருந்த 35%ஆக உயர்த்தினார். பட்டியல் இனத்தவருக்கும் 2% கூடுதல் ஒதுக்கீடு வழங்கினார். 13 ஆண்டுகள் கழித்து 1989இல் ஆட்சிக்கு வந்தபோது, அதற்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50% என இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருந்ததை அடிப்படையாக வைத்து, அதில் மிக பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பிரிவை உண்டாக்கி அவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை வழங்கினார். மீதி 30% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு.

அதுபோல, பட்டியல் இன மக்களுக்கு 18% முழுமையாக வழங்கி, பட்டியல் இனப் பழங்குடியினருக்கு தனியாக 1% வழங்கி, 20+30+18+19 = 69% என்ற நிலையைக் கொண்டு வந்தவர் கலைஞர்.  பின்னர், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த முடியாமல் போன நிலையிலும், இருப்பதை வைத்தே பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 3.5% தனி ஒதுக்கீடு, பட்டியலினத்தவருக்கான 18%ல் அருந்ததியர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு என வழங்கியவரும் கலைஞர்தான்.

2006_-11 ஆட்சிக் காலத்தில் மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது கலைஞர் அரசு. அதன் காரணமாக, கிராமப்புற-ஏழை- ஒடுக்கப்பட்ட சமுதாயத்து மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் டாக்டர்களாகவும் இன்ஜினியர்களாகவும் ஆனார்கள்.

ஜாதிரீதியான ஒடுக்குமுறையை மட்டுமல்ல, பாலினம் சார்ந்த ஒடுக்குமுறையையும் களைகின்ற வகையில், அரசுப் பணிகளில்- அரசுக் கல்லூரிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை ஆகியவற்றை நிறைவேறச் செய்தவர் கலைஞர். பெண்களுக்கு மட்டுமின்றி, மூன்றாம் பாலினத்தவருக்கு ‘திருநங்கை’ எனப் பெயர் சூட்டி, அவர்களுக்கான நலவாரியம் அமைத்து, உரிமைகளை வழங்கினார்.

உடலில் ஏற்பட்ட குறைபாடுகளின் அடிப்படையில் மனிதர்களை ஒதுக்கும்- _ ஒடுக்கும் போக்கை உணர்ந்த கலைஞர், அவர்களுக்கு ‘மாற்றுத் திறனாளிகள்’ எனப் பெயர் சூட்டி, பல உரிமைகளை வழங்கியதுடன், அவர்களுக்கான துறையை முதல்வரான தனது நேரடிப் பொறுப்பில் வைத்துக் கவனித்தார்.

தொழுநோயாளிகளை மக்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதற்கு ரத்தக்கண்ணீர் படமே சாட்சி. அந்தத் தொழுநோயாளிகள் மீது அக்கறை செலுத்தி, அவர்களுக்காகவும் பிச்சைக்காரர்களுக்காகவும் தமிழகத்தில் 10 இடங்களில் மறுவாழ்வு மய்யங்களைத் தொடங்கி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் கலைஞர்.

சமூக நீதியை 360 டிகிரியில் நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர் இந்தியாவில் கலைஞரைப் போல யாரும் கிடையாது.

தமிழகம் தழுவிய அளவில் அவர் நிறைவேற்றிய திட்டங்கள அனைத்துமே 360 டிகிரி கோணத்தில் அமைந்தவைதாம்.

¨           போக்குவரத்து நாட்டுடைமை

¨           குடிசை மாற்று வாரியம்

¨           உயர்கல்வி வளர்ச்சி

¨           கண்ணொளித் திட்டம்

¨           கிராமங்களுக்கு மின்வசதி, -சாலை வசதி

¨           வள்ளுவர் கோட்டம்

¨           பூம்புகார் கலைக்கூடம்

¨           விவசாயிகளுக்கான இலவச மின்சாரம்

¨           ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்

¨           மகளிர் முன்னேற்றத்திற்கான சுயஉதவிக் குழுக்கள்

¨           மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்.

¨           கிராம வளர்ச்சிக்கான அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -நமக்கு நாமே திட்டம்.

¨           உழவர் சந்தை

¨           ஜாதிப் பாகுபாடின்றி அனைவரும் ஓரிடத்தில் வாழும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்.

¨           மினி பஸ் திட்டம்

¨           குமரி முனையில் திருவள்ளுவர் சிலை

¨           வீட்டுக்கு வீடு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி

¨           ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் கேஸ் + அடுப்பு

¨           ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி

¨           உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்.

¨           108 ஆம்புலன்ஸ் சேவை

¨           மகப்பேறு கால உதவித் தொகை

¨           அண்ணா நூற்றாண்டு நூலகம்

¨           சிப்காட் தொழில் வளாகங்கள்

¨           கூட்டுறவு அமைப்புகள்

¨           பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்

¨           மெட்ரோ ரயில் திட்டம்

¨           டைடல் பார்க்

¨           தகவல் தொழில்நுட்பக் கொள்கை

-எனக் கலைஞர் அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் சட்டங்களும் இன்றளவும் தமிழ்நாட்டைத் தனித்துவம் மிக்க மாநிலமாகத் திகழச் செய்கின்றன. பத்தாண்டு காலத்தில் கடன்சுமையை பல மடங்கு ஏற்றி வைத்த ஆட்சியாளர்களால் கருவூலம் வறண்டாலும், கட்டமைப்பு பலமாக இருக்கிறது. அத்தகைய கட்டமைப்பை உருவாக்கியவர் கலைஞர்.

தமிழ் வளர்ச்சி, -தமிழர் நலன், -தமிழக முன்னேற்றம் இவற்றையே சிந்தனையாகக் கொண்டு, அதற்கேற்ப செயல்திட்டங்களை நிறைவேற்றியவர் அவர். குடிசைவாசிகளுக்கு அவர் கட்டித்தந்த கான்க்ரீட் வீடுகளின் சுவர்களில், “கருணாநிதி ஒழிக’’ என்று எழுதியதை அவரிடம் சுட்டிக்காட்டியபோது, “வாழ்க என்றாலும் ஒழிக என்றாலும் என் பெயரைத்தானே எழுதுகிறார்கள். போகட்டும்’’ என்றவர் அவர்.

கலைஞர் நிலைநிறுத்திய சமூக நீதியால்- _ கலைஞர் உருவாக்கித் தந்த கட்டமைப்பால் _ -கலைஞர் ஊட்டிய மொழியுணர்வால் -_ இனப்பற்றால் வளர்ந்த தலைமுறை, தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பதுபோல அவரை  நோக்கியே கணை வீசுவது வழக்கம். அதைக் கடந்தும் வரலாறு, கலைஞரின் பெயரைக் காலந்தோறும் சொல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *