17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூடுதல் இடங்களைப் பிரதமர் மோடி _ பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூட்டு வகுத்த வியூகம், அவர்களுக்கு வடக்கு, கிழக்கு, மேற்கு _ இந்திய மாநிலங்களில் பெருத்த வெற்றியைத் தந்துள்ளது.
பிரதமர் மோடியின் இந்த வெற்றிக்குப் பின்னே அடித்தளம் அமைத்தது ஆர்.எஸ்.எஸ். என்பதை எதிர்க்கட்சிகள், முற்போக்கு சக்திகள் உணரவேண்டும். நோய் நாடி நோய் முதல் நாடத் தவறக்கூடாது.
2014 இல் ஆளுங்கட்சியாகி, பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு, 10 கோடி பேர்களுக்கு 5 ஆண்டில் வேலை _ விவசாயிகள் ஆண்டு வருமானம் இரட்டிப்பாக உயருதல் _ விலைவாசி குறைத்தல் போன்ற வாக்குறுதிகள் செயல்படுத்தப்படாமையை எதிர்த்துப் பிரச்சாரம் நடைபெற்றாலும், அது எதிர்பார்த்த விளைவுகளை எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக பயன் தரவில்லை.
காங்கிரஸ் மற்றும் பல மாநிலக் கட்சிகளாக யதார்த்தத்தில் இருந்த தேசிய கட்சிகள் உள்பட வலுவான _ வேர் பிடித்த _ கொள்கைக் கூட்டணியையும் அமைக்கவில்லை. ஒருங்கிணைப்புப் போதிய அளவில் ஏற்படவில்லை.
பொது எதிரி பற்றிய புரிதல் இன்மை
பொது எதிரியைப்பற்றி (பா.ஜ.க. – மோடி) சிந்தித்து அதற்கேற்ற வியூகம் வகுக்காமல், தங்கள் தங்கள் பதவிக் கனவுகளையே முன்னிலைப்படுத்தி, யார் வரக்கூடாது என்பதைப் பின்னால் தள்ளினார்கள்.
பல வடநாட்டுத் தலைவர்களையும், ஏன் தென் மாநிலங்களில் ஒரு சில மாநிலங்களின் தலைவர்களையும்கூட இந்தக் கனவு ஆட்கொண்டு விட்டது _ தோல்வியில் முடிந்தது!
தமிழ்நாடு பெரியார் மண்தான்; தனித்தன்மை வாய்ந்த திராவிட பூமிதான், சமுகநீதிக் கொடி, மதச்சார்பின்மை, மாநில உரிமை – மொழி – பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான நிலை – இவற்றில் விழிப்போடு உள்ள மாநிலம்தான் என்பதை, தனித்தன்மை வெற்றி வாகை சூடி, உலகத்திற்கே அறிவித்துவிட்டது!
இது திராவிட மண் என்பதால்தான் தமிழ்நாட்டில் இப்படி ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த வெற்றியை பல ஏடுகள், ஊடகங்களின் எதிர்ப்பையும், தவறான பிரச்சாரத்தினையும் தாண்டி தி.மு.க. கூட்டணி குவித்திருக்கிறது.
இன்று (24.5.2019) ‘தி இந்து’ ஆங்கில நாளேடு எழுதியுள்ள அருமையான தலையங்கத்தில்,
‘‘Southern States, barring Karnataka, remained unimpressed by Hindutva, but the BJP made impressive inroads in West Bengal and Odisha, proving its potency even in areas where linguistic, political and cultural factors have historically been unfavourable to it. Tamil Nadu, where Dravidian politics had entrenched itself as a counter to homogenising pressures decades ago, stonewalled the BJP yet again as did Kerala.’’
தமிழாக்கம் வருமாறு:
‘‘தென் இந்திய மாநிலங்களில் கருநாடகாவைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இந்துத்துவாவிற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இம்முறை பாஜக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தன்னுடையை சித்துவிளையாட்டைக் காட்டி நுழைந்துவிட்டது. இந்தப் பகுதிகளுக்கு என்று தனி மொழி, தனி அரசியல் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன என்ற வரலாற்று ரீதியான அப்பகுதியில் அந்நிய அதாவது ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் இந்துத்துவ கலாச்சாரத்தைத் திணிக்க முடியாது. தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு திராவிட அரசியல் பல ஆண்டுகளுக்கு முன்பு வேரூன்றிவிட்டது. அதுமக்களின் மனதில் நிலைத்து நின்றுவிட்டது. கேரளாவும் அதேபோல் பாஜகவிற்குப் பாடம் கற்பித்துள்ளது.
மதவாத அரசியலுக்குப் பாடம் கற்பித்த தமிழ்நாடு
‘‘இங்கே பெரியார் இல்லை, அண்ணா இல்லை, காமராசர் இல்லை, கலைஞர் போன்ற அரசியல் முதிர்ச்சி அடைந்த தலைவர்கள் இல்லை. எனவே, உள்ளே ஊடுருவி விடலாம்’’
என்ற மதவாத பா.ஜ.க.வின் முயற்சியை படுதோல்வி அடையச் செய்து, தக்க பாடம் புகட்டி விட்டனர் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள். அவர்களை எப்படி வாழ்த்துவது, பாராட்டுவது, நன்றி கூறுவது என்றே தெரியாத அளவுக்கு நாம் மகிழ்கிறோம்.
பெரியார் என்பது பிம்பம் அல்ல; தனி மனிதரல்ல – சகாப்தம், காலகட்டம், திருப்பம், என்றென்றும் வாழும் வளர் தத்துவம் என்பதை தமிழ்நாடு கலங்கரை வெளிச்சம்போல், எஞ்சிய இந்தியாவுக்கும், ஏன் உலகத்திற்கும் காட்டிவிட்டது இந்த முடிவுகள்!
தந்தை பெரியார் சிலையைச் சிதைத்தவர்களுக்கும், தந்தை பெரியாரை இழிவுபடுத்திப் பேசும் நச்சு ‘நாவழகர்’களுக்கும் ‘‘வட்டியும் முதலுமாகத் தண்டனை அளித்துவிட்டது’’ தமிழ்நாடு!
1971 தேர்தல் நினைவிருக்கட்டும்
இங்கே ஆர்.எஸ்.எஸ். _ ‘‘குருமூர்த்தி, இராமகோபாலன்கள், ‘தினமலர்கள்’, ‘துக்ளக்குகள்’ திரண்டு ‘‘ஹிந்து விரோதிகளுக்கு ஓட்டளிக்காதீர்கள்’’ என்று பூச்சாண்டி காட்டினர். (தெளிவற்ற சிலர் அதனையும் கண்டு அஞ்சுவது தேர்தல் அரசியலில் புதிதல்ல; 1971 லேயே சேலம் நிகழ்வுபற்றி விஷமப் பிரச்சாரம் (எதிர்விளைவையே உண்டாக்கியது.) பெருத்த வெற்றியே குவிந்தது!
1971இல் இராமனை அவமானப் படுத்தியவர்களுக்குத் துணை போன தி.மு.க.விற்கா உங்கள் ஓட்டு? என்று ‘பூதாகரப்’ பிரச்சாரம் செய்தனர் _ விளைவு? தேர்தலுக்கு முன்பு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை. 138; தேர்தலுக்குப் பின் 184 ஆக உயர்ந்தது.
இந்தத் தேர்தலில் திராவிடர் கழகத் தனிக் கூட்டத்தில் (தேர்தல் கூட்டம் கூட அல்ல) கிருஷ்ணன்பற்றி நான் பேசியதைத் தேர்தல் பிரச்சினையாக்கி, நம்பிக்கையாளர்களின் வாக்குகளை அபகரித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு செயல்படுத்தினர். 1971 இல் ஏற்பட்ட அதே நிலைதான் இப்போதும்! முன்பு இராமனைப் போலவே இப்போது கிருஷ்ணனும் கைகொடுக்கவில்லை! 1971 வரலாறு இன்றும் 2019 இல் மீண்டும் திரும்பி, ஒரு இடம்கூட பூச்சாண்டிப் புல்லர்களுக்குக் கிடைக்காமல் தண்டித்தனர் தமிழ் மக்கள்! இனிமேலாவது ‘‘மனம் புண்பட்டது’’ என்ற போலிப் பிரச்சாரத்தை நம்பி நட்டாற்றில் இறங்கி மானம் இழக்காதீர்!
மதவாத சக்திகளுக்கு எதிராக சமுகநீதி – மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆளும் கூட்டணிக்கு எதிரான வலுவான கூட்டணியை அகில இந்திய அளவில் கட்டி, போராடவேண்டிய அவசியம் மேலும் தேவைப்படும் என்பதை மற்ற தலைவர்களும் உணரட்டும்!
மோடி பெற்ற இந்த வெற்றியைப்பற்றி சுப்ரமணியசாமி கூறும் கருத்து, ‘‘ஹிந்துத்துவாவுக்கு கிடைத்த வெற்றி’’ என்பதையும், அனைத்து முற்போக்குக் கருத்துள்ள கட்சிகளும், அதன் தலைவர்களும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, இனி செயல் திட்டங்களை வகுக்கவேண்டிய தருணம் இது.
தி.மு.க. தலைவர் தளபதியின் அயராப் பணிகள்
தி.மு.க.வின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஓய்வறியாத உழைப்பும், அரசியல் களத்தில் வெற்றி வாகை சூடிட கூட்டணி வியூகமும், அதனை வகுத்ததோடு, நெறிப்படுத்தியும், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே செயல்படுத்தி, தமிழ்நாட்டின் மக்கள் மத்தியில் அந்த உரிமைப் போர் முழக்கத்தை தணியாத முழக்கமாகவே ஆக்கி, தேர்தல் நேரத்தில் களப் பணியிலும், பிரச்சாரத்திலும் ஒப்பற்ற முறையில் செயலாற்றி, கூட்டணிக் கட்சிகளை தக்கபடி ஒருங்கிணைத்ததும் வெற்றிக்கான அடிப்படையாகும், பாராட்டுகள்!
திராவிடர் கழகத்தின் பங்களிப்பு
பதவி நாடா, கொள்கை லட்சியப் பாதுகாவல் அரணான தாய்க்கழகமாம் – திராவிடர் கழகம், தனது எளிய, இன்றியமையாக் கடமையை _ தஞ்சை மாநில மாநாடு போன்றவற்றையும், பல அறப்போர் உத்திகளையும் வகுத்து, தோழமையினருக்குத் தோள் கொடுத்து, வாளெடுக்க உதவியது என்பது மறுக்க முடியாதது அல்லவா?
இதுபோன்ற ஒரு ஒருங்கிணைப்பு, அணுகுமுறை இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இல்லையே!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை _ தமிழ்நாட்டு வெளிச்சத்தை, அகில இந்தியாவிற்கும் கொண்டு செல்ல போதிய அவகாசமும், முயற்சியும் கிட்டாதது ஓர் இழப்பாகும். வேளாண்மையில் ‘‘உழவாரப் பணிகள்’’ தொடர்ந்து நடைபெற்றாலொழிய, அறுவடையின்போது, களத்து மேட்டிற்கு நெற்குவியல் வந்து சேராதல்லவா? அதுபோல இந்த வகையில் எதிர்க்கட்சிகளின் போதிய செயல்பாடுகள் இல்லாமைதான் பா.ஜ.க.வின் எல்லை தாண்டிய, மோடி _ ஆர்.எஸ்.எஸ். வெற்றிக்கு முக்கிய காரணம்.
சமுகநீதிபற்றி சரியான தெளிவே வடக்கே _ ஏன் தெற்கில் உள்ள பிற மாநிலங்களில்கூட இல்லை.
வடக்கிலும் பெரியார் தேவை!
சமுகநீதி வரலாறு சொல்லிக் கொடுக்கப்படவேண்டும். இன்னும் சொல்லப்போனால், தந்தை பெரியார்தம் சமுக மாற்றத்திற்கான தத்துவம் வடமாநிலங்களுக்குத் தேவைப்படும் காலகட்டம் இது. 1951 இல் முதல் அரசியல் சட்டத் திருத்தம்மூலம் இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றிட அன்று தந்தை பெரியார் தலைமையில் எப்படி வழிகாட்டப்பட்டது போன்ற வரலாற்றுப் பாடங்கள் மீண்டும் தேவை. செய்வோம் நாம்!
உதாரணம், 10 சதவிகிதம் உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இட ஒதுக்கீடு என்ற அரசியல் சட்ட திருத்த வித்தை – எவ்வாறு மற்ற இட ஒதுக்கீட்டின் தத்துவத்தின் வேரையே வெட்டிச் சாய்ப்பது என்பதை காங்கிரசும் சரி, இடதுசாரிகளில் மார்க்சிஸ்டுகளும்கூட புரிந்துகொள்ளாமல், தலையாட்டல் போன்றவைகள் சரியானவையல்ல.
கல்வி மற்றும் மாநில உரிமைகள்பற்றி அடிப்படைத் தெளிவு தமிழ்நாட்டில் உள்ளதைப்போல் இல்லை. இனி வட இந்தியத் தலைவர்களும், இடதுசாரி தோழர்களும் மாறுபார்வையோடு அணுகவேண்டும்.
பா.ஜ.க.விடம் அடகுபோன அ.தி.மு.க.!
தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் பா.ஜ.க.விடம் அடகு வைக்கப்பட்ட அவலத்தினால் அவர்கள் இவ்வளவு அதிக விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.
மாயையில் மிதந்தார்கள்; ‘பலம் பொருந்திய கூட்டணி எங்கள் கூட்டணி’ என்று மார்தட்டினார்கள். விளைவு பல கூட்டணி கட்சிகள் காணாமல் போய்விட்டன! படுதோல்வியே மிஞ்சியது! நாம் ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியும், மூழ்கும் கப்பல் பா.ஜ.க. தமிழ்நாட்டில் _ அதில் ஏறினால் உள்ளதும் போகும் _ இதைப் புரிந்ததினால்தான் ஜெயலலிதாவே பா.ஜ.க.வை விருந்தோடு நிறுத்தினார்!
தி.மு.க. வெறும் அரசியல் கட்சியல்ல!
அறிஞர் அண்ணா அவர்கள் பலமுறை கூறி, மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரால் உறுதி செய்யப்பட்டபடி, தி.மு.க. பத்தோடு பதினொன்றான அரசியல் கட்சி அல்ல _ பகுத்தறிவுக் கொள்கை லட்சியத்தோடு செயல்பட வேண்டிய சமுகநீதிக் கோட்பாடுடைய இயக்கமாகும் என்பதை புரிந்து பயணங்கள் தொடரட்டும்!
– கி.வீரமணி,
ஆசிரியர்,