இயக்க வரலாறான தன் வரலாறு(222) : ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கு பாபு ஜெகஜீவன்ராம்!

மார்ச் 16-31 2019

அய்யாவின் அடிச்சுவட்டில் ……

கி. வீரமணி

31.05.1986 அன்று சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீது குண்டு வீசி சாகடித்துக் கொண்டிருக்கும்போது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் ‘முழு அடைப்பை’ நடத்துவது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், அதனை ஆதரித்து “கழகமும் சேர்ந்து முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வீர்’’ என தமிழக மக்களுக்கும் கழக குடும்பத்தினருக்கும் வேண்டுகோள் அறிக்கையை விடுத்தேன்.

இதற்காக நான் முன்கூட்டியே தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு முழு அடைப்பு ஆதரவு திரட்டி வந்தேன்.

இதனைத் தொடர்ந்து, ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் ஒரே அணியில் நிற்க வேண்டும் என்றும், முதல்வர் எம்.ஜி.ஆர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவைப் பாராட்டுகிறோம் என்று அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தேன்.

இதில் கட்சி கண்ணோட்டமும் அரசியல் கண்ணோட்டமும் பாராது ஒன்றாக இணைந்து நின்று முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.

இந்த நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினையில் டில்லி அரசின் முந்தைய முடிவுகளிலும் முற்றிலும் புதியதோர் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று கருதியே இந்த முழு அடைப்பு என்பதை பிரதமரும் அவரைச் சார்ந்தவரும் உணரச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

10.06.1986 அன்று திருச்சியில் கழகத்தின் சார்பில் நடைபெற்ற புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாடு, சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இறுதி தீர்மானம் கீழ்கண்ட தீர்மானம் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களின் முயற்சியில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ள புதிய கல்விக் கொள்கை என்பது, “எல்லோருக்கும் கல்வி’’ என்ற சமதர்ம தத்துவத்திற்கு முற்றிலும் விரோதமானதாகும்.

“தகுதி, திறமை’’ வாய்ந்த ஒரு சிலரை மேலும் அறிவாளியாக்கி மாடல் பள்ளி ‘நவோதயா’ பள்ளி என்ற ஒரு புதிய வர்ணாசிரமத்தை உண்டாக்கவும், கல்வித் துறையால் ஏற்கனவே பறிக்கப்பட்ட மாநிலங்களின் மிஞ்சியுள்ள உரிமைகளை மேலும் பறிமுதல் செய்வதாகவும் அதன் தேசிய கல்வித் திட்டம் (National Core Curriculam) என்ற பெயரால் பல்வேறு பெருமைக்குரிய கலாச்சாரங்களை ஒடுக்கவும், தேசியம் என்ற போர்வையில் டெல்லியின் ஆளும் வர்க்கத்தின கொத்தடிமைகளாகவே மற்ற மாநிலத்தவர்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவதற்காகவும் ‘மும்மொழித் திட்டம்’ என்ற பெயரில் இந்தியை மும்முரமாக இந்தி பேசாத மக்கள் மீது மறைமுகமாகத் திணிப்பதாகவும், பல கோடி, ஏழை, எளிய பாட்டாளி, கிராம, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட மக்களிடம் வரி, அதன் கணிசமான பகுதியை, உயர்ஜாதி வ-குப்பு, பணக்கார வர்க்கம் பயன்பெறும் வழிவகைகள் உள்ளதால், புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள இக்கல்விக் கொள்கை சமதர்ம விரோத, மக்கள் விரோதக் கொள்கை என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது. இதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

10 நாள்கள் அவகாசம் கொடுத்து அதனை மத்திய அரச திரும்பப் பெறவில்லையானால் போராட்டம் வெடிக்கும் என்று அதற்கு தெரிவித்து; அதன் முதல் கட்டமாக 21.06.1986 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள நமது மக்கள் அக்கல்விக் கொள்கை நகலை பொது இடங்களில் கூடிநின்று எரித்து நமது வெறுப்பினை மத்திய அரசுக்கு அமைதி வழியில் தெரிவிக்க வேண்டும் என இம்மாநாடு அனைவரையும் ஒருமித்த கருத்துடன் கேட்டுக்கொள்கிறது. இத்தகைய தீர்மானங்கள் நான் முன்மொழிந்தும் மாநாட்டில் திரண்டிருந்த மக்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்து வழிமொழிந்து கையொலி எழுப்பினார்கள். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு சிறப்பாக நடந்தது.

21.06.1986 அன்று புதிய கல்வித் திட்டத்தின் நகலை எரித்து இன்று சென்னையில் நான் கைது செய்யப்பட்டேன். என்னுடன் 121 போராட்ட வீரர்கள் கைதானார்கள். இவர்களில் 15 பேர் பெண்கள்.

14 நாட்களுக்குப் பிறகு 4.7.1986 நீதிமன்றத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும்,

தோழர்களும் விடுதலை ஆனபோது

 புதிய கல்வித் திட்டத்தின் நகல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று தமிழகம் முழுவதும் 10,000 கழக மாவீரர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் என்னையும் கழகத் தோழர்களையும் கைது செய்து 15 நாள் காவலில் சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டோம். 23.06.1986 அன்று என்னை தி.மு.க. தலைவர் கலைஞரும், சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.ஆர்.பாலு, எல்.கணேசன், ஆயிரம் விளக்கு உசேன் ஆகியோர் சிறையில் என்னை சந்தித்து உரையாடினார்கள். 27.06.1986 அன்று ஜனதா கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர்கள் கலிவரதன், வி.எஸ்.தளபதி, தஞ்சை மன்னர் மன்னன் மற்றும் சேலம் அ.பெ.நடேசன் ஆகியோரும் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் பழ.நெடுமாறன், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பி.ஆர்.குப்புசாமியும்  சிறையில் சந்தித்து உரையாடினார்கள்.

புதிய கல்விக் கொள்கை எரிப்பு

04.07.1986 அன்று என்னையும் கழகத் தோழர்களையும் சென்னை மத்திய சிறையிலிருந்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு (121 தோழர்கள்) சென்னை பெருநகர குற்றஇயல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

பாபுஜி மறைவுக்கு கழக சார்பில் சென்னை பெரியார் திடலில் நடந்த இரங்கல் கூட்ட மேடையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றுகிறார்.

மதியம் 1 மணி அளவில் நானும் 121 கழகத் தோழர்களும் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தோம். போராட்டத்தில் பங்கேற்று, சிறையில் 14 நாட்கள் இருந்து கழகக் கட்டுப்பாட்டைக் காத்த கழகத் தோழர்களுக்கும், சகோதரிகளுக்கும் போராட்ட அணித் தலைவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்தேன்.

06.07.1986 அன்று காலை ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து ‘விடுதலை’யின் முதல் பக்கத்தல் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தேன். பொதுவாழ்வில் முதிர்ந்த ஒரு ‘ஒளிவிளக்கு’ என பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மரணச் செய்தியை குறிப்பிட்டிருந்தேன்.

பாபு

ஜெகஜீவன்ராம்

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு தனிக்குரலாய் விளங்கிய ஒளி விளக்காம் ‘பாபு ஜெகஜீவன்ராம்’ அவர்கள் மறைவு உரிமை இழந்த மக்களையெல்லாம் அநாதை ஆக்கக்கூடிய பேரிழப்பாகும்.

புகழ்பூத்த பொது வாழ்க்கையாக எத்தனையோ தடைக்கற்களைத் தாண்டி அவரது 50 ஆண்டு காலத்திற்கும் மேற்பட்டு பொது வாழ்க்கை விளங்கியது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கோடானகோடி மக்கள் சோக வெள்ளத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அமைதியும் உறு-தியும் கொண்ட வரலாற்றுத் தலைவராகி விட்டார். நாடு இதன்மூலம் தலைவர் பஞ்சத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. ஜாதியற்ற, மனிதாபிமானமிக்க ஒரு புதிய சமுதாயத்தை அமைக்கும் அவரது பணியை நாம் தொடருவோம். அதுவே அவருக்கு நாம் காட்டும் உரிய இறுதி மரியாதையும் வீரவணக்கமும ஆகும்’’ என்று குறிப்பிட்டேன்.

சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. “திராவிட இயக்கத்தின் வடநாட்டு உற்ற நண்பரை இழந்துவிட்டோம்’’ என்று கலைஞர் அவர்கள் தனது இரங்கல் உரையில் குறிப்பிட்டார்கள். ஜெகஜீவன்ராம் பற்றி காங்கிரசின் தமிழகத் தலைவர் டாக்டர் ஜெய்னுதீன் பேசுகையில், “பிரிட்டிஷ்காரர்கள் நமக்குக் கொடுத்த சுதந்திரமே தவிர நாம் பெற்ற சுதந்திரம் அல்ல என்று பாபுஜி அவர்கள் குறிப்பிட்டார்கள்.’’ இரங்கல் கூட்டத்தில் பல்வேறு கட்சிளை சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.

09.07.1986 அன்று ஈழத் தமிழருக்காக திருச்சியில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் நானும், மதுரை ஆதினகர்த்தர் மற்றும் கழகத் தோழர்களும் பேசினோம்.

இக்கூட்டத்தில் தமிழின உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதினம் மீது இ.பி.கோ.505(பி) மற்றும் (சி), இந்திய ஆயுதச் சட்டம் 25(1)(ஏ) பிரிவுகளின் கீழ் பொது நிம்மதியைக் கலைத்ததாகவும் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டியதாகவும், சட்ட விரோதமாக துப்பாக்கியை ஆதினகர்த்தர் கூட்டத்தினரிடையே காட்டியதாகவும் திருச்சி முதல் வகுப்பு ஜீடிசியல் மே-ஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் மதுரை ஆதினகர்த்தரை நீதிமன்றத்தில் நிறுத்த அ.தி.மு.க. அரசு முயற்சி செய்தது. ஆனால், நீதிபதியோ ஆதினகர்த்தர் நீதிமன்றம் வரத் தேவையில்லை. அவர் வழக்கறிஞரே வாதாடலாம் எனக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 205ஆவது பிரிவின்கீழ் தீர்ப்பு அளித்தார்.

மதுரை ஆதினம்

ஆனால் அரசோ, ஆதினகர்த்தர் நீதிமன்றத்திற்கு வந்தே தீர வேண்டுமென மாவட்ட அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, திராவிடர் கழகமே முன்னின்று இவ்வழக்கை நடத்தும் என்று நான் அறிவித்து இதற்காக வழக்கு நிதியும் கழகத்தின் சார்பில் நிதியும் திரட்டினோம். என் தலைமையில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்ற ஊர்வலமும் திருச்சியில் எழுச்சிமயமாக நடந்தது. 07.06.1986 அன்று மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராமசாமி _ மதுரை ஆதினகர்த்தர் நீதிமன்றம் வரவேண்டியதில்லை என்று கூறிய முந்தைய நீதிமன்ற தீர்ப்பை சபை உறுதி செய்து அரசு மனுவைத் தள்ளுபடி செய்தது. இப்படிப்பட்ட அ.தி.மு.க.வினர் இன்றைக்கு ஈழத்தமிழர் ஆதரவாளர்களாக நடிக்கிறார்கள்.

17.07.1986 அன்று அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள இல்லினாஸ் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்துவது குறித்து கருத்தரங்கில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினேன். (Seminar on Genocide of Tamil in Sri Lanka) சுமார் முப்பந்தைந்து நிமிட நேரம் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினேன். அப்போது, “தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு’’ என்று வலியுறுத்தி உரையாற்றினேன்.

வாஷிங்டனில் இருந்து வெளிவரக்கூடிய தமிழ் மாத இதழான ‘குமரி’ ஏட்டின் நிர்வாக இயக்குநர் நாஞ்சில் எம்.எம்.ராஜ் அவர்கள் தலைமையில் வாஷிங்டன் ஏரியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 18.07.1986 அன்று இலங்கை தமிழர்கள் நிலைகுறித்து அரியதோர் உரையினை நிகழ்த்தினேன். ஏராளமான தமிழ்க் குடும்பங்களை சார்ந்தவர்களும், தாய்மார்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

The “ALTON TELEGRAPH” dt: 23.7.1986

23.07.1986 அன்று அமெரிக்காவின் பிரபல ஏடுகளான ‘Alton Citizen Journal’ Alton Telegraph (ஆல்டன் டெலிகிராப்)  St.Louis Post Despatch (செயிண்ட் லூயிஸ் டெஸ்பாட்ஜ்) ஆகியவைகளுக்கு என்னை பேட்டி கண்டு, அதன் முக்கியத்துவத்தை தந்து வெளியிட்டது.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நான் நிகழ்த்திய பேருரையை செவிமடுத்து அங்கு வாழ் தமிழர்கள் கரவொலி எழுப்பிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இவ்வுரையின்போது என் மீது அன்பு கொண்ட மூதாட்டி ‘மாம்’ என்று அழைக்கப்பட்ட திருமதி வர்னீயா கர்ஷனர் அவர்களும் மற்றும் ராம்மோகன், பிரகலாதன் முதலானோரும் உடன் இருந்தனர். மேலும் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி அமெரிக்க வானொலிக்கு நான் பேட்டி அளித்தேன். 25.07.1986 அன்று டொராண்டோவிலும், 26.07.1986 அன்று மாண்ட்ரிலிலும் உரையாற்றினேன்.

26.07.1986 அன்று கனடாவின் மெகில் யுனிவர்சிட்டி ஆடிடோரியத்தில் இரவு ஏழு மணி அளவில் பொறியாளர் ராஜகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்புரை ஆற்றினேன்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆற்றிய உரை எழுச்சியை உருவாக்கியதாயும்; தமிழர்களை மட்டுமன்றி உலகத் தமிழர் நிலை மற்றும் ஈழத்தமிழர் நிலையையும் கண்முன் காட்டியது போன்று இருந்ததாகவும் தமிழர்கள் தெரிவித்தனர்.

சிங்களத் தோழரான செல்வ செனகரத்தன தலைமை தாங்கிய நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரையை தமிழர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 28.06.1986 அன்று புறப்பட்டுச் சென்று 30.06.1986 அன்று அங்கிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தேன்.

15, 16.08.1986 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநாடு எழுச்சியும், லட்சிய முழக்கங்களும் நிறைந்த புதுமை மாநாடு என்று கூறவேண்டும். முதல் நாள் பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடும், இரண்டாம் நாள் திராவிடர் கழக இளைஞரணி _ மாணவரணி மாநில மாநாடும் நடைபெற்றது.

மாநாட்டில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நான் உரையாற்றும்போது, மொழி திணிப்பதையும், டெல்லி ஆட்சி “ஜெயவர்த்தனாக்களாக’’ மாற முயற்சித்ததால், தமிழ்நாட்டிலும் ‘விடுதலைப் புலிகள்’ உருவாவதை எவராலும் தடுக்க முடியாது என்றும், ஏழை _ எளியோரைச் சுரண்டும் புதிய கல்வி முறையை மாணவ _ மாணவியர்களிடம் விலக்கவே ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்நாடு  முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் எடுத்துரைத்தேன்.

21.08.1986 அன்று திருவாரூரை அடுத்த அலிவலம் எனும் ஊரைச் சார்ந்தவர் ரவிசங்கர் எனும் பார்ப்பனர். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருப்பவர். தமிழ்நாடு ‘பிராமணர்’ சங்கம் திருவாரூர் கிளையிலும் தீவிர உறுப்பினராக இருப்பவர்.

இந்தப் பார்ப்பனர், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்து மொட்டைக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய பெயர், இருப்பிடத்தை அவர் குறிப்பிடவில்லை. தன்னை அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு கடிதத்தை திருவாரூரிலிருந்தும், மற்றொரு கடிதத்தை மயிலாடுதுறையிலிருந்தும் அவர் அஞ்சல் செய்திருக்கிறார். அதில்,

“வீரமணியே! உனக்கு தைரியம் இருந்தால் திருவிழா, விசேஷ பூஜை, தேரோட்டம், தெப்பம் மற்றும் கும்பாபிஷேகம் நடக்கும்போது நேருக்கு நேர் எதிராக வந்து, தொண்டர்களுக்கு தலைமை தாங்கி எதிர்த்து நில் பார்ப்போம்! அன்று நீ சமாதி! நீ இந்து மத சகோதரர்களை ‘பிராமணர்’களைத் தாக்கினால்  உன்னைத் தாம் தாக்கப் போவதில்லை; தூக்கப் போகிறோம் சமாதிக்கு. உன் தலைமைப் பொறுப்பையும், உன் நடவடிக்கையையும் நீயாகவே மாற்றிக்கொண்டு, திராவிடர் கழகத்தை விட்டு ஒதுங்கி நின்று செயல்படு. திருவாரூர் தங்கராசு பார்ட்டி போல ஒதுங்கி விடு. அதுவரை உன்மீது எமது தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். பயப்படாதே! உன் உயிர் உடனே போய்விடாது. எமது இயக்கத்தைத் தடை செய்யும் கோஷத்தை எழுப்பாத வரையில் உமக்கு பாதுகாப்பு; மீறி நீ அதைச் செய்தால் உன் எதிர்கால வாழ்வு பாழாகும். நாங்கள் கொரில்லா முறையில் இனி உன்னையும், உன் ஆட்டு மந்தைக் கூட்டத்தையும் தாக்கப் போகிறோம்’’ என்று அந்த மிரட்டல் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் கடிதங்களை நான் போலிஸ் அலுவலகத்தில் தந்து புகார் செய்தேன். அதைத் தொடர்ந்து மாநில குற்றப் பிரிவு ரகசிய போலிஸ் அய்.ஜி.ராஜசேகரன் உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கே.ராஜதுரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கொலைமிரட்டல் கடிதங்களை எழுதியது புலிவலத்தைச் சார்ந்த ரவிசங்கர் என்ற பார்ப்பனர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரவிசங்கர் எனும் பார்ப்பனர்.ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருப்பவர். எனக்குக் கொலை மிரட்டல் விடுத்து மொட்டைக் கடிதம் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரவிசங்கர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நான் நீதிமன்றம் வந்து நேரில் சாட்சியமளித்தேன். வழக்கை விசாரித்த மாஜிஸ்ரேட் ஆர்.முருகேசன் குற்றம் சாட்டப்பட்ட ரவிசங்கருக்கு ஒன்றேகால் வருஷம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ரவிசங்கர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

செஷன்ஸ் கோர்ட்டுக்கு இந்த வழக்கை அப்பீல் செய்திருப்பதால் _ தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். ரவிசங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். இது கழகத்தின் ஓய்வு ஒழிவற்ற செயல்பாடுகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

(நினைவுகள் நீளும்….)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *