(தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்குப்பின்
அன்னை மணியம்மையார் அவர்கள்
எழுதிய தலையங்க அறிக்கை)
என்றுமே ஈடு செய்யமுடியாத இழப்புக்கு ஆளாகி விட்டோம்.
இத்தகைய விபத்து நம் வாழ்வில் வந்து விழுந்துவிடும் என்று நினைக்கக்கூட முடியாத அவ்வளவு சடுதியில் அய்யா அவர்கள் மறைந்துவிட்டார்கள்.
நாம் அனைவரும் நொந்த இதயத்திலே வேதனையைத் தாங்கி தளர்ந்து நிற்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் கூறிட முடியும்?
ஆறுதலாலும், தேறுதலாலும் நம் உள்ளந்தான் அமைதியடைந்திடுமா? அடையாது! அடையாது!!
அவர் விட்டுச் சென்ற பணியினை அவர் போட்டுத் தந்திருக்கிற பாதையிலே வழிநடந்து முடிக்கிறவரையிலே மன அமைதி நமக்கேது?
அந்தப் பணியினை ஆற்றிட அருமைத் தோழர்களே அணிவகுத்து நில்லுங்கள். அய்யா அவர்களின் இலட்சியத்தை ஈடேற்றியே தீருவோம் என்ற உறுதியினை, சங்கல்பத்தினை இன்று எடுத்துக் கொள்வோம்.
என்னைப் பொறுத்தவரையில் வினா தெரிந்த காலத்திலே இருந்து என் வாழ்வினையே அவர் தொண்டுக்கென அமைத்துக் கொண்டுவிட்டவள்.
எனது துடிப்பினை இதோ நிறுத்திக் கொள்கிறேன்!! என்று எனது இருதயம் சதா எச்சரித்துக்கொண்டே படுக்கையிலே என்னைக் கிடத்திவிட்ட போதிலும்கூட, அய்யா அவர்களின் தூய தொண்டுக்கென அமைத்துக்கொண்ட என் வாழ்வினை, என் இறுதிமூச்சு அடங்கும் வரையிலே அந்தப் பணிக்கே செலவிடுவேன் என்ற உறுதியினை உங்களுக்கு அறிவித்துக் கொள்கின்றேன்.
இனி, மேலாக நடக்க வேண்டியதை நாம் அனைவரும் விரைவில் ஓர் இடத்தில்கூடி அய்யா அவர்கள் விட்டுச்சென்ற பணியினைத் தொடர முடிவெடுப்போம்.
கண் கலங்கி நிற்கும் கழகத் தோழர்களே! கட்டுப்பாட்டோடு கழகக் கொடியின் கீழ் அணிவகுத்து ஏற்றுக்கொண்ட பணியினை நடத்திட துணைபுரிந்திட கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் கே. இராமச்சந்திரா, டாக்டர் பட், டாக்டர் ஜான்சன் ஆகியவர்களுக்கும் அவர்களுடன் பாடுபட்ட இதர பல டாக்டர்களுக்கும் எப்படி நன்றி எழுதுவதோ தெரியவில்லை!
மதிப்பிற்குரிய அண்ணா அவர்கள், இந்த அமைச்சரவையையே அய்யா அவர்களுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்று சொன்ன மொழிப்படி அவருடைய தம்பி டாக்டர் கலைஞர் அவர்களும் மற்ற அமைச்சர் பெருமக்களும் அய்யா அவர்களிடம் தங்களுக்கிருந்த தேயாத பற்றை, பாசத்தைக் கொட்டிக் காட்டினார்கள். அரசாங்க மரியாதையுடன் அய்யா அவர்களின் உடலை அடக்கம் செய்து அய்யா அவர்களையும், நம்மையும் பெருமைப்படுத்திய டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கழகத்தின் சார்பில் எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
நாடு முழுவதுமிருந்து அய்யா அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நமது துக்கத்தில் பங்கேற்றவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் வழங்கிய பல லட்சம் மக்களுக்கும் கழகத்தின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
– ‘விடுதலை’ – 27.12.1973