நூல் : கருஞ்சட்டைப் பெண்கள்
ஆசிரியர் : ஓவியா
வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-87.
விலை: 130. பக்கங்கள்: 176
“பொதுவாக அன்றைய கருஞ்சட்டைப் பெண்கள் அனைவருமே சமூகத்தின் அவமதிப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள்தான். ஆனால், எவரும் ஏற்றிராத பழியேற்று தியாகத்தீயில் தன்னையே எரித்துக்கொண்ட தலைவர் அன்னை மணியம்மையார்.
மணியம்மையார் அளவுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பலையை, வசவுச் சொற்களை, அபவாதத்தைச் சந்தித்த வேறு ஒரு பெண் தலைவர் திராவிடர் இயக்கத்தில் மட்டுமன்று, வேறு எந்த இயக்கத்திலாவது இருக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இல்லையென்றே சொல்லலாம்.
மிகச் சிறு வயதிலேயே தன்னை இயக்கப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர். மணியம்மையாரின் குடும்பம் நடுத்தர வசதி கொண்ட குடும்பம். ஏழ்மை நிலையில் இருந்த குடும்பம் கிடையாது. மணியம்மையார் நன்கு படிக்கக்கூடிய மாணவி. அவர் பள்ளிக் கல்வி முடித்து ஆசிரியர் பயிற்சித் தேர்வு எழுதுவதற்காக மதுரை செல்கிறார். மதுரையில் தேர்வு மய்யத்தை நோக்கி அவர் நடந்து கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்த அவருடைய உறவினர் ஒருவர், இந்தப் பெண் வீட்டில் சொல்லாமல் வெளியூருக்கு வந்துவிட்டது போலும் என்று கருதி, அவரைப் பிடித்துக்கொண்டு போய்க் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். காவல்துறை அதிகாரிகளிடம் அம்மையார், தன்னுடைய தேர்வு நடைபெறும் அரங்கினுடைய நுழைவுச் சீட்டைக் காண்பித்தவுடன், அவர்கள் அவரைத் தேர்வு எழுதச் செல்ல அனுமதிக்கிறார்கள். ஆனால், காலதாமதமாகி விட்டதால் தேர்வு அரங்கிற்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறாக முடிந்துபோனது மணியம்மையாரின் கல்வி.
அவதூறுப் பிரச்சாரம்:
பெண்ணுரிமைக்காக இவ்வளவு பெரிய களங்களைக் கண்ட திராவிடர் இயக்கத்தை, பெண்களுக்கு எதிரான இயக்கமாகச் சித்தரித்து, மடைமாற்றம் செய்வதற்கு இந்தச் சமுதாயம் எவ்வளவு முயற்சிகளைச் செய்தது. நாங்கள் எங்கு சென்றாலும் எங்களை நோக்கிக் வைக்கப்படுகின்ற கேள்வி, ‘ஏன் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு மூன்று திருமணங்கள் செய்து கொள்கிறார்கள்’ என்பது. இன்னும் ஒரு படி மேலே போய் வடநாட்டில் எல்லாம் இப்படி நடப்பதில்லை என்றும் எங்களிடம் சொன்னவர்கள் உண்டு. ஒருமுறை நான்கூட திருப்பிக் கேட்டேன். ‘ஒரு மனைவி என்று சொல்கிறீர்களே, அவர்கள் ஒரு பெண்ணோடு மட்டும்தான் வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?’ என்று. என்னிடம் கேள்வி கேட்டவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதை இந்த இடத்தில் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு ஆணின் பலதார மணத்தை ஏற்றுக்கொள்வதற்காக அல்ல, மாறாகப் பெண்களை ஆணுக்கான போகப் பொருளாகப் பார்க்கின்ற ஒரு சமூகத்தில், இந்த நடைமுறை இடத்திற்கு இடம் வடிவத்தில் வேண்டுமானால் மாறுபட்டு இருக்கலாமே ஒழிய, ஏதோ திராவிடர் இயக்கத்தவர்க்கு மட்டும் உரித்தான ஒன்ற என்று சொல்வது திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரம் இல்லையா? உண்மையான சமூக நடைமுறைகளை மறைப்பது இல்லையா?
ஆனால், இதை வைத்துத் திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது, தொடர்ந்து ஒரு தாக்குதலாக இந்த இயக்கத்தின் மீது வைக்கப்படுகிறது. 90களின் காலகட்டத்தில் நான் மேற்குறிப்பிட்டிருப்பது போல் முக்கியமாக, இந்தப் பெண்ணுரிமை இயக்கங்களில், பெரியாருடைய பெயரையே எடுக்க விடாமல் இருப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் ஒன்றாகப் பெரியார் மணியம்மையார் திருமணம் இருந்தது. இன்றும் கூடக் கேட்கிறார்கள். ‘அது எப்படி வயதானவர் கல்யாணம் செய்து கொள்ளலாம்?’ ஆனால் இப்பொழுது பெண்ணியத்தை மிக ஆழமாகப் பேச ஆரம்பித்து, ‘அப்படியா அப்படிப் கல்யாணம் செய்து கொண்டால் பெண்ணிய அடிப்படையில் எந்த வகையில் தவறு என்று நீங்கள் எங்களுக்கு விளக்கினால், அதற்குப் பிறகு நாங்கள் பதில் சொல்கிறோம்’ என்று சொல்ல ஆரம்பித்த பிறகுதான், நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆக, பெரியார் மணியம்மையார் கல்யாணத்தை வைத்துச் செய்யப்பட்ட ஒரு மிகப் பெரிய பிரச்சாரத்தினுடைய நெடி இன்றுவரை நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், அந்தக் காலகட்டத்தில், அது அய்யாவாக இருக்கட்டும், அம்மாவாக இருக்கட்டும், அதை எந்த அளவுக்கு அவர்கள் எதிர்கொண்டிருப்பார்கள், எந்த அளவிலான மிகப்பெரிய வேதனை அவர்களைச் சூழ்ந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்துதான் இந்த விசயத்தை நாம் தொடங்க வேண்டியிருக்கிறது. அம்மா இறந்தபோது, ஒரு கவிஞர் எழுதினார், ‘உடலுக்குத்தான் காதல் என்றால், மடியட்டும் காதல்’ என்று, கொள்கைக்கே மாலையிட்டு, எங்களை பிள்ளையாக்கிக் கொண்ட அம்மாவே’ என்று. இந்த வரிகளே அவரது வாழ்கையைச் சொல்பவை.
மணியம்மையார் அளவுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பலையை, வசவுச் சொற்களை, அபவாதத்தைச் சந்தித்த வேறு ஒரு பெண் தலைவர் திராவிடர் இயக்கத்தில் மட்டுமன்று, வேறு எந்த இயக்கத்திலாவது இருக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இல்லையென்றே சொல்லலாம்.
கொள்கை வழித்தடத்தில்:
மணியம்மையார் என்ற பெயரைக் கேட்டவுடன் பெரியாரைத் திருமணம் செய்தபின்னான மணியம்மையார் அவர்களைத்தான் நாம் சிந்திக்கத் தலைப்படுகிறோம். பெரியாரின் துணைவியார் என்றும், பெரியார் அவர்களுக்குப் பின் இயக்கத்தை வழிநடத்தியவர் என்ற கோணத்திலும் மட்டுமே பார்க்கிறோம். ஆனால், பெரியாரைத் திருமணம் செய்வதற்கு முன் அவர் எத்தகைய பணிகளை மேற்கொண்டார் என்று பார்ப்பது பல விதங்களிலும் ஆழ்ந்து நோக்கத்தக்க விசயம். எங்களை எல்லாம் வாரிசாகப் பெரியாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா என்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் கூடக் கேட்டார்கள் என்பதைப் பார்க்கு-ம்போது, பெரியார் எதற்காக மணியம்மையாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதில் மணியம்மையார் அவர்களின் திருமணத்திற்கு முன்பான பொது வாழ்க்கையில்தான் இருக்கிறது.
சமூகத்தில் பொது வாழ்க்கை என்பது பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று அன்று. ஒரு பெண் மனைவியாவதும், தாயாவதும் இயற்கையாக அமையும் விசயங்கள். அதற்காக அவர் பெரிதும் மெனக்கெடத் தேவையில்லை. நம் சமூகத்தில் பெண்ணாகப் பிறந்தாலே இவை பெரும்பாலும் அமைந்துவிடும். ஆனால், ஒரு பெண் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பது என்பது இயற்கையாக அமைவது இல்லை. அதனால்தான், பொது வாழ்க்கைக்கு வந்த பெண்கள் அனைவரும் இங்கு பெரிய பிம்பங்களாக உருவெடுக்கிறார்கள். ஏனெனில், அதற்குப் பிறகு அவர்களுக்குச் சாதாரண வாழ்க்கை என்பது கிடையாது. இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இது பொருந்தும்.
ஆனால், அன்னை மணியம்மையாரின் வாழ்க்கையை நோக்கும்போது, அவர் ஏழ்மையின் காரணமாக இயக்கத்தில் சேர்ந்தவர் அல்லர் என்பதைப் பார்க்கலாம். அவர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கஷ்டம் என்று எதுவும் கிடையாது. தனது வாழ்வாதாரத்திற்காக இயக்கத்தில் இணைந்தவர் இல்லை. அவருடைய தந்தையும் தாயும் இந்தக் கொள்கையின்பால் ஈர்ப்புடையவர்களாக இருக்கிறார்கள். அதன்வழியேதான் மணியம்மையாருக்கும் இந்தக் கொள்கை அறிமுகமாகிறது. பெண்களைப் பொது வெளிக்கு அழைத்து வந்ததில் திராவிடர் கழகத்தின் பங்கு மிகவும் தனித்துவமானது. குடும்பத்தினருடன் கூட்டங்களுக்கு வர வேண்டும் என்பதை வாழ்க்கை முறையாகப் பெரியார் வலியுறுத்தினார்.
ஏனெனில், வெறும் முழக்கங்களை வைத்த தலைவர் அல்லர் பெரியார். வாழ்க்கை நெறிகளை முன்வைத்தவர். நம் வீட்டுப் பெண்கள் இவ்வாறாக இருக்கவேண்டும். நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என ஒரு தகப்பனைப் போல இயக்கத்தவருக்கு வழிகாட்டியவர் பெரியார். கழகக் குடும்பத்தில் பிறந்த காரணத்தால் அப்படிக் கூட்டங்களில் பங்கெடுத்தவர் மணியம்மையார். 10ஆம் வகுப்புப் பயின்றவரான அவர், பெரியாரின் பேச்சுகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொள்கிறார். பெரியாரைத் திருமணம் செய்து கொள்வதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் தன்னை இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார். பெரியாரோடு இணைந்து பயணிக்கத் தொடங்குகிறார்.
எழுத்தாளர்:
‘குடிஅரசு’ இதழிலே எழுதக்கூடிய எழுத்தாளராக அவர் இயக்கத்தவர்களுக்கு அறிமுகமாகிறார். அவரின் இயற்பெயர் காந்திமதி. கே.காந்திமதி, கே.மணி உள்ளிட்ட சில பெயர்களிலும் அவர் கட்டுரைகள் எழுதினார். பேச்சாளராகவும் வலம் வந்தார். மத எதிர்ப்பு உள்ளிட்ட திராவிடர் கழகத்தின் மய்யமாக இருந்த பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அன்றைய காலகட்டத்தில் சுயமரியாதைக் கருத்துகளை வெளியிட்ட எழுத்தாளர்களின் தர்க்க ரீதியான கட்டுரைகளைப் போல மணியம்மையாரின் மத எதிர்ப்புக் கட்டுரைகள் வீச்சுடன் அமைந்திருப்பதை நாம் பார்க்கலாம்.
திருமணம், வீடு பற்றிய பார்வை:
திருமணம் குறித்து இளவயது மணியம்மையாருக்கு இருந்த கருத்துகளாக நாம் அறிந்துகொள்வது யாதெனில், ‘கல்வி கற்ற பெண்கள் சமையல் வேலைக்குப் போகக் கூடாது. சமையல் வேலைக்கும் குடும்ப நிர்வாகத்திற்கும் என்று படித்த பெண்களைப் பயன்படுத்த பெற்றோர்கள் கல்யாணம் செய்வார்களேயானால், கண்டிப்பாகப் படித்த பெண்கள் கல்யாணத்தை மறுத்துவிட வேண்டும். பெற்றோர்கள் கட்டாயப்படுத்தினால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்’ என 1944இல் மணியம்மையார் எழுதுகிறார். அவர் மேலும் தொடர்கிறார், ‘நாம் படிப்பது நல்ல அடிமையாகவா அல்லது மேன்மையும் விடுதலையும் பெறவா? இதற்கு மாதர் சங்கங்கள் பாடுபட வேண்டும்.’
தனது 30 வயது வரை திருமணத்தை மறுத்த பெண்ணாக வீட்டில் இருந்திருக்கிறார் மணியம்மையார். கொள்கை மீது கொண்ட பற்று தவிர வேறு காரணம் இதற்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் திருமணப் பேச்சுகள் இருந்தால்கூட, இவரின் சிந்தனை அதற்கு மாறாக இருந்திருக்கிறது. சுதந்திர வாழ்வை விரும்பும் பெண்கள் திருமண வாழ்வைத் தேர்ந்தெடுக்க முடியுமா என்பது இன்றைய காலகட்டத்தில்கூட மிகப்பெரிய கேள்விக்குறி. இரண்டும் ஒருசேரக் கிடைக்குமா?- கிடைத்தாலும் முழுமையானதாக இருக்குமா? என்னும் கேள்விகளுக்கு இன்றுகூட விடை கிடைப்பது சுலபம் அல்ல.
தன் விடுதலையின் மீது கொண்ட பற்றால், திருமணம் செய்துகொண்டு ஒருவருக்கு அடிமையாக வாழ வேண்டாம் என்னும் உரிமை உணர்வு பெற்றப் பெண்ணாக அவர் இருந்திருக்கிறார் என்பதை அவரது பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்கிறோம். இவ்வளவு தெளிவான பெண்ணைத்தான் தந்தை பெரியார் அவர்கள் தனது சொத்தின் வாரிசு என பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவரைச் சட்டப்பூர்வ வாரிசாகத் திருமணம் செய்து கொள்ள பெரியார் முடிவெடுத்தபோது, மணியம்மையாரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்வதாகவும், தவறான நோக்கத்தோடு திருமணம் செய்வதாகவும் காரணங்கள் சொல்லப்பட்டன; பிரச்சாரம் செய்யப்பட்டது; அரசியல் மாற்றங்களுக்கும் அந்தக் காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
திருமணத்திற்கு முன் இயக்கப் பணி:
பெரியார் மணியம்மையார் திருமணம் 1949இல் நடக்கிறது. ஆனால், 1942லேயே மணியம்மையார் இயக்கப் பணிக்கென்று முழுமையாக வந்துவிடுகிறார். அப்போதிருந்தே அவர், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் தான் இருந்திருக்கிறார். ஒரு எழுத்தாளராக அவர் எழுதிய எழுத்துகள் ‘குடிஅரசிலும்’, ‘விடுதலை’யிலும் இடம் பெற்றிருக்கின்றன. ஒரு பேச்சாளராகப் பல கூட்டங்களில் அய்யாவோடு பேசிய அனுபவமும் அவருக்கு இருக்கின்றது.
திருமணத்திற்கு முன்பு பெரியார் சார்பாக மணியம்மையார் எழுதிய ஒரு விசயம் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அச்சமயம், அய்யாவுக்கு மிகவும் உடம்பு முடியவில்லை. இயக்கத்திற்கு வேலை செய்வதற்குப் பெண்கள் வேண்டும் என்று அய்யா நினைக்கிறார்கள். ‘அதனால் நிறைய பெண்கள் தயவு செய்து முன்வாருங்கள், பெரியார் பெண்களாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறார். இந்த வேலைகளை எல்லாம் பார்ப்பதற்கு இன்னும் ஒரு பத்துப் பேராவது எங்களோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டு’, குறிப்பாகப் பெண்கள் வேண்டும் என்றொரு செய்தியை, பெரியார் சார்பில் அவர் வெளியிடுகிறார். இந்த இயக்கத்தை நடத்திச் செல்வதில் பெண்கள் மீது பெரியாருக்கு எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.
பெண்கள் முன்வர வேண்டும்:
1943 ‘குடிஅரசு’ ஏட்டில் வேலூர் அ.மணி என்கின்ற தன்னுடைய பெயரில், மணியம்மையார் இப்படி எழுதுகிறார்கள்.
‘பெரியாருடன், ஈரோட்டிலும், குற்றாலத்திலும் ஒரு மாத காலம் இருந்தேன். அவர் உடல்நிலை மிக பலவீனமாகவும், நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின் இயக்கக் காரியங்களைப் பார்க்கத் தகுந்த முழு மாத காலமும், முழு கொள்கைக்காரர்களும் கிடைப்பார்களா, என்கின்ற கவலையிலேயே இருக்கிறார். இயக்கத்திற்காக என்று தன் கைவசம் இருக்கும் சொத்துகளை என்ன செய்வது என்பது, அவருக்கு மற்றொரு பெருங்கவலையாக இருப்பதைக் கண்டேன். அதோடு இயக்கத்திற்கு வேலை செய்யச் சில பெண்கள் வேண்டுமென்று அதிக ஆசைப்படுகிறார். அப்பெண்களுக்கு ஜீவனத்திற்கு ஏதாவது வழிசெய்துவிட்டுப் போகவும் இஷ்டப்படுகிறார். இந்தப்படி பெரியாரை நான் ஒரு மாத காலமாக, ஒரு பெருங்கவலை உருவாகவே கண்டேன். அவர் நோய் வளர அவை எரு போலவும் தண்ணீர்ப் பாய்ச்சுவது போலவும் இருக்கிறது. நான் ஒரு பெண் என்ன செய்ய முடியும்? இன்னும் சில பெண்கள் முன்வர வேண்டும். அவர்கள் பாமர மக்களால் கருதப்படும் மானம், ஈனம், ஊரார் பழிப்பு யாவற்றையும் துறந்த, நல்ல கல்லுப் போன்ற உறுதியான மனதுடைய நாணயவாதிகளாகவும் இருக்க வேண்டும். அவர்களது முதல் வேலை, பெரியாரைப் பேணுதலும், பெரியார் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று, இயக்க மக்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டியதும், இயக்கப் புத்தகங்களைப் படிக்கவும், எழுதவும், நன்றாகப் பேசவும் தெரிந்துகொள்ளவும் வேண்டும். வீடுகள் தோறும் இயக்கப் புத்தகங்களும், ‘குடிஅரசு’ம் இருக்கும்படியாகவும் செய்து, அவற்றை நடத்தும் சக்தி பெற வேண்டும். இந்நிலையில் சுயமரியாதை இயக்கம் இருக்கிறது. பெண் மக்களே யோசியுங்கள்.’
இப்படி ஒரு வேண்டுகோள் பெண்களுக்கு வேறு எந்த இயக்கத்திலிருந்தாவது வைக்கப்பட்டிருக்கிறதா? அதாவது, பெண்களுக்கான வெளியை எந்தளவுக்குத் திராவிட இயக்கம் உறுதி செய்திருக்கிறது! பெரியார் நிறைய இடங்களில் பேசும்போது சொல்வார், ‘பெண்களுக்கான ஒரு விடுதலையை நாம் பெற முடியவில்லை என்று சொன்னால், நாம் நம் லட்சியத்திலே ஒரு நாளும் ஈடேற முடியாது’ என்பார். இயக்கத்திற்குப் பெண் தொண்டர்கள் தேவை, தொண்டர்கள் என்று சொல்லும்போதே அவர்கள் தலைவர்களாக வருவதற்கான தகுதிகளைத்தான் அவர் பட்டியலிடுகிறார். இப்படியாக ஓர் அறிவிப்பைக் கொடுத்து, இப்படிப்பட்டப் பெண்கள், இந்த இயக்கத்திற்குத் தேவைப்படுகிறார்கள் என்று பெரியார் கருதுகிறார் என்பதை ஓர் அறிவிப்பாக மணியம்மையார் என்கின்ற ஒரு பெண்ணைத் தவிர, வேறு எந்த ஆணாவது எழுத முடிந்திருக்கும் என்று நீங்கள் யாராவது நினைக்கிறீர்களா? நிச்சயமாக முடியாது. ஒரு பெண்ணால்தான், பெண்கள்தான் வரவேண்டும் என்கின்ற இந்த அறிவிப்பைக் கொடுத்திருக்க முடியும். பெண்ணாக இருக்கின்ற காரணத்தால்தான் பெண்களுடைய தேவையை இந்த அளவுக்கு முன்வைக்கிறார் என்பதை உணர முடிகிறது.
சுற்றுப் பயணத்தில் பெரியாருடன்:
1944இல் பெரியாருடன் வடநாட்டுச் சுற்றுப் பயணம் செல்கிறார். இந்தப் பயணத்தில், எம்.என்.ராய் அவர்கள், ‘என்னுடைய நாத்திக குருவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று சொல்லி, பெரியாரை வரவேற்றார்கள். திருமணத்திற்கு முன்பாகவே ‘பொன்னி’ என்கிற ஏட்டில் மணியம்மையார் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அந்தக் கட்டுரை என்ன சொல்கிறது என்றால், அவருடைய வீரத்தைப் பற்றியும், துணிச்சலைப் பற்றியும், எழுத்து பற்றியும் விவரிக்கிறது. எனவே, பெரியாரைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே திராவிடர் இயக்கத்தின் ஓர்ஆளுமையாக மணியம்மையார் உருவெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பொன்னி’ ஏடு என்பது அன்றைய காலகட்டத்தில் ஒரு வெகுஜன ஏடாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் முழுமையாக இயக்கப் பணிகளுக்குத் தன்னை ஒப்படைத்த மணியம்மையார், ‘விடுதலை’ பத்திரிகையின் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். எழுத்தாளராகவும், உரை வீச்சாளராகவும் தன்னுடைய பங்களிப்பைத் தொடர்கிறார். அனைத்துப் போராட்டங்களிலும் பங்கு பெறுகிறார்.
திருமணத்திற்கு முன்பே, ‘குடிஅரசில்’ எழுதியவர், ‘விடுதலை’யில் பொறுப்பேற்றவர், இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்ற முழுமையான இயக்கவாதியாக இருந்தவர் மணியம்மையார். கும்பகோணத்தில் 144 தடையை மீறி இந்தி எதிர்ப்புப் பிரச்சார ஊர்வலம் சென்றதாகக் கைதான வழக்கில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, அவர் செய்தது சட்டப்படி குற்றம் என எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது நீதிபதியிடம் பதிலளித்த மணியம்மையார், ‘எங்கள் மொழி காக்கும் உரிமைக்கு அமைதியாகப் போரிடுவது எமது கடமையாகும். மொழிப்பற்றை மறப்பது நாட்டிற்குத் துரோகம் செய்வதாகும்’ என்று பதில் தந்தார். தொடரும் அவர்கள் உரையாடலைப் பாருங்கள்:
கேள்வி: அதற்காகச் சட்டத்தை மீறுவது சரியா?
பதில்: சட்டம் நாட்டின் மொழி வளர்ச்சியைக் கூட ஒழிப்பதாயிருக்கிறது.
கேள்வி: உங்கள் மதம் என்ன?
பதில்: எனக்கு எந்த மதமும் கிடையாது.
கேள்வி: உங்கள் ஜாதி
பதில்: திராவிட ஜாதி
கேள்வி: தடையுத்தரவை மீறிச் சட்டத்தை மீறியுள்ள தங்களை ஏன் தண்டிக்கக் கூடாது? சமாதானம் ஏதாவது சொல்கிறீர்களா?
பதில்: நான் சமாதானம் சொல்வதற்காக இங்கு வரவில்லை. சர்க்கார் சட்டத்தை நிறைவேற்றியிருக்கும் தாங்கள் என்ன தண்டனை விதித்தாலும் ஏற்கச் சித்தமாயிருக்கிறேன். தாராளமாய்ச் செய்யுங்கள்.
கேள்வி: தங்களுக்கு இரண்டு மாத வெறுங்காவல் தண்டனையளிக்கிறேன்.
பதில்: மிக்க மகிழ்ச்சி. வணக்கம்.
இன்றைய காலகட்டத்தில்கூட கைதாகும் நபர்கள் தங்கள் வழக்கறிஞரை வைத்து நீதிமன்றத்தில் விடுதலை கோருகிறார்களே தவிர, தங்கள் கருத்துகளை முன்வைப்பது இல்லை. ஆனால், அன்றே மணியம்மையாரின் வழக்காடும் முறை இவ்வளவு தீரத்தோடும் தெளிவோடும் இருந்ததை நாம் பார்க்கலாம்.
பெரியார் – மணியம்மையார் திருமணம்:
நாகம்மையார் கூட பெரியாரின் மனைவி என்கின்ற உறவின் வழியாகத்தான் இயக்கத்திற்குள் வருகிறார்கள். ஆனால், மணியம்மையார் அப்படியன்று. இந்த இயக்கம் என்பது அவர்களுடைய சுயதேர்வாகும். அதன் பின்பு, இயக்கத்தின் தலைமை அவரைத்தேடி வருகிறது. அவருடைய வாழ்வின் வழித்தடமே கொள்கையாகத்தான் இருந்தது. பெரியாராக இருக்கட்டும், மணியம்மையாராக இருக்கட்டும், கொள்கைச் சொந்தத்தைத் தவிர, தங்களுக்கென்று இரத்த வழியாகவோ, குடும்ப வழியாகவோ வேறு சொந்தங்களையோ, தங்களுடைய சொத்தில் அவர்களுக்குப் பங்கிட்டுத் தர வேண்டும் என்கின்ற உணர்வோகூட இல்லாதவர்கள். அதனால்தான் பொதுவாழ்வின் தூய்மைக்கு இலக்கணம் என்றால், அது பெரியாரும் மணியம்மையாரும் என்று சொல்லத்தக்க அளவில் உயர்ந்து நிற்கிறார்கள். இந்த வகையில் வேறு யாரும் எளிதில் தொட முடியாத சிகரங்களைத் தொட்ட மனிதர்கள் இவர்கள்.
பெரியாருக்குச் சேவை:
பெரியாரைப் பராமரிக்கும் பொறுப்பைத் திருமணத்திற்குப் பிறகுதான் அவர் எடுத்துக் கொண்டார் என்பது இல்லை. இது மிகவும் முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய விசயம். பெரியாரைப் பராமரிக்கின்ற பொறுப்பை திருமணத்திற்கு ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் எடுத்துக்கொண்டு விட்டார். எனவேதான் பெரியார் இதை, ‘சொத்துக்கான ஒரு ஏற்பாடு’ என்று சொல்கிறார். அதை மற்ற தலைவர்களும் வழிமொழிந்து கருத்து தெரிவிக்கும்போது சொல்கிறார்கள், ‘பராமரிப்பதற்காக ஒரு பெண் வேண்டும் என்று ஒர் ஆண் நினைப்பதற்கான ஏற்பாடு என்று சொன்னால், அதற்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இல்லை. அந்த அம்மையார் ஏற்கனவே பல ஆண்டுகளாக அதைத்தான் செய்து கொண்டு வருகிறார்கள். ஒர் ஆண் ஒரு பெண்ணை அனுபவிப்பதற்குத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கின்ற தேவையில்லாத ஒரு சமூகத்தில், திருமணம் செய்துகொண்டு கெட்ட பெயர் வாங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது? ஆக, இதனை தனக்குப் பின்னால், முக்கியமாக இந்தச் சொத்துகளையும், கட்சியையும் நிர்வகிப்பதற்கான ஒர் ஏற்பாடு என்கிற அளவில்தான் பெரியார் ஏற்றுக்கொள்கிறார். தனது இயக்கத்திற்கு எந்த மாதிரியான பெண்கள் வேண்டும் என்று பெரியார் விரும்பியதாக மணியம்மையார் கொடுத்த அழைப்பினைப் பார்த்தோம். ஊராரின் பழித் தூற்றலுக்கு அஞ்சாமல், கல்லுப் போன்ற மன உறுதியோடும் அதே நேரம், நாணயமாக நடந்துகொள்வதற்கான பெண்கள் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்ததைப் பார்த்தோம்.
அந்தக் காலத்தின் திருமண வயதோடு ஒப்பிடும்போது, திருமண வயதைக் கடந்து, அதைப்போன்று இரண்டு மடங்கு வயது ஆன பின்புதான் பெரியாரை அவர் திருமணம் செய்து கொள்கின்றார். அந்த ஏற்பாடு நடைபெறுகிறது. அதற்கு முழுத் தகுதியானவராக பெரியார் அவர்களால் அந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படக் கூடியவராக மணியம்மையார் திகழ்ந்தார் என்பதுதான் மிகவும் முக்கியம். சுயமரியாதை இயக்கத்திற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்த முதல் மனிதர் யார்? பெரியார்தான். அவருக்கு அடுத்த மனிதர் யார் என்று கேட்டால், மணியம்மையாரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்?