அய்யாவின் அடிச்சுவட்டில் ….
07.03.1986 அன்று கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற கழகக் குடும்ப நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்துகொண்டேன். அதில் திருமண நிகழ்ச்சிகள், புதுமனை திறப்பு விழா, அச்சகம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், கரூர் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கே.வி.இராமசாமி அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.
தந்தை பெரியார் அவர்களின் பெருந்தொண்டர் இடையாற்றுமங்கலம் இ.ச.தேவசகாயம்_மணியம்மாள் ஆகியோருடைய மணிவிழாவில் 08.03.1986 அன்று கலந்துகொண்டு வாழ்த்தினேன்.
09.03.1986 அன்று திருவாரூர் மாடர்ன் டுடோரியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாணவ, மாணவியர் தன்னம்பிக்கையுடன் திகழ வலியுறுத்தி, மாணவரினத்துக்கு நம்மால் எதுவும் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை மிகத் தேவை என எடுத்துக்கூறினேன்.
11.03.1986 அன்று பழம்பெரும் சுயமரியாதை இயக்க சட்ட எரிப்புப் போர் வீரரும், பெரியார் பெருந்தொண்டருமான சாக்கோட்டை கணபதி அவர்கள் காலமானது அறிந்து நான் கும்பகோணத்திலிருந்து சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு நேராக சாக்கோட்டைக்கு விரைந்து கணபதி அவர்களின் இல்லத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். குடந்தை சட்டப் பேரவை உறுப்பினர் க.அன்பழகனின் தந்தையார் இவர்.
அன்றே, கும்பகோணத்திற்கு அருகிலுள்ள குடிதாங்கி பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை வீரர் ராசசிகாமணி அவர்கள் முடிவெய்தினார் என்ற செய்தியை அறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். அவருக்கும் இரங்கல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14.03.1986 அன்று சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ ஏட்டின் நிறுவனரும், துவக்க காலத்தில் மலேசிய நாட்டில் ‘குடிஅரசு’ ஏடு பரவுவதற்குக் காரணமாக இருந்தவருமான ‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி அவர்களின் நினைவு நாளிலும், ‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ நாளிலும் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பின் பேரில் ‘சியா’ விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றடைந்தேன். கழகத் தோழர்களும், நகர பிரமுகர்களும் என்னை வரவேற்றார்கள்.
16.03.1986 அன்று சிங்கப்பூர் விக்டோரியா நினைவு மண்டபத்தில் ‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி நினைவு நாளும், சுயமரியாதைச் சுடரொளிகள் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் நெறிக் காவலர் க.விக்டர் தலைமையில் நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டர்கள் சு.தெ.மூர்த்தி, ‘திருச்சுடர்’ கே.ஆர்.இராமசாமி, எம்.கே.ஜப்பார், ‘தமிழ்முரசு’ இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். நான் சிறப்புரையாற்றும்போது, தமிழன் தலைநிமிர _ தமிழவேளின் பாதையில் பயணம் தொடர்க என்றும், இன உணர்வை நிலைநிறுத்துக, தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கான சுயமரியாதைச் சுடரொளிகள் நாளாகக் கொண்டாடுகிறோம். அதே கொள்கைகளை பெரியாரின் அடியொற்றி சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் பரப்புவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கடல்கடந்த தமிழர்களின் கலங்கரை விளக்கமாக விளங்கிய ‘தமிழவேள்’ திரு.கோ.சாரங்கபாணி அவர்களின் நினைவு நாளையும் சுயமரியாதைச் சுடரொளி நாளாகக் கருதி கலந்துகொள்ளும் கடமையுணர்வுடன் தாம் சிங்கப்பூர் வந்தேன் என்று குறிப்பிட்டேன். (2018லும் கலந்துகொண்டேன்)
தாய்த் தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் கடல்கடந்த நாடுகளிலும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வரும் பெரியார் நூலகம் மற்றும் ஆய்வகத்தில் தமிழவேளின் குறிப்புகளும் இடம் பெற்றிருப்பதை எடுத்துக் கூறினேன். தந்தை பெரியாரின் கருத்துக்கொப்ப பொதுநல உணர்வுடன் தொண்டாற்றி, அவரது தத்துவங்களின் வழி வாழ்ந்து, தமிழ் வாழவும், தமிழர் நிலை உயரவும் கைகொடுப்பவராக மட்டுமின்றி, தோள் கொடுப்பவராகவும் இருந்த தமிழவேளின் தலைமை தத்துவம் போற்றத்தக்கது என்று பாராட்டி உரையாற்றினேன். விழாவில், பெரியார் பெருந்தொண்டர் திரு.சு.தெ.மூர்த்தி, ‘திருச்சுடர்’ இராமசாமி, ‘தமிழ்முரசு’ ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.ஆர்.ராமகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி எம்.கே.ஏ.ஜப்பார், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு.வை.திருநாவுக்கரசு, கவிஞர் பாணன், சிங்கை மணாளன், மணிவண்ணன், நன்முல்லை, முத்தமிழன், கதமு இக்பால் ஆகியோர் தமிழவேளின் சிறப்புக்காக என்னுடன் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அந்தமான் தலைநகரமான ஃபோர்ட்பிளேரில் நடந்த கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றிய காட்சி
மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொதுச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதை வீரர் ‘வலங்கை’ விசு இயற்கை எய்தியதையொட்டி அவருடைய படத்திறப்பு _ நினைவு நாள் நிகழ்ச்சி 29.03.1986 அன்று மாலை தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் நடைபெற்றது.
‘வலங்கை’ விசு
நிகழ்ச்சியில் முன்னதாக அவரது படத்தினை திறந்துவைத்து உரையாற்றினேன். “மிகவும் கடினமான ஒரு பணியை செய்திருக்கிறேன், எத்தனையோ கசப்பான அனுபவங்கள் எனக்கு உண்டு. எத்தனையோ வேதனையான நிகழ்ச்சிகள் ஏற்படுவதுண்டு. துயரமான சம்பவங்கள் வாழ்க்கையில் நிறைய உண்டு.
என்றாலும், அந்த துயரத்திற்கெல்லாம் அதிகமான துயரமான சூழ்நிலையிலே இங்கு இந்தக் கடமையை நான் ஆற்றுகின்றேன்.
காரணம் நண்பர்கள். நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை மாநிலம் முழுவதும் பரப்பிட வேண்டும் என்பதற்காக நாமெல்லாம் பகுத்தறிவாளர்களாக இருக்கின்றோம் என்பது மட்டுமல்ல, கருப்புச்சட்டை மட்டும் அணிந்து இருப்பவர்களாக மட்டுமல்லாமல் அந்தக் கொள்கை எல்லா இடங்களிலும் பரவ வேண்டும்.
ஒரு நல்ல போர் வீரர் எப்படி இருக்க முடியும் -_ ஒரு நல்ல படையை நடத்திச் செல்கின்ற நடைவீரன் எப்படி இருக்க முடியும் என்பதற்கு அவர் ஓர் அடையாளம்.
விசு நட்டச் செடி தழைத்திருக்கிறது என்பதைக் காட்டுங்கள். அவர் செய்த பிரச்சாரக் கொள்கைகள் பரவி இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள். இதனால்தான் அவருக்கு சிறப்பு செய்ய முடியும்’’ என்று குறிப்பிட்டேன்.
அந்தமான் சென்ற கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை
வரவேற்ற திராவிட கழகத்தினர்.
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை வீரர் புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் உறவினர் குடிதாங்கி ராசசிகாமணி அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சி 30.03.1986 கும்பகோணத்திலுள்ள குடிதாங்கியில் நடைபெற்றது.
நான், ராசசிகாமணி அவர்களுடைய படத்தினைத் திறந்துவைத்து உரையாற்றினேன். ராசசிகாமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கத்திலே தன்னைத் தீவிரமாக ஒப்படைத்துக்கொண்டவர். ஒரு நல்ல கொள்கை உள்ளம் கொண்ட மாவீரர்.
“கருப்புச் சட்டை அணியும் நமக்கு எந்தவிதப் பற்றும் கிடையாது. நண்பர் ராசசிகாமணி அவர்கள் எப்படி தன்னை இந்த இயக்கத்திற்காக ஒப்படைத்துக் கொண்டாரோ அதுபோல’’ என்று அவருடைய சிறப்புகளை எடுத்துக் கூறி இரங்கலுரையாற்றினேன்.
அந்தமானில் 02.04.1986 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக அந்தமான் தீவுத் தலைநகரான போர்ட் ப்ளேருக்கு சென்றேன்.
மராட்டிய மாநிலம் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் பற்றி ஆசிரியர் கி,வீரமணி உரையாற்றிய காட்சி
அங்கு கழகத் தோழர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினர், தமிழ் இலக்கிய மன்றத்தினர், அந்தமான் தமிழ் சமுதாய சங்கப் பொறுப்பாளர்கள் என நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து என்னை வரவேற்றார்கள்.
“கருப்புச் சட்டை அணியும் நமக்கு எந்தவிதப் பற்றும் கிடையாது. நண்பர் ராசசிகாமணி அவர்கள் எப்படி தன்னை இந்த இயக்கத்திற்காக ஒப்படைத்துக் கொண்டாரோ அதுபோல’’ என்று அவருடைய சிறப்புகளை எடுத்துக் கூறி இரங்கலுரையாற்றினேன்.
அந்தமானில், மாலையில் நடைபெற்ற ரத்தினம் மார்க்கெட் திடலில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இரண்டரை மணி நேரம் உரையாற்றினேன்.
மறுநாள், பாம்பூ ப்ளாட் தீவில் நடந்த பொதுக்கூட்டத்திலும், அந்தமான் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியிலும் பங்கேற்று உரையாற்றினேன். தீவுத் தமிழர்களுக்கு நான் ஆற்றிய உரை எழுச்சியுற, விழிப்புற வைத்தது.
“அந்தமான் தமிழர்களின் செல்விகள் படிப்பதற்கு நிச்சயம் தந்தை பெரியார் கல்வி நிலையங்களில் முன்னுரிமை உண்டு. வரும் கல்வி ஆண்டிலிருந்தே இந்த ஏற்பாட்டைச் செய்வோம்’’ என்று நான் அறிவித்தபோது குழுமியிருந்த தமிழினம் விண்ணதிர கரவொலி எழுப்பியது. மேலும் அந்தமானில் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவிட்டு சென்னை வந்து சேர்ந்தோம்.
நாக்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் பற்றி மூன்று நாள் ஆய்வுரை நிகழ்த்த என்னை அழைக்கப்பெற்று அதில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன். 14, 15, 16.04.1986 ஆகிய 3 நாளும் நாக்பூர் பல்கலைக்கழக மண்டபம் நிரம்பி வழிந்தது. நான் ஆற்றிய மூன்று நாள் உரையையும் ஆங்கிலம், இந்தி, மராட்டி ஆகிய மூன்று மொழிகளில் நாக்பூர் பல்கலைக்கழகம் வெளியிடும் என குடியரசுக் கட்சியின் கூடுதல் பொதுச் செயலாளர், பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினருமான திரு. கானார் அறிவித்தார்.
மூன்று நாட்களும், பல்வேறு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அமைப்புகளைச் சார்ந்தவர்கள், சந்தித்து உரையாடினார்கள்.
கழக ஆங்கில வெளியீடுகளை பல்கலைக்கழகத்துக்கும், அம்பேத்கர் கல்லூரி நூலகத்திற்கும் நான் அன்பளிப்பாக வழங்கினேன்.
நாக்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் அவரது சிந்தனைகளைப் பரப்ப தனித்துறை (Chair) ஏற்படுத்த தமது சொற்பொழிவிற்கான வெகுமதித் தொகையை நான் அப்படியே அந்தப் பணிக்கே நன்கொடையாக வழங்கிவிட்டுத் திரும்பினேன்.
மூன்று நாள்களும் கழக வெளியீடுகளை பெருமளவில் பார்வையாளர்கள் வாங்கிச் சென்றனர்.
நாக்பூரில் தங்கியிருந்தபோது, டாக்டர் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய வரலாற்றுச் சிறப்பிடமான ‘தீட்சா பூமி’யை சென்று பார்த்தேன்.
14 ஏக்கர் பரப்பில் அம்பேத்கர் கல்லூரியில் ‘டூம்’ வடிவ நினைவு மண்டப கட்டுமானத்தையும் பார்த்து வந்தோம். என்னுடன் வந்திருந்த மதுரை மாவட்டத் தலைவர் பே.தேவசகாயம் அவர்களையும், அவர்தம் குழுவினரையும் நாகபுரி பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர் கோஷல், டாக்டர் அம்பேத்கர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் தாமோதரன், பல்கலைக்கழகக் குழு உறுப்பினரும், டாக்டர் அம்பேத்கர் நினைவு ஆய்வுச் சொற்பொழிவு ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் நாகபுரி ரிபப்ளிக்கன் கட்சியின் கூடுதல் பொதுச்செயலாளர் திரு.கானார் ஆகியோர் எங்களை அன்போடு அரவணைத்துச் சென்றார்கள்.
திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் தந்தை பெரியார் சிலையை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்.(உடன் கனிமொழி மற்றும் ராஜாத்தி அம்மாள்)
27.04.1986 அன்று திருச்சி கல்வி வளாகத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அய்யா, அம்மா ஆற்றிய நற்பணிகளை அவர்கள் வழியே இடையூறை சமாளித்து தொடர்கிறோம் என்று குறிப்பிட்டேன். விழாவில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அய்யா சிலையை திறந்து வைத்து வாழ்த்தி உரையாற்றினார். புலவர் இமயவரம்பன், செல்வி கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
சென்னை கடற்கரை சீரணி அரங்கில் 29.04.1986 அன்று புரட்சிக்கவிஞர் பிறந்த நாளையொட்டி நடந்த தமிழர் பண்பாட்டுக் கலைவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் கலந்துகொண்டார்கள். விழாவில் நான் எழுதிய, “காங்கிரஸ் வரலாறு, மறைக்கப்படும் உண்மைகளும், கறைப்படிந்த அத்தியாயங்களும்’’ நூலினை கலைஞர் வெளியிட முதற் பிரதியை சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெரியார் சோ.ஞானசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
சென்னை கடற்கரை சீரணி அரங்கில் புரட்சிக் கவிஞர் பிறந்தநாளையொட்டி தமிழர் பண்பாட்டு கலைவிழா நிகழ்ச்சியில் கலைஞர் அவர்கள் உரையாற்றுகிறார் உடன் ஆசிரியர் கி,வீரமணி அவர்கள்
நூலினை வெளியிட்டு பேசிய கலைஞர் அவர்கள், “வரலாறுகளை மறைத்து நம்மை இழிவுறுத்துவோருக்கு ஆணித்தரமான ஆப்பு; அரிய விளக்கம்’’ என்று குறிப்பிட்டார்கள். விழாவில் நான் உரையாற்றும்போது, புரட்சிக்கவிஞர் அவர்களுடைய விழாவை நாம் ஆண்டு தவறாமல் தமிழர்களுடைய பண்பாட்டுப் புரட்சி விழாவாக கொண்டாடுகிறோம்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் ஆகிய முப்பெரும் தலைவர்கள் நமக்கு முனைந்து ஊட்டிய உணர்வெல்லாம் இன்றைக்கு எங்கே தமிழனிடத்திலே இருக்கிறது என்ற கேள்வியைத்தான் எழுப்ப வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
புரட்சிக்கவிஞர் விழாவை நாம் பண்பாட்டு விழாவாக நடத்துவதன் நோக்கம் இரண்டு வகையான விலங்குகளை அடையாளம் கண்டுகொள்ள கைகளிலும், கால்களிலும் விலங்கு போடுவதற்குப் பதிலாக நமக்கு அவர்கள் மூளையிலே விலங்கு போட்டுவிட்டார்கள். அதைத் தெரிந்துகொண்டு ஈரோட்டு எக்ஸ்ரே கருவியில் மட்டுமே முடியும்! அதை உடைக்க, நொருக்க புரட்சிக்கவிஞர் என்ற சம்மட்டியால் மட்டுமே முடியும்! என்று எடுத்துக்கூறினேன்.
மடிப்பாக்கம் கூட்டத்தில் திராவிட கழகத்தினர்
எடைக்கு எடை பொருள் கொடுக்கும் காட்சி
சென்னை மடிப்பாக்கத்தில் 02.05.1986 அன்று இரவு 8.30 மணி அளவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சார்பாக எனக்கு எடைக்கு எடை சர்க்கரை, வெங்காயம், மாம்பழம், கடலை பருப்பு, எண்ணெய், பழங்கள், சிமெண்ட், வெல்லம், இளநீர், உப்பு, கோதுமை, தேங்காய் போன்ற 53 வகைப் பொருட்கள் பொதுமக்கள் முன்பு அலங்கரிக்கப்பட்ட தராசில் நிகழ்ச்சிகளை நடத்துகின்ற தோழர்கள் என்னை தராசின் ஒரு பக்கத்தில் அமரவைத்து ஒவ்வொருவருடைய பெயர்களையும் அழைக்க, அவர்கள் அந்தப் பொருட்களை இரண்டு, மூன்று பேராக தூக்கிக் கொண்டு தராசின் மறுபக்கத்தில் பொருள்களை வைத்து எடை நிறுத்திக் கொடுத்தனர். தொழிலாளர்கள், கட்சி சார்பற்ற முறையில் பொருள்களையும் கொடுத்தார்கள். இந்நிகழ்வு இந்தப் பகுதியில் கழகத்தினுடைய செல்வாக்கைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
நிகழ்ச்சியின் உச்சகட்டமாக எடைக்கு எடை வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தொழில் அதிபர், பொறியாளர் சோ.ஞானசுந்தரம் மற்றும் அவரது துணைவியார் மீனா ஞானசுந்தரமும் நாணயங்களை குவியல் குவியலாக இரு கைகளிலும் பொதுமக்கள் முன்பு வாரி வாரிப்போட்டனர்.
தராசின் முள் நடுவே நிற்கும்பொழுது 7000 ரூபாய் வெள்ளி நாணயங்கள் கொட்டப்பட்டன. எடைக்கு அதிகமாகவே 500 ரூபாய் வெள்ளி நாணயங்கள் அதிகமாக கொடுத்தார்கள். இந்த விழாவை பொதுமக்கள் உற்சாகத்தோடு மகிழ்ச்சி பொங்க கண்டுகளித்தனர்.
நான் உரையாற்றும்போது, நீங்கள் காட்டிய அன்பு, அய்யா அவர்களுடைய பணிக்கு அவ்வளவு அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று பொருள்.
மனிதாபிமானத்தோடு தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள். இந்தச் சமுதாயத்திற்கு ஒரு நூற்றாண்டு காலம் உழைத்து உழைத்து இறுதி மூச்சு அடங்கும்வரையிலேகூட தந்தை பெரியார் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை நம்முடைய மக்கள் உணரவில்லையே என்று நாங்கள் வேதனைப்படுகிறோம் என்று குறிப்பிட்டு உரையாற்றினேன்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 06.05.1986 அன்று கோட்டாறு பகுதிகளில் சுயமரியாதை வாசிப்பு சாலை திறப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரபாகரனுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்! தமிழ் ஈழம் என்பது லட்சியமானால், அதை அடைய தமிழ் மக்கள் ஆதரவு தேவை என்கிறபோது, எல்லோரையும் அழித்து பிரபாகரன் தலைவராக விரும்புகிறார் என்ற பழிச்சொல் வேண்டாம்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் க.சண்முகய்யா தலைமை வகித்தார். வாசு வரவேற்புரை ஆற்றினார். ஆர்.சித்தரஞ்சன்தாஸ் நாகர்கோயில் நகராட்சித் துணைத் தலைவர் இரா.அன்பு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தமிழரசு, கன்னியப்பன், பெருமாள், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ராஜமாணிக்கம், நகர திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் தியாகராசன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
நான் வாசிப்பு சாலையை திறந்து சிறப்புரை ஆற்றும்போது, “இந்த வாசிப்பு சாலை 1929லே இங்கே துவக்கப்பெற்றது. ஏறத்தாழ 55 ஆண்டுகால வரலாற்றை இது உள்ளடக்கியது என்று’’ குறிப்பிட்டேன்.
அதுபோல இந்த நாட்டிலே புத்தக அறை இருக்கிறதோ இல்லையோ? பூஜை அறை இருக்கின்றது.
இந்த வாசிப்பு சாலை பெரிய சிந்தனைப் பட்டறையாக உருவாக வேண்டும். அறிவார்ந்த ஏடுகளை படியுங்கள், மலிவுச்சுவை நூல்களை தொடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு என்னுரையை நிறைவு செய்தேன்.
“ஈழப் போராளிகளுக்கு அன்பு வேண்டுகோள்’’ என்று தலைப்பிட்டு 17.05.1986 அன்று ‘விடுதலை’யில் முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன். “தமிழ் ஈழ விடுதலைக்காக போராடுவோரிலும் இத்தனை குழுக்கள் (சுமார் எட்டுக் குழுக்கள்) இருக்க வேண்டிய அவசியம் என்ன? நீங்கள் எல்லோரும் ஒரே லட்சியத்திற்காகத்தானே வற்புறுத்துகிறீர்கள். பிறகு ஏன் இத்தனை குழுக்கள்?’’ என்று டெசோ மாநாட்டிற்கு வந்திருந்த வடஇந்தியத் தலைவர்களும், ஆந்திர முதல்வர் திரு.என்.டிஇராமாராவ் அவர்களும் கேட்டார்கள்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில், “இனி ஒற்றுமையுடன் செயலாற்றுவோம்’’ என்று அனைத்துப் போராளிகளும் உறுதி கூறினார்கள். ‘டெசோ’வின் தலைவருக்கும், அதன் உறுப்பினர்களுக்கும், வந்த விருந்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளித்த நிலையில், அதற்கு சில நாட்களுக்கு முன் போராளிகளில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு ‘டெலோ’வினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு, டெலோ தலைவர் சிறீசபாரத்தினத்தை சுட்டுக்கொன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரபாகரனுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்! தமிழ் ஈழம் என்பது லட்சியமானால், அதை அடைய தமிழ் மக்கள் ஆதரவு தேவை என்கிறபோது, எல்லோரையும் அழித்து பிரபாகரன் தலைவராக விரும்புகிறார் என்ற பழிச்சொல் வேண்டாம்.
போராளிகளே! நீங்கள் நடத்துவது வெறும் ராணுவப் போராட்டம் அல்ல! விடுதலைப் போராட்டம். எனவே, அதை மனதில் கொண்டு ஒவ்வொரு அடியும் எடுத்து வையுங்கள்!’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
(நினைவுகள் நீளும்…)