கேரள மாநிலம் கட்டப்பனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுத் தூண்
கி.வீரமணி
இதயம் தாங்கொணாத துயரம் தந்த எனது ஆசானின் இழப்பு !
எனக்கு இளமைக்காலம் முதல் பொதுத்தொண்டில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தந்தை பெரியாரின் தொண்டனாக ஆக்கி, கடலூரில் பள்ளி மாணவப் பருவத்தில் பகுத்தறிவு, சுயமரியாதைப் பால் ஊட்டிய எனது ஆசான் திராவிடமணி 21.12.1985 அன்று தமது 72ஆம் வயதில் மறைந்துவிட்டார் என்பது எனக்கு மிகவும் தாங்கொணாத துன்பத்தைத் தரும் துயரச் செய்தியாகும்.
சில நாள்களாக உடல் நலமற்று இருந்து வந்ததை கேள்விப்பட்டு சென்னையில் அவரது இல்லத்தில் 13.12.1985 அன்று சந்தித்து உடல் நலத்தை விசாரித்து வந்தேன். உடல் நலமின்றி இருந்த அவர்களது இறப்பு மிகவும் துயரச் செய்தியாகும். என்னை வெகுவாகப் பாதித்தது.
1943ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று அண்ணாவின் ‘திராவிட நாடு’ ஏட்டிற்கு நிதியளிப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. 105 ரூபாய் பணமுடிப்பைத் தந்த அந்தக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, பொன்னம்பலனார், டி.பி.எஸ்.பொன்னப்பா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில்தான் என்னை மேடை அரங்கேற்றம் செய்தார் எனது ஆசான் ஆ.திராவிடமணி அவர்கள். அவர், நான் படித்த கடலூர் இஸ்லாமியர் உயர்துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ற நிலையில் என்னை தனது சீடர்களில், பிள்ளைகளில் ஒருவனாக ஆக்கிப் பயிற்சி தந்தார். என்னை உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பியதும் அவரே!
கடலூரில் பலத்த எதிர்ப்புக்கிடையே அவர் கழகப் பிரச்சாரத்தினை ஆடாமல், அசையாமல், உறுதி குலையாமல் நடத்திய பாங்கினை அய்யா கண்டார்.
1944இல் கடலூரில் திராவிடர் கழக மாநாடு முதல் நாளில் எரியும் விறகுக் கட்டையை எடுத்து ஆ.திராவிடமணி அவர்கள் மீது காங்கிரசார் வீசினர்; அடித்தனர், அய்யா அவர்களின் மீது செருப்பு, பாம்பு வீசிய மாநாடு இதற்கடுத்த நாள்தான்!
அவர் உழைப்பின் உருவம். கொள்கைக் கோமான். அவரது அயராத உழைப்பைக் கண்ட தந்தை பெரியார், அவரை அரசுப் பணியிலிருந்து விலகி, ஈரோடு வருமாறு அழைத்தார். பல பொறுப்புகள் தந்தார்.
‘விடுதலை’ நிர்வாகியாக பல்லாண்டு இருந்தார். மத்திய திராவிடர் கழகத்திற்கு அறிஞர் அண்ணா அவர்களுடன் கூட்டுச் செயலாளராக திராவிடர் கழகத்திற்கு அவர் தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டு கழகத்தின் மத்திய நிர்வாகக் குழுவில் ஒப்புக் கொள்ளப்பட்டவர். தலைமைக் கழகத்தின் செய்தித் தொடர்புப் பணிகளைக் கவனித்து வந்தார். நெல்லை பேட்டையில் கழக மாநாடு, இவருக்கு அம்மை நோய் அத்துடன் உழைத்தார்.
இறுதிவரை உறுதிமிக்க பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சடரொளி! கொள்கையை இழக்காத சொக்கத் தங்கம்! அவருக்கு எனது தலைதாழ்ந்த வீரவண்ணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.
அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். முன்னதாகவே தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், அமைப்புச் செயலாளர் நீலநாராயணன், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவைத் தலைவர் செ.குப்புசாமி, தலைமை நிலையச் செயலாளர் சா.கணேசன், அ.செல்வராசன் எம்.எல்.ஏ., டாக்டர் அ.கலாநிதி எம்.பி., என்.வி.என்.சோமு எம்.பி., கோ.சி.நடராசன், தி.சு.நல்லதம்பி, கொத்தளம் கோவிந்தராசன் உள்ளிட்டோர் மலர் மாலைகளிட்டு இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.ஆர்.பாலு, மதுரை மாவட்ட மாநகர் மாவட்ட தலைவர் பே.தேவசகாயம், மகளிர் அணி செயலாளர் க.பார்வதி, பகுத்தறிவாளர் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், மயிலை நா.கிருஷ்ணன், பட்டுக்கோட்டை இரா.இளவரி, பாரி உள்ளிட்ட தி.க., தி.மு.க. தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
25.12.1985 அன்று அசாமில், அசாம் கணபரிஷத் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இதற்கு பாராட்டுத் தெரிவித்து அசாம் முதல்வர் பிரபுல்ல குமார் மகந்தாவுக்கு நான் வாழ்த்துத் தந்தியை அனுப்பினேன்.
“கேரளத்தில் எட்டாத உயரத்தை எட்டிய கட்டப்பனை’’யில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, 31.12.1985 அன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனை நகரில் “நாராயண குரு தர்மபரிபாலன யோகம்’’ கிளையின் சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
ஏழடுக்கு கொண்ட இந்த கோபுரத்தின் அடித்தளத்தில்(Ground Floor) நாராயண குரு சிலை, முதல் அடுக்கில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை, பிற அடுக்குகளில் பிற தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் நான் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தேன். இந்நிகழ்விற்குத் தலைமையேற்ற கேரள மாநில தொழில்துறை அமைச்சர் சிவதாசனுக்கு மாலை அணிவித்து அய்யா நூல்களை (ஆங்கில மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களையும்) வழங்கி உரை நிகழ்த்தினேன். அதில், தந்தை பெரியார் அவர்கள் எந்தக் காலத்திற்கும், எல்லா மண்ணுக்கும் ஏற்புடைய ஒப்பற்ற சிந்தனையாளர் என்பதை நிலைநிறுத்திய அரிய நிகழ்வில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் உரையாற்றுகிறேன் என்று குறிப்பிட்டேன். 1985ஆம் ஆண்டின் கடைசி நாள் தந்தை பெரியார் மீது அவர் வழி அணுப் பிசகாமல் எழுச்சி நடைபோடும் கேரளத்து ஒடுக்கப்பட்ட மக்கள் வைத்திருக்கும் அளவற்ற மதிப்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையும் வெளிஉலகத்திற்கு எடுத்துக்காட்டிய நாள்.
தந்தை பெரியார் சிலையை திறந்து வைக்கும்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
கட்டப்பனை! ஆம், அதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க அவ்வூரின் பெயர்! பெரிய ஊர் அல்ல. ஆனால், பெரியாரின் கொள்கைகளை மதிக்கக் கற்ற ஊர். அந்த ஊரில் அவ்வளவு மக்கள் கூடியதை பார்த்ததே இல்லை என்று அங்கிருந்த மக்கள் பேசிக்கொண்டது சாட்சியாகும். எலப்பாறை சி.ஏ.தேவகிக்குட்டி, நெடுங்கண்டம் வீ.பாண்டியரசு, பச்சடி சீறீதரன், ஏ.குஞ்சன் உள்பட பல கேரள முன்னணித் தோழர்கள் எங்களை வரவேற்றனர்.
கட்டப்பனையில் எழுப்பப்பட்டுள்ள நினைவுத் தூண், சிலைகள் அமைப்பும் ஏற்பாடகளும் கேரளத்தில் ஒடுக்கப்பட்டோர் உயர்வுக்காக உழைத்துவரும் எஸ்.என்.டி.பி. (SNDP) இயக்கத்தினர் செய்தவை. ஸ்ரீநாராயண குரு தர்ம பரிபாலன யோகம் என்ற அதன் முழுப்பெயர். கட்சி சார்பற்ற சமூக, பண்பாட்டு அமைப்பாக இயங்கி வருகிறது. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்களோடு தோளோடு தோள் நின்ற ஸ்ரீநாராயண குரு (1854_1928)வின் வழிகாட்டுதலோடு டாக்டர் பல்பு (1858_1950) எனும் ஈழவ சமுதாயத் தலைவரால் 1903இல் நிறுவப்பட்ட அமைப்பாகும்.
நாராயண குரு
எஸ்.என்.டி.பி (SNDP) அமைப்பு உருவாக்கியுள்ள நினைவுத் தூண் (அல்லது கோபுரம்) கட்டப்பனையின் நட்ட நடுவில் பீடுற நிமிர்ந்து நிற்கிறது. அதன் உயரம் 171 அடி “குருதேவர் கீர்த்தி ஸ்தம்பம்’’ என்று மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. ஏழடுக்கு மாடி கொண்டது. நில மட்டத்தில் நாராயண குரு அமர்ந்திருக்கும் சிலையும், முதல் மாடியில் கம்பீரமாக நிற்கும் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெள்ளை நிற வெண்கலச் சிலை அமைக்கப்பட்டிக்கிறது. அடுத்த மாடியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சிலைவடிவில் நிற்கிறார்கள். அதற்கு அடுத்த மாடியில் மலையாளத்துப் புரட்சிக்கவிஞர் குமாரன் ஆசான் (1872_1924) வைக்கம் போராட்டம் உருவாக அடிப்படைக் காரணமாக இருந்த வழக்கறிஞர் டி.கே.மாதவன் இருவரது சிலைகள் இணைந்துள்ளன.
டாக்டர். பல்பு
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கெங்கு இருந்தாலும் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கில் நாராயண குரு பின்பற்றிய வழி அது. உச்சிமாடியில் மீண்டும் நாராயண குருவின் சிலை. ஆனால், அங்கு அவர் நிற்கும் தோற்றத்தில் அமைந்துள்ளது.
எட்டாண்டுக் காலமாக லட்சக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. நான் அங்கு செல்லுவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் நினைவுத் தூணினை திறந்துவைக்க அடுத்தடுத்த நாள்களில் சிலைகள் திறந்துவைக்கும் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடவுளின் பெயராலும், சாஸ்திரங்களின் பெயரால் கொத்தடிமைகளாகக் காலங்காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த எளிய மக்கள் ஏற்றம் பெறத் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய ஏந்தலின் எழில்மிகு உருவச் சிலையினை அமைத்த கேரள மக்களையும் எஸ்.என்.டி.பி (SNDP) அமைப்பினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். (அரசியல் உள்ளே நுழைந்தால் முந்தைய பலம் குன்றியுள்ளது.)
தந்தை பெரியாரின் தொண்டுக்கு மரியாதை என்று தந்தை பெரியாரின் சிலையை எங்களைக் கொண்டு திறக்க வேண்டும் உறுதியாக இருந்ததன் மூலம் நம் வழிமுறைக்கு மரியாதை என்பது மற்றொன்று. கூட்டத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பேராசிரியர் குறிப்பிட்டதுபோல, “இரட்டை அங்கீகாரம்’’ (Double Recognition)அது.
பழம்பெரும் சுயமரியாதை இயக்க வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினருமான நாகை முருகேசனாரின் 78ஆவது பிறந்த நாள் விழா 10.1.1986 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாமி.சிதம்பரனாரின் துணைவியார் சுயமரியாதை மூதாட்டி சிவகாமி சிதம்பரனார் தலைமை தாங்கினார். ‘அடக்கமான தொண்டின் மூலம் உண்மை உழைப்பாளரான பழுத்த பழம் நாகை முருகசேனார், தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் தொண்டர் படையில் சேர்ந்து உழைத்தவர். எங்கெல்லாம் போராட்டங்கள் நடக்கிறதோ, எந்தப் போராட்டங்களில் தனக்கு உடன்பாடு இருக்கிறதோ, அங்கெல்லாம் முருகேசன் முதலில் நிற்பார்.
தந்தை பெரியாரின் தன்மான சமதர்மக் கொள்கைகளிலே மிகுந்த ஈடுபாடு கொண்டு உழைத்து வருபவர். அன்னை நாகம்மையாரை இழிவுப்படுத்தி ஆஸ்தான கவிஞராக இருந்த கண்ணதாசன் எழுதியபோது, அதை எதிர்த்து திராவிடர் கழகம் நடத்தியப் போராட்டத்தில் தானே வந்து கலந்துகொண்டு 15 நாள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி உரையாற்றினேன். “நாகம்மையார் எனக்கு உணவு படைத்தவர்; அவரை இழிவுபடுத்துவதை என்னால் பொறுக்க முடியுமா?’’ என்று கம்யூனிஸ்ட் வீரர் தோழர் நாகை முருகேசன் கூறியதையும் எடுத்துக் காட்டினேன்.
வடாற்காடு (வடக்கு) மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மானமிகு கே.கே.சின்னராசு அவர்களின் மகன்கள் இராவணன், சம்பத், வேன் டிரைவர் குப்பன் மூவரும் 14.01.1986 அன்று வேனில் செல்கையில் கிருட்டிணகிரிக்கு அருகாமையில் விபத்துக்கு ஆளாகி மரணமுற்றார்கள் என்ற பேரிடியான செய்தி நான் மலேசியா புறப்படும் நேரத்தில் அறிந்து பெரிதும் வருந்தினேன்.
எங்கள் இயக்கக் குடும்பம் மட்டுமல்ல, இயக்கத்தின் இராணுவ வீரர்களின் பாசறை அது! அந்தப் புலிக்குட்டிகள் மறைந்தனவா? எனக்கு வார்த்தை வரவில்லை. மானமிகு சின்னராசு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கழகத்தின் சார்பிலும் என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இருந்தேன்.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு கொள்கைப் பயணம் மேற்கொண்டேன். மதுரை மாவட்டத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பே.தேவசகாயம் அவர்கள் என்னுடன் பயணித்தார். நாங்கள் 14.1.1986 அன்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டோம். எங்களை என் குடும்ப உறுப்பினர்களும், கழகப் பொறுப்பாளர்களும் வழியனுப்பி வைத்தனர்.
15.1.1986 அன்று காலை சிங்கப்பூர் விமான நிலையத்தை சென்றடைந்தோம். அங்கு பெருவணிகர் ஹனிபா, எம்.இராமச்சந்திரன், ஆனந்தன், ‘தமிழ் முரசு’ துணையாசிரியர் ஆர்.இராமகிருஷ்ணன், சிங்கப்பூர் தி.நாகரத்திரனம், இராமசாமி, ஜி.எஸ்.மணியம், இளைஞரணி செயலாளர் மணியம், மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் சின்னப்பன், சிங்கப்பூர் சு.தெ.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து கோலாலம்பூர் (சுபாங்) விமான நிலையத்திற்கு சென்றடைந்தோம்.
முதல் நிகழ்ச்சியாக மலேசியா சென்று கோலாலம்பூரில் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் மகன் அன்பழகன்_லலிதா கலைச்செல்வி ஆகியோர் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தேன். இந்தத் திருமணம் 18.1.1986 அன்று கிள்ளானில் உள்ள டோவா அம்ச பொதுமண்டபத்தில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோ எஸ்.சாமிவேலு அவர்கள் முன்னிலை வகித்தார்.
‘திருச்சுடர்’ கே.ஆர். இராமசாமி அவர்களின் மகன்
அன்பழகன்-லலிதா கலைச்செல்வி ஆகியோர் இணையேற்பு விழாவை தலையேற்று நடத்தி வைக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நான் திருமணத்தை நடத்திவைத்து உரையாற்றுகையில், சுயமரியாதைத் திருமணத்தை ஏன் புகுத்தினார்கள் என்பதை விளக்கியும், தமிழர்களின் தன்மானம், இனமானம், பெண்ணுரிமை ஆகியவை எவ்வாறு காக்கப்படுகின்றன என்று விளக்கியும், இத்திருமண முறை தமிழ்நாட்டைத் தாண்டி கடல்கடந்து மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது என்பது தந்தை பெரியாரின் தத்துவம் உலகை அடைந்துள்ளதையே காட்டுகிறது என்றும் உரையாற்றினேன். மேலும் மலேசிய அரசு இதற்கென நாடாளுமன்றத்தில் தனிச் சட்டத்தை இயற்றி அங்கீகரித்ததோடு கழகப் பொறுப்பாளர்கள் பலரை திருமண பதிவு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதையும் பாராட்டி நன்றி தெரிவித்தேன். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ‘சுயமரியாதைத் திருமணம் ஏன்?’ புத்தகம் வழங்கினர்.
19.1.1986 அன்று கோலாலம்பூர் பழைய நகர் மண்டபத்தில் மலேசிய திராவிடர் கழகத்தின் கோலாலம்பூர் இளைஞர்கள் சார்பில் தந்தை பெரியார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டன. இந்த நிகழ்ச்சியல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். இந்து மதப் பண்டிகைகள் தமிழர்கள் விழாக்கள் அல்ல; அதைக் கொண்டாடி தமிழர்கள் தங்கள் இழிவை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொண்டேன்.
20.01.1986 அன்று பிற்பகலில், நான் தங்கியிருந்த கோலாலம்பூர் “பேலஸ் ஓட்டல்’’ அறையில் ‘புதிய சமுதாயம்’ ஆசிரியர் கு.சா.பெருமாள் அவர்களும், ‘தமிழ்நேசன்’ செய்தியாளர் திரு.முத்தமிழ்ச்செல்வன் அவர்களும் என்னை பேட்டி எடுத்தனர்.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சிறப்புப் பேட்டியில், பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகவும் விளக்கமாகவும் பதில் அளித்தேன்.
மாலையில் எங்கள் அனைவரையும், மலேசிய திராவிடர் கழகத்தின் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தலைவர் கே.ஆர்.ஆர் அவர்கள் எனக்கும், தேவசகாயம் அவர்கட்கும் கழக ஆடை போர்த்தி வரவேற்றார். மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்த மலேசிய திராவிடர் கழகத்தின் பல்வேறு அறைகள், துறைகள் ஆகியவற்றை பார்வையாளர்களாகக் கண்டு மகிழ்ந்து நமது எண்ணங்களை பதிவு செய்தோம்.
பிறகு 7:30 மணிக்கு தொழிலாளர்கள் ஏராளமாக வசிக்கும் பகுதியான ‘கம் போங்காத்தி’ காந்தி மண்டபத்தின் சார்பில் ‘பெட்டாலிங் ஜெயா கிளையில் பொங்கல் விழா மற்றும் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டோம்.
அக்கிளையின் செயலாளர் திரு.செல்வம், திரு.சரவணன், திருச்சுடர் அவர்களும் முக்கிய தோழர்களும் கலந்துகொண்டனர்.
21.01.1986 அன்று காலையில் மதுரை பே.தேவசகாயம், மலேசியா தி.க. தலைவர் கே.ஆர்.இராமசாமி, ‘தமிழ்நேசன்’ செய்தியாளர் திரு.குணா, ஓய்வுபெற்ற அரசு புகைப்பட நிபுணர் ஆகியோருடன், சிரம்பான் நகரிலிருந்து ‘பந்தால்’ என்ற மலைப் பிரதேசப் பகுதியில் 55 ஏக்கர் நிலப்பரப்பில் ஆத்மானந்த அடிகள் குருகுலத்திற்கு அவரது விருப்பத்திற்கு இணங்க சென்றேன். அவர் இனவுணர்வு உள்ள அடிகளார் அவர்களாவார்.
மலேசியாவின் ம.தி.க. கிளையின் மிகவும் பழைமையான கிளையில் ஒன்று ‘பக்தாங்பர்’ சுண்டை கிளையாகும். அதன் சார்பாக 21.01.1986 அன்று மாலை அளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.
05.02.1986 அன்று மலேசியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்த நான், ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் வெளியிட்ட அந்தப் பேட்டியின் கட்டுரையில் இந்து மதம் தமிழர் மதமல்ல; குழந்தைகளுக்கு புராணப் பெயர்களை சூட்டாமல் தமிழ்ப் பெயர்களையே சூட்டுங்கள். மலேசியா தி.க. பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு உதவ வேண்டும். சாதி உணர்வை ஒழியுங்கள் என்று மலேசியா தமிழர்களுக்கு நான் ‘தமிழ்நேசன்’ இதழ் பேட்டியின்போது வேண்டுகோள் விடுத்தேன்.
இந்து மதம் தமிழர் மதமல்ல; குழந்தைகளுக்கு புராணப் பெயர்களை சூட்டாமல் தமிழ்ப் பெயர்களையே சூட்டுங்கள். மலேசியா தி.க. பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு உதவ வேண்டும். சாதி உணர்வை ஒழியுங்கள்
அதனைத் தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூர் தோழர்கள் புடைசூழ எங்களை சிங்கப்பூர் விமானத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.
மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும்போது விமான நிலையத்தில் ‘தமிழ்முரசு’ ஏட்டிற்கு பேட்டி அளித்தேன். அப்போது, மலேசியாவில் ஏறத்தாழ நான்கு வாரங்களில் 60 கூட்டங்கள், 7 திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்குள்ள தமிழர்களிடத்தில் காணப்படும் உணர்வுகளைக் கண்டு பெருமிதம் அடைந்தேன். மலேசியாவின் தென்கோடியிலிருந்து வடகோடி வரை நடைபெற்ற கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் மொழியால் – இனத்தால் ஒன்றுபட்டவர்களாக இருந்தாலும் வாழும் நாட்டில் வேறுபட்டவர்கள் பாரம்பரிய உணர்வால் நெருங்கிப் பழகினாலும், நாட்டின் உணர்ச்சியில் ஆர்வம் உடையவர்களாக இங்குள்ளவர்கள் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
20.02.1986 அன்று மலேசியா_சிங்கப்பூர் பயணம் முடித்து நானும், தேவசகாயம் அவர்களும் சென்னை வந்தடைந்தோம். கடந்த 40 ஆண்டுகாலமாக திராவிடர் கழகம் மலேசியாவில் ஒரு மகத்தான சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டு அரசியலில் நுழையாத அறிவுப் பிரச்சார நிறுவனமாக (Institution) மலேசியாவில் திராவிடர் கழகம் மிகவும் சிறப்பாக வளர்ந்தோங்கி வருகிறது. இப்போது சுமார் 125 கிளைகள் மலேசியா முழுவதும் உள்ளன.
மலேசிய நாட்டு குடியுரிமை (Citizenship) பெற்று முழு உரிமை பெற்று குடிமக்கள் ஆகுங்கள். மலேசிய நாட்டை தாயகமாக்கிக் கொண்டு நிம்மதியான, பகுத்தறிவு வாழ்க்கை நடத்துங்கள்’’
தமிழ்நாட்டிற்கு அடுத்து 35 லட்சம் தமிழர்கள் இலங்கையில் என்றால், மூன்றாவதாக மலேசியாவில் சுமார் 10 லட்சம் தமிழர்கள் வாழுகிறார்கள்.
1929லும், 1954லும் தந்தை பெரியார் அவர்கள் அறிவுரை கூறியதெல்லாம், “நீங்கள் தமிழ்நாட்டுக்கு இந்தியாவுக்கே வரவேண்டும் என்று நினைக்காதீர்கள்; மலேசிய நாட்டு குடியுரிமை (Citizenship) பெற்று முழு உரிமை பெற்று குடிமக்கள் ஆகுங்கள். மலேசிய நாட்டை தாயகமாக்கிக் கொண்டு நிம்மதியான, பகுத்தறிவு வாழ்க்கை நடத்துங்கள்’’ என்ற பயனுள்ள அறிவுரைகள்!
படிப்பறிவும், தமிழ்நாட்டுத் தமிழர்களைவிட தமிழின உணர்வும் மிக்கவர்களாக அங்கே தமிழர்கள் இருந்தபோதிலும், மதமும் மவுடீகமும், ஆரியக் கொள்கைகள் அலைமோதலும், தமிழர்களை தமிழர்கள் என்று எண்ணவிடாமல் ‘இந்துக்கள்’ என்று சொல்லிவைத்துவிட்டன. இந்த எண்ணத்தை தமிழர்களிடம் மாற்ற இங்கு எனது சுற்றுப்பயணம் ஓரளவு பயன்பட்டது என்ற மனநிறைவும் ஏற்பட்டது.’’ என்று எனது கருத்தை விடுதலையில் பதிவு செய்தேன்.
அந்நாடுகளில் களப்பணியாற்றிவரும் கழக மூத்த முன்னோடிகள் தந்தை பெரியார் அவர்கள் மலேசியா வந்த விவரங்கள் எல்லாம் பற்றியும் அடிநாள் சுயமரியாதை இயக்கத்திற்கு மலேசிய நாட்டில் தொண்டாற்றிய அய்யா கொள்கையாளர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் பற்றியும் பழைய நினைவுகளை சிறப்பாக நினைவு கூர்ந்தார்கள்.
(நினைவுகள் நீளும்…)