மத்தியில் உள்ள முக்கிய 10 துறைகளில் சிறந்த திறமையாளர்களாக உள்ள 10 பேர்களை அய்.ஏ.எஸ். தேர்வுக்குப் போகாமலேயே நேரிடையாக – இடைச் செருகலாக – கூட்டுச் (Joint Secretaries) செயலாளர்களாக நியமிக்க, பல துறைகளி லிருந்தும் மனுக்கள் வரவேற்கப்படுவதாகவும், இதற்குக் கடைசி தேதி ஜூலை 30 ஆகவும் நேற்று வெளிவந்த (யுபிஎஸ்சி, நாடாளுமன்றம் போன்ற அமைப்புகளின் ஒப்புதலின்றி) மத்திய அரசின் அறிவிப்பு ஒன்று கூறுகிறது!
மத்திய அரசு பதவிகள் அனைத்திற்கும் குறிப்பாக அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.ஆர்.எஸ்.(I.A.S., I.P.S., I.F.S., I.R.S.) போன்ற நியமனங்கள் மத்திய தேர்வாணையக் குழுவான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன்மூலம் – தேர்வு முறை வெற்றி, நேர்காணல் வெற்றி, பிறகு அதற்கென உள்ள மத்திய பயிற்சிக் கழகத்தில் தேர்வு பெற்று, பிறகு பலரும் அந்தந்த மாநிலத்திற்கு மத்திய அரசு தலைமைச் செயலகத்திற்கு அதிலிருந்து நியமனம் ஆகும் நடைமுறை. இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைப்படியான நியமன முறையேயாகும்.
இதை மாற்ற அரசியல் சட்ட திருத்தத்தின்மூலம் மட்டுமே சாத்தியமாகும். அரசமைப்புச் சட்ட விதி 315 முதல் 320 வரை பல விதிகள் உள்ளன. அவைகளைப் புறந்தள்ளி விட்டு, நேரிடையாக இடையில் புகுந்து செய்யப்படும் இந்தக் கூட்டுச் செயலாளர்களின் நியமனத்திற்கான அவசரம் – ஏன்?
1. இது சமூகநீதியை அடியோடு புறக்கணித்து, குப்பைத் தொட்டிக்கு அனுப்பும் சூழ்ச்சியேயாகும்.
அண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதவிகளில் உயர்ந்து றிக்ஷீஷீனீஷீtவீஷீஸீ தரப்படுவது சட்டப்படி சரியானதே என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பயனாக மத்தியில் பதவி உயர்வு பெறவேண்டியவர்களை மறைமுகமாகத் தடுத்து நிறுத்திடவே அவர்களுக்கு மேலே சிலரை – திணித்திடவே இந்த ஏற்பாடாகும்.
2. அதுமட்டுமா? தனியார்த் துறையில் தங்களுக்கு வேண்டிய ஆர்.எஸ்.எஸ்.காரர் களையோ அல்லது கார்ப்பரேட் அமைப்புகளான தனியார் அமைப்புகளி லிருந்தோ ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனர்களை உள்ளே நுழைப்பதன்மூலம் தேர்தலில் தோற்றாலும், ஆட்சி அதிகாரம் மறைமுகமாக தங்களின் காவிக் கட்சியிடமே தக்க வைத்துக்கொள்ளவே (Bureaucracy) இந்தத் திட்டம்.
3. இது அரசியல் சட்ட விரோதம் ஆகும். (unconstitutional and illegal)எந்தப் பணியும் தற்போதுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 315 முதல் 320 வரையிலான விதிகளின்படி தேர்வுமுறை மூலம் மட்டுமே – அதுவும்கூட யூனியன் சர்வீஸ் கமிசன் என்ற சுதந்திரமான (Autonomous body) நடைபெறவேண்டிய ஒன்று; அந்த அதிகாரத்தை, மத்திய அரசின் இப்படி திடீரென மின்னல் போன்ற ஏற்பாடுகளால் பறிப்பது எவ்வகையில் நியாயம்?
4. இது ஒழுக்கக்கேடு (Immoral) ஆகும். எப்படியெனில், பல ஆண்டுகள் பதவியில் இருந்து, மேலே பதவி உயர்வை தங்களின் கனிந்த அனுபவத்திற்குப் பரிசாகப் பெறவேண்டிய உத்தியோக உயுர்வு ‘‘க்யூ’’வில் நிற்பவரை, இடித்துத் தள்ளிவிட்டு, இடையில் நுழைந்து திடீர்ப் பதவியில் அமர்த்தப்படுவதன் மூலம் இவர்களது நியாயமான உரிமைகளைப் பறிக்கும் அநீதியான – ஒழுங்கிற்கும், பொது ஒழுக்கத்திற்கும் விரோதமான ஏற்பாடேயாகும்!
இதனைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் உடனே கிளம்பவேண்டும்.
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் அமைப்புகள் ஏனோ இதுவரை இவ்வேற்பாட்டினை எதிர்த்துத் தங்கள் உரிமைக் குரலை எழுப்பாமல் ஏன் உள்ளார்கள் என்பதும் புரியவில்லை! யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வு முறையில் குளறுபடி செய்து மாற்றிடும் திட்டம் ஒருபுறம்; மறுபுறம் இப்படி ஒரு இடைத் திணித்தல் – என்னே விபரீதம்! என்னே கொடுமை! அரசமைப்புச் சட்டம் காற்றில் பறப்பதா? ஜனநாயக உரிமைகளைக் கேலிக் கூத்தாக்குவதா? சமூகநீதிப் போராளிகளாகிய நாம் நமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் – உடனே அரசியல் சட்ட விரோதமான இத்திட்டம் கைவிடப்படல் வேண்டும்!
– கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.