ஏப்ரல் 16-30, 2018 ‘உண்மை’ இதழ் மிகச் சிறப்பாய் இருந்தது. மஞ்சை வசந்தன் அவர்களின் முகப்புக் கட்டுரை காவிரி வரலாறையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டிய அவசர அவசியத்தை தெளிவாக உணர்த்தியது. “நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்’’ என்ற தந்தை பெரியாரின் கட்டுரை, தந்தை பெரியார் தமிழ் மீது வைத்திருந்த பற்றை தெளிவாய்க் காட்டியது.
துறையூர் க.முருகேசன் அவர்களின் ‘தீண்டாமைச் சுவர்’ சிறுகதை சாதி ஒழிப்பு அவசியத்தை வலிமையாய் உணர்த்தியது. வழக்கறிஞர் சு.குமாரதேவன் அவர்களின், “பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்’’ என்ற கட்டுரை அரிய செய்திகளை உள்ளடக்கி இருந்தது. க.காசிநாதனின் “பயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு!’’ என்ற கட்டுரையில் செல்ஃபோன் பயன்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகளை படம்பிடித்துக் காட்டியது. வழக்கம்போல் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பதில் ஒவ்வொன்றும் நெத்தியடியாய் இருந்தது. மொத்தத்தில் ஏப்ரல் 16-30, 2018 ‘உண்மை’ இதழ் அரிய செய்திகளோடும் அற்புதமான கட்டுரைகளோடும் மிக நேர்த்தியாய் இருந்தது. தொடர்க உங்கள் சமூகசேவை. வாழ்த்துக்கள்!
– முந்திரிக்காடன், தெற்கிருப்பு,
கடலூர்
‘உண்மை’ (ஏப்ரல் 16-30, 2018) இதழில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ தொடர்க் கட்டுரை இளைஞர்களையும், மாணவர்களையும் வெகுவாக ஈர்க்கின்றன. அதில் குறிப்பாக, இலங்கை யாழ்ப்பாண நூலகம், பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற வழக்கறிஞர் வீரமர்த்தினி – சைதை தென்றல் திருமணம் மற்றும் பல்வேறு மாநிலத் தலைவர்கள் பங்கேற்ற எழுச்சிப் பேரணி, தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் உள்ளிட்ட ஒளிப்படங்கள் ஆகியவை காணக் கிடைக்காத பொக்கிஷங்களாகக் கண்களை மிளிரச் செய்தன.
மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தக் கோரி அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாடு சென்னை பெரியார் திடலில் (11, 12.12.1982) நடைபெற்றதையும், சென்னையை கருங்கடல் சூழ்ந்ததோ! என்று வியக்கும் வகையில் மெரினா சீரணி அரங்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான தோழர்கள் அணிவகுத்துச் சென்ற பிரமாண்டப் பேரணியும், சமூகநீதித் தலைவர்கள் ஆற்றிய உரைவீச்சும் இன எதிரிகளை மிரள வைத்தது என்கின்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த – பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வுகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள பேருதவியாக இருந்தது.
மேலும், தந்தை பெரியாரிடம் பயிற்சி பெற்று தன்மானம் பெற்ற இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் மணிவிழா (19.12.1982) பொருத்தமாக பெரியார் திடலில் நடைபெற்றது என்ற செய்தி தெவிட்டாத தேனாய், தேன் கரும்பாய் இனிக்கிறது. அந்நிகழ்வில் முத்தாய்ப்பாக ஆசிரியர் அவர்கள், திராவிட இயக்கத்தின் பேராசிரியர் அவர்களுக்கு மணிவிழா! அவர் மணிவிழா நம் இனவிழா! என்று பேசியது மின்னும் வைரமாய் ஜொலிக்கின்றன. மொத்தத்தில், ‘உண்மை’ இதழில் வெளிவருகின்ற அனைத்துச் செய்திகளும் அல்ல, அல்ல கருத்துக் கருவூலங்களும் இளைஞர்களையும் – மாணவர்களையும் காந்தமாய்க் கவர்கின்றன என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
– சீதாலட்சுமி
, வெள்ளிமேடுபேட்டை, திண்டிவனம்