(இயக்க வரலாறான தன்வரலாறு – 201)
– கி.வீரமணி
20.12.1982 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்பொழுது எனக்கு முன்பாக பேசிய தோழர்கள் வேகப்பட்டு உணர்ச்சிகரமாக, எத்தனை நாளைக்கு இன்னும் நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களாக, தீண்டத்தகாத மக்களாக வாழ வேண்டும்; இன்னும் எங்களை விலங்குகளைவிட கீழாக நடத்துகிறார்களே; இது எப்படித்தான் தீரும்? அதற்கு என்னதான் செய்ய வேண்டும்? என்பதை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் இன்று அறிவித்தேயாக வேண்டும் என்று பேசினார்கள்.
எங்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இரண்டு கண்களைப் போன்றவர்கள்; இரண்டு கால்களைப் போன்றவர்கள்; ஒரு கால் மட்டும் இருந்தால் சரியாக நடக்க முடியாது. அதைப் போல, ஒருகால் இல்லை எனில் மற்றொரு காலுக்குப் பெருமை என எண்ணவும் முடியாது.
அத்துடன் திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தது? பெரியார் எதை சாதித்தார்? என்று கேட்டவர்களுக்கு மிகத் தெளிவாக ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்று நீங்கள் அனைவரும் இங்கே ஒன்றாக அமர்ந்திருக்கிறீர்களே; அதைச் செய்ததுதான் திராவிடர் கழகம். அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சாதித்தார்கள். இங்கே அமர்ந்திருக்கக் கூடியவர்கள் யார்? தொட்டால் தீட்டு என்று எவனாவது சொன்னால் அவன் மிஞ்ச மாட்டான். அவன் மிஞ்சமாட்டான் என்ற நிலையை உருவாக்கியதுதான் திராவிடர் கழகம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த திராவிடர் கழகம் என்ன செய்தது என்று கேட்டார்கள்.
தந்தை பெரியாரிடம் ஒருமுறை, ‘திராவிட நாடு கேட்கிறீர்களே; அதனால் ஆதிதிரா விடர்களுக்கு என்ன லாபம்?’’ என்று கேட்ட போது அய்யா சொன்னார், “லாபமில்லை; லாபமில்லை; நட்டம்தான் ‘ஆதி’ என்ற இரண்டு எழுத்து. எல்லோரும் திராவிடராகவே இருப்பார்கள்’’ என்றார்.
இருந்தாலும், 110 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வரவில்லையே என்று தந்தை பெரியாரைத் தவிர வேறு யாரும் கேட்கவில்லை. அவர் கேட்டபோது டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருந்த காரணத்தால், ஒரு வார காலத்தில், ‘பைல்’கள் பறந்தன.
இப்போது அவை, ‘கோப்பு’கள் நகர்கிறது. பெரியார் கேட்டார், நூற்றுப்பத்தாண்டு காலமாக திறக்கப்படாத கதவு ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு திறந்தது; டாக்டர் கலைஞர் அவர்கள், ஒரு தாழ்த்தப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி வரதராசன் அவர்களை நமக்குத் தந்தார்கள்.
பெரியாரைப் பற்றி தெரியாதவர்கள் பெரியாரைப் பற்றி பேசுவதும், அண்ணாவைப் பற்றித் தெரியாதவர்கள் அண்ணாவைப் பற்றிப் பேசுவதும் எப்படியோ, அதைப்போல டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி பேசுகிறவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்’’ என்று பல்வேறு நிகழ்ச்சிகளை எடுத்துரைத்தேன். பொதுமக்கள் மாநாடு போல் கூடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
21.01.1983 அன்று “தஞ்சையில் ஓர் சிறப்பு நிகழ்ச்சி!’’ என்ற தலைப்பில் கழகத் தொண்டர் நடத்திய நிகழ்ச்சி குறித்து முக்கிய அறிக்கையை எழுதியிருந்தேன். தஞ்சையில் 17ஆம் தேதி மாலை ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்புப்படை, காவல்துறை அதிகாரியும், பெரியார் பெருந்தொண்டருமான தோழர் எம்.கே.தாஸ் அவர்கள் ஒரு தேனீர் விருந்து ஏற்பாடு செய்ததுடன் அதற்கு தஞ்சையில் கழகப் பணியாற்றி சிலகாலம் ஒதுங்கியிருந்த கழக முக்கிய தோழர்களையெல்லாம் அழைத்திருந்தார். கழகப் பொருளாளர், நகர திராவிடர் கழகத் தலைவர், செயலாளர், பொறுப்பாளர்கள் எல்லாம் அழைக்கப்பட்டு கலந்துகொண்டனர்.
தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மத்தியக் கமிட்டி உறுப்பினராகவும், தஞ்சை வட்டத் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளில் பல ஆண்டுகள் பணியாற்றியவரும் சிறந்த பேச்சாளருமான அருமை நண்பர் தஞ்சை இரா.இராசகோபால் அவர்களும் பெரியார் பெருந்தொண்டர்கள் ‘மீசை’ சாமிநாதன், நாகராசன் முதலிய தோழர்களும், இன எதிரிகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்திற்கு வரும் வேளையில் நாம் ஒதுங்கியிருப்பது அவசியமில்லை. முந்தைய நாட்களைப் போலவே தீவிரமாகக் கழகப் பணியாற்றிடுவோம். “கழகத்தின் கிளைகள் வீதிதோறும் கழகத்தின் கொடி வீடுதோறும்’’ என்று திட்டமிட்டுக் கழகப் பணியாற்றுவோம். தஞ்சையை அசல் கருஞ்சட்டைக் கோட்டையாக்குவோம் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.
உண்மையான பெரியார் தொண்டர்கள் சுயமரியாதை வீரர்கள் அனைவரும் ஒரே அணியாக அணிவகுத்து நின்று செயல்பட்டாக வேண்டிய அருமையான தருணம் இது!
“கட்டுப்பாடுமிக்க ஒற்றை தனி மனித பெரியார் இராணுவத்தில் இனிச் சிந்தல் சிதறல்களுக்கு வேலை இல்லை -_ இடமில்லை’’ என்று காட்டி செயலாற்றி வரும் தொண்டர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
“பொதுத் தொண்டாற்ற வருவோர் எவரும் சுயகவுரவம் பார்க்கக் கூடாது; மானம் பாராத தொண்டாற்ற முனைய வேண்டும்’’ என்ற தந்தையின் அறிவுரையை நன்றாகப் புரிந்துகொள்ளும் எவரும் இயக்கத்தினை விட்டு விலகி நிற்கார்!
“காலம் கனிந்துள்ள நிலையில், ஞாலம் தந்தையின் அருகே நெருங்கிக் கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற கொள்கைக் குடும்ப இறுக்கம், நெருக்கம், ஒற்றுமை மிகவும் தேவை!” என்று அந்த அறிக்கையில் வரவேற்று விளக்கியிருந்தேன் என்று குறிப்பிடத்தக்கது.
இயக்கப் பிரச்சார மாநாடுகளானாலும், பொதுக்கூட்டங்களானாலும் எப்போதும் முன்னாலே நிற்கக் கூடியவர். உடல்நலக் குறைவு ஏற்படும்போது அதையும் பொருட்படுத்தாது கழகக் கடமை ஆற்றுவதற்கு அவர்கள் தயங்காதவர்கள்.
இந்த இயக்கக் குடும்பத்தில், புகழ், பெருமை, வருவாய் என்பதைப் பற்றி அறவே கவலைப்படாது, புழுதிவாரி தூற்றுதலில் ஆளாவது, எதிர்நீச்சல் அடிப்பது, நன்றி எதிர்பாராத தொண்டாற்றுவது, மானம் பாராது பணி செய்தல் என்ற இனமான இலக்கணத்திற்கு இலக்கியமாய்த் திகழும் பெரியவர்களை _ மூத்தவர்களைப் பாராட்டுவதில்தான் நாம் உண்மையான மகிழ்ச்சி அடைகிறோம்!’’ என்று குறிப்பிட்டேன்.
“பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான நாகரசம்பட்டி மூதாட்டி திருமதி விசாலாட்சி அம்மையார் அவர்கட்கு 23.01.1983 அன்று 80 வயது பூர்த்தி அடைகிறார்கள் என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இதனை வரவேற்று ‘விடுதலை’யில் எல்லோராலும், ‘அத்தையம்மாள்’ என்று அன்போடு அழைக்கப்படும் அவர்கள், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்களது மிக்க பேரன்புக்கு பாத்திரமானவர் அம்மையார் அவர்கள் ஆவார்கள். பொதுத் தொண்டு ஆற்றுவதிலும், எவரையும் மிகவும் கனிவுடன் உபசரித்து வரவேற்பதிலும் மிகவும் தனித்தன்மையான, சிறப்பான பண்பு இயல்புகளைப் பெற்றவர் ஆவார்கள்!’’ என்று குறிப்பிட்டேன்.
“நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட சுயமரியாதைக் குடும்பங்களில் நாகரசம்பட்டிப் பெரியவர் மானமிகு எஸ்.வி.சுந்தரம் அன்னார் குடும்பமும் ஒன்றாகும்! (அவர் ‘விடுதலை’ நிர்வாகி தோழர் சம்பந்தம் அவர்களது தந்தையார்).
பெரியவர் திரு.சுந்தரம் அன்னாரின் தங்கையான இவ்வம்மையார் இயக்கப் போராட்டங்களிலும், கிளர்ச்சியிலும் கலந்து இயக்கப் பிரச்சார மாநாடுகளானாலும், பொதுக் கூட்டங்களானாலும் எப்போதும் முன்னாலே நிற்கக்கூடியவர். உடல்நலக் குறைவு ஏற்படும்போது அதையும் பொருட்படுத்தாது கழகக் கடமை ஆற்றுவதற்கு அவர்கள் தயங்காதவர்கள். அவர்கள் மேலும் பல ஆண்டுகாலம் வாழ்ந்து, இந்த இயக்கத்திற்கு மேலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு இயக்க குடும்பத்தினர் அனைவரின் சார்பில் வாழ்த்துகிறோம்!’’ என்று குறிப்பிட்டேன்.
சென்னையில் நடைபெற்ற அகில இந்திய தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாநாடுகள் பற்றி ‘இந்தியா டுடே’ ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில், “ஆர்ப்பாட்டமான அரசியல் நடத்துவதில் திறமை படைத்தவர் தமிழக முதலமைச்சர். ஆனால், இந்த முறை அவர், “மலைக்குளவி’’ வலைக்குள் கடுமையாக சிக்கிக் கொண்டுவிட்டார். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோராக பொருளாதாரத்தில் பின்தங்கிய எல்லா சாதியினரையும் கருதி அவர்களுக்கு சலுகைகள் செய்யப்போவதாக அறிவித்ததன் மூலம், அவர் நெருக்கடியில் சிக்கிவிட்டார். இப்படிப்பட்ட ஒரு முயற்சி இந்த நாட்டில் எந்தப் பகுதியிலும் குழப்பத்தையும் கலகத்தையும் ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்ற இயக்கம் பார்ப்பனீய எதிர்ப்புக் கொள்கையில் வலிமைமிக்கதாகவும் சக்திவாய்ந்த இயக்கமாகவும் இருக்கிறது. இந்தப் பொருளாதார அடிப்படை முயற்சியை நேரடியாகவே இந்த இயக்கம் கனிவோடு எதிர்க்கிறது.
தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு கட்சிகளுமே பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகத்திலிருந்து வந்த கட்சிகள்தான்.
இடஒதுக்கீட்டில், தமிழ்நாடுதான் எப்போதும் இந்தியாவுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இப்போது பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு தமிழ்நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 174 சாதிகள் இடம் பெற்றிருக்கின்றன.
எம்.ஜி.ஆருடைய இந்தப் பொருளாதார அடிப்படை யோசனையை, தி.மு.க. தலைவர் கருணாநிதி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி ஆகிய இருவருமே எதிர்த்தார்கள்.
“அரசியல் சட்டம் சமூக கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட தன்மையைத்தான் அங்கீகரித்திருக்கிறது’’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னார். பிற்படுத்தப்பட்டோர் இயக்கத்திற்கு தலைமை ஏற்றிருக்கும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இந்தப் பிரச்சினையில் தேவைப்பட்டால் நீதிமன்றத்திற்குச் சென்றும் போராடத் தயாராக இருக்கிறோம்’’ என்றார். இந்தப் பிரச்சினையில் அவரும் திரு.கருணாநிதியைப் போல் கடுமையாகவே எதிர்க்கிறார்.
“முன்னேறிய ஜாதியில் _ ஏழைகளை மட்டும் தனியாகப் பிரித்து அவர்களுக்கு சலுகை அளிப்பது, இடஒதுக்கீடு சட்டத்திற்கு உட்பட்டதல்ல. ஏனென்றால், இந்த முறை இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கிறது. மாநில அரசு பொருளாதாரம் சம்பந்தப்பட்ட நல்ல திட்டங்களை ஜாதி அடிப்படையில் இல்லாமல் எல்லா ஜாதியினருக்குமே செய்வது பற்றி ஆலோசிக்கலாம். (ஆனால், “கல்வி, உத்தியோக இடஒதுக்கீட்டில் மட்டும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஜாதி அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்’’) என்றார்.
ஆனால், எம்.ஜி.ஆர் இவைகளை ஏற்பதாகத் தெரியவில்லை. அவர் “எல்லா பிற்படுத்தப்பட்ட தன்மையும் கடைசியில் பொருளாதார பிற்படுத்தப்பட்ட தன்மையில்தான் போய் முடிகிறது’’ என்று கூறுகிறார். ஜாதி அடிப்படை பார்க்காமல் எல்லா ஜாதி ஏழைகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தில் அவர் மிகவும் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில் வருமான வரி கட்டாதவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அண்மையில் அவர் தெரிவித்தார்.
இந்த யோசனை வந்த உடனேயே திரு.கி.வீரமணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “3 சதவீதம் மக்கள்தான் வருமானவரி கட்டுகிறார்கள்; எனவே, 97 சதவீதம் மக்களை பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவராக அறிவித்து, அந்த 97 சதவீதம் மக்களுக்கும் சலுகை தரவேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொல்லுகிறாரா?’’ என்று திரு.கி.வீரமணி கேட்டார்.
சென்னையில் டிசம்பரில் 11, 12 ஆகிய தேதிகளில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் மாநாடு நடந்து முடிந்தவுடன் இந்தக் கருத்து மோதல் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்! இந்த மாநாடும் கருத்து மோதலும் ஒரே நேரத்தில் பொருந்தி வந்திருக்கிறது. இது திட்டமிட்டு பொருந்தியதா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாது. அந்த மாநாட்டில் ஏராளமான மக்கள் பங்கேற்றார்கள். மிக எழுச்சியாக நடைபெற்ற அந்த மாநாடு மண்டல் குழு பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தியது, தீர்மானங்கள் நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது என்று ‘இந்தியா டுடே’ பத்திரிக்கை, “திராவிடர் கழகம் வலிமை மிக்க இயக்கம்’’ என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறது.
முன்னாள் நிதியமைச்சர் திருவாளர் சி.சுப்பிரமணியம் அவர்கள் எம்.அய்.டி. தொழில்நட்பக் கல்லூரி விழா ஒன்றில் பேசும்பொழுது (21.12.1982 _ ‘தினமணி’) “பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள எந்த ஒரு வகுப்பிலாவது ஒரு குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் படித்தவராக இருப்பாரானால் அவரது சந்ததியினருக்குப் பிற்பட்டோருக்கான கல்விச் சலுகை கூடாது என்பது எனது கருத்து’’ என்றும், அப்படியில்லாமல், சலுகைகள் அளிக்கப்படுவதற்காக பிற்பட்டோர் வகுப்புப் பட்டியலை நீட்டிக் கொண்டே போனதன் விளைவாக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் இன்று பின்தங்கியவர்களாகிவிட்டார்கள். இதன் விளைவாக “திறமைக்கு உரிய மதிப்புக் கிடைக்காத நிலை ஏற்படுகிறது’’ என்றும், குறிப்பாக விஞ்ஞானத் தொழில்நுட்பத் துறைகளிலும், ஆராய்ச்சித் துறைகளிலும் திறமை அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறைகளில் திறமைக்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட வேண்டுமே தவிர, ஜாதி முறைக்கோ, வகுப்புப் பிரிவுகளுக்கோ அல்ல. “இப்படிப்பட்ட சூழ்நிலையில் திறமையை ஊக்குவிக்க சலுகைகள் வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது’’ என்று சி.சுப்பிரமணியம் பேசியுள்ளார்.
இதனை நான் கண்டித்து அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில், 23.12.1982, 24.12.1982 இரண்டு நாட்களும் “திருவாளர் சி.எஸ்.சின் ‘தகுதி, திறமை’ பாட்டு!’’ என்று தலைப்பிட்டு விரிவாக அறிக்கையை பதிவு செய்தேன். அதில் 1952இல் இராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவர சி.சுப்பிரமணியம் பயன்பட்டதையும் பின்னர் காமராசர் ஆட்சிக்கு வந்து இதே சுப்பிரமணியம் அவர்களைக் கொண்டே குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததை விளக்கினேன்.
இறுதியாக, 1969லிருந்து 1978 வரையிலான 10 ஆண்டு காலத்தில் பொதுப் போட்டியில் 10 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மேலும் வருமான வரம்பு, தகுதி, திறமை என்று பேசி, 100க்கு 90 சதவிகித மக்களுக்கு சமூகநீதி வழங்க முட்டுக்கட்டை போடாதீர்கள் என்று திரு.சி.எஸ். போன்றவர்களுக்கு நினைவூட்டுவது நமது கடமை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
24.12.1982 அன்று தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. நினைவு நாள் பொதுக் கூட்டத்தில் பேசும்பொழுது, கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓரணியில் நின்று காட்சி தந்தார்கள். இந்தப் பெருமையை உண்டாக்கித் தந்த சிறப்பு நம்முடைய அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களைப் போய்ச் சேரும் என்று குறிப்பிட்டேன். தாழ்த்தப்பட்டோர் உரிமைகள், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை எல்லாம் நிறைவேற்றக்கூடிய தன்மையிலே இன்றைய தினம் நாம் கையெழுத்து நாட்டு இயக்கம் நடத்துகின்றோம். மண்டல் அறிக்கையை அமல்படுத்திட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பி வருகிறோம். அது வெற்றி பெறும்வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்று குறிப்பிட்டேன். நினைவு நாளில் கழகத் தோழியர்கள், தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
25.12.1982 அன்று கரூர் வேலாயுதம் பாளையத்தில் தந்தை பெரியார் அவர்களின் 104ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். 1914, 1928இல் தந்தை பெரியார் என்ன கொள்கையைச் சொன்னாரோ அந்தக் கொள்கையை அப்படியே பிரதிபலிக்கும் படியான மண்டல் கமிஷன் அறிக்கையின் மீது நாடாளுமன்ற விவாதத்தின்போது இந்தியாவின் பல்வேறு மாநிலத்தின் உறுப்பினர்களும் அதற்காக தவறாமல் பேசத் தொடங்கியதை, பெரியாரின் தத்துவம் இந்திய நாடாளுமன்ற தாழ்வாரத்தில் எடுத்து வைக்கப்பட்டு விவாதம் நடக்கிறதே என நாமெல்லாம் மகிழ்ந்திருக்கும் நேரத்தில், நமது மாநில முதலமைச்சர் அந்தக் கொள்கைக்கே வேட்டு வைத்திடக்கூடிய, அய்யாவின் கொள்கைக்கு எதிராக _ அண்ணாவின் கொள்கைக்கு எதிராக ஒரு மாபெரும் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
வருமானவரி கட்டாதவர்களையெல்லாம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப் போகிறாராம். இது நியாயமா? நடக்கக் கூடியதுதானா? இதன் உள்நோக்கம் என்ன?
எது, எமது உயிர்க் கொள்கையோ, லட்சியமோ, அய்யாவும் அண்ணாவும் தாம் வாழ்ந்த நாளெல்லாம் எதற்காக உழைத்தார்களோ, அந்த லட்சியத்தையே, திராவிட பாரம்பரியம் பேசிக்கொண்டே குழிதோண்டிப் புதைக்க முயலும் நமது முதலமைச்சரின் போக்கை எண்ணி நான் வெட்கப்படுகிறேன் என்று குறிப்பிட்டு உரையாற்றினேன்.
தமிழகம் வந்திருந்த_சிங்கப்பூர் பெருவணிகர் அனிபா தம்பதியினரை வரவேற்றிடவும், அகில இந்திய தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் மாநாட்டுக்கு உழைத்த செயல் வீரர்களைப் பாராட்டும் வகையிலும், பாராட்டு _ தேநீர் விருந்து நிகழ்ச்சி ஒன்று சென்னை பெரியார் திடலில் கடந்த 28.12.1982 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவுக்கு நான் தலைமை தாங்கினேன். வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்த அனீபா தம்பதியினருக்கு, நான் பாராட்டுக்களை தெரிவித்து உரை நிகழ்த்தினேன். தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்ற தமிழர்களிடையே தொழில் துறையில் மிகவும் வளர்ச்சி பெற்று தமது குடும்ப உழைப்பால், மிகவும் உயர்ந்த நிலையில் அனீபா அவர்கள் திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழகத்திலிருந்து வருகிறவர்களையெல்லாம் அவர்கள் வரவேற்று மகிழும் உள்ளம் கொண்டவர்; எப்போதுமே சுறுசுறுப்புடன் திகழக்கூடியவர்; ஆனால், மிகவும் அடக்கமான சுபாவம் கொண்டவர். தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களில் பங்கேற்க நாங்கள் சென்றிருந்தபோது மிகவும் அன்பு காட்டி வரவேற்றார். கடந்த முறை நாங்கள் மலேசியா சென்றபோது அவரைச் சந்தித்தோம். இந்த முறை சென்றபோதும் சந்தித்தோம். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அவர் தொழில்துறையில் மேலும் வளர்ச்சி பெற்றிருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். வெளிநாட்டுக்குச் சென்ற ஒரு தமிழர் _ பெருமைப்படும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் அது தமிழர்களாகிய நமக்குக் கிடைத்த பெருமையாகத்தான் நாம் கருதுவோம்.
நாளுக்கு நாள் தமிழகத்தில் தமிழர்கள் வீழ்ச்சி பெற்றுவரும் நிலையில், அயல்நாடு சென்ற நமது தமிழர்கள் எழுச்சிபெற்று வருவதைக் கண்டு நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. தொழில் துறையிலே ஈடுபட்டிருக்கும் அவர் பொதுத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.
நான், அனிபா தம்பதியினருக்கு சந்தன மாலைகளை அணிவித்தேன். மாநில மகளிர் அணி அமைப்பாளர் பார்வதி, திருமதி அனீபா அவர்களுக்கு கழகத்தின் சார்பில் சந்தன மாலை அணிவித்தார்.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய அனீபா குடும்பத்தினர் பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் சார்பில் நடக்கும் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.25,000/_ நன்கொடை வழங்குவதாக அறிவித்து அதற்கான காசோலையையும் என்னிடத்தில் வழங்கினார்கள்.
தொடர்ந்து அகில இந்திய தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது என்று குறிப்பிட்டு நான் மாநாட்டில் பங்கேற்ற வடநாட்டுத் தலைவர், மாநாட்டைப் பற்றி எழுதியிருந்த பாராட்டுக் கடிதங்களை படித்துக் காட்டி, இந்த மாநாட்டினுடைய வெற்றியின் காரணம் இங்கே கூடியிருக்கும் உங்களின் உழைப்பும் செயல்திறனும்தான் என்று கூறி மாநாட்டிற்கு உழைத்தவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.
27.12.1982 அன்று, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இருவர் லட்சியப் பயணங்களும் முடிந்துவிடவில்லை. இவர்களது லட்சியப் பயணத்தையும் கலைஞரே மேற்கொண்டு நடத்துகிறார் என்று சேலத்தில், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு வேன் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
தந்தை பெரியார் அவர்களது அறிவியக்கமாக இருந்தாலும், அண்ணா தந்த அரசியல் இயக்கமானாலும் எதுவாக இருந்தாலும் சேலம் என்று சொன்னால் அந்த இயக்கங்களுக் கெல்லாம் தனித்த ஒரு பாசறை என்ற வரலாறு சேலத்திற்கு எப்போதுமே உண்டு. அந்த வகையில், “சேலம் செயலாற்றுக் காலம்’’ என்று அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழிலே எழுதினார்க்ள்.
அப்படிப்பட்ட ஒரு அருமையான செயலாற்றும் காலம் மீண்டும் இப்போது இங்கே தொடங்கப்படுகிறது என்பதற்கு அடையாளமாகத்தான் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் காவலராகத் திகழ்ந்துகொண்டு தந்தை பெரியார் அவர்கள் இல்லையே, பேரறிஞர் அண்ணா அவர்கள் இல்லையே என்ற ஏக்கத்தாலே தமிழ் சமுதாயம் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் தந்தை பெரியாரின் துணிவினையும் அறிஞர் அண்ணாவினுடைய கனிவினையும் ஒருங்கே பெற்றவராக _ இந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு கலங்கரை விளக்கமாக _ இனமான உணர்வுடைய ஏந்தலாகக் காட்சியளிக்கக்கூடிய தமிழ்ச் சமுதாயத்தினுடைய தனிப்பெரும் தலைவர் கலைஞர் அவர்களுடைய லட்சியப் பயணம் தொய்வில்லாமல் நடைபெற வேண்டும்; தொடர்ந்து நடைபெற வேண்டும். எவ்வளவு பெரிய எதிர்ப்புச் சக்திகள் உருவானாலும், அந்த எதிர்ப்புச் சக்தியை ஆற்றல் நிறைந்த அவரது படையினால் தூள் தூளாக ஆக்கப்படும் என்ற உணர்வோடு இங்கே மக்கள் வெள்ளத்தின் முன்னிலையில் அவருக்கு வேன் பரிசளிக்கப்படுகிறது.
அவருடைய பயணம் லட்சியப் பயணமாக நாடு தழுவிய முறையில் நடக்க வேண்டாமா?
அதற்குத்தான் இந்தப் பணியை சேலம் மாவட்ட தி.க. சிறப்பாக செய்திருக்கிறது என்று கூறி வாழ்த்தி உரையாற்றினேன்.
மிகச் சிறப்பான முறையில் கடந்த 1, 2.01.1983 அன்று உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி பயிற்சி முகாம் விழாவில் கலந்துகொண்டேன். இரண்டாம் நாள் நடைபெற்ற பயிற்சி முகாமில் 200 பேரும், பார்வையாளர்கள் 500 பேர்களும் கலந்துகொள்ள சிறப்பான முறையில் விழா நடைபெற்றது. பயிற்சி முகாம் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருக்கும் மானமிகு கபிலன் ஜெகன்னாதன் அவர்கள் சிறப்பான உணவு வகைகளையும் வசதிகளையும் செய்திருக்கிறார். உடுமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சியளித்தது.- எங்கு பார்த்தாலும் கொடிகளும், தோரணங்களும் சுவரெழுத்து முழக்கங்களும் காணப்பட்டன. வரலாற்று சிறப்புமிக்கதாய் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
(நினைவுகள் நீளும்…)