– துறையூர் க.முருகேசன்
எனக்கு சாதிமேல, மதத்து மேல நம்பிக்கை இல்லை. இருந்தாலும், எனக்கு ஊர் நாட்டாண்மைங்கிற பொறுப்பை கொடுத்திருக்குற ஊர் சனங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். தயவுசெய்து இந்தப் பிரச்சினையை இதோட விட்டுட்டு அவுங்க அவுங்க பொழப்பை பார்த்துக்கிறதுதான் நல்லது என்ற நாட்டாண்மை நல்லசிவத்தின் பேச்சில் யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை.
இரு பாட்டன் தலைமுறைக்கு முன்னால், யாரோ ஒரு வழிப்போக்கன் ஏற்படுத்திய பிரச்சினை, இன்னமும் தீர்ந்த பாடில்லை. இதற்கு மேலும் தீரப்போறதும் இல்லை, கோயில் பிரச்சினையோ, குளத்து பிரச்சினையோ இல்லை. சாதாரண ஒரு சந்து பிரச்சினை.
கள்ளக்குடியில் இரு சமூகத்தவர்கள் உள்ளனர். ஒரு சமூகம் உயர்த்தப்பட்ட சாதி. இன்னொரு சமூகம் பிற்படுத்தப்பட்ட சாதி. இருவரும் சம அந்தஸ்துடையவர்கள். உயர்த்தப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் உச்சாணிக்கொம்பில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆள் பலத்தில் உயர்த்தப்பட்டவர்களை பயமுறுத்தும் அளவிற்கு படைபலம் கொண்டவர்களாக இருந்தார்கள். இன்னொரு சாதியும் இருந்தது. அதுதான் தீண்டத்தகாத சூத்திரரிலும் கீழான பஞ்சமர்கள். இன்று அவர்களால்தான் பிரச்சினை. இரு சமூகத்தவருக்கும் சுடுகாடு அரைகாணி என்ற அளவில் ஊரை ஒட்டி இருந்தது. பஞ்சமர்க்கு மட்டும் தனி சுடுகாடு. ஊரையொட்டி ஓடும் காட்டாற்றின் அக்கரையில் இருந்தது. பஞ்சமர்களின் சுடுகாட்டுப் பாதை, உயர்த்தப் பட்டவர்களின் ஊரை ஒட்டிச் செல்லும் ஒத்தையடிப் பாதை வழியாக காட்டாற்றைக் கடந்து செல்லும் பாதையாக இருந்தது.
பாதையின் இருபுறமும் உயர்த்தப் பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை கட்டிக்கொண்டு ஒத்தையடிப்பாதை நடு வீதியாகும் அளவிற்கு கொண்டு வந்து விட்டார்கள், பஞ்சமர்கள் பிணங்களை அவ்வழியாகக் கொண்டு செல்வதில் யாரும் ஆட்சேபனைத் தெரிவிக்கவில்லை, அதுவரை பஞ்சமர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை.
இந்த நிலையில்தான் ஊரெங்கும் குறி சொல்லி பொழப்பு நடத்தும் கோடாங்கி ஒருவன் அவ்வழியாக வந்து இருக்கிறான். அவன் வரும் நேரத்தில் பஞ்சமர்கள் அவ்வழியாக பிணத்தை தூக்கிக் கொண்டு சுடுகாட்டிற்கு சென்று இருக்கிறார்கள். குறி சொல்லும் கோடாங்கிக்கு அந்த நேரத்தில் என்ன ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை. ஒரு சாதாரண குறிசொல்லும் கோடாங்கியும் கீழ்த்தரமாக நினைக்கும் அளவிற்கு அந்த பஞ்சமர்கள் நாயினும் கீழ்த்தரமானவர்களாக இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை.
ஊருக்கு நடுவில் இருக்கும் பிள்ளையார் சிலை மீது ஆண் நாய் காலைத் தூக்கி சிறுநீர் கழித்துவிட்டு செல்லும். பிள்ளையார் கோயில் பூசாரி அந்த பிள்ளையார் கல் சிலையைக் கழுவி அந்த பிள்ளையாருக்கு பூஜைபோடுவார். அந்த நாய்க்கு உள்ள மரியாதைக் கூடவா அந்த பஞ்சமர்க்கு இல்லை? பஞ்சமர்கள் உயர்ந்த சாதிக்காரன் தெரு வழியாக பிணத்தைத் தூக்கிச் செல்வதா? என்ற ஆத்திரத்தில் அந்த கோடாங்கி, ஏதோ சாமி அருள் வந்தவன் போல் ஆடி குதித்துக்கொண்டு, நான் மலையாளக் கருப்பு, மாந்தரீகம் கத்தவன், கோயிலில் இருந்து மலைக்கு வேட்டையாட இந்த வழியாகத்தான் போறேன், நான் வேட்டைக்குப் போகுற வழியில, தாழ்ந்த சாதிக்காரன் பிணத்தைத் தூக்கிப் போறதா? இனி ஊரைக் கொள்ளையிடப் போறேன். உயர்ந்த குடியானவனாகிய உங்கள் வீட்டிலிருந்து ஒவ்வொரு பிணமாக எடுக்கப் போறேன் என்று உயர்ந்த குடியானவர்களின் காதில் கேட்குமாறு கூவிக்கொண்டே ஓடி, அவ்வூர் பொதுக்கோயிலின் முன் படுத்து அங்கம் புரண்டான்.
அவனது கூக்குரலினால் கூடிய கூட்டத்தில் இருந்த உயர்ந்த குடியானவர்களில் ஒரு சிலர், வழிப்போக்கனின் வாய் உளறலால் ஏற்பட்ட பீதியில் அவர்களும் குறியாடி, வழிப்போக்கனின் வார்த்தைக்கு வலு சேர்த்தார்கள். அன்று கூடிய கூட்டத்தில் ஏற்பட்டதுதான் அந்த தீண்டாமைச் சுவர்.
அன்று ஊர் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்காகவும், பண பலத்திலும், படை பலத்திலும் ரொம்பவும் தாழ்ந்த நிலையில் இருந்த அந்த பஞ்சமர்கள் உயர்குடியினரை எதிர்க்க முடியாமல், தெருவை ஒட்டிய ஒரு காட்டுத்தடத்தின் வழியாக ஆற்றைக் கடந்து அக்கரையில் பிணத்தைப் புதைத்து வந்தார்கள். நல்லதுக்கும், கெட்டதுக்கும், அவர்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும், தெருவை ஒட்டிய காட்டுத்தடத்தின் வழியாக முக்கிய இடத்திற்கு வந்து, அதற்குப் பிறகுதான் பொதுப்பாதை வழியாக அடுத்த ஊருக்குச் செல்ல முடியும். இது இரண்டு தலைமுறையாக நடக்கும் அவலக்கூத்து.
காலங்கள் மாற மாற மனிதனின் வாழ்க்கைத் தரமும் மாறிக்கொண்டே வந்தாலும், படித்தவன், படிக்காதவன், இருப்பவன், இல்லாதவன் என்று எல்லோர் மனதிலும் இன்றும் மாறாமல் வருவது பரம்பரை, வழிமுறை, முன்னோர்களின் வழியைப் பின்பற்றுதல் என்ற ஐதீகம்தான். இன்னமும் மாறாமல் வருகிறது. அது நாட்டாண்மை நல்ல சிவத்தை மட்டும் எப்படி மாற்றும்? பஞ்சமர்களில் பாதிப்பேர் படிப்பதில் கெட்டிக்காரர்களாகி, அரசு வேலையில் அமர்ந்து இருக்கிறார்கள். அந்தத் தெருவில்கூட உயர்ந்த பதவியாகிய ஐ.ஏ.எஸ்.இல் ஒருவர், காவல்துறை கண்காணிப்பாளராக ஒருவர், வாத்தியார் ஒரு பத்து பேர், மற்ற அரசு வேலைகளில் ஒரு ஐம்பது பேர் என்ற அளவிற்கு படிப்பால் முன்னேறி முற்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு சமமானவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், இன்னமும் பழைய வழிமுறை மாறாத ஐதீகத்தில் அவர்கள் தீண்டத்தகாதவர்களே!
பஞ்சமர்களில் படித்த பத்து பேரால் பழைய ஐதீகத்தை ஜீரணிக்க முடியாமல் பழைய வரலாற்றைத் தெரிந்துகொண்டு, அந்தப் பாதையில் உள்ள சுவரை உடைத்து, எங்களுக்கு மாமூல் வழித்தடமாக அதை மாற்றித் தரவேண்டும் என்று ஊர் மக்களிடம் முறையிட்டு, பஞ்சாயத்திடம் முறையிட்டு, அரசாங்கத்திடம் முறையிட்டு, நீதிமன்ற கதவைத்தட்டி, இப்படியாக இன்றோடு ஐம்பதாண்டுகளைக் கடந்துவிட்டது. கணக்குப் பார்த்தால் இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட பண இழப்பீடு கூட கிட்டத்தட்ட ஐந்து லட்சத்தைத் தாண்டும். அரை நொடியில் ஒரு கடப்பாரையைக் கொண்டு பெயர்த்தெறிய வேண்டிய அந்த சுவருக்காக ஏற்பட்ட செலவு.
நல்லசிவம் நன்கு படித்தவர். படிப்பறிவு மட்டுமல்ல, அவருக்கு பட்டறிவும் அதிகம். ஒரு கட்சியின் மாவட்ட செயலாளரும்கூட. சிறந்த முற்போக்கு சிந்தனாவாதி. அவர் நாட்டாண்மை பதவிக்கு வருவதற்கு முன்னால் அந்தத் தீண்டாமைச் சுவரை அகற்றுவதில் தீவிர ஆதரவாளராகத்தான் இருந்தார். ஒரு சில நேரங்களில், அவர் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், ஓட்டுக்காகவும் அந்த பஞ்சமர்களின் தெருவிற்கு வலியச் சென்று தீண்டாமைச் சுவரின் கொடுமையைப் பற்றி ஆணித்தரமாகப் பேசி, அந்த சுவரின் வரலாற்றை பஞ்சமர்களின் மனதில் பதிய வைத்து, அவர்களைப் போராட்டத்திற்கு தூண்டினவரே அந்த நல்லசிவம்தான் என்றுகூட சொல்லலாம். இன்று அதே நல்லசிவம் நாட்டாண்மையாக வந்த பிறகு, தன்னால் இந்த சுவர் உடைக்கப்பட்டால், தன் சொந்தபந்தங்களால் தனி இழுக்கு வருமே என்ற பயத்தில்தான் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டிய கூட்டத்தில் நல்லசிவம் எனக்கு ஊர் நாட்டாண்மைங்கிற பொறுப்பைக் கொடுத்திருக்கிற ஊர் ஜனங்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று சொன்னார்.
பிரச்சினை முடிவுக்கு வராததால் ஊர் மக்கள் வேறு முடிவுக்கு வந்துவிட்டார்கள். முதலில் அரசாங்க அதிகாரியிடம் குடியுரிமைக் கையேட்டை ஒப்படைப்பது. அதிலும் பிரச்சினை தீரவில்லை என்றால், ஆடு மாடுகளோடு மலையேறி குடும்பம் நடத்துவது. இரு சமூகத்தவர்களும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க நடத்தும் ஒரு பம்மாத்து காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று எல்லா மாவட்டங்களிலேயும் மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கவில்லை என்றால் இந்த ஆயுதத்தைத்தான் கடைசியாக கையில் எடுக்கிறார்கள். அதையேதான் இன்று கள்ளக்குடி மக்களும் கையில் எடுத்தார்கள்.
அதிகாரிகளின் பேச்சில் முழு வெற்றி கிடைக்காத அந்தப் பஞ்சமர்கள் ஊருக்கு வடக்குப்புறத்தில் உள்ள சின்னகரட்டில் சிறுசிறு கொட்டகைகளை அமைத்துக் கொண்டு ஆடுமாடுகளோடு குடியேறினார்கள். முற்பட்ட சாதியினர் மேற்குப்புறத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான வனத்தில் ஆடு மாடுகளை ஓட்டிச்சென்று குடியேறினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவரில் இருந்து அமைச்சர் வரை பேசிய சமாதானப் பேச்சு இரு சமூகத்தவர்களாலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. பஞ்சமர்கள் தீண்டாமைச் சுவரை உடைத்து பொதுப்பாதை அமைத்துத் தரும்வரை ஊருக்குள் குடியேறமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
முற்பட்ட சமூகத்தவர்களோ தங்கள் முப்பாட்டன் தலைமுறையில் இருந்துவரும் அந்த சுவரை உடைத்தால், அவர்களுக்குப் பணிந்து விட்டதாக எங்கள் சமூகத்தவர்கள் எங்களை கேலி பேசுவார்களென்பதால், சுவரை உடைத்து பொதுப்பாதை அமைத்துக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பிடிவாதத்தில் இருந்தார்கள்.
நல்லசிவத்தின் மகள் நாவுக்கரசிக்கு இருபது வயது இருக்கும். சென்னையில் உள்ள ஒரு பெரிய கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தாள். அதே கல்லூரியில்தான் அதே ஊரைச் சேர்ந்த பஞ்சமர் பரமசிவம் வாத்தியாரின் மகன் மணியும் படித்துக் கொண்டிருந்தான். இருவரும் படிப்பில் கெட்டிக்காரர்கள் என்பதோடு, பகுத்தறிவிலும் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். இருவரும் ஒரே ஊர் என்பதால் கண்டவுடன் வணக்கம், மெல்ல சிரித்தல், கலந்துரையாடல் என தொடர்ந்து காதலாக மாறிவிட்டது. தீண்டாமைச் சுவரை எடுப்பதிலேயே இவ்வளவு கெடுபிடிகாட்டும் ஊர்மக்கள் நம் காதலையா அங்கீகரிக்கப் போகிறார்கள்? இது நடக்காத காரியம். எனவே, இதற்கு ஒரு மாற்றுவழி கண்டால்தான் இரு சமூகத்தவர்களும் சாதியை மறந்து, சாத்திர சம்பிரதாயங்களைக் கடந்து, பழமை, ஐதீகம் என்ற பிற்போக்குச் சிந்தனைகளை உடைத்து, மாக்களில் இருந்து மக்களாக விடுதலைபெற்று ஒற்றுமையோடு வாழ்வார்கள் என்ற சிந்தனை நாவுக்கரசியின் இதயத்திலும், மணியின் நெஞ்சிலும் குடிகொண்டது.
கிராம நிர்வாக அதிகாரியிலிருந்து வட்டாட்சியாளர், மாவட்ட ஆட்சியாளர், அமைச்சர் என்ற அளவில் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தாலும், இரு சமூகத்தவர்கள் இதயம் மட்டும் இந்த விஷயத்தில் இரும்புக் கோட்டையின் உறுதியிலிருந்து இம்மியளவும் தளராமல் இருந்தது. இரு சமூகத்தவர்களையும், தரம் பிரித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தி, ஒரு கலவரத்தை நடத்தி பக்கத்துக்கு பத்து உயிர்களை காவு வாங்கிவிட்டால், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் இதயத்திலும் ஆளுங்கட்சியின் அலட்சியபோக்கால்தான் இவ்வளவு பிரச்சினை, இத்தனை உயிர்கள் பலி என ஆட்சிக்கு அவலத்தை உண்டுபண்ணி, அடுத்த முறை ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று ஆட்சிக்கட்டில் ஏறும் கனவினால் உண்டான எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் வேறு.
இன்று முடிவு தெரியாவிட்டால், நாமே அந்த சுவரை உடைத்தெறிவது இதற்காக எத்தனை உயிர்கள் பலியானாலும் பரவாயில்லை. இது பஞ்சமர்களில் பாதிப்பேரின் வீராவேசமான பேச்சு. சுவரை உடைத்தால் அதற்குத் தக்க பதிலடி கொடுத்தே தீருவது, அதற்காக உயிரைவிடவும் தயார். இது எதிர்கோஷ்டிகளின் ஆவேசம். இரு சமூகத்தவர்களும் இறுதி முடிவுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில்தான், அந்தத் திடீர் திருப்பம் இரு சமூகத்தவர் காதிலும் காட்டுத்தீயாகப் பரவியது. நல்லசிவத்தின் மகள் நாவுக்கரசியும், பஞ்சம வாத்தியார் பரமசிவத்தின் மகன் மணியும் கல்லூரி மாணவர்கள் பத்துப் பதினைந்து பேரோடு வந்து தீண்டாமைச் சுவரை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மணி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கடப்பாரையால் சுவரைப் பெயர்க்க, நாவுக்கரசி சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, கூடையில் கல் சுமந்து அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிறிது நேரத்தில் மூச்சு வாங்கி சோர்வுற்று மணி நிற்க, அடுத்தகணமே சுவரிடிப்பை நாவுக்கரசி தொடர்கிறார்.
கை வலித்து களைப்பு கொண்ட மணியிடமிருந்து கடப்பாறையை வாங்கி, நாவுக்கரசி ஓங்கி ஓங்கி சுவரில் இறக்கியதால் உடைந்து வீழ்ந்தது சுவர் மட்டுமல்ல, சாதி வெறியர்களின் ஆணவமும்தான்!