இளவேனில் என்ற தமிழ்ப் பெண்ணின் இமாலய சாதனை!

ஏப்ரல் 16-30

– பண்பாளன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் பதினெட்டு வயதான தமிழச்சி இளவேனில்.

இளவேனிலின் சொந்த ஊர் கடலூர். சிறு வயதிலிருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவர். தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என தடகளப் போட்டிகளில் சாதிக்க வேண்டுமென்பது அவரது லட்சியமாக இருந்தது.

பள்ளி அளவிலான போட்டிகள் உட்பட சிறுசிறு போட்டிகளில் கலந்துகொண்டு தடகளத்தில் பதக்கங்களைக் குவித்து வந்த இளவேனிலுக்கு துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் வந்ததற்குக் காரணமே அவரது அண்ணன்தான். இராணுவ வீரரான தன் அண்ணன் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போதெல்லாம் இளவேனிலிடம் துப்பாக்கிகள் பற்றி நிறைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டதால், இளவேனிலுக்கு துப்பாக்கிச் சுடுதலில் ஆசை அதிகரித்திருக்கிறது.

இளவேனில் விருப்பத்தைப் புரிந்துகொண்ட அவரது பெற்றோர் புனேவில் செயல்பட்டு வரும் ஒலிம்பிக் மெடலிஸ்ட் ககன் நரங்கின் ‘Gun for Glory’ அகாடமியில் பயிற்சிக்காக சேர்த்துள்ளனர். இவரது திறமையைக் கண்டறிந்த ககன் நரங் இளவேனிலுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க, தொடர்ச்சியாக தேசிய அளவிலான போட்டிகளில் ஜூனியர் பிரிவில் இளவேனில் அசத்திவர, ஆசிய அளவிலான வாய்ப்பும் கிடைத்தது. அதிலும் சாதிக்க, சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது.

இந்தப் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் தனது முழங்காலில் காயம் ஏற்பட்டு கடுமையான வலி இருந்தும் அதைப் பற்றி வெளியே சொல்லாமல் பயிற்சியை மேற்கொண்டு தனது கடுமையான உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும், பத்து மீட்டர் ரைபிள் சுடும் போட்டியிலும், குழுப் போட்டியில் மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்து மொத்தம் இரண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தன் சாதனை வெற்றி குறித்து…….

இந்த வெற்றியை பயிற்சியாளர் ககன் நரங் அவர்களுக்கும், என் குருமார்களுக்கும், பெற்றோர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். தொடர்ச்சியாக பல பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க விரும்புகிறேன் என்று தன்னம்பிக்கையோடு பேசினார் இளவேனில். இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் இவரது சாதனையைப் பெரிதும் பாராட்டியுள்ளார். 2020இல் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று தமிழர் புகழை தரணியெங்கும் பரப்பிட தமிழ்ப் பெண் இளவேனிலை நெஞ்சார வாழ்த்துவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *