நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?

மார்ச் 16-31

– தந்தை பெரியார்

 

தோழர்களே! நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன்.  நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமேயாகும்.  திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்தவன்.  என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டாமல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந்தேன்.  காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல்லாம் பிடித்து வைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள்.  அக்காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள்.  வீட்டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ்வொரு மாணவனும் எச்சில் துப்பிவிட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார்.  அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும்.  அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பதுதான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

பொதுவாகவே பள்ளிக் கூடங்களிலும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்ப்பந்தமுண்டு.  இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற  நியதி இருக்கிறது.  அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப்பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது.  தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரியதரிசி சொன்னார்.  ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசவேண்டியவனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்பந்தங்களுக்குள் – நிபந்தனைகளுக்குள் பேச வேண்டியவனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும்போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது.  மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகிவிடுவார்களே என்று பயப்பட வேண்டியவனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசுவதைக்கொண்டு திருப்தி அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தாய் பாஷையும் – தமிழ்ப் பற்றும்

தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார்.  அதற்காகவே பாடுபடுகிறேன் என்றும் சொன்னார்.

தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை.  அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசியபாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்று கிடையாது. அது மூடப்பற்று – மூடபக்தியே ஆகும். குணத்திற்காகவும், அக்குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும்தான் நான் எதனிடத்திலும் பற்றுவைக்கக்கூடும்.  எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.

எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் – உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன்.  அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.  மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார்களுடையது என்பதற்காக அல்ல.

தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக்காக அவன் போராட வேண்டியவனே ஆவான்.  மற்ற நாட்டு பாஷை எதினாலாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.

இன்று சில தேசியவாதிகள் அந்நியநாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள்.  இங்கிலீஷால் தீமை இல்லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன்.  இது என் அபிப்பிராய மாத்திரமல்ல.  இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லி இருக்கிறார்கள்.  அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னியில் போற்றப்படுகிறார்கள்.  ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன்.   தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம்.  ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் – எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக்கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன்.  ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.

– குடிஅரசு – சொற்பொழிவு – 06.08.1939

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *