உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலை மனதிற்கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஸ்கீம் என்ற வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில், திட்டமிட்டு மத்திய பி.ஜே.பி. அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசும் துணைபோய்க் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு வடிகால் நிலப் பகுதியா?
காவிரி கருநாடகத்தில் உற்பத்தியாகிறது என்பதற்காக மட்டும், தானடித்த மூப்பாக கருநாடகம் நடந்துகொள்ள முடியுமா? முடியாது என்பதுதான் சட்டத்தின் நிலை. ஆனால், நடப்பது என்ன? தமிழ்நாட்டை வடிகாலாகப் பயன்படுத்துவது மட்டும்தான் கருநாடகம் பின்பற்றிவரும் அழும்பும் – அக்கிரமமும் ஆகும்!
இந்தியாவில் சட்ட ஆட்சி நொறுங்குகிறதா?
நடுவர் மன்றம் சொன்னால் என்ன? ஏன், உச்சநீதிமன்றமும் கட்டளையிட்டால்தான் என்ன? அவற்றையெல்லாம் பொருட்படுத்தப் போவதில்லை என்பதில் கருநாடகமும், மத்திய அரசும் உறுதியாகவே இருக்கின்றன.
இதன்மூலம் சட்ட ஆட்சி என்பதே இந்தியாவில் நொறுங்கிப் போய்விட்டதா, இல்லையா? கடந்த ஞாயிறு (01.04.2018) அன்று தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில், இது மிக முக்கியமாக அடிகோடிட்டுச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாநிலங்களின் உரிமை என்னாயிற்று?
மாநிலங்களின் ஒருங்கிணைப்புதான் இந்தியா என்பதை மத்திய ஆட்சியும், நீதிமன்றங்களும் கேள்விக்குறியாக்கி விட்டனவே! தமிழ்நாடு பாலைவனமாவhhதற்கு எல்லா ஏற்பாடுகளும் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. எங்களைக் கால் பதிக்க இடம் கொடுங்கள் – உங்களுக்குக் காவிரி நீரைத் தருகிறோம் என்று தமிழ்நாட்டை நோக்கி இந்துத்துவா பி.ஜே.பி. ஆட்சி சொல்லாமல் சொல்லிக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் -ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்றும், மேல்முறையீடுகள் இதில் கிடையாது என்றும், திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஸ்கீம் என்ற சொல்லை வைத்துக்கொண்டு வார்த்தை விளையாட்டில் மத்திய பி.ஜே.பி. அரசும், கருநாடக மாநில அரசும் ஈடுபடுவது சிறுபிள்ளைத்தனம் அல்லவா?
அரசுகளை, நீதிமன்றங்களை நம்பிப் பயனில்லை
தமிழகம் இனி அரசுகளை நம்பிப் பயனில்லை; நீதிமன்றங்களை நம்பியும் பயனில்லை. வீதிமன்றங்கள்தான் இதற்கு விடையளிக்கும் என்ற அடிப்படையில்தான் மேற்கூறிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று முக்கிய போராட்டத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மூன்று முக்கிய முடிவுகள்
1. நாளை மறுநாள் (5.4.2018) வியாழனன்று தமிழகம் தழுவிய அளவில் முழு வேலை நிறுத்தம்.
2. தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமருக்குக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.
3. ஆளுநர் மாளிகை நோக்கி உரிமை மீட்புப் பயணம்
ஜனநாயக நெறிமுறைப்படி இம்மூன்று திட்டங்களும் தீர்க்கமான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கட்சியில்லை, வேறு பிரச்சனைகள் ஏதுமில்லை. ஒரே பிரச்சினை – தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் உரிமையைப் பெறுவதே!
தமிழ்நாடு கிள்ளுக்கீரையா?
நதிநீர்ப் பிரச்சனை என்றாலும், நீட் என்றாலும், நியூட்ரினோ உள்ளிட்ட பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் நீரோக் களுக்குத் தக்கதோர் எச்சரிக்கை அறிவிப்புப் பலகையாக, – பதாகையாக கடந்த 5ஆம் தேதி நடத்தப்பட்ட முழு வேலை நிறுத்தம், தன் முழு உருவத்தை வெளிப்படுத்திக் காட்டிற்று.
உச்சநீதிமன்றத்தின் போக்கு
உச்சநீதிமன்ற வரலாற்றில் இல்லாத ஒரு முறையற்றப் போக்கு இன்றைக்கு நடந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையே, உச்சநீதிமன்றம் தானே மறு ஆய்வு செய்வதைப்போல, வேறு திசைப் திருப்பலா?
இதில் மோடி அரசைக் கடிந்துகொள்வது போன்ற ஒரு செல்லக் கோபம் வேறு! காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பில் நடுவர் மன்றம் தலையிட்டு முக்கிய முடிவுகள் எடுக்கும், அதை வரைமுறைப் படுத்தும். இதே போல் காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்கப்பட்டால் நதிநீர் பங்கீடுகளை மேற் பார்வையிடும், மேலும் மாநிலங்களுக்கு தேவையான நீரை தேவைக்கேற்ப பகிர்ந்து கொடுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் என்பது ஒரு அதிகாரமிக்க அமைப்பாக இருக்கும். இதுதான் ஸ்கீம். இதிலே ஸ்கீம் என்கிற வார்த்தையைத்தான் முழுமையாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்பொழுது இதில் புதிதாய் என்ன விளக்கம் தேவைப்படுகிறது? இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்துவிட்டு, இப்பொழுது என்ன விளக்கம்? இது எவ்வளவு பெரிய மோசடி? எனவே, மக்களை நம்புவதைத்தவிர, இனி யாரையும் நம்பிப் பயனில்லை! ஏற்கனவே 6 வாரகால அவகாசத்தை அலட்சியப்படுத்திவிட்டு, இறுதி நேரத்தில் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகிய நிலையில், அச்செயலுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், மே 3ஆம் தேதிவரை மீண்டும் கால அவகாசம் தந்தது எப்படி நியாயமாகும்? அதுவும் பற்றி எரியும் மாநிலப் பிரச்சனையில் இப்படி காலங்கடத்துவது எப்படி சரியாகும்? காவிரி பிரச்சனை வெறும் நீர்ப் பிரச்சனை அல்ல. அது மாநில உரிமை, வாழ்வாதாரப் பிரச்சனை. இதில் அனைத்து அமைப்புகளும் மக்களும் ஒருமித்த உணர்வோடு ஒற்றுமையாய் ஓயாது போராடி நம் உரிமையை வென்றெடுக்க வேண்டியது நமது கட்டாயக் கடமையாகும்!
– கி.வீரமணி,
ஆசிரியர், உண்மை