பெரியார் பேருரை
பெரியார் அவர்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி, பலதரப்பட்ட அறிஞர்கள் பேசக்கூடிய இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் பொறுமையோடு சொற்பொழிவு களைக் கேட்க வேண்டுமென்றும், அனைவரும் அமைதியாக நடந்துகொள்ள வேண்டுமென்றும், தமக்குப் பிடிக்காதது பேசப்பட்டாலும் எதையும் பொறுமையோடு கேட்டும், பிறகு சிந்தித்துப் பார்த்து அதன் பிறகு ஏற்படும் முடிவுபடி நடந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.
நண்பகல் 12 மணி சுமாருக்கு முடிவுற்ற பெரியார் அவர்களின் வரவேற்புரைக்குப் பின்பு திருச்சி வழக்கறிஞர் தோழர் தி.பொ.வேதாசலம் அவர்கள் முன்மொழிய முஸ்லிம் தோழர் பாவலர் அப்துல்காதர் அவர்களும், தோழர் டி.கே.நாராயணசாமி நாயுடு அவர்களும் தொடர்ந்து பின்மொழிய நீண்ட கைத்தட்டலுக்கிடையே பன்மொழிப் புலவர் தி.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தலைமை ஏற்றார். அவர் தம் தலைமையுரையில் வள்ளுவர் புலவர் உலகத்திலே இதுகாறும் வாழ்ந்தது போதும். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழிக்கிணங்க வெறும் மேற்கோளுக்காக மட்டுமே இதுகாறும் புலவர்களுக்கு நம் குறள் பயன்பட்டு வந்தமை இப்போதேனும் மாய்ந்து போகட்டும்! கிறிஸ்தவன் ஒவ்வொருவனுக்கும் விவிலிய நூல் (பைபிள்) எப்படியோ, அதுபோல திருக்குறளும் தமிழனது திருமறை நூலாக விளங்கும் வாய்ப்பை அடையட்டும். மக்களெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும் என்ற ஒரு கருத்தையே அடிப்படையாகக் கொண்டு பண்டைய தமிழனாகிய வள்ளுவனால் எழுதப்பட்ட நூல் பாமரர்களுக்கும் இனி பயன்படட்டும். அமெரிக்க பேரறிஞர் வெண்டல் வில்கி அவர்கள் விரும்பிய ஒரே உலகம் நம் திருக்குறள் மூலமேனும் இனிது வந்தடையட்டும் என்று குறிப்பிட்டார்.
அனுபவ உண்மைகள் நிறைந்த குறள்
மேலும், திருக்குறளின் பலவான பெருமைகளை விளக்கிக் கூறுமுகத்தான் தலைவர் அவர்கள் திருக்குறள் எந்த மதச்சார்பும் அற்ற நூல் எனவேதான் எல்லோரும் எல்லாக் காலத்திலுமே தமக்கேற்புடைத்து, தமக்கும் திருக்குறள் ஏற்புடைத்து என்றுப் போற்றிப் பாராட்டி வந்திருக்கின்றனர். திருக்குறள் பெரும் பெரும் அனுபவ உண்மைகளைக் கொண்டிருப்பதால் தான் முடிஅரசு காலத்தில் எழுதப்பட்ட நூலாயிருந்தும்கூட இன்றைய ‘குடிஅரசு’ காலத்திலும், அது நம்மால் போற்றப்பட்டு வருகிறது. அழகிய அறப்பாக்களுடனும், அறிவு சான்ற பொருட்பாக்களுடனும் குறள் மிளிர்வதோடு, இலக்கியச் சுவை மிக்க இன்பப் பாக்களும் குறளை வெகுவாக அழகு செய்கின்றன. மேலும், சமுதாயத் தொண்டு செய்வதற்கு இனியதோர் தூண்டுகோலாகவும் திருக்குறள் அமைக்கப் பெற்றிருக்கிறது என்று கூறியதோடு, வானளாவிப் பறக்க வான ஊர்தி கண்ட மனிதனால், கடலின் ஆழத்திலெல்லாம் ஊடுருவிச் செல்லும் கப்பலைக் கண்டுபிடித்த மனிதனால், அனைத்தையும் அழிக்கவல்ல அணுக்குண்டையும் கண்டுபிடித்த மனிதனால் எதைத்தான் சாதிக்க முடியாது. எனவே, ஆற்றலுண்டு உங்கள் யாவருக்கும். அவ்வாற்றலைத் துணைகொண்டு வள்ளுவர் தந்த தமிழ் நூலாகிய திருக்குறளை மக்களுக்கெல்லாம் எடுத்து ஓதுங்கள். மனிதத் தன்மையில் அனைவருக்கும் பற்றுதல் ஏற்படப் பாடுபடுங்கள். எதிர்காலமேனும் இன்ப வாழ்வாக, அன்பு வாழ்வாக இருக்க அனைவரும் பாடுபடுங்கள் என்றும் குறிப்பிட்டார். சரியாக 1.15 மணிக்கு தலைமையுரை முடியவும் மாநாடு நண்பகல் உணவுக்காக கலைந்து மறுபடி 3.30 மணிக்கு கூடியது.
பிற்பகல் நிகழ்ச்சி
தலைவர் வர சற்று காலதாமதம் ஆனதால் தோழர் எஸ்.முத்தைய முதலியார் அவர்களை தற்காலிக தலைவராகக் கொண்டு மாநாடு மறுபடியும் 3.30 மணிக்கு இனிது துவக்கமாகியது.
திருக்குறள் முனுசாமி சுவைமிக்கப் பேச்சு! தலைவரின் முன்னுரைக்கு பிறகு தோழர் திருக்குறள் முனுசாமி அவர்கள் திருக்குறளை நன்கு படித்து தெளிவாகத் தெரிந்து கொள்வது எப்படி என்று நகைச்சுவைத் ததும்ப அரிய சொற்பொழிவாற்றினார்கள். அச்சொற்பொழிவில் திரு வள்ளுவர் சொற்களை மிகவும் வரம்பு காட்டியும் கையாண்டிருக்கிறார் என்றும், எனவே ஒவ்வொரு குறளையும் நன்கு படித்து மனப்பாடம் செய்து அவற்றின் பொருளை உரையாசிரியர் மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல், தன் அறிவு கொண்டே சிந்தித்துப் பார்த்துத் தெளிவுபெற முயற்சிக்க வேண்டுமென்றும், குறளில் கையாளப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் விரிவான அர்த்தம் குறளிலேயே ஏதாயினும் ஓர் இடத்தில் கொடுக்கப்பட்டே இருக்கிறதென்றும் பல உதாரணங்களோடு விளக்கிக் கூறினார்.
தலைவருள் தலைவர்
சுமார் 4.15 மணிக்கு திரு.தி.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் வந்து தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டதும், பெரும் புலவர் திரு. டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்கள் அறப்பாலில் கூறப்பட்டுள்ள பாக்களில் பலவற்றை ஓதி, வள்ளுவர் பெருமை தெற்றென விளங்கும்படி அவற்றில் புதைந்து கிடக்கும் பா நயத்தையும், பொருட் செறிவையும் எடுத்துக்கூறி வள்ளுவர் கூறியுள்ள சிறப்பான பண்புகளைக் கடைப்பிடித்து நடந்து வருவதன் மூலமே எவனும் முன்னேற்றம் அடைதல் கூடும் என்பதை நன்கு விளக்கிக் காட்டியும், தலைவருள் தலைவனும் புலவருள் புலவனும் ஆன வள்ளுவர் தமிழ்க்கலையுள்ள ஓர் ஒப்பற்ற கலையாக திருக்குறளை இயற்றிக் கொடுத்துள்ளமையை வாழ்த்திப் பாராட்டி கூறி, அன்னாரின் திருக்குறளை யாவரும் மாசறக் கற்றல் வேண்டும். அதன்படி நடத்தலும் வேண்டும் என்று கூறி திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்கள்.
இப்படி அனைத்து தமிழறிஞர்களும் கலந்துகொண்ட மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ் உயர, திருக்குறள் பரவ பாடுபட்டவர் பெரியார்.
வள்ளுவரும் பெரியாரும்
விருதுநகர் செந்தில்குமாரர் நாடார் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு.சி.இலக்குவனார் அவர்கள் இதனை இதனால் இவன் முடிக்குமென்று அதனை அதனால் அவன் கண் விடல் என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி, அதற்கு சிறப்பை உண்டாக்கித் தர இப்பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறதென்றும், இயற்கைகூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்கு பெருமை தருவதாகும் என்றும் எடுத்துக்கூறி, ஒன்றிரு புலவர்கள் தமிழனுக்கு தகுதியான நூல்கள் கம்பராமாயணமும், திருக்குறளும் என்று கூறி வருவது ஏற்புடைத்தல்ல என்றும், கம்பனையும், வள்ளுவனையும் ஒப்பிடுவது பாம்பையும் பசுவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகும் என்றும் உதாரணங்களோடு விளக்கிக்காட்டினார். மேலும் பேசுகையில், அவர் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றும், உழவர்க்கு எஞ்ஞான்றும் ஒப்பார் இல் என்றும் உழைப்பாளிகளைப் போற்றியிருக்கின்றமை மார்க்ஸிஸத்தையே குறிப்பதாகும் என்றும், மார்க்ஸிய கொள்கைகளை விளக்க ஒரு லெனின் தோன்றியது போல் வள்ளுவருடைய கருத்துக்களுக்கு விரிவுரை வழங்க நமது பெரியார் அவர்கள் தோன்றியுள்ளார். எனினும் அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போதுகூட வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதியிருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச்சார்பு அற்ற சர்க்காராக நிலவ வேண்டுமானால் திருக்குறளை அதற்கு ஏற்ற வழிகாட்டி என்று கூறி பழந்தமிழனான வள்ளுவர், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக்காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று கூறினார்.
தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு
இரண்டாம் நாள் (16.01.1949) நிகழ்வுகள்
சென்னை, ஜன.16 இன்று காலை 9.30 மணிக்கே திரு.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்கு வந்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினார்கள்.
(தொடரும்…)