2009 இல் முடிந்த ஈழ இனப்படுகொலைப் போரின் பின்னர், ஒட்டுமொத்த ஈழமும் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. ஈழத் தமிழ்மக்களின் வீடு, பள்ளிக்கூடம், கோயில், தெருக்கள், காடு, கடல் என்று எங்கும் இராணுவம்தான். 2009ஆம் ஆண்டிலிருந்து சிங்களப் படைகளிடம் வீழ்ந்த ஈழ நிலத்தை மீட்பதற்காக கிராமம் கிராமமாக ஈழ மக்கள் போராடி வருகிறார்கள்.
அவற்றுள் ஒரு கிராமம் கேப்பாபுலவு
கேப்பாபுலவு, ஈழ இனப்படுகொலை நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின், நந்திக் கடலோரமாக அமைந்திருக்கும் கிராமம். வளமான நிலம். கடல் வளமும் நில வளமும் ஒருங்கே கொண்ட பூமி. இந்தப் பகுதியில் 500 ஏக்கர் காணிகளை சிங்களப் படைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மக்கள் காலம்காலமாக வசித்த நிலப்பகுதிகளை பறித்துக் கொண்டு, காடுகளை அழித்து முகாம்களை அமைத்து அங்கு மக்களை குடியேற்றியது இராணுவம்.
தங்கள் சொந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ள இராணுவத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தார்கள். தங்கள் நிலத்தை விடுவிக்க வேண்டும் என்று ராஜபக்சேவுக்கும் பின்னாளில் மைத்திரிபால சிறீ சேனாவுக்கும் கோரிக்கைக் கடிதம் எழுதினார்கள். ராஜபக்சேவின் காலத்திலேயே இராணுவ முகாமை முற்றுகையிட்டு, போராட்டம் ஒன்றையும் இந்த மக்கள் நடத்தியிருந்தார்கள்.
ஒன்பது ஆண்டுகளாக தங்கள் சொந்த நிலத்தைப் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்கள் போராட்டம் நடத்தியும், கேப்பாபுலவை விட்டு வெளியேற மாட்டோம் என்று இராணுவம் கூறிவிட்டது. இராணுவத்தை விலக்கிக் கொள்ள மாட்டோம் என்று சிங்கள அரசும் கூறிவிட்டது. ஆனாலும் மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை.
கேப்பாபுலவைச் சேர்ந்த 84 பெண்களும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் தங்கள் நிலத்தை மீட்க தொடர் போராட்டத்தில் இறங்கினார்கள். சிங்கள கடற்படை முகாமாக்கப்பட்ட தங்கள் நிலத்தின் வாசலில் கூடாரங்களை அமைத்துக் கொண்டு இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஓரிரு நாளில் மக்கள் சோர்வடைந்து போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று நினைத்தது சிங்கள அரசு.
மக்கள் என்ன செய்தாலும் இராணுவத்தை அகற்ற மாட்டோம் என்று சிங்கள அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கூறினார்.
ஆனால், பனி, கடும் வெயில், மழை என்று எல்லாவற்றையும் கடந்து அந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நிமிடம்கூட இருக்க முடியாத அந்தக் கூடாரங்களில் முப்பது நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார சேவை நிறுவனம், பள்ளிக் கட்டிடங்களை இராணுவ முகாமாக்கித் தங்கியுள்ள சிங்கள விமானப்படை மக்களைப் புகைப்படம் பிடித்து அச்சுறுத்தியது. தங்களைப் புகைப்படம் பிடித்த இராணுவத்தைத் தாங்களும் புகைப்படம் பிடித்தனர் பெண்கள்.
தங்கள் நிலத்தை மீட்காமல் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் தங்களைக் கொன்றால் குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் ஈழப் பெண்கள் எச்சரித்தனர். சிறுவர்கள் பாடசாலை செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வடக்கு மாகாணப் பாடசாலை சிறுவர்கள் அனைவரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் குதித்தனர். அத்துடன் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக ஈழமெங்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிங்கள மக்கள் சிலரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
கேப்பாவுலவை விடுவிக்காமல் உடும்புப் பிடியாய்ப் பிடித்திருந்த சிங்கள அரசு அந்த மக்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சியது. மக்களின் முப்பது நாள்கள் போராட்டத்தின் பின்னர் மக்களின் காணிகளிலிருந்து சிங்கள விமானப்படை வெளியேறியது. மக்கள் வெற்றிக் களிப்போடு தங்கள் பூர்வீக நிலத்தில் காலடி எடுத்து வைத்தனர்.
ஆர்த்தெழும் மக்கள் முன் ஆட்சியாளர்கள் எம்மாத்திரம்! என்று தமிழ்ப் பெண்கள் உலகிற்கு உணர்த்தினர்!