– மு.நாகேந்திர பாபு
(மனிதவள மேம்பாடு)
சென்ற இதழ் தொடர்ச்சி…
நாடாளுமன்ற (2006) செய்திக் குறிப்பில் “இந்தியாவில் நீரியல் சுழற்சி மூலம் கிடைக்கும் மொத்த மழை அளவு 4 இலட்சம் கோடி கனமீட்டராகும். அதில் 1,12,300 கோடி கனமீட்டர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.’’ ‘தமிழக பொதுப்பணித்துறை’ செய்திக் குறிப்பில் “மழை மூலம் பெறப்படும் நீரில் 170 டி.எம்.சி. (1 டி.எம்.சி = ஆயிரம் மில்லியன் கன அடி நீர்) தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது’’. தமிழக அரசு 2009இல் முன்வைத்த ‘வெள்ள நீர் கால்வாய் திட்டத்தின்’ செய்திக் குறிப்பில் “மழைக் காலங்களில் தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளிலிருந்து சுமார் 50 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது’’. ஆய்வொன்றின்படி, ‘சொட்டு சொட்டாக நீர் சிந்துமானால் அதன் அளவு ஒரு நாளைக்கு 60 லிட்டர் என்ற அளவில் இருக்கும்’ என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
‘இரண்டு கி.மீட்டர் பரப்பளவில் 6 குளங்கள் வெட்டிவிட்டேன்; இனி அதற்குள்ளாக விழும் அவ்வளவு தண்ணீரையும் சேர்க்கப்போகிறேன்’ என்று சொல்லுவது எவ்வளவு அபத்தமானாதோ அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். தமிழகத்தைப் பொருத்தவரையில் இனி நதிநீரை நம்பி இருப்பது பயன் தராது; அதற்கு மாற்றானது தான் மழை வளம். நீரில் கொதித்தல் செயல் நீர் முழுமையாக நிகழ்வதாகவும், ஆவியாதல் என்பது நீரின் மேற்பரப்பில் மட்டுமே நிகழ்வதாக இருக்கிறது. மழை நீர் ஆங்காங்குக் குட்டைகளாகத் தேங்கிவிடுவதால் ஏற்படும் அதிகப்படியான ஆவியாகும் பரப்பைக் குறைக்க வேண்டும். நீர்பரப்பு குறையும்போது வெப்ப ஏற்பின் அளவும் குறைந்து ஆவியாதலும் குறைகிறது. குழியான மற்றும் பரந்தப் பரப்பில் என இருநிலைகளிலும் வைக்கப்பட்ட சம அளவிலான நீரில் முதலில் ஆவியாவது பரந்த பரப்பிலான நீராகவே இருக்கிறது. இனி மழை நீருக்கு என்று தனியாக ஒரு வழித்தடத்தை உருவாக்க முடியாது. இருக்கும் ஒரே இணைப்பு சாக்கடைகள் தான். சாக்கடைத் தடங்களை மழை நீருக்குப் பயன்படுத்த முடிவு செய்து சாக்கடைகளை சாலையில் விட்டுவிடவும் முடியாது. ஒரு புது முயற்சி இரண்டையும் இணைத்து நிலத்தடி நீராக மாற்றிப் பயன்படுத்தப் பார்ப்போம்’.
இயல்பான தட்ப வெப்பநிலையில் நீரானது சுவையற்ற, மணமற்றதொரு திரவமாகும், குறைந்த அளவுகளில் நீர் நிறமற்று தோன்றினாலும், நீரும் பனிக்கட்டியும் உள்ளார்ந்த வெளிர் நீல நிறத்தை உடையவை. நீர் பலவிதமான பொருட்களைக் கரைத்து அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும், வாசனைகளையும் கொடுக்கிறது. உப்புகள், சர்க்கரைகள், அமிலங்கள், காரங்கள், வாயுக்களில் ஆக்சிஜன் மற்றும் கரியமில வாயு மற்றும் புரதங்கள், டி.என்.ஏ., கூட்டுச் சர்க்கரைகள் (பாலிசேக்கரைடுகள்) என செல்களின் அனைத்துக் கூறுகளும் நீரில் எளிதில் கரையும் தன்மையுடையனவாக இருக்கின்றன. நீர் ஒரு மிகச் சிறந்த கரைப்பான்; கரைக்கப்படும் பொருள் எதுவாயினும் நீர் முழுமைக்குமாகக் கரைகிறது. கரைக்கப்படும் பொருளின் அளவுக்கு ஏற்ப கரைக்கும் பொருள் ஆதிக்கத்தை இழக்கிறது. கடலில் கரைத்த பெருங்காயம் என்பது அதன் பரப்பின் வலிமையைப் பறைசாற்றுவதே. விஷம் வீரியம் குறைந்தது கலக்கப்படும் நீரின் அளவைப் பொருத்தது. சாக்கடைகளை மட்டும் சேர்க்கப் போவதில்லை, அதோடு மழை நீரைஅதிகமாக சேர்க்கப் போகிறோம். கூவம் நதியைக் கரைபுரண்டு ஓடச் செய்தால் அது ‘சாக்கடை’ என்றப் பெயரை இழந்துவிடும். சமைத்ததில் உப்பு கொஞ்சம் அதிகமாய் போனதால் உணவென்ன குப்பைக்கா போனது? அளவைக் குறைக்க கூடுதல் தண்ணீர்; அவ்வளவுதான். மழை நீர் சேகரிப்பு அமைப்புகளில் நிரம்பிய நீர் போக உபரி நீரும் சாக்கடைகள் வாயிலாக அருகில் உள்ள நீர்நிலைகளில் சேர்க்கப்பட வேண்டும். குடிநீருக்கு, விவசாயத்திற்கு, பிற தேவைகளுக்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நீர்நிலைகள் பிரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்துள்ளன. அதே போன்றதொரு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீரை உறிஞ்சுவதில் ஒரு காய்ந்த மற்றும் ஈரமான பஞ்சுக்கு இடையேயான வித்தியாசம் உணர்த்திவிடும்; இன்று மேற்கொள்ளும் பல முறைகள் நிரந்தரத் தீர்வாகாது என்பதற்கு. இந்த வித்தியாசம் இல்லாமல் இருந்துவிடுமானால், என்றைக்கும் ஏரி குளங்கள் வற்றியே இருக்கும். எந்த ஒரு பருப்பொருளும் தனக்கெனத் தனித்த நீர் ஏற்புத்திறனைக் கொண்டிருக்கும். பூமியிலிருந்து எடுக்கப்படும்போது தான் அதில் நிரப்பப்படுவதற்கு இடம் கிடைக்கும். நிலத்துக்குக் கீழே 250 அடி ஆழத்தில் நீர் கிடைத்தாலும் ஊற்றும் நீரையெல்லாம் பூமி உடனே உற்ஞ்சி விடாது. கடற்கரையை ஒட்டிய பகுதிகளைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை சென்று நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவது என்பது மிகச் சரியான அணுகுமுறை.
பள்ளங்களை நிரப்பியதாக கடல் இல்லை; மாறாக மேடுகளில் உருக்கொண்டிருப்பதாக நிலங்கள் உள்ளன. பொதுவாகவே பூமியின் மேற்பரப்பு மேடு பள்ளங்கள் நிரம்பியது. அடிப்படையில் பாதுகாப்பனதும், எளிமையானதும் என்பதால் பள்ளமானப் பகுதிகள் கண்டறியப்பட்டு அவைகள் நீர்நிலைகளாக மாற்றப்பட வேண்டும்.
“குளந்தொட்டு வளம்பெருக்கிப்’’ -_284 பட்டினப்பாலை
பொருள்: தூர்ந்துப்போனக் குளங்களைத் தூர்வாரி நீர்வளம் பெருக்கி நாட்டின் செல்வ வளத்தைப் பெருக செய்தான். பாடியவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார், பாடப்-பட்டதன் பொருள்: சோழன் செய்த சிறப்பு.
நீர்நிலைகளின் கரைகளைக் கான்கிரிட் கொண்டு பலப்படுத்துவதை விடவும் வண்டல் மண், மணல் மற்றும் களிமண் (1:3:2) என்ற விகிதத்தில் அமைப்பதும்; அதன் உச்சியை அகலப்படுத்தி மரம், செடிகளை வளர்ப்பதும் கரையைப் பலமுள்ளதாகவும், வேகமாக நிலத்தடி நீராக மாற வாய்ப்புள்ளதுமான முறையாகும். முதல் நிலைச் சுத்திகரிப்பில் சிறியது, பெரியதான மூன்றடுக்கு சல்லடைப் பரப்பில் கழிவுநீரை ஓடவிட்டு அதன் கடைசியில் சிறிய அளவிலான வலைப்-பின்னலை 450 குறுக்காக அமைத்து அதில் எஞ்சியவை நீர்நிலைக்கு வெளியே சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்த வேண்டும். வண்டல் மண்ணில் 10-_40 சதவீதம் வரை நுண்துளைகள் உள்ளன. சராசரியாக 100 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் உள்ள மணல்பரப்பானது தனக்குள் சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் திறன் கொண்டது. களிமண் பரப்பில் நீர் கசிவது மெதுவாக இருக்கும். குப்பைக் கூளங்களோ, பாசிகளோ அல்லது நீர் தாவரங்களோ மேற்பரப்பை மூடி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தெளிந்த வண்ணம் இருக்கும்போது நீர்த் தாவரங்கள் சூரிய ஒளியைப் பெற்று நீருக்குள்ளேயே வாழ முடிகிறது. ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் என எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஒன்று நிரம்பும்போது அதன் உபரி நீர் மற்றொன்றை அடைய வழி ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைக்கான வழித்தடங்களைச் சென்டிமீட்டர் சென்டி-மீட்டராக ஆழப்படுத்திக்கொண்டே போக வேண்டும் என்று அறிவுரையெல்லாம் சொல்லப்போவதில்லை. இயற்கை அதை ஏற்கனவே நேர்த்தியாக செய்துவிட்டது.
சுற்றியுள்ளப் பகுதிகளில் பொழியும் மழை நீர்நிலைகளைச் சென்று அடைவதில் செயற்கையாகத் தடைசெய்த வழிகளைக் களைந்துவிட்டால் போதும். “கடல் மட்டத்திலிருந்து X1 மீட்டர் உயரத்தில் நீர் இருந்தால் கடல் மட்டத்திற்குக் கீழ் 40 மீட்டர் வரை நல்ல நீராக இருக்கும்’’ என்பது ‘ஹைபென் ஹெர்ஸ்பெர்க்கின்’ விதியாகும். நீர்நிலைகளை ஒட்டி ஆழ்துளைக் கிணறு அமைத்து அதிலிருந்து நீர் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். தரிசாக விடப்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயம் அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். மரம், செடி, கொடிகள் மண்ணை இளக்குகின்றன. அதனால் மேல்மட்ட நீர் எளிதாக உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது. ஆறுகளிலிருந்து மணல் அள்ளுவதற்கு மாற்றாகக் கடலிலிருந்து அள்ளுவதும், ஆற்றின் கழிமுகங்களை ஒட்டி அள்ளுவதும் சரியானதாக இருக்கும். பிரம்மாண்டமான அளவுக்கு ஆழப்படுத்தப்-படுவதால், அதனை நீர்வழிப்பாதைகளாகவும் பயன்படுத்த முடியும். நதிகளுக்கு குறுக்காகத் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். திடக்கழிவுகளைப் பெருக்கி குவிப்பதற்கு மாற்றாக பொறுக்கி எடுத்து மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். திறந்த முறை சாக்கடை என்பது பாதாள சாக்கடைகளைவிட கையாளச் சரியானது.
சுத்திகரிப்பான்கள்
பொட்டாஷ் படிகாரமும், சுண்ணாம்பும் சேர்க்கப்படும்போது அவை நீரில் உள்ள மாசுப்பொருட்களைத் திரித்துவிடுகின்றன. இதனால் கசடுகள் ஒன்றுசேர்ந்து துகள்களாகி நீர்க்கலனின் அடியில் படிந்துவிடுகின்றன. தேத்தாங்கொட்டை கன உலோகங்களை (காட்மீயம், காரியம்) பிரிக்கிறது மற்றும் அவசியமில்லாதத் தாதுக்களை நீக்குகிறது. வண்டல் படிமமானது துரு மற்றும் கால்சியம் கார்பனேட் உள்ளிட்ட துகள்களை நீக்குகிறது. கழிவு நீரில் இருக்கும் உப்பை வேலிக்காத்தான் முள் பிரித்தெடுக்கிறது. ரோகுக்கெண்டை, மிர்கால்கெண்டை மற்றும் கட்லாகெண்டை வகையான மீன்கள் கழிவு நீரில் உள்ள கசடுகளை உண்டு வளர்கின்றன. வாழைப்பழ தோல் உலோக நச்சுப் பொருட்களைத் தன்னகத்தே உறிஞ்சிக்-கொள்ளும் தன்மைக் கொண்டதாக இருக்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புறஊதாக்கதிர்கள் பாக்டீரியா, ஈகோலி வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. திலேப்பியா மொசாம்பிகா, கம்பூசியா, சன்னா ஸ்ட்ரையேட்டஸ் வகையான மீன்கள் மனிதர்களுக்கு நோய் பரப்பும் நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன. வாத்துகள் நீர்நிலைகளில் மீன் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் பூச்சி மற்றும் நத்தையினங்-களை உட்கொள்கின்றன.
குடிநீரில் 1 பார்ட் பெர் மில்லியன் (PPM) என்ற அளவிலும், மற்ற பயன்பாடுகளில் 1-_2 பார்ட் பெர் மில்லியன் (PPM) என்ற அளவிலும் பயன்படுத்தப்படும் குளோரின் நோய் ஏற்படுத்தும் உயிரிகளைக் கொல்கிறது. முருங்கை விதை நீரில் உள்ள தேவையற்ற பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் போன்ற நுண்ணுயிர்களையும் மற்றும் வேதிப்பொருட்களையும் அழிக்கிறது. உமியின் சாம்பல் (Activated Carbon) நோய் உண்டாக்கும் கிருமிகளை அழித்து நீரைத் தூய்மைப்-படுத்துகிறது. அவரை விதை நீரின் கலங்கல் தன்மையை நீக்குகிறது. ஒரு கார்பன் (கரி) வடிகட்டி கரிம வேதிப்பொருட்களை மற்றும் குளோரினை நீக்குகிறது. குறிப்பாக சவுக்கு கரி நீரில் உள்ள நச்சு வாயுக்கள் மற்றும் துர்நாற்றத்தை உறிஞ்சுவதுடன் மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. வெட்டி வேர் நீரில் உள்ள துர்நாற்றத்தை நீக்குகிறது. பசுவின் சாணம் துர்நாற்றத்தைப் போக்குகிறது. தண்ணீரில் காணப்படும் நோய் பரப்பும் பாக்டீரியா கிருமிகளை தெளிவாக வடிகட்டி தண்ணீரைச் சுத்தப்படுத்தும் திறன் மணலுக்கு உண்டு. ஒரு இடத்தில் தேக்கி வைக்கப்படும் மணலின் அளவுக்கேற்ப அந்த இடத்தில் காணப்படும் தண்ணீர் மிகவும் தெளிவாகவும், நோய் தொற்று கிருமிகள் நீங்கியும் காணப்படும். வேம்பு வயிற்றுப் பூச்சியை நீக்குகிறது மற்றும் மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது. ஸீ