பால் பருகுவது நல்லதா?

ஜூலை 01-15

எல்லா உயிரினங்களும் அதன் தாயினுடைய பாலைத் தவிர மற்ற எந்த உயிரினத்தின் பாலையும் அருந்துவது இல்லை. ஆனால், மனிதன் மட்டும்தான் மற்ற உயிரினங்கள் தங்களின் கன்றுகளுக்காகச் சுரக்கும் பாலையும் விட்டுவைக்காமல் குடிக்கிறான்.

குழந்தையின் உடலில்தான் பாலை செரிக்க  வைக்கக்கூடிய நொதிகள் இருக்கும். குழந்தைகளுக்கு ஏழு மாதத்தில் இருந்து மூன்றுவயது வரை கறவைப் பால் கொடுக்கலாம். மூன்று வயதுக்கு மேல் அந்நொதிகள் நம் உடலில் இருக்காது. எனவே, பால் என்பது கு£ந்தைப் பருவத்துக்கு மட்டுமே போதுமானது.

பாலில் கிடைக்கக்கூடிய சத்துக்கள் பிற உணவுகளிலும் கிடைக்கும்போது பாலை சத்துக்காகத் தேர்வு செய்யத் தேவையில்லை.

ஒரு நாளைக்கு 1,000 மில்லி கிராம் கால்சியம்தான் நமது உடலுக்குத் தேவை. பூமிக்கு அடியில் வளரும் எல்லா கிழங்கு வகைகள் மற்றும் கீரைகள், கம்பு, கேழ்வரகு, நீர்மோர் போன்றவற்றில் பாலில் இருக்கும் கால்சியம் இருக்கிறது. குறிப்பாக, ஒரு கப் மோரில் 260 மில்லி கிராம் கால்சியம் கிடைக்கும். எனவே, ஒரு நாளைக்கு 2 கப் மோருடன் காய்கறிகள், கிழங்குகள், கீரைகள் சேர்த்துச் சாப்பிடும்போது, நம் உடலின் கால்சியத் தேவை பூர்த்தி செய்யப்படும்.

உடற்பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைத் தவிர்க்க, பாலையும் தயிரையும் தவிர்த்து மோராக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, பெற்றோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், அந்த சந்ததியினர் பாலைத் தவிர்ப்பதே நல்லது. சிறுமிகள் மிக இளம் வயதில் பூப்படைதல், சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்சினைகளுக்கு உடலின் தேவைக்கும் அதிகமாகப் பால் சாப்பிடுவதே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

“டீயில் பால் கலக்காமல் குடித்தால், அந்தத் தேயிலையின் அத்தனை பயனும் கிடைக்கும்.’’

“மூன்று வயதுக்கு மேல் பால் தேவையில்லை. கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு, கூடுதலாக கால்சியம் தேவை என மருத்துவர் சொல்லும்போது மட்டும், அவர்கள் பால் அருந்தலாம். அதாவது, உணவாக வேண்டாம்… மருந்தாக மட்டும் போதும் பால்!’’.

பால் இல்லை… இதயத்தில் கொழுப்பில்லை!

“இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், சிறு வயதில் இருந்தே அமதிகமாகப் பால் சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வர அதிகளவில் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் இருக்கும் ‘மசாய்’ என்ற பழங்குடியினர், தாய்ப்பாலுக்குப் பின் வேறு எந்தப் பாலையும் அருந்தமாட்டார்கள். அவர்களில் யாருக்கும் இதயத்தில் கொழுப்புப் படிதல் இல்லை. அதற்குக் காரணம் பாலிடம் இருந்து அவர்கள் விலகி இருந்ததே என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்!’’ என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.

செயற்கைப் பால் தெரியுமா?

“வடஇந்தியாவில் செயற்கைப் பால் பிரபலம். யூரியா, வெஜ் ஆயில், சர்க்கரை, காஸ்டிக் சோடா, சோப்பு அல்லது ஷாம்பு…. இவற்றைச் சேர்த்தால் செயற்கைப் பால் கிடைக்கும். பார்ப்பதற்கு பால் போலவே இருக்கும், எந்த வித்தியாசமும் தெரியாது. இதைக் கறந்த பாலுடன் கலந்துவிடுவார்கள். இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் முயற்சியாக, ஹரியானாவின் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம், வீட்டிலேயே பாலை பரிசோதனை செய்துகொள்வதற்கான ஒரு ‘கிட்’டை கூடிய விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். தமிழகத்தில் செயற்கைப் பால் புழக்கம் மிகக் குறைவே என்றாலும், இல்லாமல் இல்லை!’’ என்கிறார் ‘ஆவின்’ தரக்கட்டுப்பாட்டு துணைப் பொது மேலாளர் சங்கர்.

பாலில் நடக்கும் கலப்பட வேலைகள்!

அவர் மேலும் கூறுகையில்,
“முன்பெல்லாம் பாலில் கலப்படம் என்றால், அது தண்ணீர்க் கலப்படம் என்ற அளவிலேயே இருந்து வந்தது. அப்படித் தண்ணீர் கலக்கும்போது பாலின் அடர்த்தி குறைந்து சுலபமாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்பதால் அதற்குத் தீர்வை யோசித்தார்கள் கலப்படக்காரர்கள். விளைவு, தண்ணீர் கலந்த பாலின் அடர்த்தியை மீண்டும் கூட்டிக்காட்ட சர்க்கரை, உப்பு, சோயா மாவு/ஸ்டார்ச் மாவுப் பொருட்களின் கலவை, யூரியா உள்ளிட்ட ரசாயனங்கள் வரை பாலில் கலக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் கொழகொழப்புத் தன்மையைக் கூட்ட சோப்புக் கரைசல் மற்றும் காஸ்டிக்சோடோ போன்ற ரசாயனப் பொருட்களை சேர்க்கின்றனர். பாலை கெடாமல் வைக்க ஹைட்ரஜன் ஃபெராக்சைடு மற்றும் கலப்படப் பொருட்களால் அதிகரிக்கும் பாலின் புளிப்புத் தன்மையைக் குறைக்க சலவைக்கு பயன்படுத்தப்படும் வாஷிங் சோடா கலக்கின்றனர். இந்தக் கலப்படங்களை எல்லாம் பொதுமக்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

ஆவின்… 19 சோதனை!

‘ஆவின்’ பாலைப் பொறுத்தவரை, கூட்டுறவு சங்கங்கள், குளிரூட்டும் நிலையங்கள், மாவட்ட மற்றும் மாநில பால் தலைமை நிலையங்கள் என மூன்று கட்டங்களில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மேலும் 19 வகையான ஃபிஸிக்கல், கெமிக்கல், பயாலஜிக்கல் பரிசோதனைகள் செய்து தரக் கட்டுப்பாடு நிலையத்தில் சான்றிதழ் கொடுத்த பின்தான் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்படும். ஆனால், வழிமுறைப்படுத்தப்படாத (Unorganised Sector) விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாகப் பொதுமக்கள் வாங்கும்போது, பாலில் செய்யப்படும் கலப்படத்தைத் தடுக்க எந்தக் கண்காணிப்பும் இல்லாமல் போகிறது’’ என்று உண்மை நிலையை எடுத்துச் சொன்னார்.

ஆரோக்கியப் பிரச்சினைகள்!

பாலில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்களால் உடலுக்கு நேரும் பிரச்சினைகளைப் பட்டியலிடுகிறார், சென்னையைச் சேர்ந்த மூத்த ஊட்டச்சத்து நிபுணர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

“பாலில் கலக்கப்படும் தண்ணீர் சுத்தமற்றதாக இருந்தால், கொதிக்க வைத்த பின்னரும் சில கிருமிகள் அழியாமல் இருக்கலாம். மாட்டுக்கு மற்றும் பால் கறப்பவருக்கு ஏதாவது நோய் இருந்தால், அந்த நோய்த்தொற்று பாலில் கலந்திருக்கலாம்.

அதிக பால் கரப்புக்காக மாட்டுக்குப் போடப்படும் ஹார்மோன் ஊசிகளின் வீரியம் பால் வழியாக நம்மை வந்து சேரலாம். இதனால் சிறு வயதிலேயே உடற்பருமன் (ஒபிஸிட்டி) பிரச்சினை ஏற்பட வாய்ப்பாகிறது.

பாலில் கலக்கப்படும் யூரியா அதிகமாக உடலில் சேர்ந்தால், அதை வெளியேற்ற சிறுநீரகம் அதிகம் செயல்பட்டு, பாதிப்புக்கு உள்ளாகும்.
சோயா அதிகளவில் உடலில் சேரும்போது, ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும்.

வாஷிங்சோடா வயிற்றுக்குள் சென்றால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும், வாய்ப்புண் உண்டாகும்.

செயற்கைப் பால், சிறுநீரகம், குடல், ஹார்மோன்கள் என மொத்த உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *