தமிழ்வழியில் அரசுப் பள்ளியில் பயின்று ஏழ்மையிலும் முயன்று அய்.ஏ.எஸ் இளைஞர்

ஜூன் 16-30

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகில் இருக்கும் சோழன் குடிகாடு இவரது ஊர். படித்தது அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117.

இவர் ப்ளஸ் டூ படித்த நேரத்தில் இவரது  அப்பா உடல்நலம் குன்றி இறந்துபோனார். ஒன்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. ப்ளஸ் டூ-_வுடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இளம் பகவத்துக்கு.

அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்து-கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தது. இரண்டு சகோதரிகளுக்கும் திருமண வயது வந்துவிட, அவர்களுக்கு திருமணம் செய்து-வைக்க வேண்டிய நிலை. இதற்கு நடுவில் 2001ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ. (வரலாறு) படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத்.

எப்படியும் முயன்று அய்.ஏ.எஸ். ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார். ஆனால், அதற்கு சில ஆண்டுகள் ஆகும். அதுவரை தன் குடும்பத்தை வறுமையில் வைத்திருக்க அவர் விரும்பவில்லை. அதனால் ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து அய்.ஏ.எஸ். ஆவது என முடிவு செய்தார்.

2007ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-_4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல்துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்_2 தேர்வு எழுதி, சென்னை தலைமச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளாராகப் பணியில் சேர்ந்தார். இதற்கு நடுவில் 2010ஆம் ஆண்டில் குரூப்_2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலை-வாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்_1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014ஆம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது அய்.ஆர்.எஸ். (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப்_1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி. பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி. பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மய்யத்தில் பயிற்சில் சேர்ந்தார். இப்படி 2007ஆம் ஆண்டு தொடங்கி 2016ஆம் ஆண்டுவரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத். ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி விதவிதமான அரசுப் பணிகள் தேடிவந்தன. ஆனால், அவரது லட்சியம் அது அல்ல… அய்.ஏ.எஸ்!

2005ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு-வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ்  தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். இதுவரை மொத்தம் அய்ந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக இந்த ஆண்டு வெற்றிபெற்றார். இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார்.

இளம்பகவத், தன் திறமையை தனக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர் அல்ல; ஊருக்காக உழைக்கும் பொதுவுடைமை வாழ்க்கை முறையைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், மற்றவர்களுக்காகவும் சிந்திப்பவர்.

தன் கிராமத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார். தானும் தன் நண்பர்களும் படிப்பதற்காக வாங்கிய அத்தனை நூல்களையும் இந்த அறையில் வைத்திருக்கிறார். இவற்றை போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்யும் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.

இன்று 30க்கும் அதிகமான இளைஞர்கள் இவருடைய படிப்பகத்தின் மூலம் படித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.

“நாம் கற்கும் கல்வி, பகிர்தலைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறது. நாம் செய்ய வேண்டி-யதும் அதைத்தான்’’ எனப் புன்னகைக்கிறார் இளம் அய்.ஏ.எஸ். இளம்பகவத்!
இளைஞர்களே இவரைப் பின்பற்றுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *