புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “Three Thousand Year Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது..
மேல் எடுத்துக்காட்டிய அந்தப் பகுதி இழப்புக்காளான கைம்பெண்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால், அவளிடம் துக்கம் விசாரிக்க வந்த _ இழப்புக்கு ஆளாகாத பெண்களைப் பற்றிப் பேசுவது. கையற்ற நிலையில் உள்ள அந்தக் கைம்பெண்ணை நோக்கி ரிக் வேதம் இவ்வாறு கூறுகிறது:
“பெண்ணே நீ எழுக! இந்த உலக வாழ்க்கைக்கு வா! எவனுடைய அருகில் நீ துயில் கொண்டிருந்தாயோ அவனது வாழ்க்கை இப்போது முடிந்துபோய்விட்டது. எழுந்து வா! எங்களோடு இணைந்துகொள்! உன் கைகளைப் பற்றி உனக்குத் தாய்மைப் பேற்றை நல்கிய உன் கணவனுக்கு மனைவி என்ற முறையில் நீ அனைத்துக் கடமைகளையும் அவனுக்குச் செய்து முடித்திருக்கிறாய்:
அக்கறையோடு விடுக்கப்படும் இந்த அழைப்பில் அன்பும் இரக்கமும் கலந்து இனிமையான வெளிப்பாட்டைக் காண முடிகிறது. குற்றச்சாட்டிற்கு ஆளாக்கப்பட்ட (‘சதி’க்கு) இக்கைம்பெண்களுக்குக் கொடுக்கப்-பட்டுள்ள கெட்ட பெயர், இந்துத்துவத்தின் பழைய தொன்மையான வடிவங்களில் இல்லை. உடன்கட்டை ஏறுதலுக்கு (அல்லது) ‘சதி’ நடந்ததற்கான சான்றோ அல்லது அது நடத்தப்பட வேண்டும் என்ற கட்டளையோ மனுதருமத்தில்கூட இல்லை.
உடன்கட்டை ஏற்றுதல் நிகழ்வில் இன்று நடைபெறுவதைப் போல, அன்றும் ஆண்களை உயிர்ப்பலி கொடுக்கும் முறையை வேதங்கள் நேரடியாகவே _ வெளிப்படையாகவே ஊக்கப்படுத்துகின்றன என்பதை என்னால் மறுக்க இயலவில்லை; அதற்கான நான் வருந்துகிறேன். ‘மனித உயிர்ப் பலி’அல்லது ‘நர்மேதா’ என்று அதற்குப் பெயர். ரிக் வேதத்தின் முதல் அஷ்டகாவில், ஒரு மதச் சடங்கு நிகழ்வில் மனித உயிர்ப்பலி பற்றிய குறிப்பு வருகிறது. அஜிகார்த்தா என்பவனின் மகனான ‘சுனாசெபாஸ்’ உயிர்ப்பலி கொடுக்கப்படுகின்ற கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுப் பலியிடப் போகின்ற மதச் சடங்கின்போது அவன் வேத இசைப் பாடல்களை இடைவிடாது ஓதிக் கொண்டிருந்தான் என்பதை ரிக் வேதத்தின் பலஇசைப் பாடல்கள் கூறுகின்றன. இந்த மதச் சடங்கு ஏறக்குறைய வேதகாலத்திலிருந்து இன்றுவரை இந்தியர்களிடையே தொடர்ந்து இருந்துவருகிறது. (எலிபென்டா குகைச் சிற்பங்களில் சிவன், பைரவர் வடிவில் ஒரு குழந்தையைப் பலியிடப் போகிற காட்சி காணப்படுகிறது. தன் ஒரு கையில் பலியிடப் போகிற குழந்தையைப் பைரவர் பிடித்திருக்கிறான்; மற்றொரு கையில் அந்தக் குழந்தையை வெட்டுவதற்குக் கூர்மையான வாளை வைத்திருக்கிறான்; மூன்றாவது கையில், நிகழ்வைத் தெரிவிக்கும் மணி; நான்காவது கையில் வெட்டப்படும் குழந்தையின் குருதியைப் பிடிப்பதற்காக ஒரு பாத்திரம்; இவ்வாறாக அந்தச் சிற்பம் மேலும் நான்கு கைகளுடன் _ மொத்தம் எட்டுக்கைச் சிற்பமாகப் பைரவனாகச் சிவன் செதுக்கப்பட்டுள்ளான்.)
குழந்தைத் திருமணங்கள் எவையேனும் வேதகாலத்தில் நடந்திருக்குமேயானால் அவை ஒருபோதும் கட்டாயப்படுத்தப்பட்டவையாக இருக்கவில்லை. பின்வரும் பகுதி அதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது; “நல்லொழுக்க-முடையவளாகப் பெண் தன் பெற்றோருடன் ஒரே வீட்டில் வளர்ந்து வருகிறாள்; அவர்களின் நல்லாதரவை நாடுபவளாக அவள் இருக்கிறாள்; ‘ஆதலின் செல்வம் வேண்டி நீ எங்களிடம் வருவாயாக’’. வேதத்தில், பெண் ஆரியர்களின் குடும்ப விளக்காகக் காட்டப்படுகிறாள்; அவளுடைய இன்றியாமையாச் சிறப்பும், அவள் பெற்ற அன்பும் அய்யப்பாட்டிற்கிடமில்லாத அடையாளங்களாக அமைகின்றன. பெண்ணுக்குப் பெற்றோர் அடிக்கடி பொருள் கொடுத்து உதவினார்கள்; அது அவளுக்கென்று ஒதுக்கப்-பட்டது. அவள் கணவனது உடைமையை விடத் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அது இருந்தது. தற்காலத்தில் தனிமைப்-படுத்தப்பட்டு _ தனிமைச் சிறையில் இருப்பதைப் போன்ற துன்பங்களை அன்று அவள் அனுபவிக்கவில்லை. மதச் சடங்குகளில் கூடத் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொள்வதற்கு அன்று பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். பேராசிரியர் வில்சன், “இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்; சட்டம், மதச் சடங்குகளில்’ பெண்கள் பங்கெடுத்துக் கொள்வதைத் தடை செய்கிறது; திருமணத்தில் அவர்கள் பங்கேற்கலாம்; புனிதமான, வேத மந்திரங்களைப் பெண்கள் ஓதக் கூடாது என்று சட்டம் தடைசெய்கிறது’’ என்று கூறுகிறார்.
வேத காலத்து ஆரியர்களால் நிறுவப்பட்டு நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வந்த மதத்தின் செல்நெறியானது, மதப் பற்றற்ற ஒரு காலம் நிலவிய தொன்மைமிக்க அந்தக் காலத்தில் கூட, பிற்காலத்து இந்துக்கள் பின்பற்றிவரும் மதச் செயற்பாடுகளைவிட மிக எளிமையானதாகவும், திறன்மிக்கதாகவும் அமைந்திருந்தது. முப்பத்துமூன்று கடவுளர்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகிறார்கள். “சொர்க்கத்தில் 11 கடவுள்கள்; இந்தப் பூமியில் 11 கடவுள்கள்; நடுவானில் புகழோடு விளங்கும் 11 கடவுள்கள்.’’ ஆக முப்பத்து மூவரும் ஆகிய நீங்கள், நாங்கள் கொடுக்கும் இந்த உயிர்ப்பலியால் மகிழ்ச்சியடைவீர்களாக,’’ என்று ரிக்வேதத்தில் குறிப்பிடப்படுகின்றது. பிற்காலத்து இந்துக்கள் தம் மனம்போன போக்கில் ஏழு சுழியங்களை (சைபர்களை) இந்த 33 உடன் சேர்த்து 330,000,000 கடவுளர்களாகப் பெருக்கிக் கொண்டார்கள். சொல்வதற்கு இது எளிமையாக இருக்கிறது என்பதற்காக இப்படிப் பெருக்கிக் கொண்டார்கள். ரிக் வேதத்திலேயே இவ்வாறு கடவுளரின் எண்ணிக்கையை மனம்போன போக்கில் பெருக்கிக் கொண்டமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன.
வேதங்களின் பல பகுதிகளில், சொர்க்கத்தையும், இந்தப் பூமியையும் மூலக் கடவுளர்களாகக் (பெற்றோர் கடவுள்) குறிப்பிடுகின்றனர். மற்ற கடவுளர்கள் எல்லாம் இவர்களின் புதல்வர்கள் என்று ரிக் வேதம் கூறுகிறது. மற்ற கடவுளர்களும் வேதங்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்கள். முப்பெருங் கடவுளர்களாக நம் கவனத்திற்குக் கொண்டு வரப்படும் மூவரும், கொள்கை வழியாகத் தொடர்புடையவர்களல்லர். கருத்து வழியாகத் தொடர்புடையவர்களுமல்லர். அவர்களில் _ இந்திரன் நம்முடைய வான்வெளிக் கடவுள், வான் முகில்களைத் தனது இடிமுழக்கத்தால் துளைத்து, (இடி என்பது இந்திரனின் உதவியாளர் துவாஸ்திரி) மழைச் செல்வத்தைக் கொட்டுமாறு அவர்களைத் தூண்டுகிறான். கிரேக்கர்களின் ‘அவ்ரணா’ என்பது _ வருணா _ வருணபகவான் சொர்க்கத்தின் மேற்கூரைக் கடவுள்; வெப்பம் _ நெருப்பின் கடவுளாகிய அக்னி (லத்தீனில் இக்னிஸ்) அக்னியின் வேலை புரோகிதம் செய்தல், தன்வயப்படுத்திக் கொள்ளல், மற்ற கடவுளர்க்குத் தகவல் தெரிவிப்பவராக இருப்பது அல்லது கொடுப்பவர். அதாவது அனைத்து உயிர்ப்பலி-களையும் மற்ற கடவுளர்க்கு வழங்குபவர். இந்தக் கடவுளர்களுக்கெல்லாம் முறையே இந்திராணி (இந்திரன்), வருணானி (வருணன்), அக்னாயி (அக்னி) என்று மனைவியர் உள்ளனர். இந்திரனோடு தொடர்பு கொண்டவரும் அடிக்கடி அவனுக்குத் துணையாயிருப்பவரும் ஆகிய, காற்றுக் கடவுளாகிய வாயு; சிவனின் இன்னொரு பெயராகிய ‘ருத்ரா’ வேதங்களில் காணப்படாத பெயர் இது; அப்போது ருத்ரனைப் பற்றி எவருக்கும் தெரியாது. ருத்ரன் சீறும் புயல்களின் கடவுள்; மாருட்ஸ் அல்லது தென்றல். இவர்கள் ருத்ரனின் மகன்கள்; வான்வெளி மண்டலத்தின் கடவுள் _ விஷ்ணு. ஒளியின் கடவுளர்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றனர்;
அவர்கள் சூரா அல்லது சூரியா, சூரியன் எனப்படுகின்றனர். சூரியனின் பல்வேறு செயற்பாடுகளினால் ஏற்படுகின்ற விளைவுகளின் அடிப்படையில், நாளும் பொழுதும் மாதமும், பருவமும் அடைகின்ற முன்னேற்றங்களினால் பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டன. ‘உஷா’ என்றும் ‘புலரும்பொழுது’ என்றும் அஷ்வின்ஸ் அல்லது குதிரைகள் பூட்டிய தேர் மீதமர்ந்து செல்வோன் என்றும், ‘முன்னோடி வருகின்ற சூரியக் கதிர்கள்’ என்றும் பல பெயர்கள் கொடுக்கப்பட்டன; ‘சந்திரமாஸ்’ அல்லது நிலாவும் கூடப் புலரும் பொழுதின் முன்னோடியாகக் கருதப்பட்டது. சந்திரமாஸ் (சந்திரன்) என்பது சமஸ்கிருதத்தில் ஆண்பால்! பேராசிரியர் லேசன் ‘சந்தார்’ (Candor). ஒளி _ வெளிச்சம் என்று பொருள்படும் லத்தீன் மொழியிலிருந்து வந்தது என்கிறார். உயர்வுபடுத்திக் கூறப்படும் சூரிய ஒளிக்கதிர்கள் ‘வாசுஸ்’ எனப்பட்டன. ‘நக்தா’ அல்லது (Night) இரவு என்பது பெண்பாற் கடவுள்! ‘நக்தா’ என்பது லத்தீன் மொழியிலுள்ள ‘நாக்சு’ என்ற சொல்லோடும் கிரேக்கமொழிச் சொல்லாகிய ‘நிக்த்’ என்பதனோடும் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். ‘எமா’ (எமன்) மனிதர்களின் விதியை முடிவு செய்யும் கடவுள்; ‘யாமி’ என்பது எமனுடைய மனைவி; ‘மிருத்யா’ என்பது மரணம்; இவை யாவும் அன்று வழக்காற்றில் வந்துவிட்டன. ‘சுக்ரா’ என்பது சமஸ்கிருதத்தில் ஆண்பால்; (கதிரவனைச் சுற்றிச் செல்லும் இரண்டாவது Venus-கோள்) சுக்ரா என்பது வெள்ளிக் கோள்; சோமபானத்தால் சுக்கிரன் போதையூட்டப் பட்டதாக சாம வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. சோம பானத்தின் கடவுள் ‘சோமன்’; சில இடங்களில் நிலாவைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பிரகஸ்பதி, வேதங்களில் ‘வியாழன்’ (Jupiter) என்னும் கோளாகக் குறிக்கப்படவில்லை. அக்னியின் மற்றொரு பெயராகிய ‘வழிபாட்டின் கடவுள்’; (வழிபடு முறைக்குக் கடவுள் என்று பெயர்). இதற்கு வேறு பல பெயர்களும் உண்டு; ‘பிரமா’ என்பதைப் பற்றி முன்னரே நாம் குறிப்பிட்டுள்-ளோம். பின்னர், ‘சரஸ்வதி’, பிரமாவின் மனைவியாகிறாள்; இவள் சொல்லாற்றல் _ சொல்வன்மையின் கடவுள். ‘இலா’ அல்லது ‘கிடா’ என்பவற்றோடும் ‘பாரதி’ (பூமி) என்பதனோடும் தொடர்புபடுத்தப் படுகிறாள். இவர்கள் இசைப்பாடலின் தெய்வங்கள்! ‘அபா’ என்பது தண்ணீர்; இது பன்மையில் வருகிறது _ தண்ணீர்கள்; மிக உயர்வுபடுத்திக் கூறப்படுகிறது. ‘அப்தியாஸ்’ என்பவர்கள் தண்ணீரின் கடவுள்கள். ‘விஷ்வ தேவர்’ என்பவர்கள். ஒட்டுமொத்தக் கடவுளர்களாகச் சில நேரங்களில் குறிப்பிடப்படுகின்றனர். சில நேரங்களில் மனிதரைப் பாதுகாக்கும் சிறப்புக் கடவுளராகவும் இவர்கள் குறிக்கப்படுகின்றனர். பார்சி இனத்தவரின் ‘அம்சாஸ்பாண்ட்ஸ்’, ‘இசாட்ஸ்’ ஆகியவற்றோடு இவை உறவுடையவை என்று நான் கருதுகிறேன். புனைந்து மேம்படுத்தப்பட்டவற்றுள் குறிப்பிடத்-தக்க மற்றொரு கடவுள் ‘ஆகா’ (Agha) என்பது. இது தீமையின் கடவுளாகும். இது பெண்பாற் கடவுள்; பார்சிகளின் ‘அஃகி ரிமான்’ என்பதனோடு இது தொடர்புடையதாகும். சிந்து அல்லது இண்டஸ் ஆறு ஒரு கடவுள்; வேதங்களில் கூறப்படுகின்ற மற்ற ஆறுகளும் கடவுளர்களே! ‘அனைத்தும் பெண்பாற் கடவுளர்கள். கடலும் ஒரு புனிதமான தெய்வம்! பிட்ரிஸ் (பிதிர்கள்) அல்லது சிறந்த முன்னோர்கள், பார்சிகளின் ‘ஃபாருகான்சை’ ஒத்தவர்கள். அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்கள்.
‘வாசு’க்கள் எனப்படுவோர், ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, சூரியக் கதிர்கள் ஆவர்; இவர்களும் அவர்களைப் போலவே கடவுளராவர். ‘ரிபூ’ என்போர், தெய்வத் தன்மை பொருந்திய மனிதர்கள்; பின்னர் இவர்கள் விண்மீன் குழுக்களில் ஒன்றில் முதன்மை மீன்களாக மாறியவர்கள். இனிமேலும் வேதக் கடவுளர்களைப் பற்றி விரித்துரைக்க நான் விரும்பவில்லை. இந்துக்களின் முதன்மை-யான கடவுளரில் பலர் வேதங்களில் ஒருமுறைகூடக் குறிப்பிடப்படவில்லை என்பதை நான் கோடிட்டுக்காட்ட வேண்டியவனாக இருக்கிறேன். மேலும் அவை பிற்காலத்தவரின் கண்டுபிடிப்புகள் என்றுதான் நாம் கருத வேண்டியுள்ளது. வேதங்களில் நாம் சிவனைக் காண-முடியவில்லை; வேதங்களில் குறிப்பிடப்-படுகின்ற ருத்ரனைச் சிவனாகப் பிராமணர்கள் காட்ட விரும்புகிறார்கள். சிவனுடைய குடும்ப உறுப்பினர்களான _ அவன் மனைவியர்கள் துர்கா அல்லது காளி, அவன் மகன்கள் கணேசன், கார்த்திகேயன் ஆகியோர் எவரையும் ‘வேதங்களில் காணமுடியவில்லை. வேதங்-களில் ‘நாராயணன்’ இல்லை; வேதங்களில் வருகின்ற விஷ்ணு, இன்று மும்மூர்த்திகளில் ஒருவராகக் காட்டப்படுகின்ற விஷ்ணு அல்ல; இருவரும் வெவ்வேறு பண்புடை-யவர்கள். இராமனும், கிருஷ்ணனும் வேதங்களில் இல்லை. அதன் பின்னர், தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட வீரர்களாக, விஷ்ணுவின் அவதாரங்களாக அவர்கள் புகழப்பட்டார்கள். வேதங்களில், விண்கோள்கள் _ தெய்வங்களாக்கப்பட்ட விண்கோள்களையும், இந்துக்களின் பல சிறு தெய்வங்களையும் நாம் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்க-தாகும்.
வேதங்கள் இந்தக் கடவுளர்களைக் கையாண்டுள்ள முறை மிகவும் சுவை பயப்பதாகும். இது பலதெய்வ வழிபாட்டு முறை, புராணப் புனைகதைகள் ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ளப் பேருதவியாய் இருக்கின்றது. பொதுவாகப் பல்வேறு பொருள்கள், ஆற்றல்கள், முகவர்கள், இயற்கையின் செயற்பாடுகள் ஆகியவற்றிற்குத் தெய்வீகத் தன்மையை ஏற்றி இவற்றை வான் மண்டலத்தோடு தொடர்புபடுத்தி வைத்து-விட்டனர். கடவுளின் தெய்வீகத் தன்மையையும், எங்கும் நிறைந்திருக்கும் இயல்பையும் உணர்ந்து கொள்ளத் தவறுகின்றவர்கள் அல்லது ஏற்க மறுக்கின்றவர்கள் மரபுவழியாக _ அதாவது வழிவழியாகச் சில கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள், தங்களைச் சுற்றியுள்ள ஆற்றலையும் புகழையும் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டி அவற்றைப் பல்வேறு தெய்வங்களின் அறிவார்ந்த செயல்களாக ஏற்றிவிட்டனர். இது ஓரளவுக்குக் குறிப்பாகவும், கவிதைவகை விளக்கமாகவும் உயர்வு நவிற்சியாகவும் கலந்து காலப்போக்கில், உயிர் வாழும் மாந்தரின் வெளிப்பாடெனத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டது. இந்த நகரத்தின் படித்த இளைஞர்களை, வேதமதத்தின் இந்த இயல்புகளை ஆராய வேண்டுமென்று என் சொற்பொழிவுகளின் வாயிலாக நான் வலியுறுத்தி வந்தேன். டாக்டர் மாக்ஸ் முல்லர், 1856இல் ‘ஆக்ஸ்போர்டு கட்டுரைகள் _ 1856’ என்ற நூலில், ‘ஒப்பியல் நோக்கில் புராணப் புனைவியல்’ என்ற தலைப்பில் வேதமதத்தின் இயல்புகளை வியக்கத்தக்க முறையில் ஆராய்கின்றார். மிகச் சிறந்த அந்த ஆவணத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்;
“நல்வாய்ப்பாக மத அமைப்பு முறையோ, புராணப் புனைவியலோ வேதத்தில் இல்லை; வேத இசைப்பாடல் சிலவற்றில் காணப்படும் பெயர்கள் மக்களின் பொதுப் பெயர்களாகவும், வேறு சிலவற்றில் கடவுளரின் பெயர்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே கடவுள் சில இடங்களில் தலைமைக் கடவுளாகவும், சில இடங்களில் சமநிலையில் உள்ள கடவுளாகவும், வேறுசில இடங்களில் மற்ற கடவுளர்க்குக் கீழ்நிலையில் உள்ள கடவுளாகவும் காட்டப்-படுகிறார். கடவுளர்களாகக் காட்டப்படுகிற இவர்களின் முழுத் தன்மைகளும், இயல்புகளும் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. அவர்களின் மூதாதையர் வழி மரபு வரலாறு இல்லை! ஆண் கடவுளர்களுக்கும், பெண் கடவுளர்-களுக்கும் முறையாக முடிவு செய்யப்-படுகின்ற திருமணங்கள் காணப்படவில்லை; தந்தை சில இடங்களில் மகனாகவும், சகோதரன் கணவனாகவும், ஒரு வேத இசைப் பாடலில் தாயாக வருபவள், மற்றோரிடத்தில் மனைவியாகவும் இருக்கிறார்கள். அதை எழுதிய கவிஞனின் சிந்தனை மாறுபடுகிறபோது இந்தக் கடவுளரின் இயல்புகளும் தன்மைகளும் மாறுபடுகின்றன.
தொடரும்…
பேராசிரியர் முனைவர்
ப.காளிமுத்து