ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கும் தானியங்கி கருவியை சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவர், பேராசிரியர் குழு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக மாணவர் விவேக், பேராசிரியர்கள் லட்சுமி, சேதுராமன், தொழில்நுட்ப உதவியாளர் மனுவேல் ஆகிய நான்கு பேர் கொண்ட குழு மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் இந்தக் கருவி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: இந்தத் தானியங்கி அவசர அழைப்பு கருவி எல்லாவிதமான வாகனங்களிலும் பொருந்தக்கூடியது.
தற்போது 108 அவசர உதவியை அழைப்பதற்கு பத்து நிமிடங்கள் ஆகும். மேலும் அழைப்பதற்கு ஓரு நபர் தேவைப்படும். ஆனால், வாகனத்தில், தானியங்கி கருவியைப் பொருத்தினால் விபத்து மற்றும் விபத்து நடைபெற்ற இடம் குறித்து 2 நிமிஷங்களில் தகவலை 108 அவசர சேவை அலுவலகத்துக்கு இந்த தானியங்கி கருவி அனுப்பிவிடும். இந்தக் கருவி நடுத்தர மற்றும் கனகர வாகனங்களில் பொருத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
முதலில் 108 அவசர சேவைக்கு தகவலைத் தெரிவித்துவிட்டு அடுத்த நிமிடம் விபத்து நடந்த இடம் மற்றும் கருவியின் எண்ணை குறிப்பிடும். மேலும் கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ள உறவினர்களுக்கு (நபர்கள்) தகவல் அனுப்பப்படும்.
எந்தவொரு மனிதர் உதவியும் இல்லாமல் விபத்து நடந்த இடத்தை 108க்கு இந்த கருவி தெரிவித்து விடும். இதன் மற்றொரு சிறப்பு அம்சம் 108 அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் தகவல் கிடைத்தவுடன் அவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக வாகனத்தில் மைக் மற்றும் ஓலி பெருக்கி தானாகவே ஆன் ஆகி செயல்படத் தொடங்கிவிடும். விபத்தில் சிக்கியவர்கள் தேவைப்படும் உதவிகள் குறித்து அப்போது தெரிவிக்கலாம்.
இது மனித உயிரைக் காக்கும் கருவியாகத் திகழ்கிறது. இந்தக் கருவியை தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் பொருத்தலாம். வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இந்தக் கருவியின் விலையாக ரூ.1,500 முதல் ரூ. 2,000 வரை நிர்ணயிக்கலாம் என்றனர்.